Monday, 9 February 2015

தமிழக வரலாறு - 09

                               தமிழக வரலாறு - 09

 5. பண்டைய தமிழரின்
                  அயல்நாட்டுத் தொடர்புகள்


     ‘திரைகட லோடியுந் திரவியம் தேடு’ என்பது ஒரு மூதுரை. காலத்தால்
பிற்பட்டதாயினும் பழந்தமிழரின் வாழ்க்கைப் பண்பாடுகளுள் ஒன்றை இது
தெற்றென விளக்குகின்றது. பண்டைத் தமிழர்கள் சோம்பித் திரிந்தவர்கள்
அல்லர் ; உழைத்து உழைத்து வாழ்க்கையில் இன்பங் காணுவதிலேயே
கண்ணுங்கருத்துமாய் விளங்கியவர்கள். அவர்கள் மலைகளுடனும்,
காடுகளுடனும், கடலுடனும் கலந்து உறவாடினார்கள். மேற்கே கிரீஸ், ரோம்,
எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். எகிப்து,
பாலஸ்தீனம், மெசப்பொடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன்
பண்டைய தமிழகர்கள் வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.
தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றுக்கு
மேற்காசிய நாடுகளில் பண்டைய நாள்களிலேயே வேட்கையுண்டு. யூதர்களின்
ஆதி சமயத் தலைவரான மோசஸ் என்பார் தாம் நிகழ்த்தி வந்த இறை
வழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் எனப் ‘பழைய ஏற்பாடு’
கூறுகின்றது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு.1490-ல் என்பர்.
தென் அராபிய நாட்டு அரசி ஷேபா என்பாள் [இஸ்ரேலின் மன்னன்
சாலமனைக் காணச் சென்றபோது ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப்
பண்டங்களைக் கையுறையாகக் கொண்டு போனதாகவும் பழைய ஏற்பாட்டில்
ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. சாலமன் ஆண்ட காலம் கி.மு. 1000 என்று
அறுதியிட்டுள்ளனர். இவருடைய காலத்தில் டயர் நாட்டு மன்னர் ஹீராம்
என்பாரின் ஏவலின்கீழ் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சில மரக்கலங்கள் கீழை
நாடுகளுக்குப் பாய்விரித்தோடிப் பொன், வெள்ளி, தந்தம், குரங்குகள், துகிம்
(தோகை அதாவது மயில் தோகை), ஆல்மக் (அகில் மரங்கள்), விலையுயர்ந்த
இரத்தினங்கள் ஆகிய சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்தனவாம். சாலமன்
மன்னனுக்கு அளிக்கப்பெற்ற மதிப்பிறந்த இப் பண்டங்களின் 

பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்பதில் ஐயமில்லை.
இப் பொருள்கள் அனைத்தும் பண்டைய தமிழகத்தின் சேர நாட்டுத்
துறைமுகங்களினின்றும் ஏற்றுமதியாகியிருக்கவேண்டும்.

     தமிழகத்துக்கும் பாபிலோனியாவுக்குமிடையே மிக விரிவான வாணிகம்
நடைபெற்று வந்ததற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. பாபிலோனியாவில்
நிப்பூர் என்ற இடத்தில் முரஷு என்பவரும் அவர் மக்களும் நடத்தி வந்த
காசு வாணிகத்தில் கணக்குப் பதியப்பட்ட கணிமண்ணேடுகள் சிலவற்றில்
பாபிலோனியர் தமிழக வணிகருடன் கொண்டிருந்த பற்று வரவுகள்
குறிக்கப்பட்டுள்ளன. அதே காலத்தில் தமிழ் வணிகர்கள் பாபிலோன்
நகரத்தில் குடியேறி அங்கேயே தங்கித் தம் தொழிலை நடத்தி வந்ததற்கும்
இவ்வேடுகள் சான்று பகர்கின்றன.

     தமிழகத்துக்கும் எகிப்துக்குமிடையே ஏற்பட்டிருந்த வாணிகத் தொடர்பு
மிகப் பழமையானதாகும். அது எப்போது தொடங்கியிருக்கும் என்னும்
கேள்விக்குப் பலவாறான விடைகள் அளிக்கப்படுகின்றன. பல
நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ‘எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ்’
(Periplus of the Erithraean Sea) என்னும் நூலை டபிள்யூ. எச். ஸ்காபி
என்பார் பதிப்பித்துள்ளார். தம் பதிப்புரையில் அவ்வாசிரியர் ‘கிரேக்க மக்கள்
அநாகரிகத்தினின்றும் விழித்தெழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே
எகிப்தும் பண்டைய இந்திய நாடுகளும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தன.
பாரசீக வளைகுடாவின் வடபால் இந்நாடுகள் ஒன்றோடொன்று பண்டமாற்றுச்
செய்து கொண்டன’ என்று கூறுகின்றார். பண்டைய தமிழகத்திலிருந்து
ஏற்றுமதியான பண்டங்களுள் சிறப்பானவை மஸ்லின் துணியும், ஏலம்,
இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களுமாம். தமிழக வணிகர்கள் இச்
சரக்குகளை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவுக்கு
இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர். பினீஷியர் அல்லது அராபியர்
அச்சரக்குகளை அவ்விடங்களில் தம் வசம் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு
எடுத்துச் சென்றனர். எகிப்தின் பதினேழாம் அரசு பரம்பரையினர் காலத்தில்
(கி.மு. 1500-1350) அந் நாட்டில் இறக்குமதியான சரக்குகள் பல தந்தத்தினால்
கடையப் பட்டவை என அறிகின்றோம். இவற்றில் சில
தென்னிந்தியாவினின்றுதான் ஏற்றுமதியாயிருக்கவேண்டும்.
தென்னிந்தியாவுக்கும் சுமேரியாவுக்குமிடையில் கி.மு. நாலாயிரம்
ஆண்டுகளுக்கு 
முன்பே வாணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்ததென்று சேஸ் (Sayce)
என்பார் தம் ஹிப்பர்ட் டெசாற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டுள்ளார்.
சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் கண்டுபிடிக்கப் படுவதற்குப் பல 
ஆண்டுகட்கு முன்பே இக்கருத்தை இவர் வெளியிட்டார்.
சிந்துவெளியாராய்ச்சிகள் தம் கூற்றை மெய்ப்பிக்கும் என்பதை அன்று அவர்
அறியார். தாம் கொண்ட முடிபுக்கு இரு சான்றுகளை அவர் எடுத்துக்
காட்டினார். ஒன்று ; சுமேரிய மன்னரின் தலைநகரமான ‘ஊர்’ என்ற 
இடத்தில் சந்திரபகவானுக்கு எழுப்பிய கோயில் சிதைவுகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டுத் தேக்க மரத்தின் துண்டு ஒன்றும்
அச் சிதைவுகளில் காணப்பட்டது. ‘ஊர்’ என்ற அவ்வூர் கி. மு.
மூவாயிரத்திலேயே அழிந்து போய்விட்டதாகையால் அத் தேக்கமரத் துண்டின்
வயதை ஐயாயிரம் ஆண்டுகளுக்குமேல் மதிப்பிடலாம். கேரள நாட்டிலிருந்து
கி.மு. மூவாயிரத்துக்கு முன்னரே தேக்கமரம் ஏற்றுமதி யாயிற்று என்று
இதனால் அறிகின்றோம். இரண்டு பழங்கால உடைகளைக் குறிப்பிடும்
பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் மஸ்லின் என்னும் துணிவகையைக்
குறிக்கும் ‘சிந்து’ என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. மஸ்லின் என்பது மிகமிக
நுண்ணிய துணிவகையாகும். அக் காலத்தில் மிக நுண்ணிய துணிவகைகள்
தமிழகத்தில் நெய்யப்பட்டு வந்தன. இத்துணி தமிழகத்திலிருந்து
பாபிலோனியாவுக்கு ஏற்றுமதியாகி இருக்க வேண்டும். சிந்து என்னும் சொல்
தமிழில் கொடியைக் குறிக்கும்.1 கொடி துணியாலானது. எனவே, இச் சொல்
துணியையே குறிக்கலாயிற்று. கன்னடத்திலும் துளுவிலும் துணிக்குச் ‘சிந்து’
என்று பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. இத் துகில் தமிழகத்திலிருந்து
பாபிலோனியாவுக்குக் கடல் வழியாகத்தான் சென்றிருக்கவேண்டும் ; அன்றிப்
பாரசீகத்தின் வழியாகச் சென்றிருக்க முடியாது. பாரசீக மொழியில் ‘சி’ 
என்னும் எழுத்தொலி ‘ஹி’ என்று மாறும். பாரசீகத்தின் வழியாக இத்துணி
ஏற்றுமதியாகி இருந்தால் அதன் பெயர் ‘ஹிந்து’ என்று மாறியிருக்கவேண்டும்.
அப்படியின்றி அது பாபிலோனியாவில் ‘சிந்து’ என்றே வழங்கிற்று. எனவே,
கேரளத்திலிருந்து துணியானது கடல் வழியாக நேராகவே 
பாபிலோனியாவுக்குச் சென்றது என்று ஊகிக்க வேண்டியுள்ளது. சிந்து 
என்னும் சொல்லுக்கும் சிந்து என்னும் ஆற்றின் பெயருக்கும் எவ்விதமான
தொடர்பும் இல்லை. 
    1. கந்தரந்தாதி, 21. 
   பண்டைய நாள்களில் தென்னிந்தியாவுக்கும் மடகாஸ்கருக்கு மிடையே
நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிகின்றது.
தென்னிந்தியர் பலர் வாணிகத்தின் பொருட்டாகவே மடகாஸ்கருக்குச் சென்று
குடியேறினர். தம்முடைய முன்னோர் முன்னொருகாலத்தில் தென்னிந்தியாவில்
மங்களூரினின்றும் குடிபெயர்ந்து மடகாஸ்கருக்கு வந்து தங்கிவிட்டார்கள்
என்று அந் நாட்டு மக்கள் கூறிக்கொள்கிறார்கள். அந் நாட்டின் பழம் பெயர்
‘மலே’ என்பது. சமஸ்கிருத சொற்கள் கலந்த இந்தோனேசிய மொழியை
மடகாஸ்கர் மக்கள் வழங்கி வருகின்றார்கள். தென்னிந்தியாவிலிருந்து மலேசிய
நாடுகளுக்குச் சென்ற வணிகர்களோ, அன்றி அவர்கள் வழிவந்தவர்களோ
மலேசியாவைக் கைவிட்டுச் சென்று மடகாஸ்கரில் குடியேறினர் போலும். 

     பண்டைய காலந்தொட்டே மேலை நாடுகளுடன் தமிழ் மக்கள் மிகவும்
விரிவான கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். அயல்நாட்டு வாணிகம் கி.மு.
ஏழாம் நூற்றாண்டிலிருந்துதான் தொடர்ந்து நடைபெற்றுவந்தது. தமிழகத்து
ஏற்றுமதிச் சரக்குகளை அராபியரும், பினீஷியரும் எகிப்தியரும் தத்தம்
மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 

     கிரேக்கர்கள் தமிழகத்துடன் வாணிகத்தில் இறங்கியது கி.மு. ஐந்தாம்
நூற்றாண்டின் தொடக்கத்திற்றான். இவ் வாணிகத்தின் மூலம் தமிழ்ச் சொற்கள்
பல கிரேக்க மொழியில் நுழைந்து இடம்பெற்றுள்ளன. சொபோகிளீஸ்,
அரிஸ்டோ பேனீஸ் முதலிய கிரேக்க அறிஞரின் நூல்களில் இவற்றைக்
காணலாம். ‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் நுழைந்து
‘அரிஸா’ என்று உருக்குலைந்தது. அம் மொழியில் கருவா (இலவங்கம்)
என்னும் தமிழ்ச் சொல் ‘கார்ப்பியன்’ என்றும், இஞ்சி வேர் ‘சின்ஞிபேராஸ்’
என்றும், பிப்பாலி ‘பெர்ப்பெரி’ யாகவும் உருமாற்றம் அடைந்தன. இரு வேறு
மொழிகளுக்கிடையே தோன்றும் சொற்கலப்புகளைக் கொண்டே அம்மொழி
பேசும் நாடுகளுக்கிடையே நிலையான வாணிகத் தொடர்பு இருந்து வந்தது
என்று உறுதியாகக் கூறமுடியாது. எனினும் அந் நாடுகள் ஒன்றோடொன்று
கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று ஒரு முடிவுக்கு வரலாம். 

     தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும், ஏனைய ஏற்றுமதிப்
பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள்
அறிந்துகொண்டனர். எனினும், கி.பி. முதலாம் நூற்றாண்டுவரையில் ரோமரின் வாணிகம் பெருமளவு
விரிவடையவில்லை. இக் கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னரின்
நாணயங்கள் தமிழ்நாட்டில் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது அ தற்கு
ஒரு சான்றாகும். ரோமாபுரிச் சக்கரவர்த்தி அகஸ்டஸ் என்பார் கி.மு. 30-ல்
எகிப்தை வென்று அதன்மேல் தம் ஆட்சியை நிலைநாட்டினார். இவ் வெற்றி
எதிர்பாரத ஒரு நலனையும் அவருக்குப் பயந்தது. இதனால் அவருக்குத்
தமிழகத்துடன் நேர்முக வாணிகத் தொடர்பு கிட்டியது. கிறித்தவ ஆண்டு
தொடங்கிய பிறகு முதல் சில நூற்றாண்டுகளில் தமிழகத்துக்கும் 
ரோமாபுரிக்கும் இடையே கடல் வாணிகம் பெருமளவுக்கு வளர்ந்து
வரலாயிற்று. இதற்குப் பல சான்றுகள் உள. ரோமாபுரிச் சக்கரவர்த்தி
அகஸ்டஸின் உடன்காலத்தவர், ஸ்டிராபோ (Strabo) என்ற நூலாசிரியர். 
இவர் பூகோள நூல் ஒன்றை எழுதியுள்ளார். ‘எரித்திரியக் கடலின் 
பெரிபுளூஸ்’ ( Periplus of the Erithraean Sea) என்று அழைக்கப்படும்
வேறொரு வரலாற்று நூலும் (கி.பி. 60) கிடைத்துள்ளது. இதன் ஆசிரியர்
இன்னார் எனத் தெரியவில்லை. பிளினி என்பார் உயிரியல் நூல் ஒன்றையும்
(கி.பி. 70), தாலமி பூகோள நூல் ஒன்றையும் எழுதி வைத்துள்ளனர். இந்
நூல்களில் பண்டைய தமிழகத்தின் கடல் வாணிகத்தைப் பற்றிய சான்றுகள் 
பல காணப்படுகின்றன. பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளை விளக்கும்
செய்திகள் சங்க இலக்கியங்களில் மலிந்து கிடைக்கின்றன. இவை அச்
சான்றுகளால் மெய்ப்பிக்கப் படுகின்றன. புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள
அரிக்கமேடு என்னும் இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் மூலம் பல
வகையான புதைபொருள்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் சிறப்பானவை
ரோமாபுரியின் நாணயங்கள். பழந்தமிழகத்துடன் ரோமாபுரி 
மேற்கொண்டிருந்த கடல் வாணிகத்தின் விரிவை இந் நாணயங்கள்
எடுத்துக்காட்டுகின்றன. ரோமாபுரி ஆசிரியர்கள் எழுதிய நூல்களின்
வாயிலாகத் தமிழகத்தின் துறைமுகங்களைப் பற்றித் தெரிந்து
கொள்ளுகின்றோம். அவற்றில் பல துறைமுகங்களின் பெயர்கள் 
உருக்குலைந்து காணப்படுகின்றன. சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களான
தொண்டியைத் திண்டிஸ் என்றும், முசிறியை முஸிரிஸ் என்றும், 
பொற்காட்டைப் பகரி என்றும், குமரியைக் கொமாரி என்றும் ரோமர்கள்
குறிப்பிட்டுள்ளனர். அவற்றைப் போலவே, தமிழகத்தின் கீழைக் கடற்கரைத்
துறைமுகங்களான கொற்கையைக் கொல்சாய் என்றும், நாகப்பட்டினத்தை
நிகாமா என்றும், காவிரிப்பூம்பட்டினத்தைக் கமரா என்றும், புதுச்சேரியைப் பொதுகே என்றும், மரக்காணத்தைச் சோபட்மா என்றும், மசூலிப்பட்டினத்தை
மசோலியா என்றும் அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. சேரநாட்டுத் துறைமுகங்கள்
அனைத்தும் கண்ணனூருக்கும் கொச்சிக்கு மிடையில் அமைந்திருந்தன.
அரேபியாவிலிருந்தும், கிரீஸிலிருந்தும் வாணிகச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு
வந்த எண்ணற்ற நாவாய்கள் முசிறியில் செறிந்து கிடந்தனவென்று பெரிபுளூஸ்
கூறுகின்றது. வைகாசி மாதந் தொடங்கி மூன்று நான்கு மாதங்கள் வரையில்
சேரநாட்டுக் கடற்கரையின்மேல் வந்து மோதும் தென்மேற்குப் பருவக்காற்றை
முதன்முதல் கண்டறிந்தவர் ஹிப்பாலஸ் (கி.பி. 45) என்ற கிரேக்கர் எனக்
கூறுவர். இக் காற்றோட்டத்தினூடே பாய்விரித்தோடுங் கப்பல்கள் வெகு
விரைவாகவும், கட்டுக் குலையாமலும் சேரநாட்டுத் துறைமுகங்களை
அடையமுடியும் என்ற உண்மையை ஐரோப்பிய மாலுமிகள்
அறிந்துகொண்டனர். இப் பருவக்காற்றின் துணைகொண்டு வாணிகச் சரக்குகள்
ஏற்றிய பெரிய பெரிய மரக்கலங்கள் கடல்களின் நடுவில் பாய்விரித்தோடித்
தமிழகத்தின் மேலைக்கரைத் துறைமுகங்களை யடைந்து நங்கூரம் பாய்ச்சின.
தென்மேற்குப் பருவகாற்றின் பயனைத் தெரிந்து கொள்ளும் முன்பு
வாணிகர்கள் சிறு சிறு படகுகளில் பண்டங்களை ஏற்றிக் கொண்டு
கரையோரமாகவே ஊர்ந்து வந்து நீண்ட நாள் கழித்துச் சேரநாட்டுத்
துறைமுகங்களை யடைவது வழக்கம். அந்தத் தொல்லை இப்போது ஒழிந்தது.
நெடுங்காலந் தாழ்ந்து போனால் பல பண்டங்கள் கெட்டுப்போம் என்ற
அச்சமும் கவலையும் அவர்களை விட்டுச் சுழன்றது. 

     தமிழகத்துடன் ரோமர்கள் மேற்கொண்டிருந்த வாணிகம் 
அவர்களுடைய பேரரசரின் ஆதரவின்கீழ்ச் செழிப்புடன் வளர்ந்து வந்தது.
இவ் வாணிகத்தின் வளர்ச்சியில் பேரரசர் அகஸ்டஸு ம் பேரூக்கங் காட்டினார்.
ஆர்மஸ் (Hormuz) துறைமுகத்திலிருந்து ஏறக்குறைய நூற்றிருபது 
மரக்கலங்கள் பாய்விரித்தோடியதைத் தாம் நேரில் கண்டதாக ஸ்டிராபோ
கூறுகின்றார். பாண்டிய மன்னன் ஒருவன் தன் தூதுவர் இருவரைத் தன்
அரசவைக்கு அனுப்பி வைத்ததாக அகஸ்டஸ் என்ற ரோமாபுரிப் பேரரசரே
கூறுகின்றார். ரோமாபுரியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல் வாணிகம்
காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டது. ரோமாபுரிப் பேரரசின்
ஆட்சி முடிவுற்றபின் ரோமரின் வாணிகம் தமிழகத்தில் மட்டுமன்றி
மசூலிப்பட்டினத்திலும், ஒரிஸ்ஸா கடற்கரையிலும் பரவலாயிற்று. ரோமாபுரி நாவாய்கள் அங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சின. 

     ரோமர்கள் மட்டுமன்றிக் கிரேக்கரும், சிரியரும், யூதரும் தமிழகத்துடன்
வாணிகத் தொடர்பை வளர்த்துக் கொள்ளலானார்கள். தமிழகத்தில் ரோமாபுரி
மக்கள் குடியேறி வாழ்ந்துவந்த இடங்களிலெல்லாம் அவர்களும் இணைந்து
வாழலானார்கள். அவர்களுள் பலர் தமிழகத்திலேயே நீண்டகாலம்
தங்கிவிட்டனர். அப்படித் தங்கியிருந்தவர்களிடமிருந்தே தமிழகத்தினைப்
பற்றிய செய்திகளைத் தாம் கேட்டறிந்ததாகப் பிளினி கூறுகின்றார். வாணிகம்
விரிவடைய விரிவடையத் தமிழ்நாட்டிலேயே குடியேறிவிட்ட 
ரோமாபுரியினரின் தொகையும் வளர்ந்து வந்தது. அவர்களுடைய சேரி ஒன்று
மதுரை மாநகருடன் இணைந்திருந்ததாகத் தெரிகின்றது. அவர்கள் வழங்கி
வந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது
புதைபொருள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. ரோமர்கள் தமக்கள்
தாமே செய்துகொண்ட வாணிகத்தில் இந் நாணயங்களைப்
பயன்படுத்திக்கொண்டனர் போலும். மதுரையில் ரோம நாணய அச்சுச்சாலை
ஒன்று நடைபெற்றிருக்க வேண்டுமென ஊகிக்க வேண்டியுள்ளது. அகஸ்டஸ்
பேரரசனின் கோயில் ஒன்று வழிபாட்டில் இருந்து வந்ததாகப் பியூட்டிங்கரின்
அட்டவணைகளிலிருந்து அறிகின்றோம். 

     ரோமாபுரியினரின் வாணிகம் ஓங்கி நின்றபோது அரிக்கமேடு என்னும்
இடத்தில் அவர்களுடைய பண்டசாலை யொன்றும், விற்பனைச்சாலை
யொன்றும் நடைபெற்று வந்தன. மத்தியதரைக் கடல் நாடுகளில் மக்கள்
கையாண்ட மட்பாண்டங்களைப் போன்ற கலங்கள் அரிக்கமேட்டிலும்
கிடைத்துள்ளன. ரோமாபுரியில் இறக்குமதியான சரக்குகளின் அளவு
ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே போயிற்று. அதனால், ஆண்டுதோறும்
6,00,000 பவுன் மதிப்புள்ள ரோமாபுரித் தங்கம் தமிழரின் கைக்கு
மாறிக்கொண்டே வந்தது. இவ்வளவு பெருந்தொகையில் தம் நாட்டுச் செல்வம்
வடிந்து வருவதைக் கண்டு வெருவிய ரோமாபுரி மக்களில் சிலர்,
‘தமிழகத்துடன் நடைபெற்றுவந்த வாணிகத்தையும் தமிழகத்துப்
பண்டங்களின்மேல் ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும் வன்மையாகக்
கண்டித்தனர். 

     பேரரசன் நீரோ என்பவன் கி.பி. 68-ல் காலமானான். அவனுக்குப் பின்
விளைந்த அரசுரிமைப் போட்டியினாலும், அதனால் மூண்ட அரசியல் குழப்பத்தினாலும் ரோமர்கள் நவமணிகளையும்,
நுண்ணாடைகளையும் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்துகொள்ளுவது
குன்றிவரலாயிற்று. நீரோவை யடுத்து வெஸ்பேஸியன் ரோமாபுரியின்
பேரரசனாக அரியணை ஏறினான். தன்னைச் சுற்றியிருந்த பிரபுக்களின்
செல்வச் செருக்கையும், வாழ்க்கை ஆடம்பரங்களையும் அவன் வெறுத்தான்.
அப் பிரபுக்களின் அளவுக்கு மீறிய இன்ப வாழ்க்கையை ஒடுக்கும்
நோக்கத்துடன் பல சட்டங்களை இயற்றினான்; தன் முயற்சிகளும் நிறைவேறக்
கண்டான். ரோமாபுரிக் குடிமக்கள் மீண்டும் எளிய வாழ்க்கையில்
ஈடுபடலானார்கள். வெஸ்பேஸியன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் 
காரணமாக ரோமர்கள் தமிழகத்துடன் வைத்துக்கொண்டிருந்த வாணிகத்
தொடர்பும் சுருங்கிவரத் தொடங்கிற்று. ரோமாபுரியில் கி.பி. மூன்றாம்
நூற்றாண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட நாணயங்கள் தமிழகத்தில்
கிடைக்கவில்லை. இந்த ஒரு காரணத்தைக் கொண்டு ரோம வாணிகம் அறவே
அற்றுவிட்டது என்று கொள்ளுவதற்கில்லை. ஏனெனில், தமிழகத்து மிளகும்
துணி வகைகளும் ரோமாபுரிக்குத் தொடர்ந்து ஏற்றுமதியாகிக் கொண்டே
இருந்தன. விசிகாத்து மன்னன் கி.பி. 410-ல் ரோமாபுரியைக் கைப்பற்றினான்.
அந்நகரத்துக் குடிமக்களின்மீது தண்டம் ஒன்று விதித்தான். ரோமர்கள்
மூவாயிரம் பவுண்டு மிளகு தனக்குத் திறை செலுத்த வேண்டும் என்றும்,
தவறினால் தான் ரோமாபுரியை அழித்துவிடப் போவதாகவும் மருட்டினான்.
ரோமர்கள் தம் நகரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அம் மன்னன்
கேட்ட அவ்வளவு மிளகையும் செலுத்தித் தம் நகரை 
மீட்டுக்கொண்டார்களாம். தமிழகத்துப் பண்டங்கள் கி.பி. ஐந்தாம்
நூற்றாண்டிலும் ரோமாபுரிக்குத் தொடர்ந்து ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது
என்ற செய்தியை இவ் வரலாறு உறுதி செய்கின்றது. பேரரசன்
கான்ஸ்டன்டைன் காலத்திலிருந்து (கி.பி. 324-337) தென்னிந்தியாவிலும் வட
இந்தியாவிலும் மீண்டும் ரோம நாணயங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை
4,5ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கவேண்டும். பேரரசன்
கான்ஸ்டன்டைன் தன் ஆயுள்நாளின் இறுதியில் இந்தியத் தூதுவர் ஒருவரைத்
தன் அரசவைக்கு வரவேற்றான் என்று ரோமாபுரி வரலாறு கூறுகின்றது.
பேரரசன் ஜூலியனும் (கி.பி. 36-63) இந்தியாவினின்றும் பல தூதுவர்களை
வரவேற்றுள்ளான். 
 
     கொங்கணக் கடற்கரையோரத்திலும், வடமலையாளக் கடற்கரை
யோரத்திலும் கடற்கொள்ளைக்காரர்கள் மலிந்திருந்தனர். அதனால் ரோமர்கள் அவ்விடங்களை நாடவில்லை போலும். பெரிபுளூஸ்
ஆசிரியர் கண்ணனூரைப்பற்றியும், தொண்டியைப் பற்றியும் தம் நூலில்
குறிப்பேதும் கொடுக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமாகும். நீரோவுக்குப்
பிறகு சிறிது காலம் ரோமர்கள் இந்தியச் சரக்குகளைப் பண்டமாற்று முறையில்
கொள்முதல் செய்து வந்தனர் என அறிகின்றோம். 

     பண்டைய தமிழர்கள் மத்தியதரைக் கடல் நாடுகளுக்குத் தம்
சரக்குகளைத் தாமே நேர்முகமாக ஏற்றிச் செல்லுவதில்லை. மாமன்னன்
அலெக்சாண்டர் (கி.மு. 356-323) காலத்துக்கு முன்பு தமிழகத்து வணிகர்கள்
பாபிலோனியாவைக் கடந்து அப்பால் சென்றதாகத் தெரியவில்லை ;
செங்கடலிலும் அவர்கள் நுழையவில்லை. இவர்கள் செங்கடல்வரையில் ஏற்றிச்
சென்ற சரக்குகளைப் பினீஷியரும் கால்டேயரும் ஏற்றுக்கொண்டு 
மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு அவற்றை எடுத்துச் சென்று விலையாக்கினர்.
பிறகு கிரேக்கர்களும் எகிப்தியரும் இக்கடமையை மேற்கொண்டனர்.
அவர்களைத் தொடர்ந்து கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில்
அராபியரும் ரோமரும் தமிழகத்துப் பண்டங்களை மேலை நாடுகளுக்குக்
கப்பலேற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டார்கள். இந்தியர் செங்கடலைக் 
கடந்து நெடுந்தொலைவு கலமோட்டிச் செல்லவில்லை என்ற ஒரு
காரணத்தினாலேயே அவர்களுக்குக் கடலோடும் ஆற்றல் நிறைந்திருக்க
வில்லை என்று கொள்ளலாகாது. ஏனெனில், நைல் நதியின் துறைமுகப்
பட்டினமான அலெக்சாண்டிரியாவில் நூற்றுக் கணக்கில் இந்தியர் வாழ்ந்து
வந்தனர். அவர்கள் அம் மாநகரில் கூட்டங் கூட்டமாகக் கூடித் தம்
சரக்குகளை விற்பனை செய்து வந்தார்கள். 

     நடுக்கடலில் தமிழர்கள் கலமோட்டிச் செல்லாவிடினும், அவர்கள்
கரையோரமாகவே தோணிகளை ஓட்டிச் சென்று வாணிகம் செய்தனர். இத்
தோணிகள் யாவும் தனித்தனி மரக்கட்டையைக் குடைந்து உருவாக்கப்
பெற்றவை. ஆனால், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டே மிகப் பெரிய
கப்பல்களைக் கட்டக்கூடிய ஆற்றலையும், நுண்ணறிவையும் தமிழர்
பெற்றுவிட்டனர். இக் கப்பல்கள் ஒவ்வொன்றும் முப்பத்து மூன்று டன் எடைச்
சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடியவை. பிற்காலத்தில் சோழ மன்னர்கள்
காலத்தில் இவற்றைவிடப் பெரிய கலங்களும் கட்டப்பெற்றன. சோழ 
மண்டலக் கடற்கரையில் புதுவை, மரக்காணம் முதலிய துறைமுகங்களில்
மாபெருங் கப்பல்களும், பெரிய கட்டுமரங்களும் வந்து தங்குவதுண்டு. இவ்விடங்களிலிருந்தும் நாவாய்கள் கரையோரமாகவே பாய்விரித்தோடிச்
சேரநாட்டுத் துறைமுகங்களை யடைவதுண்டு. பிற்காலத்தவர்களான 
பல்லவர்கள் இரட்டைப் பாய் விரித்த கப்பல்களையும் வாணிகத்தில்
ஈடுபடுத்தியிருந்தனர். 

     சேரநாட்டுக் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகங்களில் வந்து
தங்கிய கிரேக்கக் கப்பல்கள் மிகவும் பெரியவை. பருவக் காற்றுகளின் பயனை
அறிந்தபிறகு ரோமாபுரியின் வாணிகம் ஓங்கி உச்ச நிலையை எட்டிற்று.
செல்வஞ் செழித்த ரோமாபுரிப் பிரபுக்கள் முதலீடு செய்து மிகவும் 

     பெரிய மரக்கலங்களைக் கட்டுவித்தார்கள். வாணிகத்தின் 
வளர்ச்சிக்கேற்ப அக் கப்பல்களின் எண்ணிக்கையும் அளவும்
பெருகிக்கொண்டே போயின. எகிப்தியரும் கப்பல் கட்டும் கலையில்
சளைத்தவர்களல்லர். இந்திய சமுத்திரத்தைக் கடந்து செல்லுமளவுக்கு மிகப்
பெரிய கப்பல்களை அவர்கள் ஓட்டினர். எகிப்தியர் செலுத்திய கப்பல்கள்
சிலவற்றிற்கு ஏழு பாய்மரங்கள் விரிக்கப்பட்டிருந்தனவாம். 

     தமிழகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பலவகையான பண்டங்கள்
ஏற்றுமதியாயின. புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டை
நாய்கள் ஆகியவற்றைத் தமிழகம் ஏற்றுமதி செய்தது. தமிழகத்து வேட்டை
நாய்கள், தரத்தில் மேலானவை என அயல்நாடுகளில் மிகவும்
பாராட்டப்பெற்றன. புலிகள் ஒரு வேளை வடஇந்தியாவிலிருந்தும் 
ஏற்றுமதியாகி யிருக்கக்கூடும். ஆனால், யானைகள் தமிழகத்தில் மட்டுந்தான்
உயிர்வாழ்ந்தன. ஆகையால், யானைகள் ஐரோப்பிய நாடுகளுக்குத்
தமிழகத்திலிருந்துதான் போயிருக்க வேண்டும். அயல்நாட்டினர் சில
பாம்பினங்களையும் தமிழகத்தில் கொள்முதல் செய்தனர். இந்தியாவிலிருந்து
இறக்குமதியான ஒன்பதடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றைத் தாம் எகிப்தில்
கண்டதாக ஸ்டிராபோ எழுதியுள்ளார். சேரநாட்டுக் காடுகளில் பலவகையான,
மிகவும் நீண்ட பாம்புகள் மலிந்து கிடந்தன. எனவே, சேர நாட்டுத்
துறைமுகங்கள் மூலம் இப் பாம்புகள் ஏற்றுமதியாயின என்று ஊகிக்கலாம்.
மேலை நாட்டினர் தமிழகத்தில் வாணிகம் செய்த பண்டங்களில் மிகவும்
விலையுயர்ந்தவை யானைத் தந்தங்களும் முத்துகளுமேயாம். 

     தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை இலவங்கம்,
மிளகு, இஞ்சி, ஏலம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி,
நூக்கு, சந்தனம் ஆகிய கட்டட மரவகைகள் முதலியன. மிளகும் இஞ்சியும்
மருந்துகள் செய்யப் பயன்பட்டன. ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர் கி.மு.
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் இந்திய மருத்துவ முறைகளையும்,
மருந்து வகைகளையும் கையாண்டு வந்தார். அவர் மிளகை ‘இந்திய மருந்து’
என்றே குறிப்பிடுகின்றார். நல்லெண்ணெயின் பயனைக் கிரேக்கர்கள் கி.மு.
ஐந்தாம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்திருந்தனர். நல்லெண்ணெய் 
பண்டைய தமிழரின் உணவுப் பண்டங்களுள் ஒன்றாகும். ரோமரும்
நல்லெண்ணெயை இறக்குமதி செய்தார்களா என்பது தெரியவில்லை.
தமிழகத்துக் கருங்காலி மரங்கள் ரோமாபுரியில் பெருமளவில் 
விற்பனையாயின. பாரசீக வளைகுடாத் துறைமுகங்களில் தமிழகத்துத் தேக்க
மரங்களைக் கொண்டு கப்பல்கள் கட்டினார்கள். தேக்க மரங்கள் சேர நாட்டுக்
காடுகளிலிருந்தும் கன்னட நாட்டிலிருந்தும் வெட்டி ஏற்றுமதி 
செய்யப்பட்டவை என்பதில் ஐயமில்லை. 

     தமிழகம் மேலைநாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பைப்
பற்றிச் சங்க இலக்கியங்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன. தமிழகர்கள்
அந் நாடுகளிலிருந்து தேயிலையும் பொன்னையும் இறக்குமதி செய்தனர். பல
யவனர்கள் தமிழக மன்னர் அரண்மனைகளில் கைவினைக் கம்மியராகவும்,
காவற்காரராகவும் பணிபுரிந்தனர். ‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப...’ (யவனர்
நல்ல குப்பிகளில் கொணர்ந்து தந்த நறுமணம் கமழும் குளிர்ந்த மதுவைப்
பொன் வளையல்களை யணித்த இளம் பெண்கள் பூவேலை செய்யப்பட்ட
பொற்கிண்ணங்களில் ஊட்டுவிக்கின்றனர்) என்று புறநானூற்றுச் செய்யுள் 
ஒன்று கூறுகின்றது.2 ‘சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர் 
தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம்
கெழு முசிறி ஆர்ப்பு எழ...’ (ஒடிந்த மரச் சுள்ளிகளை ஏந்தி வரும்
பேரியாற்றில் குமிழ்த்தெழும் வெள்ளை வெளேரென்று மின்னிய நுரைகள்
கலங்கும்படி யவனர் செய்து முற்றிய அழகிய வேலைப்பாடமைந்த உறுதியான
மரக்கலங்கள் பொன்னைக்கொண்டு வந்து கொட்டிவிட்டு மிளகு மூட்டைகளை
ஏந்திச்செல்லும் பேரொலி எழும் வளம் மிகுந்த முசிறிப்பட்டினம்...) என்று
அகநானூறு3 குறிப்பிடுகின்றது. மேலைநாடுகளுடன் மட்டுமின்றிக்
கீழைநாடுகளான சீனம், மலேசியா, ஜாவா (சாவகம்), வடபோர்னியா ஆகிய
நாடுகளுடனும் 

     2. புறநானூறு- 56. 3. அகநானூறு - 149. 
           தமிழகமானது மிகவும் வளமானதொரு கடல் வாணிகம் நடத்தி வந்தது
குறிப்பிடத் தக்கதாகும். சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிகத்
தொடர்பானது மிகவும் பழைமையானதாகும். இத் தொடர்பு கி.மு. ஆயிரம்
ஆண்டவிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகின்றது. தமிழகத்துப் 
பண்டங்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின 
என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன. சீனத்துப் பட்டாடைகளையும்,
சருக்கரையையும் தமிழகம் ஏற்றுக் கொண்டது. இதனால் இன்றளவும் 
பட்டுக்குச் சீனம் என்றும், சருக்கரைக்குச் சீனி என்றும் பெயர் வழங்கி
வருகின்றது. சீனக் கண்ணாடி, சீனக் கற்பூரம், சீனக் கருவா, சீனக் களிமண்,
சீனக் காக்கை, சீனக் காரம், சீனக் கிழங்கு, சீனக் கிளி, சீனக் குடை, சீனச்
சட்டி, சீனர் சரக்கு, சீனச் சுக்கான், சீனச் சுண்ணம், சீனத்து முத்து, சீன நெல்,
சீனப் பட்டாடை, சீனப் பரணி, சீனப் பருத்தி, சீனப்புகை, சீனப் புல், சீனப் 
பூ, சீன மல்லிகை, சீன மிளகு, சீன ரேக்கு, சீன வங்கம், சீன வரிவண்டு,
சீனாக் கற்கண்டு, சீனாச் சுருள் என்னும் சொற்கள் இன்றளவும் 
தமிழ்மொழியில் பயின்று வருகின்றன. சீனம் என்னும் சொல்லுடன் இணைந்து
வரும் தமிழ்ச் சொற்கள் இன்னும் பல உண்டு. 

     பிலிப்பீன் தீவுகளில் அண்மையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில்
இரும்புக்காலப் புதைபொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்
கத்திகள், கோடாரிகள், ஈட்டிகள் போன்ற கருவிகள் அனைத்தையும் கி.மு.
முதலாம் ஆயிரம் ஆண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப்
பெரிதும் ஒத்துள்ளன. சீனம், சாவகம் போன்ற கீழைநாடுகளுடன்
மேற்கொண்டிருந்த வாணிகத் தொடர்பின் பழைமையை இச்சான்றுகள் 
எடுத்துக் காட்டுகின்றன. 

     கிழக்காசிய நாடுகளுக்கும் ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த
கடல் வாணிகத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா,
சாவகம் முதலிய நாடுகளிலிருந்து தமிழகம் பண்டங்களைக் கொள் முதல்
செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது. மேலை
நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த கடல் வாணிகம் குன்றிய பிறகு கீழை
நாடுகளுடனான அதன் வாணிகம் மேலும் மேலும் வளர்ந்து வரலாயிற்று.
தமிழகத்து மக்கள் இந் நாடுகளில் பல குடியேற்றங்களை அமைத்துக்
கொண்டனர்; இந் நாடுகளுடன் அரசியல் தொடர்புகளைப் பெருக்கிக்
கொண்டனர்; இங்கெல்லாம் தம் நாகரிகத்தையும் பண்பாடுகளையும் பரப்பினர்.

ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தங்கி
வாணிகம் செய்துவர வேண்டுமாயின் அந் நாட்டில் உள்நாட்டு வாணிகம்
மிகவும் செழிப்பான முறையில் நடைபெற்று வந்திருக்கவேண்டும் என்பதில்
ஐயமில்லை. எனவே, தமிழகத்தின் உள்நாட்டு வாணிகம் செழித்தோங்கி
யிருந்தது எனலாம். தமிழகத்து வணிகர்கள் கூட்டங் கூட்டமாகக் கூடிக்
கொண்டு, வண்டிகளிலும் பொதிமாடுகளின் மேலும் தம் பண்டங்களை ஏற்றிச்
சென்று ஊரூராக விலை கூறுவர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள்
மலிந்து கிடக்கின்றன.4 உள்நாட்டு வாணிகத்தில் பெரும்பாலும் பண்டமாற்று
முறையே வழங்கி வந்தது. 

     தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்குமிடையே கி.மு. மூன்றாம்
நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவுக்கு வாணிகம் நடைபெற்றுவந்தது.
தமிழகத்தில் ஊர்கள் சில பண்டங்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கின.
பாண்டி நாட்டு முத்துகளைப் பற்றி மெகஸ்தனிஸ் சாலவும் புகழ்ந்து
பேசுகின்றார். தாமிரவருணி, பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த
முத்துகளும், மதுரையில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைவகைகளும்
கௌடிலியரின் அருத்தசாத்திரத்தில் புகழிடம் பெற்று விளங்குகின்றன.
உறையூர், பருத்தி நெசவில் பேர்பெற்று விளங்கிற்று. தமிழகத்துப் பண்டங்கள்
வடநாட்டுக்கு வங்கக் கடல் வழியாகவே சென்றன; தரை வழியாக நடைபெற்ற
வாணிகம் மிகவும் குறைவுதான். 

     தமிழகம் அயல்நாடுகளுடன் மேற்கொண்டிருந்த வாணிக உறவானது
தமிழரின் நாகரிகம், பண்பு, கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் கைகொடுத்து
உதவிற்று. குறிப்பாக வட இந்திய வாணிகத் தொடர்பினால் தமிழகத்துக்கு
ஏற்பட்ட நல் விளைவுகள் பல ; தீமைகளும் பல. வட இந்தியாவிலிருந்து
வாணிகச் சரக்குகளுடன் ஆரிய மக்களும் சிறுசிறு கூட்டமாகத் தமிழகத்தில்
நுழையலானார்கள். ஆரியரின் நாகரிகத்துக்கும் பண்பாடுகளுக்கும் தமிழரின்
நாகரிகத்துக்கும் பண்பாடுகளுக்கும் ஆழ்ந்த வேறுபாடுகள் உண்டு.
அவர்களுடைய மொழிக்கும் தமிழ் மொழிக்கு மிடையே முரண்பாடுகள் பல
உண்டு. ஆரியரின் கடவுளர் வேறு; தமிழர் வழிபட்டு வந்த கடவுளர் வேறு.
ஆரியரின் வாழ்க்கை முறைகள் வேறு ; தமிழரின் வாழ்க்கை முறைகள் வேறு.
இடம்விட்டு இடம் பெயரும் மக்கட் 

     4. பெரும்பாணாற்றுப்படை அடி - 65.

கூட்டங்களில் பெரும்பாலார் உடற்கட்டும் நெஞ்சுரமும் இளமையும்
வாய்வளமும் வாய்ந்தவர்களும், கலைஞர்களும், புதுமை வேட்கையினரும்
மட்டுமே சேர்ந்திருப்பர் ; நோய்வாய்ப்பட்டவர்களும், அறிவிலிகளும், கோழை
நெஞ்சினரும் இடம் பெறார்கள். தமிழகத்தை நாடிவந்த ஆரியரும் முற்கூரிய
நல்வாய்ப்புகள் அனைத்தும் பெற்றவர்களாகவே இருந்தனர். தமிழகத்துக்குள்
அடிவைத்த ஆரியர்கள் பலர் தமிழ்நாட்டிலேயே தங்கிக் குடியேறிவிட்டனர்.
அவர்கள் மக்களுடன் கலந்து வாழ்ந்தும் தமிழ் மொழியைப் பயின்றும்,
தமிழரின் பழக்க வழக்கங்களைத் தாமும் மேற்கொண்டும், தமிழ்க்குடிகளாகவே
மாறிவிட்டனர் எனினும், அவர்களுடைய நெஞ்சின் ஆழத்தில் மட்டும் தாம்
வடவர்கள் என்றும், தம் நாகரிகமும் பழக்க வழக்கங்களும் மேலானவை
என்றும், தமக்கு இடங்கொடுத்திருந்த தமிழ் மக்கள் தாழ்குடிகள் என்றும் ஓர்
உட்குரல் ஒலிக்கக் கேட்டுக் கொண்டேயிருந்தது. நாளடைவில் தமிழகத்து
மன்னர்களின் நன்மதிப்பையும், நட்புறவையும் இவர்கள் ஈட்டிக்கொண்டனர்.
அவற்றைத் தம் நலத்துக்கும், தம் குடி நலத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும்
அரியதொரு வாய்ப்பை ஆரியர் கைநழுவ விடவில்லை. அவர்கள் ஆரிய
எழுத்துகளின் ஒலிகளையும் ஆரியர் சொற்களையும் தமிழிலும் கலந்தனர்.
தம்முடைய பழக்க வழக்கங்களையும், சமயக் கோட்பாடுகளையும், தெய்வ
வழிபாட்டு முறைகளையும், பண்பாடுகளையும் அவர்கள் தமிழகத்தில்
பரவவிட்டனர். இரு வேறு இயல்புகள் படைத்த தமிழர், 
ஆரியர்களுக்கிடையே இனக் கலப்பும் உண்டாயிற்று. இக் கலப்புகள் யாவும்
மெல்ல மெல்லக் காலப் போக்கில் ஏற்பட்டனவேயன்றித் திடீரென்று ஒரு சில
நாளில் ஏற்பட்டனவல்ல. எந்நாட்டிலும், எக்காலத்திலும் திடீர்க் கலப்புகள்
நிகழுவது இயல்பன்று. தமிழகம் ஆரியமயமாக்கப்பட்டது என்று சிலர் கூறுவர்.
அவர்களுடைய கருத்துக்குச் சான்றுகள் கிடையா. எனவே, அதை உண்மை
என நம்புவதற்கில்லை. வெகு காலமாகத் தனிச் சிறப்புடனும் தூய்மையுடனும்
வளர்ந்து வந்த ஒரு நாகரிகமும் பண்பாடும் இடையில் நுழைந்த ஒரு
மக்களினத்தின் முயற்சியால் வழக்கிறந்து அழிந்து மறைந்து போய்விட்டன;
தமிழகம் ஆரிய நாடாகிவிட்டது என்னும் கூற்றானது வரலாற்றுக்கு
முரண்பாடாகும். ஆரிய மொழி தமிழகத்தில் நுழைந்து பரவலாயிற்று 
என்பதை மறுக்க முடியாது. ஆரிய எழுத்தொலிகளும் சொற்களும் தமிழில்
கலந்தனவாயினும் அவற்றுக்குத் தமிழர் ஓர் ஒதுக்கிடத்தையே அளித்து
வந்தனர். அவற்றைத் தமிழில் ஆளுவதற்குத் தனி இலக்கண விதிகள்
வகுக்கப்பட்டன.

ஆரிய மொழியின் கூட்டெழுத்து வடிவங்கள், எழுத்துப் புணர்ச்சி முறைகள்,
சொற்சேர்க்கை மரபுகள் தமிழில் இடம் பெறவில்லை. எனவே, அவ்வாரிய
எழுத்தொலிகளையும் சொல்லமைப்புகளையும் தமிழில் சேர்ப்பதற்காகவே
பிற்காலத்தில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன. ஆரியக் கடவுளர்
தமிழகத்தில் சிறுதெய்வங்களாகவே விளங்கினர். சிந்துவெளி மக்களின்
பசுபதியும் பண்டைய தமிழரின் மாயோனும் சேயோனும் தொடர்ந்து தமிழரின்
வழிபாட்டைப் பெற்று வந்தனர். நாள் பட ஆரியர் மதக் கொள்கைகளையும்
தமிழர் பின்பற்றினர். 

     வடநாட்டுடன் வாணிகத் தொடர்பை மேற்கொண்ட தமிழகத்துக்கு
மற்றொரு சீர்கேடு விளையலாயிற்று. இனம், குலம், ஆகிய வேறுபாடுகளினால்
இடர்ப்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப்
பிரந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன.
பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின்படியே வாழ்ந்து வந்த மக்கள் அவ்
வாழ்க்கையினின்றும் நழுவினர். முல்லை நிலத்து இடையனும் குறிஞ்சி 
நிலத்துக் குறவனும் மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது ;
அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல்
நிலத்துப் பரதவப் பெண்ணைக் காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.
தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட இந்த இன்னல்களைக் கண்டு அஞ்சிப் பல
அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.
‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை
யான்’ என்று முதன்முதல் தமிழருக்கு எடுத்தோதியவர் திருவள்ளுவர். இக்
குறளை அறத்துப் பாலில் வைக்காது பொருட்பாலில் வைத்திருப்பது 
குறிப்பிடத் தக்கதாகும். பொருட்பால் முழுவதும், மக்கள் சமூகத்தின்
வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். காலத்தால்
திருக்குறள் ஆசிரியருக்குப் பிற்பட்டவரான திருமூலரும், ‘ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும்’5 என்று கூறி மக்களைத் திருத்த முயன்றார். ஏழாம்
நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாதிரம்
பல பேசும் சழக்கர்கள்! கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?’6
என்று வினவுகின்றார். அவருக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்குப் 
பிற்பட்டுத் தோன்றிய 

    5. திருமந்திரம் - செய்யுள் எண் : 2104. 
    6. தேவாரம் 5 : 60 : 3

மாணிக்கவாசகரும், ‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் 
ஆதமிலி நாயேன்...’7 என்று சாதி வேறுபாடுகளை அறவே வெறுக்கின்றார்.
சாதி சமய வேறுபாடுகளை, மக்களை விழுங்கிவிடும் ஆற்றுநீர்ச் சுழலுக்கு 
இவர் ஒப்பிடுகின்றார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவரான
இராமலிங்க அடிகளார், ‘சமயம் குலம் முதல் சார்பெலாம் விடுத்த அமயந்
தோற்றிய அருட்பெருஞ்சோதி’8 என்றும், ‘சாதிகுலமென்றும்... ஓதுகின்ற
பேயாட்டம்’9 என்றும் மக்கள் சமூகத்தை அலைத்து வருகின்ற சாதி
வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றார். 

     தமிழர் மரபில் கலந்துவிட்ட ஆரியக் கருத்துகளும், சொற்களும்,
பண்பாடுகளும் இடத்திற்கேற்பத் தம் வடிவம் மருவித் தமிழ் வடிவை
ஏற்றுக்கொண்டதுமுண்டு. அதைப் போலவே, தமிழரின் கருத்துகளையும்
சொற்களையும், பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் ஆரியரும்
ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆடவன் அத்தை மகள் அம்மான் மகளை
மணப்பதும், பெண் அத்தை மகன் அம்மான் மகனை மணப்பதும், 
பெண்மக்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குங்குமப் பொட்டு அணிவதும்,
விருந்தினரை வரவேற்று அவர்கள் பிரிந்து விடைபெறும்போது அவர்கட்கு
வெற்றிலை பாக்குக் கொடுப்பதும், பெண்கள் விதவைக்கோலம் பூண்பதும்,
தமிழரின் வழக்கங்கள். இவற்றை ஆரியரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்மக்கள் வழிபட்ட தெய்வங்கள், சமயச் சடங்குகள், புராணக் கதைகள்
ஆகியவை ஆரியருக்கும் உரிமையாயின. 

     ஆரியர்கள் தங்கள் வாழ்விற்கு இடந்தேடியும், மன்னரின் ஆதரவை
நாடியுமே தமிழகத்தில் வந்து குடியேறினார்கள். அவர்கள் தமிழருடன் போர்
புரியவில்லை ; போரிட்டு நாடு பிடிக்கவுமில்லை. ஆரியரின் ஊடுருவல்
தமிழகத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. அவர்கள் தமிழரோடு
தமிழராய்க் கலந்து தமிழரின் வாழ்க்கையையே தாமும் வாழ்ந்து தமிழரின்
வாழ்க்கை மரபுகளில் பல மாறுதல்களைப் படிப்படியாய் உண்டாக்கினார்கள். 

     ஆரியருக்கும் தமிழருக்குமிடையே பல போராட்டங்கள்
நேர்ந்தனவென்றும், அவற்றின் இறுதியில் ஆரியரே வெற்றி கண்டனர் 
என்றும், அப் போராட்டங்களையே இராமாயணக் 

     7. திருவாசகம், 31 : 5 
     8. திருவருட்பா, அருட்பெருஞ்சோதி அகவல் : அடி 295-6 : 
     9. திருவருட்பா 6ஆம் திருமுறை, சுத்த சிவநிலை, 22.

காவியம் குறிப்பிடுகின்ற தென்றும், ஒரு சாரார் கூறுவர். புராணக் கதைகள்
வேறு, வரலாற்று நிகழ்ச்சிகள் வேறு என்பதை இங்கு நாம் மறந்துவிடலாகாது.
புராணக் கதைகள் பெரும்பாலும் கற்பனைப் படைப்புகள் ; அவற்றைக்
கொண்டு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகட்குக் காரணம் காட்டல் பொருந்தாது.
இராமாயணத்தைப்போலவே கந்தபுராணத்தையும் ஆரியர்-தமிழர்
போராட்டங்களின் விளைவு என்று கூறுதலும் ஏற்புடைத்தன்று.
கந்தபுராணத்தில் வரும் அகத்தியரானவர் இருக்கு வேதத்திலும், பல புராணக்
கதைகளிலும், தமிழ் இலக்கியத்திலும் தோற்றமளிக்கின்றார். தமிழில் 
எழுந்துள்ள பிற்காலத்திய சித்தர் இலக்கியங்கள் பலவற்றுக்கு ஆசிரியராகவும்
விளங்குகின்றார். எனவே, அகத்தியரை ஆரியர் என்றோ, ஆரிய
மொழியையும், ஆரியக் குடியேற்றத்தையும் தமிழகத்துக்குக் கொண்டு வந்தவர்
என்றோ, அன்றித் தமிழகத்தில் தமிழ் பயிற்றுவிக்க வந்தவர் என்றோ கூறும்
செய்திகள் யாவும் வெறும் கற்பனைகளேயன்றி வரலாற்று நிகழ்ச்சிகள் அல்ல
என்பது தோற்றம். எனினும், அகத்தியர் யாராக இருந்திருப்பர் என்ற
ஆராய்ச்சியில் ஆய்வாளர் பலர் ஊக்கங் காட்டி வருவது இயல்புதான்.
அகத்திய முனிவர் கயிலைமலையில் வாழ்ந்தவராகவும், விந்திய மலையின்
செருக்கையடக்கியவராகவும், பொதிகைமலையில்வந்து தங்கியவராகவும்
கந்தபுராணம் தெரிவிக்கின்றது. அகத்தியர் மலய மலையில் வாழ்பவர் எனப்
பாகவதமும் மச்ச புராணமும் குறிப்பிடுகின்றன. அவர் ஆனைமலையில்
வாழ்பவராகவும் கூறுவர். சிவபுராணங்களில் அவர் வேடராகவும்,
வில்லியாகவும் காட்சி தருகின்றார். அகத்தியர்கள் அரக்கக் குலத்தினர்
என்றும், புலத்தியரின் மகனான அகத்தியர் ஒருவர் இராவணனின் முன்னோர்
என்றும் வாயுபுராணம் பேசுகின்றது. 

     அகத்தியர் அனைவருமே ஏதேனும் ஒரு மலையுடன் தொடர்பு
கொண்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். அகத்தியர்களுக்கும்
தமிழ்நாட்டுக்குமிடையே நெருங்கியதொரு தொடர்பும் இருந்ததாகத்
தெரிகின்றது. எனவே, அகத்தியர்கள் தமிழர் என்றும், புராண வரலாற்றுத்
திரிபுகளின் மூலம் ஆரியராக்கப் பெற்றனர் என்றும் ஊகிக்க
இடமேற்படுகின்றது. 

     தொல்காப்பியம் ஆக்கப்படுவதற்கு முன்பு ‘அகத்தியம்’ என்றோர்
இலக்கண நூல் வழங்கி வந்ததாகவும் கூறும் மரபு ஒன்று உண்டு.
எல்.டி.பார்னெட் என்பார் இதைப்பற்றித் தம் கருத்தைத் தெரிவிக்கின்றார். ஆரியர்கள் தமிழகத்துக்கு வந்து குடியேறிய

பின்பு, தம் நாகரிகத்தினைப் பெருக்கிக் கொள்ளுவதற்கும், தமிழரின்
பண்பாட்டுச் சிறப்புகளைச் சுருக்குவதற்கும் அவர்கள் மேற்கொண்ட
முயற்சிகளின் பயனாய் எழுந்ததொரு கற்பனையாகும் இஃது என்று அவர்
கூறுகின்றார். அகத்தியரைப் பற்றிய புராணக் கதைகளும் இத்தகைய
நோக்கத்தின் அடிப்படையில் எழுந்தவையேயாம் என்று கருத 
வேண்டியுள்ளது. தமிழரின் சமயம், சமூக வாழ்வு, மொழி, இலக்கியம், 
பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகிய துறைகளெல்லாவற்றிலும் ஆரியர்கள்
தலையிட்டு அவற்றைத் தம் இயல்புக்கு ஏற்ப மாற்றிவிட முனைந்து வந்தனர்.
மக்கள் பெயர்கள், கடவுளரின் பெயர்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள்
முதலியவற்றின் பெயர்கள் யாவும் தமிழ் வடிவத்தை இழந்தன ; ஆரிய
வடிவத்தை ஏற்றன. ஆரியர் தம் பழக்க வழக்கங்கட்கும், மொழிக்கும்
எத்துணை ஏற்றம் கற்பிக்க வேண்டுமோ அவ்வளவும் கற்பிக்கவும்,
அவற்றையே தமிழரின் வாழ்க்கை முறையில் ஆட்சியில் நிறுத்தவும் நுண்ணிய
திட்டங்கள் பல செயற்படுத்தி ஓரளவு வெற்றியுங் கண்டார்கள். அவர்கள்
புனைந்த புராணக் கதைகள் எல்லாம் அவ் வெற்றிக்குத் துணைபுரிந்தன.
எடுத்துக்காட்டாக, விசுவாமித்திர முனிவருக்கு மக்கள் ஐம்பதின்மர் என்றும்,
அவர்களின் வழிவந்தவர்களை ஆந்திரர், புண்டரர், சபரர், புலிந்தர், முதிபர்
ஆகியவர்கள் என்றும், அவர்கள் அனைவருமே ‘தாசர்கள்’ என்றும் 
ஐந்திரேய பிராமணம் என்னும் சமஸ்கிருத நூல் கூறுகின்றது. இப் பெயர்களை
ஏற்ற நாடுகள் யாவற்றிலும் ஆரியர் குடியேறி அங்கெல்லாம் தம் நாகரிகத்தை
வளர்த்துக் கொண்ட செய்தியையே இந்த ஐந்திரேய பிராமணம் எடுத்துக்
கூறுகின்றது போலும். வடமொழிக்கு இலக்கணம் வகுத்த பாணினி என்பார் 
(சு.கி. மு. 600) வடநாட்டுப் பூகோள அமைப்பை நன்கு அறிந்தவர். அவர்
நருமதைக்குத் தெற்கில் கலிங்கத்தை மட்டுங் குறிப்பிடுகின்றார் ; ஆனால்,
தென்னாட்டைக் குறிப்பிடவில்லை. அவருக்குக் காலத்தால் பிற்பட்டவரான
காத்தியாயனர் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) தம் இலக்கண நூலில் தென்னிந்திய
நாடுகள் அனைத்தையுமே குறிப்பிடுகின்றார். இதைக் கொண்டு வடநாட்டு
ஆரியர்கள் கி.மு.600-க்குப் பிறகே தமிழகத்திற்கு வந்து
குடியேறியிருக்கவேண்டும் என்று கருத வேண்டியுள்ளது. 

     ஆதியில் ஆடுமாடு மேய்த்து வயிறு பிழைத்து நிலையற்ற வாழ்க்கையை
நடத்திவந்த ஆரியர்கள் கங்கை வெளியில் பரவிக் குடியேறினார்கள்; மாபெரும் அரசுகளை நிறுவினார்கள்; நல்வாழ்வு
நடத்தினார்கள்; தனி நாகரிகம் ஒன்றை வளர்த்துக் கொண்டார்கள்; தம்
மொழிவளத்தைப் பெருக்கிக்கொண்டார்கள். அவ்வாறாயின் அவர்கள் 
தாந்தாம் வாழ்ந்திருந்த இடங்களைத் துறந்து தெற்கு நோக்கிக் குடிபெயரக்
காரணம் என்ன? கங்கை வெளியில் அவர்கட்கு நேர்ந்த இடையூறுகள் 
யாவை? அந்நியர் படையெடுப்பும் நிகழவில்லை. நாடு கடந்து வேற்று
நாட்டுக்குச் செல்லுமளவுக்கு மக்கள் தொகையில் பெருக்கமோ, அதனால்
வாழ்க்கை நெருக்கடியோ ஏற்பட வழியில்லை. ஆரியவர்த்தத்தின்
தெற்கெல்லை விந்தியமலையென மனுதருமம் கூறுகின்றது. எனவே, நாடு
கவரும் எண்ணமும் ஆரியர்களுக்கு இருந்திருக்க முடியாது. ஆய்ந்து
பார்க்குமளவில், தம் நாகரிகத்தையும், பண்பாடுகளையும், கொள்கைகளையும்
அயலாரிடத்தும் பரவச் செய்யவேண்டும் என்னும் நோக்கம் ஒன்றே
அவர்களை உந்தியிருக்கவேண்டும் என்று கருத இடமுள்ளது.
சென்றவிடமெல்லாம் ஆரியருக்கு உண்டியும், உடையும், உறையுளும் ஆட்சிப்
பொறுப்பும் வழங்குவதற்குத் தமிழகத்து மன்னர்களும் உடன்பாடாக நின்றனர்.
அவர்களுடைய நோக்கம் நிறைவேறுவதற்குப் பல வாய்ப்புகள் அவர்களை
எதிர்நோக்கி நின்றன.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...