Wednesday, 4 February 2015

மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்

"மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்" - கருத்தரங்கம் : ஊடகங்களின் பார்வையில்...


மரபணு மாற்று விவசாயம்: இயற்கைக்கு விரோதமான போக்கு நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல - ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு 
.
சென்னை, ஜூன். 16-
.
மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாக செயல்பட்டால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார்.

மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையம் சார்பில் `மரபணு மாற்று வேளாண்மையும், இந்திய சட்டங்களும்' என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
.
உணவே மருந்து.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே இந்தியர்களின் வாழ்க்கை முறையாக இருந்தது. உணவால் உடல் மட்டுமில்லாமல் உள்ளம், எண்ணம், ஆன்மா ஆகியவையும் உருவாகிறது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒருவர், உணவு கொடுக்கும்போது அவரது குணம் சாப்பிடுபவருக்கும் வந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில் உணவுக்கும், மனித உறவுகளுக்கும் அப்படியொரு முக்கியத்துவம் இருந்தது.
.
``மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்-ஊறுபாடு இல்லை உயிர்க்கு'' என்ற திருக்குறளில், உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை அளவோடு உண்பாராயின், அவரது உயிருக்கு நோயினால் துன்பம் உண்டாகாது என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த திருக்குறளும் தற்போதைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக உள்ளது. மரபணு மாற்று வேளாண்மையால் ஏற்படும் பாதிப்பையும் எடுத்துரைப்பது போல இந்த திருக்குறள் அமைந்துள்ளது.
.
நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டே எல்லா விஞ்ஞானமும் உள்ளது. மனித உடலில் இந்த ஐம்பூதங்களும் உள்ளன. தசை, நரம்பு நிலமாகவும், பசி நெருப்பாகவும் இருக்கிறது. உடலில் நீர் ஓடுகிறது. மனிதன் இறக்கும்போது நிலத்தில் புதைக்கின்றனர். எரித்து சாம்பலை கரைக்க வேண்டுமானால் அதற்கு நெருப்பும், நீரும் தேவைப்படுகிறது. எல்லாமே மறுசுழற்சி முறையில்தான் அமைந்துள்ளன. எனவே, மரபணு மாற்று விவசாயம், இயற்கைக்கு விரோதமாகப் போனால் அது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லதல்ல.
.
மரபணு மாற்று விதை வெளிநாட்டில் இருந்து வர வேண்டுமானால் ஜெனடிக் என்ஜினீயரிங் அப்ரூவல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன. மரபணு மாற்றுப் பயிர்களால் மக்களுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
.
இவ்வாறு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கூறினார்.
.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகம் இயக்கத்தின் தலைவர் கே.நம்மாழ்வார் பேசியதாவது:-.
உணவுத் தட்டுப்பாடு.
உலகம் முழுவதும் உணவுத் தட்டுப்பாடு உள்ளது. 300 கோடி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை. 85 கோடி பேர் பட்டினி கிடக்கின்றனர். 33 நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது. ரேஷன் கடைகளுக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து திருடும் போக்கு உள்ளது. சத்துக் குறைவான உணவு சாப்பிடுவதால் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர். தற்போதைய உணவு உற்பத்தியைவிட 50 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்தால்தான் 2030-ம் ஆண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
.
நம் நாட்டில், 1980-ம் ஆண்டு ஒரு ஏக்கருக்கு 5 டன் (5 ஆயிரம் கிலோ) நெல் உற்பத்தி செய்தனர். தற்போது ஒரு ஏக்கருக்கு 2 டன்னுக்கும் குறைவாக (800 கிலோ) உற்பத்தி செய்யப்படுகிறது. நம்நாட்டில் இருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் நெல் ரகங்களும் காணாமல் போய்விட்டன. உணவுப் பழக்க மாற்றத்தால் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று பயிருக்காக மருந்து தெளிப்பதால் புழு, பூச்சிகளை தின்னும் 200 வகையான பறவைகளும் வருவதில்லை.
.
சமுதாய விவாதம்
.
எனவே, மரபணு மாற்றம் என்ற பெயரில் உணவை நஞ்சாக்கும் போக்கை தடுத்தாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் கோர்ட்டுகளில் வழக்கு தொடர வேண்டும். அறிவியலில் எத்தகைய கண்டுபிடிப்பானாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக அதனை சமுதாயத்தின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.
.
இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
.
இந்த கருத்தரங்கில் பூவலகின் நண்பர்கம் அமைப்பைச் சேர்ந்த டாக்டர்கு.சிவராமன், டெக்கான் மேம்பாட்டு சங்க பொதுச் செயலாளர் பி.வி.சதீஷ், கிரேன் அமைப்பின் மண்டல திட்ட அதிகாரி ஷாலினி புட்டானி, வக்கீல் எம்.வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் வரவேற்றார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் நீதிக்கான வக்கீல்கள் மையத்தின் பிரதிநிதி வக்கீல் பி.சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...