Monday 9 February 2015

பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 01

                           பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 01

அணிகலன்கள்
     பண்டைத் தமிழகத்துப் பெண்கள் ஆடைகளினால் முழுவதும் மறைக்கப்
பெறாத தம் உடலை அணிகலன் பூண்டு மறைத்தனர். மகளிர் பல்வேறு
அணிகலன்களினால் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர். யவனர் ஏற்றிவந்து
இறக்கிய பொன்னும், மன்னர் பகைவரிடமிருந்து கவர்ந்து கொணர்ந்த
பொன்னும், நாட்டிலேயே மண்ணைத் தோண்டியும் அரித்தும் எடுத்த
பொன்னும் தமிழகத்தில் எங்கும் மலிந்து கிடந்தன. முத்தும், பவழமும், இதர
மணிவகைகளும் இழைத்துப் பலவகையான அணிகள் செய்யப்பட்டன.
கைதேர்ந்த கம்மியர்கள் இவ்வணிகளைச் செய்தனர்.91 

     மகளிர் அணிந்த அணிகலன்கள் சிலவற்றைச் சிலப்பதிகாரம்
தெரிவிக்கின்றது. கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம்,
சதங்கை, குறங்குசெறி, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு
வடத்தாலான முத்துமேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்த
தோள்வளையல்கள், மாணிக்கமும் வயிரமும் அழுத்திய சூடகம், செம்பொன்
வளை, நவமணி வளை, சங்கவளை, பவழவளை, வாளைமீனைப் போன்று
இயற்றப்பட்ட மாணிக்க மோதிரம் ஆகியவை அவை. இவையன்றி, மோசை
என்னும் மரகதக் கடைசெறி,92 கழுத்திலணியும்

     86. சிலப். 6: 88
     87. சிலப். 13: 172.
     88. அகம். 86.
     89. பரிபா. 11: 79-84.
     90. மதுரைக். 431-3, 513.
     91. சிலப். 16: 105-6.
     92. நற்றி. 188 : 4

வீரச் சங்கிலி, நேர்ச் சங்கிலி, பொன் ஞாண்,93 அரிநெல்லிக்காய் மணிமாலை,
முகப்பில் கட்டின இந்திரநீலத்திடையே வயிரம் இழைத்த குதம்பை என்னும்
காதணி, சீதேவியார், வலம்புரிச் சங்கு, பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி
ஆகிய அணிகளையும் பெண்கள் அணிவதுண்டு.94 பெண்கள் இடையில்
அணிந்த பட்டிகையான மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என
ஐவகைப்பட்டிருந்தது. பெண்மக்கள் தம் காதுகளைத் தொங்க தொங்க
வளர்க்கும்போது அணிந்து கொள்ளும் காதணிக்குக் குதம்பை என்றும்,
வளர்ந்த காதில் அணியும் காதணிக்குக் கடிப்பிணை என்றும் பெயர். 

     கைவளைகளில் பலவகையான பூத்தொழில் குயிற்றப்பட்டன.95 
அவற்றுள் சிலவகை முத்தாலிழைக்கப்பட்டன. பெண்கள் கால்விரல்களில்
மோதிரம் அணியும் பழக்கம் பண்டைய காலத்தும் உண்டு.96 

     குழந்தை அணிகலன்களின் வகைக்குக் கணக்கே இல்லை எனலாம்.
குழந்தைகளின் நெற்றியில் சுட்டியும் பிறையும், மூவடம் கோத்த பொன்
சங்கிலியும் பூட்டுவார்கள்.97 கழுத்தில் ஐம்படைத் தாலியும், புலிப்பல்
தாலியும்98 அணி செய்தன. குழந்தைகளின் விரல்களில் சுறாமீனைப் 
போன்றும் இடபத்தைப் போன்றும் இலச்சினைகள் பொருத்தப்பட்ட
மோதிரங்கள் பூட்டினார்கள்.99 மணிகள் உள்ளிட்ட சதங்கைகள், பொன்
இரட்டைச் சரிகள் கால்களிலும், மணியும் பவழமும் கோத்த அரைஞாண்
இடையிலும் அணிவிக்கப்பட்டன.100 சதங்கைகளின் பூட்டு வாய்கள் 
தேரையின் வாய்போல் அமைக்கப்பட்டன.101 பெண்கள் அணிந்த 
சிலம்புகளுள் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவது வழக்கம்.102
நெல்லைத் தின்னவந்த கோழிகளின்மேல் பெண்கள் தம் குழைகளைக் கழற்றி
எறிவார்களாம். அக்காலத்தில் குழைகள் அவ்வளவு மலிந்திருந்தன 
போலும்.103 ஆண்மக்கள் மதாணி,104 முத்துமாலை,105 வெள்ளிக்கம்பியில்106
கோத்த பொற்றாமரை மலர்கள், கைவளைகள்107 ஆகிய அணிகலன்களை
அணிந்திருந்தனர். 

     93. அகம். 363.
     94. சிலப். 6 : 83-108. 
     95. குறிஞ்சிக்கலி, 23.
     96. பரிபா. 12: 23-24. 
     97. மணி. 7: 56; புறம். 77, 374; 
        அகம். 54; கலித். 80.
     98. குறுந். 161. 
     99. கலித். 84.
     100. கலித். 85. 
     101. கலித். 86.
     102. சிலப். 20: 67-69. 
     103. பட்டினப். 20-25.
     104. ஐங்குறு. 353. 
     105. கலித். 79.
     106. புறம். 11. 
     107. கலித். 84.

தமிழகத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் அயல்நாடுகளுக்கும்
ஏற்றுமதியாயின. கொடுமணம் என்ற ஊரில் செய்யப்பட்ட பொன்னணிகள்
மக்களால் பெரிதும் பாராட்டப் பெற்றன.108 

     தலைக்கோலம் செய்துகொள்ளுவதில் பழந்தமிழ்ப் பெண்கள்
அளவுகடந்த விருப்பத்தைக் காட்டி வந்தனர். அக் காலத்தில் ஒப்பனைக் 
கலை வியப்பூட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்தது. கறுத்து, நீண்டு, 
நெளிந்த கூந்தலையே மிகவும் விரும்பி வளர்த்தனர்;109 கொண்டை, குழல்,
பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து
கொண்டனர். கூந்தலில் பல வகையான மலர்களைச் சூட்டிக் கொள்ளுவர்.
பெண்கள் ஒப்பனைக்கு நூறுவகைப் பூக்கள் பயன்பட்டன. 110 மகரவாய்,111
வகிர்112 என்ற தலையணிகளையும் அவர்கள் அணிவதுண்டு.
மாணிக்கமாலையுடன் வெண்ணூலில் கோத்த மலர்களையும் பெண்மக்கள்
அணிவர். மலர் சூடாது வெறுங்கூந்தல் முடிப்பதைப் பெண்கள் இழிவாகக்
கருதினர்.113 

     மகளிர் தம் கூந்தலுக்கு அகிற்புகை யூட்டுவர்.114 கூந்தலைக்
கைவிரல்களால் கோதி உலர்த்துவார்கள்.115 அதை இரு தொகுதியாக 
வகிர்ந்து பின்னிவிடுவார்கள்.116 கண்ணாடியைத் துடைத்துப் பெண்கள் அதில்
தம் ஒப்பனையைக் கண்ணுற்று மகிழ்வார்கள்.117 இக் காலத்தைப் போன்றே
பழங்காலத்திலும் தமிழ்ப் பெண்கள் தம் கூந்தலுக்குக் களிமண் தேய்த்து
முழுகும் வழக்கம் இருந்து வந்தது.118 

     பெண்கள் கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளுவர். மைதீட்டும் குச்சிக்குக்
‘கோல்’ என்று பெயர். எப்போதும் மைதீட்டப் பெற்றிருந்தனவாதலின்
பெண்கள் கண்ணை ‘உண்கண்’ என்றே கூறுவதுண்டு.119 மகளிர் நறுமணப்
பாக்கும் வெற்றிலையும் போட்டுக்கொள்ளுவர்.120 

     ஆடவரும் தலைமயிர் வளர்த்திருந்தனர். அதைச் சுருட்டிப் பின்புறம்
முடித்திருந்தனர். நெற்றிக்குமேல் குடுமி சிறிது களையப் 

     108. பதிற். 67: 1, 74; 5-6. 
     109. புறம். 147.
     110. குறிஞ்சிப். 61-67. 
     111. கலி. 54.
     112. கலித். 55. 
     113. ஐங்குறு. 290; கலித். 28; 
        புறம். 54; 302.
     114. புறம். 146. 
     115. குறிஞ்சிப். 109.
     116. குறுந். 52 
     117. பரிபா. 12, 20.
     118. குறுந். 113. 
     119. குறுந். 38, 167.
     120. பரிபா. 12. 22

பட்டிருக்கும்.121 பார்ப்பனச் சிறுவரும் குடுமி வைத்துக் கொள்ளுவர்.122
ஆண்மக்கள் தலையில் பூச்சூடிக் கொள்ளுவது வழக்கம். தலையில் சூடும்
பூமாலைக்குக் கண்ணி என்று பெயர்.123 ஆண்கள் தலையில் முக்காடிட்டுக்
கொள்ளுவதும் உண்டு.124 
உறையுள் 

     குறிஞ்சி நிலங்களிலும், முல்லை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் சிறுசிறு
குடிசைகளில் குடியிருந்தார்கள். இக் குடிசைகளுக்குக் குரம்பை என்று
பெயர்.125 நெய்தல் நிலத்துப் பரதவர்களின் வீடுகள் புல்லாலும்
வைக்கோலாலும் வேயப்பட்டன.126 அவற்றின் நுழைவாயில்கள் மிகவும்
குறுகலானவை. வரகு, வைக்கோல், செந்நெல் கதிர், கரும்பு, கூவையிலை
ஆகியவற்றாலும் குடிசைகள் வேயப்பட்டன.127 மலையடிவாரத்தில் வாழ்ந்த
மக்கள் சிலருடைய வீடுகள் மிக அழகாகத் தீட்டிய வண்ண ஓவியம் போலக்
காட்சியளித்தன.128

     நகரங்களை மிகப் பெரிய மாடி வீடுகள் அணி செய்தன. இவ் வீடுகட்கு
வேயா மாடங்கள் என்றும் பெயர் உண்டு.129 இவை சுட்ட செங்கல்லால்
எழுப்பப்பட்டவை. இவ் வீடுகளில் மண்டபம், கூடம், தாயக்கட்டு, அடுக்களை
என்று தனித்தனிப் பகுதிகள் அமைக்கப் பட்டிருந்தன.130 வீடுகளில்
 சாளரங்கள் தெற்கு நோக்கி அமைக்கப் பட்டிருக்கும். அரண்மனைகளின்
கூரைகட்குப் பொற்றகடு வேய்ந்திருந்தார்கள்.131 இவ் வரண்மனையின்
வாயில்கள் மிகவும் உயரமானவை; குறுகியதொரு மலைக்கணவாய்போலக்
காட்சியளித்தன. வெற்றிக்கொடிகளை உயர்த்திக் கொண்டு வீரர்கள்
யானைகளின்மேல் அமர்ந்து அவ் வாயில்களின் மூலம் எளிதில் நுழைந்து
செல்லுவர். அரண்மனைகளில் விடிவிளக்குகள் எரிந்துகொண்டே இருந்தன.132
இவை யாவும் பாவை விளக்குகள்; யவனரால் வார்க்கப்பெற்றவை. கைவல்
கம்மியர் சிற்பநூல் முறைப்படியே மனைகளையும் நகரங்களையும் வகுத்துக்
கொடுத்தார்கள்.133

     121. புறம். 77:4; பு. பொ. வெ. மாலை, 209.
     122. ஐங்குறு. 202
     123. புறம். 24, 39. 124. அகம். 195
     125. நற்றி. 207. 126. குறுந். 235.
     127. புறம். 22; பெரும்பாண். 190-1
     128. புறம். 251; நற்றி.268, பதிற். 61:3, 88:28; அகம் 98:11
     129. சிலப். 5 : 7
     130. மணி. 29 : 61 முதலியவற்றாலறியப்படும்
     131. சிலப் 14:164-7. ப-உரை
     132. அகம். 87: 12-3; நெடுநல். 101-5
     133. நெடுநல். 76-9.

அரண்மனையைச் சுற்றி ஒரு வெற்று வெளி இருக்கும். அதற்குச்
செண்டுவெளி என்று பெயர்.134 புறமதில்கள் வெள்ளிய சுதையால்
பூசப்பெற்றிருந்தன.135 அரண்மனையின் உட்சுவர்கள் செம்பினால் எழுப்பப்
பட்டவை போலக் காட்சியளித்தன. சுவர்களின்மேல் மலரோவியங்கள்
தீட்டப்பட்டிருந்தன.136 மாடிமேல் நிலாமுற்றம் அமைந்திருந்தது. அம்
முற்றத்தின்மேல் பொழிந்த மழைநீர் திரண்டு உருண்டு வந்து கீழே 
விழுவதற்கு மீன் வாயைப்போன்ற அம்பணங்கள் (தூம்புகள்) அமைக்கப்
பட்டிருந்தன.137 

     அரண்மனையைப் போலவே வீடுகளுக்கும் சாளரங்கள்
பொருத்தியிருந்தனர். அவை மானின் கண்களைப்போலத் தோற்றமளித்தன.138
கதவுகளை மூடிக் குறுக்கே கணையமரம் ஒன்றைப் பூட்டுவார்கள்.139 இதற்கு
நுகம் என்று பெயர். வீடுகளுக்கு இரட்டைக் கதவுகள் அமைப்பதுமுண்டு.140
வெளியில் வீட்டு வாசலில் மேடைகள் போடப்பட்டிருந்தன.141 அவற்றுக்கு
வேதிகைகள் என்று பெயர். சுவர்களில் செம்மண் கோலம் தீட்டப்
பெற்றிருந்தன. தலையைப் பசுவின் சாணத்தால் மெழுகுவதுண்டு.142 
வீடுகளுக்கு அங்கணங்கள் என்ற சாலகங்கள் கட்டப்பட்டன.143 வீட்டின்
உட்புறத்தில் சுவர்கள்மேல் சுதை ஓவியங்கள் எழுதப்படும் வழக்கமும் இருந்து
வந்தது.144 அவ் வோவியங்களில் தெய்வங்களின் வடிவங்களும், பலவகையான
உயிர்வகைகளின் உருவங்களும் காட்சியளித்தன. செல்வர்கள்
தம்மாளிகைகளைச் சுற்றிப் பூங்கா வளர்த்தனர்; வீட்டின் புறத்தே
செய்குன்றுகளையும், வீட்டினுள் பளிக்கறைகளையும் அமைத்துக்
கொண்டனர்.145 வீடுகளுக்குப் பின்புறம் எந்திரக் கிணறுகள் இருந்தன. சிலர்
வீடுகளைச் சந்தனக் குழம்பால் மெழுகுவதும் உண்டு.146 

     வேடர்கள் குடிசைகளில் காவல் நாய்கள் சங்கிலியால்
கட்டப்பட்டிருந்தன.147 ஆயர்கள் தம் வீடுகளில் வெள்ளாடுகளும்
செம்மறியாடுகளும் வளர்த்தார்கள்.148 பார்ப்பனரின் வீடுகளில் கோழியையும்
நாயையும் நுழையவிடுவதில்லை.149 

     134. புறம். 174: 7 (உரை) 
     135. புறம். 378: 16
     136. நெடுநல். 112. 13 
     137. நெடுநல். 96.
     138. சிலப். 5 : 8. 
     139. பெரும்பாண். 127
     140. கலித். 83: 2. 
     141. சிலப். 5: 148.
     142. சிலப். 16 : 5; பெரும்பாண். 298 
     143. குறள். 720.
     144. மணி. 3 : 128-130. 
     145. மணி. 19 : 102-05. 
     146. மணி. 19 : 115. 
     147. பெரும்பாண். 125.
     148. பெரும்பாண். 153-4. 
     149. இன்னாநாற்பது, 3.

பூம்புகார் நகரம் சங்ககாலத்தில் மிகவும் பெரியதொரு நகரமாகக்
காட்சியளித்தது. இந் நகரின் உட்புறத்துக்குப் பட்டினப்பாக்கம் என்றும்,
புறநகருக்கு மருவூர்ப்பாக்கம் என்றும் பெயர்.150 இவ்விரு பாக்கங்கட்கும்
நடுவில் இடைவெளி யொன்று உண்டு. அங்குத்தான் நாளங்காடிகள் 
(பகற்காலக் கடைகள்) நடைபெற்று வந்தன. இரவில் அல்லங்காடிகள் (இரவுக்
கடைகள்) நடைபெற்றன. மதுரை மாநகரும் செழித்தோங்கி விளங்கிற்று.151
அங்கும் இவ்வங்காடிகள் நடைபெற்று வந்தன. 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...