Monday 9 February 2015

தமிழக வரலாறு - 05

                                   தமிழக வரலாறு - 05

      வரலாற்றுக் காலத்திலேயே தென்னிந்தியாவின் கிழக்கிலும் மேற்கிலும்
பல கடல்கோள்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால் தமிழகத்துத் துறைமுகப்
பட்டினங்கள் பல நீரில் மூழ்கிவிட்டன. குமரிமுனைக்குத் தென்பாலும்
நிலப்பகுதி இருந்ததாகவும் அதைக் கடல் கொண்டு போயிற்றென்றும்
புவியியலார் கருதுகின்றனர். ஆனால் அந்நிலப்பகுதி எவ்வளவு தூரம்
பரவியிருந்தது என்று அறுதியிட்டு அறிய முடியவில்லை. வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்திலும் பல கடல்கோள்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். கடல்
கொண்டு போன அத் தென்னிலப் பகுதிக்குக் ‘குமரிக்கண்டம்’ என்றொரு
பெயருண்டு. குமரிக்கண்டத்தைப்பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும்
உரைகளிலும் ஆங்காங்கு அகச் சான்றுகளாக விரவிக் காணப்படுகின்றன.
பாண்டியன் ஒருவன்பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங் கடல்

கொள்ள, வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட’தாகச்
சிலப்பதிகாரம் கூறுகின்றது.5 அதாவது இப் பாண்டியனின் நாடு
குமரிமுனைக்குத் தெற்கே நெடுந்தொலைவு பரவியிருந்ததாம். அந் நாட்டில்
பஃறுளியாற்றையும் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோட்டையும் கடல்கொண்டு
போயிற்று. இக் காரணத்தால் தன் நாட்டின் பரப்பானது சுருங்கி விட்டதைக்
கண்டான் பாண்டிய மன்னன். தென்பால் கடல் மண்டிவிட்டதால் அவன்
வடபால் தன் நோக்கத்தைச் செலுத்தினான். வடக்கில் படை செலுத்திச் 
சென்று இழப்புக்குள்ளான பஃறுளியாற்றுக்கு ஈடாகக் கங்கையையும்,
குமரிக்கோட்டுக்கு ஈடாக இமயத்தையும் கைக் கொண்டான். இச் செய்தியைப்
பற்றிய குறிப்பு ஒன்று முல்லைக் கலியிலும் காணப்படுகின்றது. ‘மலிதிரை
ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின், மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு
இடம் படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான்
வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்’ என்று ஆசிரியர் சோழன்
நல்லுருத்திரனார் கூறுகின்றார்.6 நக்கீரர், அடியார்க்கு நல்லார் ஆகிய
உரையாசிரியர் காலத்திலும், நல்லுருத்திரனார் காலத்திலும்
தொல்காப்பியனாருக்கு முன்பு ஒன்றும் பின்பு ஒன்றுமாக இரண்டு கடல்கோள்
நிகழ்ந்த செய்தியும், அவற்றால் தமிழகத்துக்குப் பேரிழப்பு நேரிட்ட செய்தியும்
பரவலாக வழங்கி வந்திருக்கவேண்டும். 

     கடல்கோள்களுக்குட்பட்டு மூழ்கிப்போன நிலப்பகுதிக்கு ‘லெமூரியாக்
கண்டம்’ என்று பெயரளிக்கப்பட்டது. சர் வால்டர் ராலே, பேராசிரியர்
ஹெக்கல், சர் ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட், சர் ஜே. டபிள்யூ.
ஹோல்டர்னஸ் ஆகிய ஆய்வாளர்கள் இந் நிலப்பகுதி ஒன்று பண்டைய
காலத்தில் இருந்ததென்று ஒப்புக்கொண்டுள்ளனர். அஃதுடன், இங்குதான்
மக்களினமே முதன்முதல் உலகின்மேல் தோன்றிற்று என்றும் கூறி ‘லெமூரியக்
கொள்கை’யை உருவாக்கினர். கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் கிழக்கிலும்
பெரிய நிலப் பகுதி ஒன்று பரந்து கிடந்தது என்பதற்கும், பிற்பாடு அது பகுதி
பகுதியாகப் பல கடல்கோள்களினால் மூழ்கிப்போயிற்று என்பதற்கும் அகச்
சான்றுகளும் புறச் சான்றுகளும் உள்ளன. ஆனால், 

     5. சிலப் : 11 : 19-23. 
     6. முல்லைக்கலி : 4 : 1-4
அஃது எவ்வளவு தொலைவு பரவி இருந்தது. இறுதியாக எப்போது மறைந்து
போயிற்று என்பது இன்னும் புவியியல் புதிர்களில் ஒன்றாகவே உள்ளது. 

     சங்க காலத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் பரவியிருந்த
தமிழகம் சங்க காலத்தில் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு
நல்உலக’மாகச் சுருங்கிவிட்டது. ‘தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா
வெல்லை’7 என்றும், ‘தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை’8
என்றும், சங்க நூல்கள் தமிழகத்தின் எல்லையை வகுத்துக் காட்டியுள்ளன.
வேங்கடத்துக்கு வடக்கில் வேற்றுமொழி (தெலுங்கு) வழங்கி வந்தது.9
வேங்கடத்துக்குத் தென்பால் ‘தேன் தூங்கு உயர்வரை நன்னாடு’ ஒன்றைப்
‘புல்லி’ என்ற மன்னன் ஆண்டு வந்தான்.10 கட்டி என்ற குறுநில மன்னனின்
நாட்டுக்கு வடக்கிலும் வடுகர் வாழ்ந்து வந்தனர்.11 பண்டை தமிழகத்தில்
இப்போதைய கேரளமும் சேர்ந்திருந்தது. ஆனால், நன்னூல் என்னும் தமிழ்
இலக்கணமானது ‘குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் 
கெல்லையின்’12 என்று தமிழகத்துக்கு எல்லை வகுக்கின்றது. இவ்விலக்கண
நூல் எழுந்தது 12ஆம் நூற்றாண்டில் ; ஆகையால், இந் நூலாசிரியரான
பவணந்தி முனிவர் காலத்தில் தமிழகத்தின் மேலையெல்லை குடகு வரையில்
சுருங்கிவிட்டது எனத் தெரிகின்றது. தமிழகத்தினின்றும் பிரிந்து நின்ற
சேரநாட்டில் தமிழ்மொழியானது உருத்திரிந்து கொடுந்தமிழாக மாறிற்று. 

     யாழ்ப்பாணம் என்று வழங்கும் வட இலங்கை தமிழகத்துடன்
சேர்ந்திருந்ததா என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. எனினும்,
யாழ்ப்பாணத்திலும் தமிழகத்திலும் வழங்கிய மொழியும், பண்பாடும் திரிபின்றி
ஒரேவிதமாக இருந்துவந்தன என்று கருதவேண்டியுள்ளது. ஈழத்துப்
பூதன்தேவனார் என்பவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர் என்று அவருடைய
பெயரே அறிவிக்கின்றது. அவர் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும்,13
குறுந்தொகையிலும்,14 நற்றிணையிலும்15 சேர்க்கப்பட்டுள்ளன. 

     7. புறம்-17 ; 1-2. 8. மதுரைக் : 70-71. 9. அகம். 211 : 7-8. 
     10. அகம். 393 : 18-20. 11. குறுந்-11 : 5-6. 12. நன். சிறப். பாயி. 
     13. அகம்.88, 231, 307. 14. குறுந், 189, 343, 360. 15. நற்றி-366.

தமிழகம் பன்னூறு ஆண்டுகள் பாண்டி நாடு, சோழ நாடு, சேர நாடு,
கொங்கு நாடு முதலிய அரசியற் பிரிவுகளுக்குட் பட்டுக் கிடந்ததற்கு அதன்
இயற்கையமைப்புதான் காரணம் என்பது தெளிவு. மேற்குத் தொடர் 
மலைகளும், கிழக்குத் தொடர் மலைகளும் இரு கடற்கரையோரங்களிலும்
அமைந்து தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஒன்றாய் இணைகின்றன.
இவ்விரு தொடர்கட்குமிடையே சமவெளி ஒன்று அமைந்துள்ளது ; மேற்குத்
தொடருக்கு மேற்கிலும் கிழக்குத் தொடருக்குக் கீழ்ப்புறத்திலும் சமவெளிகள்
உள்ளன. நீலகிரிக்குத் தெற்கிலும் சமவெளிகள் உள்ளன. இவையேயன்றிப் பல
குன்று களையடுத்தும் சமவெளிகள் அமைந்துள்ளன. இச் சமவெளிகளில்
வாழ்ந்த மக்கள் ஆங்காங்குத் தனித்தனி நாட்டு மக்களாகவே வாழ்ந்து
வந்தனர். மிகப் பெரிய நாடுகளான பாண்டி நாடு, சோழ நாடு, சேர நாடு,
கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகள் இவ்வாறு அமைந்தவையே.
இவையே யன்றி அதியமான்களும், ஆய்களும், மலையமான்களும்,
வேளிர்களும் ஆண்டுவந்த குறுநாடுகள் பலவும் தனியரசுகளாகவே இயங்கி
வந்தன. காட்டு நாடு,16 பாரி நாடு,17 கோனாடு,18 முக்காவல் நாடு,19 வேங்கட
நாடு20 முதலிய நாடுகளும் புறநானூற்றில் குறிப்பிடப்படுகின்றன. பழந்தமிழர்
ஒன்றுபட்டு வாழாமல் தனித்தனி அரசியற் சமூகங்களாகப் பிரிந்து வாழ்ந்து
வந்ததற்கு நாட்டின் இயற்கை அமைப்பே காரணம் என்றால் மிகையாகாது.
அவ்வப்போது ஒரு கரிகாலனோ, நெடுஞ்செழியனோ, அன்றி இராசராசனோ,
இராசேந்திரனோ தோன்றி அண்டை அயல்நாடுகளை வென்று தனியரசு
செலுத்தி வந்துள்ளனர் ; தமிழகத்திலும் ஒருமைப்பாடு காணப்பட்டது. 
ஆனால், பொதுவாக மக்கள் தமக்குள்ளேயே பொருமலிலும் பூசலிலும்
ஈடுபட்டு, ஒற்றுமை குலைந்து அயலாருக்கு இடங் கொடுக்க வேண்டிய
நிலைமை அடிக்கடி ஏற்பட்டுள்ளது. மலைகளும் குன்றுகளும் நாட்டில் பல
இடங்களில் குறுக்கிட்டதால் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் மருதம்,
முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை என்று நிலப் பாகுபாடுகள் ஏற்பட்டு
அவற்றிற்கேற்ப மக்களின் ஒழுக்கமும், பண்பாடுகளும், வாழ்க்கை முறைகளும்
அமையலாயின. 

     16. புறம்-150. 17. புறம் -122. 18. புறம்-61. 
     19. புறம்-80. 20. புறம்-389.


No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...