Monday 9 February 2015

தமிழக வரலாறு - 08

                                  தமிழக வரலாறு - 08

4. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி 
     ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையும்போது வடமேற்கு இந்தியாவிலும்,
வடஇந்தியாவிலும் திராவிட இனத்து மக்கள் வாழ்ந்து வந்தனர் என்று சில
ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த பேராசிரியர்
பர்ரோ (Burrow) என்பார் அவர்களுள் ஒருவர். ஆரிய மொழியை நன்கு
ஆய்ந்து இருக்கு வேதத்தில் இருபது திராவிட மொழிச் சொற்கள்
ஆளப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார். ஏற்கெனவே சிந்து கங்கை வெளியில்
செழித்து வாழ்ந்திருந்த திராவிடரிடமிருந்து பிற்காலத்தில் வந்து குடியேறிய
ஆரியர் பல திராவிட மொழிச் சொற்களைத் தம் மொழியில்
ஏற்றுக்கொண்டனர் என்பது இவருடைய முடிபாகும். வேறு பல ஆய்வாளரும்
இவருடைய கருத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். லஹோவரி என்னும்
ஆராய்ச்சியாளர் வியப்பூட்டும் ஊகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பல
மொழிகளை ஆராய்ந்து ஒப்புநோக்கி முடிவாகத் திராவிட மொழிக்கும்
ஸ்பெயின் நாட்டு பாஸ்க் (Basque) மக்களின் மொழிக்கும் இடையே பல
ஒற்றுமைகளைக் கண்டார். இவ்விரு மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தைச்
சேர்ந்தவை என்று ஒரு முடிவுக்கு வந்தார். சுமேரிய, எலாமைட், கப்படோசிய
மொழிகளும் இக் குடும்பத்தில் பிறந்தவையே என்று அவர் கருதினார்.
ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த ஐபீரியா முதல் இந்தியா வரையில் அமைந்துள்ள
நாடுகள் அனைத்தும் சமயப் பழக்க வழக்கங்களிலும், சடங்குகளிலும்
ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன என்று இவர்
கண்டார்.

     லஹோவரியின் முடிபுகளையும் நாம் ஓரளவு ஏற்றுக் கொள்ள வேண்டிய
நிலையில் உள்ளோம். சுமேரியா, செமச்பொடொமியா போன்ற மேற்காசிய
நாடுகட்கும் திராவிடர்கட்குமிடையே நெருங்கிய நாகரிக, பண்பாட்டுத்
தொடர்புகள் அமைந்துள்ளன. திராவிடர்கள் மேற்காசியா வினின்றும்
குடிபெயர்ந்து ஈரான் வழியாக வந்து வடமேற்குக் கணவாய்களின் மூலம்
சிந்துசமவெளியில் இறங்கிக் குடியமர்ந்து அங்கொரு மாபெரும் நாகரிகத்தை
வளர்த்திருக்கக் கூடும். பிறகு அவர்கள் எக் காரணத்தினாலோ
சிந்துவெளியைக் கைவிட்டுத் தெற்குப்
படர்ந்து தமிழகத்தில் தங்கி இங்கொரு நாகரிகத்தை வளர்த்திருக்கக்கூடும்.

அல்லது லெமூரியாவிலிருந்து தென்னிந்தியா ஆப்பிரிக்கா முதலிய
இடங்களுக்குச் சென்று சிலர் மத்திய தரைக்கடல் நாடுகளில் சில காலம்
வாழ்ந்து, வடஇந்தியா வழியாகத் தெற்கு வந்திருக்கலாம். 

     ‘தமிழர் யார்?’ என்னும் கேள்விக்கு விடைகாணும் முயற்சியில்
ஈடுபட்டிருந்த வரலாற்றாய்வாளருள் மிகவும் சிறந்தவர் ஹீராஸ்பாதிரியார்.
சிந்துவெளியில் வரலாற்றுப் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன.
அவற்றினின்றும் புதைபொருள்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இவ்
வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிந்துவெளியில் மிகப் பழங்காலத்தில்
பெரியதொரு நாகரிகம் செழித்து வளர்ந்திருந்ததென்றும், பிறகு எக்
காரணத்தாலோ அது அறவே அழிந்து மறைந்து போயிற்றென்றும் சில
கருத்துகளை வெளியிட்டனர். சிந்துவெளியில் மொகஞ்சதாரோ, ஹாரப்பா 
என்ற இரு நகரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விடங்கள் இப்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ளன. இவையே யன்றி,
சானுடாரோ, கோட்டீஜி, லோதால், காளிபங்கன் என்னும் இடங்களிலும்
அகழ்வாராய்ச்சிகள் புரிந்து பண்டைய நாகரிகச் சின்னங்களைக்
கண்டுபிடித்துள்ளனர். இந்நான்கு இடங்களும் இந்திய நாட்டு எல்லைகளுக்குள்
அமைந்துள்ளன. முதன்முதல் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி விரிவான
ஆராய்ச்சிகள் செய்து அரிய பெரிய கருத்துகளையும், விளக்கங்களையும்,
வரலாற்றுத் துறைக்குத் தந்துதவியவர் சர் ஜான் மார்ஷல் ஆவார். 

     வரலாற்று உலகை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்திய பல பொருள்கள்
இந்நகரங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சில ஆயிரம் ஆண்டுகட்கு 
முன்பு சிந்துவெளி முழுவதும் பரவியிருந்த ஒரு பெரும் நாகரிகத்தின்
சின்னங்களாம் அவை. கட்டடங்களைச் செப்பனிடுவதிலும், நகரத்தின்
அமைப்பிலும் மொகஞ்சதாரோ, ஹாரப்பா ஆகிய இரு நகரங்களிடையே மிக
நெருங்கிய ஒற்றுமைப்பாடுகள் பல காணப்படுகின்றன. ஆதிகாலத்தில்
மொகஞ்சதாரோ செழிப்பானதொரு நகரமாக விளங்கியதாகவும், பிறகு அது
வெள்ளத்தில் மூழ்கி மண்மேடிட்டுப் போனதாகவும் அதன்மேல் வேறொரு
நகரம் எழுந்ததாகவும், அஃதும் பிறகு வெள்ளத்தில் அழிந்து போகவே
அதன்மேல் மற்றுமொரு நகரம் அமைக்கப்பட்டதாகவும், அஃதும் 
வெள்ளத்தில் மூழ்கிப் போகவே மீண்டும் ஒரு நகரம் அமைக்கப்பட்டதாகவும்,
இவ்வாறே ஏழு நகரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக எழுந்து அவைஅனைத்தும் மண்ணில் புதையுண்டு போனதாகவும் தெரிகின்றது. அல்லது
தோன்றிய ஒவ்வொரு நகரும் எதிரிகளால் அழிக்கப் பட்டிருக்கக் 
கூடுமென்றும் சிலர் கருதுகின்றனர். 

     மொகஞ்சதாரோவிலும், ஹாரப்பாவிலும் ஊருக்குப் புறத்தே கோட்டை
கொத்தளங்கள் கட்டப்பட்டிருந்தன. அக் கோட்டைகளுக்குள் மன்னரின்
மாளிகைகளும், பெரிய பெரிய நீராடுங்குளங்களும், நேருக்கு நேரான
சாலைகளும், பெரிய வீடுகளும், நெற்களஞ்சியங்களும் அமைக்கப் 
பட்டிருந்தன. கோயில் குருக்கள் குடியிருப்பதற்காகவே தனித்தனி வீடுகள்
ஒதுக்கப்பட்டிருந்தன. மொகஞ்சதாரோவில் உள்நாட்டு வெளிநாட்டு
வாணிகங்கள் செழிப்புடன் நடைபெற்றுவந்தன. அயல்நாடுகளிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட உணவுத்தானியங்கள் களஞ்சியங்களில் சேர்ப்புக்
கட்டி வைக்கப்பட்டன. உலோகங்களும் நவமணிகளும்
அயல்நாடுகளிலிருந்துதாம் இறக்குமதியாயின. மொகஞ்சதாரோ குடிமக்கள்
அழகழகான மட்பாண்டங்கள். மண்பொம்மைகள், வெண்கலச் சிலைகள்
ஆகியவற்றைச் செய்வதற்குக் கைவன்மையும் கலையுணர்ச்சியும் வாய்க்கப்
பெற்றிருந்தனர். களிமண் முத்திரைகளும் செப்பேடுகளும் இந் நகரில்
ஏராளமாகக் கிடைத்துள்ளன. முத்திரைகளிலும் செப்பேடுகளிலும் பொறிக்கப்
பெற்றுள்ள எழுத்துகள் இன்னமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற
உண்மை இன்னும் திருத்தமாக விளக்கப்படவில்லை. செப்பேடுகளில் ஒரு வரி
இடம்-வலமாகச் செல்லுகின்றது; அடுத்த வரி வலம் இடமாக வருகின்றது.
இவ்வெழுத்துகள் சித்திர முறையும் ஒலி முறையும் இணைந்து பிறந்தவை 
என்று ஆய்வாளர் ஊகிக்கின்றனர். இச் சிந்துவெளி மொழியில் மொத்தம்
முந்நூறு குறிகள் காணப்படுகின்றன. அவற்றுள் இருநூற்றைம்பது குறிகள்
அடிப்படையானவை. ஏனையவை சார்பு குறிகள். 

     சிந்துவெளி மக்களின் சித்திர எழுத்துகளில் மறைந்துள்ள செய்திகள்
யாவை என்பதை அறிந்து கொள்ள வரலாற்று ஆய்வாளர்கள் 
விஞ்ஞானத்தின் துணையை நாடிவருகின்றனர். பல அறிஞர்கள் இந்த
எழுத்துகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து பல்வேறு கருத்துகளை
அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளனர். ஒருசாரார் சிந்துவெளி 
மொழியானது பண்டைய தமிழ் வடிவமே என்று கூறிவருகின்றனர். இவர்களுள்
முதன்மையானவர் ஹீராஸ் பாதிரியார் ஆவார். 

     ஹீராஸ் பாதிரியார் தம் கொள்கைக்குச் சார்பாகப் பல சான்றுகளைக்
காட்டியுள்ளார். இவர் இவ்விரு மொழிக்குமிடையேபல ஒற்றுமைகளைக் கண்டார். இவருடைய கொள்கையைச் சில ஆய்வாளர்
பொருத்தமற்றதெனப் புறம்பே ஒதுக்கினர். ஆனால், இக் காலத்தில்
விஞ்ஞானமுறையில் நடை பெற்றுவரும் ஆராய்ச்சிகள் பாதிரியாரின்
கொள்கையை மெய்ப்பித்து வருகின்றன. 

     ரஷியா, பின்லாந்து ஆகிய நாட்டு ஆய்வாளர் சிலர் மொகஞ்சதாரோ
மொழியை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து அம்மொழி திராவிட மொழியின் 
தொடக்க உருவமேயாம் என்று முடிவு கட்டியுள்ளனர். சிந்துவெளி
எழுத்துகளை ஆராயும் பணியில் முனைந்துள்ள திரு. ஐ. மகாதேவன்
அவர்களும் சிந்துவெளி மொழிக்கும் தமிழ்மொழிக்குமிடையே நெருங்கிய
தொடர்பைக் காண்கின்றார். சிந்துவெளி எழுத்துகளுக்குத் தாம் ஒரளவு
விளக்கங் கண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அவ்வெழுத்துகள் 
சித்திரமும் ஒலிக்குறிப்பும் இணைந்து வடிவமைப்புப் பெற்றிருப்பதால் 
இன்றைய தமிழில் அவையனைத்தையும் பெயர்த்தெழுத வியலாதவராயுள்ளார்.

     தம் கருத்துக்குச் சார்பாகத் திரு. ஐ. மகாதேவன் கீழ்க்காணும்
சான்றுகளை எடுத்துக்காட்டுகின்றார். 

     1. மொகஞ்சதாரோ முத்திரைகளின்மேல் பொறிக்கப்பட்டுள்ள
எழுத்துகளுக்கும் கி.மு. இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்ட
தமிழ்-பிராமி எழுத்துகளுக்குமிடையே பல இயைபுகள் காணப்படுகின்றன. 
இவ் வெழுத்துகள் வெளியிடும் செய்திகள் அனைத்துமே கடவுள் மாட்டுக்
கொடுத்துக்கொள்ளும் விண்ணப்பங்களாக அமைந்துள்ளன. 

     மொகஞ்சதாரோ முத்திரை எழுத்துகள் தெய்வ முறையீடுகளைப் போலக்
காணப்படினும், இவற்றுக்கும் தமிழ்-பிராமி எழுத்துகளுக்கு மிடையே இணக்கம்
ஏதும் இருப்பதாகத் திட்டமாகக் கூறுவதற்கில்லை. அப்படிக் கூறுவதற்குத் 
திரு. மகாதேவன் காட்டும் சான்று போதாது எனத் தோற்றுகின்றது. 

     2. தென்னிந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருங்கற் புதைவுகளில்
கிடைத்துள்ள பானையோடுகளின்மேல் வரையப்பட்டுள்ள கீற்றோவியங்களும்
சிந்துவெளி ஓடுகளின்மேல் வரையப்பட்டுள்ள கீற்றோவியங்களும்
ஒரேவிதமாகக் காணப்படுகின்றன. 

     இங்கு ஒன்று நாம் நினைவில் கொள்ளவேண்டும். தென்னிந்தியப்
பெருங்கற் புதைவுகளைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும்தொடக்க நிலையிலேயே உள்ளது; முடிவு பெறவில்லை. அப் புதைவுகளில்
கண்டெடுக்கப்பட்ட பல பொருள்களுக்கு விளக்கங் காணவேண்டியுள்ளது.
இன்னும் பல புதைவுகளின் ஆராய்ச்சி முற்றுப்பெறவில்லை. எனவே,
இந்நிலையில், தென்னிந்தியப் புதைவுகளில் கண்டெடுக்கப்பட்ட 
பானையோட்டு எழுத்துகளுக்கும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் பொருத்தங்
காண முயல்வது நற்பயன் அளிக்க வல்லது என எண்ணுவதற்கில்லை.
முடியுமோ என்று திட்டவட்டமாய்க் கூற முடியாது. 

     3. சிந்துவெளி முத்திரைகளின்மேல் மக்களின் இடுகுறிப் பெயர்களும்,
சிறப்புப் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இப் பெயர்களைத் தமிழ்-பிராமிக்
கல்வெட்டுகளிலும், சங்கச் செய்யுள்களிலும், பதிகங்களிலும் காணலாம். 

     இவ் வொருமைப்பாட்டை ஒப்புக்கொள்ளும் முன்னர்ச் சிந்து வெளிப்
பெயர்களைப் பற்றிய விளக்கம் பொருத்தமானதுதானா என்பதை நாம்
ஆராய்ந்தறிய வேண்டும். சிந்துவெளி எழுத்தாராய்ச்சியானது இன்னும்
தொடக்கநிலையிலேயே நிற்கின்றது. ஆகவே, திரு. மகாதேவன் கொண்டுள்ள
இம்முடிவை ஓர் ஊகமாகவே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக
உள்ளோம். 

     4. சிந்துவெளி அரசியலும், பழந்தமிழர் அரசியலும் ஆகிய இரண்டுமே
மிகத் திறம்பட நடைபெற்றுவந்தன. இஃதும் சிறப்பானதோர் ஒற்றுமையாகும். 

     திரு. மகாதேவன் காணும் இவ் வியைபில் தெளிவு இல்லை. முற்பட்டு
நிலவி மறைந்தொழிந்ததொரு நாகரிகச் சின்னங்களுடன் பிற்காலத்து வழங்கிய
நாகரிகம் ஒன்றன் சின்னங்களை ஒப்பிட்டு உண்மை நாடுவது ஆராய்ச்சி
விதிகளுக்கு முரண்பாடாகும். 

     5. சிந்துவெளி முத்திரைகளின்மேல் காணப்படும் சில குறிகள்
ஒருவருடைய பெயருக்கு முன்பு இணைந்துவரும் அவருடைய ஊரைத்
தெரிவிப்பதாக இருக்கலாம். சங்க கால இலக்கியத்திலும், பிற்பட்ட
இலக்கியங்களிலும் மக்கள் பெயர்கட்கு முன்பு அவர்களுடைய ஊரின் பெயர்
இணைந்துவருவது உண்மைதான். சிந்துவெளி எழுத்துகளில் ‘நகரம்’ 
என்பதைக் குறிப்பிடும் குறியீடுகளானவை ‘நகரம்’ என்ற பெயரைக் காட்டும்
எழுத்துச் சித்திரங்களைப் போலவே தோற்றுகின்றன. தம் பெயர்களுக்கு 
முன்பு தாம் பிறந்த ஊரின் பெயரை இணைத்துக்கொள்ளும் மரபு சிந்துவெளி
மக்களுக்கும் ங்ககாலத் தமிழ் மக்களுக்கும் பொதுவான தொன்றாகத்தான்
காணப்படுகின்றது. எனினும், மேலும் திட்டமான சான்றுகளைக் கொண்டுதான்
இதைப்பற்றி ஒரு முடிவுக்கு வரவேண்டும். சிந்துவெளி எழுத்துக்களை மேலும்,
பலர் ஆராய்ந்து வருகின்றனர். தாம்தாம் ஆராய்ந்தறிந்தவாறு குறியீடுகளுக்கு
அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு குறியீட்டுக்குப் பல
பொருள்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அவ்வாய்வாளர்களிடையே ஏதும்
உடன்பாடு தோன்றவில்லை. எடுத்துக்காட்டாக, சிந்துவெளி எழுத்துக்களில்
அடிக்கடி ஒரு குறி வருகின்றது, மூடியில்லாத ஒரு பாண்டம் போல அது
தோற்றுகின்றது. அக் குறி அரசமரத்தைக் குறிப்பிடுகின்றதென ரஷிய ஆய்வுக்
குழுவினர் கூறுவர்; அது மரக்கலம் ஒன்றைக் குறிப்பிடுவதாகப் பின்லாந்து
ஆய்வாளர் கூறுகின்றார் ; அது வேற்றுமை உருபு ஒன்றைக்
குறிப்பிடுகின்றதென லாங்டன் என்பார் கருதுகின்றார். அதை எகிப்திய,
சுமேரிய எழுத்துகளுடன் ஒப்புநோக்கி அது கைப்பிடிகளையும், மூக்கையும்
கொண்ட சாடி ஒன்றைக் காட்டுகிறதென்று ஹன்டர் என்ற அறிஞர்
எண்ணுகின்றார். இவருக்கு மாறாகக் கைப்பிடிகளையும் மூக்கையும் கொண்டு
அடி குவிந்த பாண்டம் ஒன்றை இக் குறி அறிவிப்பதாகத் திரு. மகாதேவன்
அவர்களே கருதுகின்றார். ஆகவே, சிந்துவெளிக் குறியெழுத்துக்களைப் பற்றிய
விளக்கம் எதையும் ஐயப்பாடின்றி ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாம் இன்று
உள்ளோம். 

     6. பண்டைய சங்க இலக்கியங்களில் கற்பனை செய்யப்பட்டுள்ள 
புராணக் கதைகளுக்கும், சிந்துவெளி முத்திரைகளின் மேல் பொறிக்கப்
பட்டுள்ள சித்திரக் காட்சிகள் சிலவற்றுக்கு மிடையே ஓர் ஒற்றுமையைக்
காணலாம். 

     பலமுனைச் சான்றுகளின்றி இதையும் நாம் திட்டவட்டமாய்
ஏற்றுக்கொள்ள வியலவில்லை. மேற்கொண்டு நடைபெற்றுவரும்
ஆராய்ச்சிகளின் வாயிலாக ஒருவேளை இவ் வறிகுறியின் கருத்துக்குச்
சார்பாகப் புதிய சான்றுகள் கிடைக்கக்கூடும். 

     இந்திய அரசாங்கத்தின்கீழ்ப் புதைபொருள் ஆராய்ச்சியில் பணியாற்றி
வரும் திரு. எஸ். ஆர். ராவ் என்பவர் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய
ஆராய்ச்சியிலீடுபட்டுள்ளவர். இவருடைய முயற்சியின் பயனாகக் குசராத்
மாநிலத்தில் புதையுண்டு கிடந்த லோதால் என்ற பழந் துறைமுகப்பட்டினம்
ஒன்று வெளியாறிற்று. அந் நகரத்து நாகரிகமும் மொகஞ்சதாரோ நாகரிகமும்
நெருங்கிய தொடர்பு உடையன என்று அவர் கருதுகின்றார். சிந்துவெளி நாகரிகம் குசராத் கடற்கரை வரையில் பரவியிருந்ததென்ற
அரியதொரு உண்மையை வெளியாக்கிய பெருமை இவரைச் சாரும். 
சிந்துவெளி எழுத்துகளை இவரும் ஆராய்ந்து ஒரு கருத்தை
வெளியிட்டுள்ளார். சிந்துவெளி மக்கள் தம் மொழியில் தொடக்கத்தில்
ஏறக்குறைய முந்நூறு குறிகளையே கையாண்டு வந்தனர் என்றும், எனினும்
காலப்போக்கில், அதாவது கி.மு. 1900-1800 ஆண்டளவில், அவற்றுள்
வழக்கொழிந்தன போக, இருபது எழுத்துகளே எஞ்சி நின்றன வென்றும்,
ஒலிக்குறிப்பு அடிப்படையில் சிந்துவெளி எழுத்துகள் இந்தோ-ஐரோப்பிய
மொழிக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளனவே யன்றித் திராவிட
மொழிக்கும் அவற்றுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்றும் அவர்
கருதுகின்றார். இதுவரை சிந்துவெளி நாகரிகத்தைப்பற்றிய ஆராய்ச்சியில்
ஈடுபட்டிருந்த அறிஞர்கள் அனைவரும் அந் நாகரிகத்துக்கும் பழந் தமிழர்
நாகரிகத்துக்கும் இடையே ஓரளவு இணக்கத்தையே உருவாக்கி வந்துள்ளனர்.
இதற்கு முற்றிலும் மாறுபாடாகக் காணப்படுகின்றது திரு.ராவ் அவர்களின்
கொள்கை. மிக அண்மையில் இவருடைய கருத்து வெளிவந்துள்ளதாகையால்
அதைப்பற்றி மேலும் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
தற்போது இவர் இவ்வாராய்ச்சியில் தொடர்ந்து ஈடு பட்டுள்ளார். 

     சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகத்துடன் வேறு சிலரும்
ஒப்பிட்டுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் மிகப் பழங்கால வேதமொழி
எழுத்துகளுடன் தொடர்புடையன என்றும், களிமண் முத்திரைகளின்மேல்
காணப்படும், விலங்குகளின் வடிவங்கள் ஆரியரின் வேள்விகளையும் 
அவற்றில்  பலியிடப்பட்ட விலங்குகளையும் குறிப்பன என்றும் சிலர்
கருதுகின்றனர். ஆரியர்கள் வேள்விகளில் பசுக்களையும் ஆடுகளையும்
பலியிடுவது வழக்கம். ஆனால், மொகஞ்சதாரோ முத்திரைகளின் மேல்
யானையின் உருவங்களும், காண்டாமிருகங்களின் உருவங்களும்
பொறிக்கப்பட்டுள்ளன. எக்காலத்திலும் இவ் விலங்குகள் ஆரியரின்
வேள்விகளில் பலியானதில்லை. எனவே, மொகஞ்சதாரோ மொழியுடன் ஆரிய
மொழி எவ் விதத்திலும் தொடர்புடையதன்று என்று கொள்ளலாம். 

     இதுவரையில் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு கி. மு. 1200
ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் ஆரிய நாகரிகம் தோன்றியிருக்க
முடியாது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டுள்ள முடிபாகும். இருக்கு
அதர்வண வேதங்களில் காணப்படும் இலக்கிய அமைப்பைக் கொண்டும் புதைபொருள்
சான்றுகளைக் கொண்டும் ஆரிய நாகரிகமானது கி.மு. 1100-1000 ஆண்டுகளில்
தோன்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். சிந்துவெளி நாகரிகம்
மறைவுக்கும் இந்திய நாட்டுக்குள் ஆரியர் நுழைந்ததற்கும் இடையில் பல
நூற்றாண்டுகள் கழிந்து போயினவாதலின் சிந்துவெளி நாகரிகத்தை ஆரியரின்
நாகரிகமாகக் கொள்ளலாகாது. மேலும், ஆரிய நாகரிகம் நாட்டுப்புறத்தோடு
ஒன்றி வளர்ந்து வந்துள்ளது. ஆனால், சிந்துவெளி மக்கள் பெரிய பெரிய
நகரங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் ; அவர்களுடைய
நாகரிகம் நகர்ப்புறத்து நாகரிகமாகும். மொகஞ்சதாரோ முழுவதும் 
செங்கல்லால் கட்டப்பட்டதொரு நகரமாகக் காட்சியளிக்கின்றது. அதன் 
அழகிய தெருக்கள் யாவும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. சொக்கட்டான்
கோடுகளைப் போல அவை நேர் நேராக ஓடுகின்றன. நகரத்தின் சுற்றளவு
சுமார் 3, 4 கி.மீ. இருக்கும். கடல் போல விரிந்தோடிய சிந்து நதிக்கரையின்
மேல் அந்நகரம் அமைந்திருந்தது. நாட்டுப் புறங்களில் சிற்றூர்களில் வாழ்ந்து
வந்த ஆரியரின் பொலிவற்ற நாகரிகத்துக்கும், திகைப்பூட்டும் வாழ்க்கை
வசதிகள் பலவும் வாய்க்கப்பெற்ற மிகப் பெரும் நகரங்களில் வாழ்ந்துவந்த
சிந்துவெளி மக்கள் வளர்த்திருந்த நாகரிகத்துக்கும் இடையே எவ்வளவு
வேறுபாடு ! 

     இஃதன்றி, சிந்துவெளிச் சிதைவுகளில் இலிங்க உருவங்கள் பல
கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி மக்கள் இலிங்க வழிபாடு 
உடையவர்கள் என இதனால் விளங்குகின்றது. ஆனால், இருக்கு வேதகால
ஆரியர்கள் இலிங்க வழிபாட்டை எள்ளிப் புறக்கணித்தார்கள். இலிங்கத்தை
வழிபட்டவர்களும், அதைப் பழித்துப் பாடியவர்களும் ஒரே இனத்தவராவர்
என்று கூற முடியாது. வேதகால ஆரியர்கள் சிந்து வெளியில் 
வாழ்ந்தவர்களாக இருந்து பிறகு கங்கை வெளியில் பரவிக்
குடியேறியிருப்பார்களாயின் சிந்துவெளிச் சின்னங்களான எழுத்து
முத்திரைகளையும், செப்பேடுகளையும் பொறிக்கும் வழக்கத்தையும் தம்முடனே
கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், வேதகால நாகரிகத்தில்
இவ்விரண்டும் காணப்படவில்லை. 

     மேலும், சிந்துவெளி மனிதனின் தலையின் வடிவ அமைப்புக்கும்
ஆரியனின் தலையின் வடிவ அமைப்புக்கும் எவ்விதமான இயைபும்
காணப்படாதது குறிப்பிடத்தக்கதாகும். ஆரிய வடிவத்துக்கு முற்றிலும் முரணாகச் சிந்துவெளி மனிதனின் நெற்றியின்மேல்
புருவம் ஏறியிருக்கின்றது. அவனுடைய உதடுகள் தடித்துப் பிதுங்கியுள்ளன.
மொகஞ்சதாரோ களிமண் முத்திரைகளின்மேல் பசுபதி என்ற உருவில் சிவன்
வடிவமும், அம்மன் வடிவமும் மிகச் சிறப்பாக இடம் பெறுகின்றன. ஆனால்,
இருக்கு வேதக் கடவுளருள் ஒருவரான உருத்திரன் முழு முதற்கடவுளராக
ஆரியரால் ஏற்கப்படவில்லை. உருத்திரன் ‘ரௌத்திராகாரத்தில்’ இருப்பதாக
இருக்கு வேதம் பேசுகின்றது. ஆனால், சிந்துவெளிப் பசுபதியோ அமைதியாக
யோகமுத்திரையுடன் அமர்ந்து காட்சியளிக்கின்றார். 

     சிந்துவெளி மக்கள் பின்பற்றி வந்த சமயமானது கோள்கள், 
விண்மீன்கள் ஆகிய வான மண்டலங்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்தது. அவர்கள் வானவியலையும் சோதிட நூலையும்
பயின்றவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் இவை
சிறப்பிடம் பெறுகின்றன. அவர்களுடைய பெயர்களுடன் விண்மீன்களின்
பெயர்களும் இணைந்திருந்தன. இக் கூறுபாடுகள் அனைத்தும் வேதகால
ஆரியருக்குப் புறம்பானவையாம். ஆதி ஆரிய நாகரிகத்தில் வானவியலும்
சோதிடமும் இடம் பெற்றில. பிற்கால ஆரியர்கள் பிற நாகரிகங்களிலிருந்து 
பல கருத்துகளையும், சொற்களையும் ஏற்றுக் கொண்டனர். 

     பறவைகளையும் விலங்குகளையும் தொடர்புறுத்தும் வழக்கம் ஆதி
ஆரியரிடமும் காண முடியாது. அஃது அவர்களுடைய சமயத்தில்
பிற்காலத்திற்றான் நுழைவுற்றது. விநாயகக் கடவுளின் பெருச்சாளியும்,
சிவபெருமானின் எருதும், துர்க்கையின் சிங்கமும், முருகக் கடவுளின் மயிலும்,
திருமாலின் கருடனும் ஆரியர்கள் தமிழரிடமிருந்து ஏற்றுக் கொண்டவையாம்.
அரசமரத்தைக் குறிக்கும் ‘அசுவத்தம்’ என்னும் சொல் சிந்துவெளி
மக்களிடமிருந்து ஆரியத்தில் புகுந்ததாகும். ‘பூஜை’ என்னும் சொல் 
அனாரியச் சொல் என்றும், பூ-செய் என்னும் தமிழ்ச் சொற்றொடர் 
ஆரியத்தில் பூஜை என மருவி பூஜா எனவாயிற்றென்றும் சுநீத்குமார் 
சாட்டர்ஜி கூறுவார். 

     சிந்துவெளி நாகரிகமும் நகரங்களும் எக்காரணத்தாலோ
மறைந்தொழிந்தபின்னர், சிந்துவெளி மக்களுள் ஒருசாரார் கங்கை வெளியில்
பரவிக் குடியேறி இருக்கக்கூடும். வேறு பலர் கூட்டங் கூட்டமாகத் தெற்கு
நோக்கி வந்து தக்காணத்திலும், தமிழகத்திலும் தங்கிவிட்டிருப்பார்கள்.
வேதங்களில் பாணிகள் என்றொரு குலத்தினர் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்கள் வணிகர்கள் என்றும், வட்டிமேல் வட்டியிட்டு வாங்குபவர்கள் என்றும்
வேதங்கள் கூறும். இப்பாணிகட்கு வேள்விகளில் ஈடுபாடு கிடையாது ; 
ஆரியக் கடவுளரையும் இவர்கள் வணங்குவதில்லை. ஆரியருக்கும்
பாணிகளுக்குமிடையே அடிக்கடி பூசல்கள் நேர்வதுண்டு. பாணிகளின்
குடியிருப்புகள் மேல் ஆரியர்கள் படையெடுத்துச் சென்றதாகவும், அதற்காகப்
பாணிகள் அவர்கள்மேல் பழிதீர்த்துக் கொண்டனர் என்றும் இருக்கு வேத
சுலோகம் ஒன்று தெரிவிக்கின்றது. கங்கை வெளியில் வந்து குடியேறிய
சிந்துவெளி மக்களே இப்பாணிகள் என ஊகித்தற்கிடமுண்டு. அவர்களுடன்
மூண்ட பூசல்களையும் போர்களையும் பாராட்டாமல், அவர்களுடைய சமயக்
கோட்பாடுகளை மட்டும் ஆரியர்கள் ஏற்றுக் கொண்டனர் போலும்.
சிந்துவெளிக் கடவுளாகிய பசுபதியை ஆரியர்கள் தம் உருத்திரன் 
நிலையைவிட மேல்நிலைக்கு ஏற்றினார்கள். யோக முத்திரைகளும், சக்தி
வழிபாடும், அரச மரமும் ஆரிய சமயத்தில் இடம் பெற்றுவிட்டன. 

     தம் சமயத்திலும் மொழியிலும் தாம் மீனுக்குக் கொடுத்திருந்த சிறப்பைச்
சிந்துவெளி மக்கள் தக்கணத்திலும் தமிழகத்திலும் குடியேறிய பிறகும்
மறந்துவிடவில்லை. தமிழ் மொழியிலும் மீனுக்குச் சிறப்பிடம்
அளிக்கப்பட்டுள்ளது. தென் பாண்டி நாட்டு மன்னரின் கொடி மீனக்கொடி.
விண்ணில் மின்னுவது மீன். தமிழ்ப் பெண்களின் கண்களுக்கு ஒப்பாவது மீன்.
மதுரையின் கடவுள் பெயர் மீனாட்சி என்பதாகும். 

     சிந்துவெளி மக்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு ஒரே காலத்தில் 
இடம் பெயரத் தொடங்கித் தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறினர் என்று
கொள்ளுவதற்கில்லை. அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பல காலங்களில்,
பலவழிகளில் தனித் தனியாகத் தென்னிந்தியாவுக்கு வந்து குடியமர்ந்தனர். 

     மத்தியதரைக் கடற்பகுதி மக்களும், சிந்துவெளி மக்களைப் போலவே 
பல தொகுதியாகப் பல காலங்களில் தென்னிந்தியாவுக்கு வந்து
குடியேறிவர்கள்தாம். அவர்கள் வடமேற்கு இந்தியா, சிந்துவெளி, கங்கைவெளி
ஆகியவற்றின் வழியாகத் தான் தமிழகத்துக்கு வந்தார்கள் என்று
கொள்ளமுடியாது. சிலர் அவ்விதம் வந்திருக்கலாம். அவர்களுள் ஒருசாரார்
கடல் கடந்து வந்து தமிழகத்தின் மேலைக்கடற்கரையில் குடியேறினர் எனக்
கருதலாம். பொதுவாக சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழருக்கும் தொடர்பு
இருந்ததெனவே கருதலாம். 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...