Monday, 9 February 2015

பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 05

                           பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 05

கடவுளும் சமயமும் 
     தமிழருக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்திருந்த ஆதிகுடிகளின் கடவுட்
கொள்கைகளும், தமிழ் மக்களின் சமயக் கொள்கைகளும், ஆரியரின் சமயக்
கொள்கைகளும் ஒன்றுகலந்து சங்க காலத்து மக்கள் சமுதாயத்தில் இடம்
பெற்றிருந்தன. தமிழர் உயிர் துறந்த வீரர்கட்குக் கல்நாட்டி வணங்கினர்.
வீரக்கல் நடும் வழக்கம் தொல்காப்பியத்துக்கு முன்பே காணப்பட்டது. அந்
நடுகற்களுக்கு மலர்மாலை அணிவித்து மயிற்பீலிகளால் அணி செய்வர்.223
பழந்தமிழர் பேய்பூதங்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.224 அவர்கள்
காலத்தில் மரணத்துக்குப் பிற்பட்ட துறக்கம், நரகம் என்ற நிலைகளைப்
பற்றிய கொள்கைகள் உருவாகிவிட்டன.225 

     மரத்தின்கீழ்த் தெய்வங்கள் தங்கியிருந்தன என்று அக்காலத்து மக்கள்
நம்பினர்.226 ஆலமரத்தின்கீழ்ச் சிவபெருமான் அமர்ந்திருப்பதாகப் புராணக்
கூற்றுகள் உண்டு.227 ஆலிலை மேல் திருமால் பள்ளிகொண்டார். வேம்பு,
கடம்பு, வில்வம், கொன்றை முதலிய மரங்கள் தெய்விகம் பெற்றிருந்தன.
மன்னர் தமக்கெனக் காவல் மரங்கள் கொண்டிருந்தனர்.228 பண்டைக்
காலத்தில் மூன்றாம் பிறையைத் தொழும் வழக்கம் பெரிதும்
காணப்பட்டது.229

     ஹாரப்பா, மொகஞ்சதாரோ மக்கள் சிவலிங்க வழிபாடு செய்துவந்தனர்
என்று அங்குக் கிடைத்துள்ள சான்றுகள் சிலவற்றால் அறிகின்றோம். இவ்
வழிபாட்டைப் பால்குறி வழிபாட்டின் வடிவமாகக் கொள்ளுகின்றனர்.
தமிழர்கள் இப்பண்டைய நாகரிகத்தைச் சார்ந்தவர்கள் என்று
ஆராய்ச்சியினால் உறுதியாகுமாயின் பால்குறி வழிபாடு இற்றைக்குப்
பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழரிடையே நிலவி வந்ததெனக்
கொள்ளலாகும்.

     குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து
திணைகட்கும் ஐந்து கடவுளர் வழிபாட்டுக்குரியவர்களாக இருந்தனர்.
சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகிய இக்
கடவுளரைப் பற்றிய எண்ணற்ற புராணக் கதைகள் சிலப்பதிகாரக்
காலத்துக்குள் தமிழகத்தில் நுழைந்து

     223. புறம். 232, 264.
     224. பதிற்றுப். 18 : 15
     225. புறம். 240 : 6
     226. அகம். 270 : 12
     227. புறம். 188 : 9
     228. புறம். 23, 36, 57, 162, 336.
     229. புறம். 1 : 9-10 ; குறுந். 178.

விட்டன. தமிழகத்தில் குடியேறிய ஆரியர்கள் சமயக் கதைகள் பலவற்றைப்
புனைந்து பரப்பிவிட்டனர். அவர்கள் வேள்விகள் வளர்க்கத் தொடங்கினர்.
அதற்கு மன்னரின் துணையை நாடிப் பெற்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப்
பெருவழுதி என்ற மன்னன் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்திருந்தவன்.
அவன் அந்தணருக்குப் பல வேள்விச் சாலைகளை அமைத்துக் கொடுத்தும்,
பல வேள்விகளை வேட்பித்தும் தன் பெயருக்குமுன் ‘பல்யாகசாலை’ என்ற
விருது ஒன்றைப் பெற்றுக்கொண்டான். இராசசூய வேள்வி வேட்டுச் சோழ
மன்னன் ஒருவன் ‘இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ என்ற பட்டம்
பெற்றான். பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பாலைக்
கவுதமனார் என்ற புலவர் ஒருவரின் உதவியுடன் ஒன்பது வேள்விகள்
வேட்பித்தான். 

     சங்க காலத்திலும் ஊழையும் கடவுளையும் பொய்யெனக் கருதியவர்கள்
இருந்தனர். அக்காலப் புலவர்கள் அவர்களுடைய கொள்கையை
ஏற்றுக்கொண்டிலர்; வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அதை அவர்கள்
வன்மையாக மறுத்து வந்தனர்.230 ‘உலகத்தார் உண்டு என்பது இல்என்பான்
வையத்து அலகையா வைக்கப் படும்’231 என்று திருவள்ளுவரும் அக்
கொள்கையினரைக் கடிந்து பாடியுள்ளார். ‘குணம் குறிகளைக் கடந்தும், மனம்
மெய்களுக்கு எட்டாமலும் உள்ள ஒருவனே இறைவன்’ என்ற பொருளைக்
குறிக்கும் ‘கடவுள்’ என்னும் சொல் தமிழில் சிறப்புடைய சொற்களில்
ஒன்றாகும்.232 இச் சொல் சுட்டும் கருத்துச் சங்க காலத்தில் நன்கு வளர்ச்சி
பெற்றிருந்தது.233 சிவன் முழுமுதற் கடவுளாகக் கொள்ளப்பட்டான். 

     பண்டைய தமிழகத்தில் சங்க காலத்தில் சிறுதெய்வ வழிபாடும்
நடைபெற்று வந்தது. ‘கள்ளி நிழற்கடவுள்’234. ‘கூளி’235, ‘பேய்’236 ஆகிய
தெய்வங்கட்கும் மக்கள் வணக்கம் செலுத்தி வந்தனர். உற்பாதங்களிலும்,
தீயகனவுகளிலும், பறவை நிமித்தத்திலும், விண்ணினின்றும், கொள்ளி மீன்
விழுவதிலும், உன்னமரம் பூத்ததிலும் மக்கள் பின்னர் நிகழவிருந்த
நிகழ்ச்சிகளை முன்னரே அறிவிக்கும் குறிகளைக் கண்டனர். 

     230. புறம். 29 : 11, 52.
     231. குறள். 850. 
     232. புறம். 106, 399. 
     233. புறம். 100 : 7 ; கலித். 10 : 7 
     234. புறம். 260.
     235. புறம். 23. 
     236. புறம் : 37, 238, 369, 373.


No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...