தமிழக வரலாறு - 03
நாகரிகமும் பண்பாடும்
உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு. மக்கள்
சமுதாயத்தைப்பற்றிய செய்திகள் வரலாற்று நூல்களில் இடம் பெறும்.
அண்மைக் காலம் வரையில் மன்னர்களைப் பற்றிய செய்திகள் மட்டும்
வரலாற்று நூல்களில் இடம் பெற்றுவந்தன. மன்னரின் கல்வி, கலைத்திறன், அவர்களுடைய விருப்பு வெறுப்புகள்,
அவர்கள் புரிந்துகொண்ட திருமணங்கள், நிகழ்த்திய போர்கள், கண்ட வெற்றி
தோல்விகள் ஆகியவற்றையே வரலாற்று ஆசிரியர்கள் தம் நூல்களில்
குறிப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், மன்னரின் ஆட்சிக்கு
உட்பட்டு அவர்களுடைய செங்கோன்மை அல்லது கொடுங்கோன்மையின்
விளைவாக ஏற்படும் இன்ப துன்பங்களை நுகர்பவர்கள் நாட்டின்
குடிமக்களாவர்.
காலச் சுழற்சியில் ‘வரலாறு’ என்னும் சொல்லுக்குப் புதிய விளக்கங்கள்
எழுந்தன. உலகில் மக்களிடையே விஞ்ஞானம், தொழில், தொழில்நுட்பம்,
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் கருத்துப் புரட்சிகள் தோன்றிக்
கொண்டே இருக்கின்றன. மக்கள் சமுதாயத்தின் வரலாற்றில் அரசர்களும்
அரசியலும் ஏற்கும் பங்கு ஒரு சிறிதளவுதான். மக்கள் வாழ்க்கை பலதுறைப்
பட்டது ; பன்முக வைரமணி போன்றது. ஆகையால், அரசாங்க வரலாறு
மட்டுமன்றி மக்களின் வாழ்க்கை வரலாற்றைப்பற்றியும் அறிந்துகொள்ளுவது
சாலச் சிறந்ததாகும்.
மக்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் பல உண்டு. பசி என்பது
மனிதனின் அடிப்படையான, அடக்க முடியாத உணர்ச்சியாகும்.
பசியாற்றிக்கொள்ளும் பெரு முயற்சியில் மனிதன் இடைவிடாது உழன்று
கொண்டிருக்கிறான். இம் முயற்சியை விளக்கிக் கூறுவது ‘பொருளியல்’
என்பதாகும். உலகில் சமயங்கள் பல தோன்றி வளர்ந்து வந்துள்ளன ; பல
மறைந்துபோயுள்ளன. மக்கள் சமயங்களில் கொண்டுள்ள ஈடுபாட்டை எடுத்துக்
கூறுவது ‘சமய வரலாறு’. நாட்டின் மொழி வளர்ச்சியையும், இலக்கிய
வளர்ச்சியையும், கருத்துப் புரட்சிகளையும் எடுத்துக் கூறுவது ‘இலக்கிய
வரலாறு’ ஆகும்.
அரசர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை மட்டும் விளக்கிக் கூறும்
வரலாறுகள் இன்று செல்வாக்கிழந்துவிட்டன. மன்னர்கள் ஒருவரோடொருவர்
பூசலிட்டுப் போராடி, மாண்டுபோன செய்திகள் மக்கள் மனங்களுக்குப்
புளித்துவிட்டன. நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடுகள்
முதலியவற்றைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வரலாற்று
ஆய்வாளரிடம் ஆவல் மேலிட்டு வருகின்றது. வரலாற்று நூல்கள் எழுதுவதில்
புதிய முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. நாட்டின் இயற்கை யமைப்பு,
இயற்கை வளங்கள், இவற்றுடன் அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கை
இயல்புகளுக்கு ஏற்பட்டுள்ளதொடர்புகள், சமுதாயத்தில் காணப்படும் மக்களினப் பிரிவுகள், மொழி
வளர்ச்சி, இலக்கியம், கலைகள் ஆகியவற்றின் வளர்ச்சி, பொருள் பெருக்கம்,
அரசியல் ஆக்கம், குடிமக்கள் உண்ணும் உணவு, அணியும் ஆடை, பூணும்
அணிகள், அவர்களுடைய ஒழுக்கங்கள், சமயங்கள், குடிநலக் கூறுகளான
நல்வாழ்வுக் கழகங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கூறவும் வரலாறுகள் இப்போது
முனைந்து வருகின்றன.
நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியில், உலக வரலாற்றில்
தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள பங்கை ஆய்ந்து விளக்குவதே இந்நூலின்
நோக்கமாகும். தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான ஒன்றாகும். பண்டைய
எகிப்து, பாபிலோனியா, கிரீசு, ரோம் ஆகிய நாடுகள் நாகரிகத்தில் மிகவும்
சிறந்து விளங்கிய பண்டைக் காலத்திலேயே தமக்கென ஒரு நாகரிகத்தையும்
சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இந்திய
நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச் சிறப்பிடம்
அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே வரலாற்று
ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில் ஆர்.ஜி. பந்தர்க்கார்
என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார். அதில் அவர்
தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை. இக் குறைபாட்டை வின்சென்டு
ஸ்மித் போன்ற வரலாற்றாசிரியர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள். இந்திய
வரலாற்று நூல்களில் தமிழ்நாட்டைப்பற்றிய செய்திகளைக் கூறாமல்
புறக்கணித்து வந்ததற்குச் சில காரணங்கள் கூறப்பட்டன. வட
இந்தியாவைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே
கிடைத்திருக்கின்றனவென்றும், அதைப்போலத் தென்னிந்தியாவைப் பற்றிய
சான்றுகள் ஏதும் கிடைக்க வில்லையாதலால் பொருத்தமான தென்னிந்திய
வரலாறு ஒன்று எழுதுவதில் பல இன்னல்கள் உள்ளனவென்றும்
வரலாற்றாசிரியர்கள் கூறிவந்தனர். இவர்கள் காட்டும் காரணம் உண்மைக்குப்
புறம்பானதாகும். ஒரு நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு அந் நாட்டில்
எழுந்துள்ள இலக்கியப் படைப்புகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்,
புதைபொருள்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள்,
சமயக் கோட்பாடுகள் ஆகியவை சான்றுகளாக உதவி வந்துள்ளன. இச்
சான்றுகள் அத்தனையும் தமிழகத்திலும் பெருமளவு கிடைத்துள்ளன.
இவற்றைக் கொண்டே தமிழ்நாட்டின் வரலாற்றைத் தொடர்ச்சியாகவும்
விளக்கமாகவும் எழுதக்கூடும். சென்ற ஐம்பது ஆண்டுகளில் இச்
சான்றுகளைக்கொண்டு எழுதப்பட்ட தமிழக வரலாறுகள் சில வெளிவந்துள்ளன.
இந்தியாவிலேயே மிகப் பெருந்தொகையில் கல்வெட்டுகள் கிடைப்பது
தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் இதுவரையில் வெளியாகியுள்ள கல்வெட்டுச்
செய்திகளைக் கொண்டும், தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சான்றுகளைக்
கொண்டும், பண்டைய கிரீசு, ரோம், எகிப்து, சீனம் ஆகிய நாட்டு வரலாற்று
இலக்கியத்தில் தமிழரைப்பற்றிக் கிடைக்கும் சில குறிப்புகளைக் கொண்டும்
தமிழக வரலாற்று ஆசிரியர்கள் விளக்கமான வரலாறுகளை இப்போது எழுதி
வருகின்றனர். தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இதுவரை
வெளியிடப்பட்டவை சிலவே. இன்னும் பல்லாயிரம் கல்வெட்டுகள்
வெளிவராமல் கல்வெட்டுச் சாசன ஆய்வகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன.
அவையும் பதிப்பில் வருமாயின் தமிழ் மக்களின் வரலாறு மிகவும் விரிவாக
எழுதப்படலாம் என்பதற்கு ஐயம் ஏதுமில்லை.
‘விஞ்ஞான முறையில் இந்திய வரலாறு ஒன்றை எழுதப் புகும்
ஆசிரியர்கள் கிருஷ்ணா, காவிரி, வைகை ஆற்றங்கரைகளில்தாம் முதன்முதல்
தம் ஆராய்ச்சிகளைத் தொடங்க வேண்டுமே அன்றிக் கங்கைக் கரையினின்று.
. . . ...’ என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதுகின்றார். இந்தியாவில்
தோன்றி வளர்ந்து வந்துள்ள பல்வேறுபட்ட நாகரிகங்கள் ஒன்றோடொன்று
தொடர்புடையவை. இந்தியாவை வட இந்தியாவென்றும் தென்னிந்தியா
வென்றும் பிரித்து, ஒன்றைச் சிறப்பித்து மற்றொன்றைப் புறக்கணித்தல்
வரலாற்றைப் பொய்ப்பிக்க முயல்வதாகும். இந்திய வரலாற்றாராய்ச்சியைத்
தென்னிந்தியாவில்தான் தொடங்கவேண்டும் என்பது இக்கால
வரலாற்றாசிரியர்கள் அனைவருக்கும் உடன்பாடாகும். எனவே, இதுவரை
கிடைத்துள்ள பல்வேறு சான்றுகளைக் கொண்டு தமிழகத்தின் வரலாறும்,
தமிழரின் சால்புகளைப் பற்றிய செய்திகளும் பின்வரும் இயல்களில்
தொகுத்தளிக்கப் படுகின்றன.

No comments:
Post a Comment