Monday 9 February 2015

மலை வண்ண ஓவியம்

                             மலை வண்ண ஓவியம் 

     பண்டைத் தமிழர்கள் ஓவியக் கலையில் தேர்ச்சி யடைந்திருந்தன
ரென்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. ஆனால் அக்கால
ஓவியங்கள் யாவும் கற்சுவர் அல்லது கற்பாறை மீது தீட்டப்பட்டிருந்த
தென்றும் கூறமுடியாது; சுவர் மேலும் தூண்மீதும் சில அமைந்திருக்கலாம்.

     கற்பாறை மீது தீட்டப்பட்ட ஓவியங்கள் சில பல்லவர், பாண்டியர்
கோயில்களில் காணப்படுகின்றன. இவை யாவற்றிற்கும் வழிகாட்டியா
யிருந்தவன் விசித்திரசித்தன் என்ற புகழ் பெற்ற முதலாம் மகேந்திரவர்மப்
பல்லவனே எனக் கருதலாம். மாமண்டூர்க் குகைக்கோயிலிலுள்ள கல்வெட்டில்
குறிப்பிடப்பட்ட ‘தக்ஷணசித்திர’ என்னும் ஓவிய நூலைப் படைத்தவன்
மகேந்திரனே ஆவான் எனக் கருதலாம். அவனுக்குச் ‘சித்திரகாரப் புலி’
என்ற விருதும் உண்டு.

     சித்தன்னவாசல், மலையடிப்பட்டி (புதுக்கோட்டை மாவட்டம்),
மாமல்லபுரம் ஆதிவராகக் குகைக்கோயில், மாமண்டூர்க் குகைக்கோயில்
ஆகியவற்றிலும், வடஆர்க்காட்டு மாவட்டத்தைச் சார்ந்த அர்மாமலைக்
குகைக்கோயிலிலும் கற்பாறைமீது தீட்டப்பட்ட பழைய ஓவியங்களைக்
காணலாம்.

     மாமல்லபுரத்துச் சிற்பங்கள் யாவும், வராகக்குகையின் சில பகுதிகளிலும்
மாமண்டூர்க் குகையில் காணுவதுபோல் ஓவியமாகவே தீட்டியிருக்கலாம்.
ஆனால் நடுவில் காணும் ஆதிவராகச் சிலையிலுள்ள சாயப்பூச்சு
இக்காலத்தைச் சார்ந்ததென்று மிகப் பலரும் கருதுகின்றனர். மாமல்லபுரத்து
மிகச் சிறப்பு வாய்ந்த சிலர் பகீரதன் தவம் (அர்ச்சுனன் தவம்) எனப்படுவதும்
வேறு சில புடைப்புச் சிற்பங்களும் ஓவியப் படைப்பாக ஆதியிலேயே
அமைக்கப் பெற்றதெனச் சிலர் கருதினர். ஆனால், தற்போதைய
ஆராய்ச்சியாளருள் பெரும்பாலாரும் அதை ஒப்புக் கொள்ளவில்லை.
ஆதியிலேயே இன்றிருப்பது போல்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது
அவர்கள் கருத்து. 
பல்லவர் காலத்து ஓவியங்கள் சில சித்தன்னவாசலில் காணப்படுகின்றன.

இங்குள்ள குகை முழுவதும் ஆதியில் சாய மடிக்கப் பட்டிருந்ததாகத்
தோன்றுகிறது. ஆனால் தற்போது குகையின் உபரிப்பகுதியிலும்,
மேல்தளத்திலும், தூண்களிலும் தாம் ஓவியப்படைப்பின் அடையாளங்கள்
காணப்படுகின்றன. எஞ்சியுள்ளவற்றில் மிக்க கவர்ச்சியளிக்கும் ஓவியம் 
அங்குச் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஒரு குளமே. அதில் தாரை மலர், மீன்கள்,
எருமைகள், யானைகள் முதலியவையும், மூன்று மனித உருக்களும்
சித்திரிக்கப்பட்டுள்ளன. அம் மூன்று மனிதர்களையும் சமணர்களெனக்
கருதலாம். தூண்களில் பெண்கள் சிலர் நடனமாடுவதைக் 
காட்டியிருக்கிறார்கள். 

     சித்தன்னவாசல் குகை ஆதியில் சமணதீர்த்தங்கரர்களுக்கு அர்ப்பணம்
செய்யப்பட்டிருந்தது. அங்குக் காணும் ஓவியப் படைப்புகள் முதலாம்
மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்தவை எனப் பலரும் முன்னாளில் கருதினர்.
ஆனால், தற்போதைய ஆராய்ச்சியாளர் மிகப்பலரும் அவை ஒன்பதாவது
நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் காலத்தவை என எண்ணுகின்றனர். 

     வடஆர்க்காட்டு அர்மாமலையில் ஒரு குன்றின்மேல் தோன்றும்
குகையில் முன்பு சிவன்கோயில் ஒன்று இருந்தது. அங்கே பாறைமீது
செடிகொடி, தாமரை ஆகியவற்றின் ஓவியச் சின்னங்கள் காணப்படுகின்றன. 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...