Monday, 9 February 2015

தமிழக வரலாறு

தமிழக வரலாறு - 01

1. தமிழக வரலாற்றுக்கான
                    அடிப்படை ஆதாரங்கள்

    இந்திய வரலாறும் தென்னிந்திய வரலாறும் இதுவரை பெரும்பாலும்
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுவந்துள்ளன. தமிழில் வெளியாகியுள்ள வரலாறுகள்
ஆங்கில மொழியில் வெளிவந்துள்ள வரலாற்று நூல்களின்
மொழபெயர்ப்பாகவோ அன்றித் தழுவல்களாகவோ அமைந்துள்ளன.
தமிழ்நாடு தனியொரு மாநிலமாகப் பிரந்த பிறகும் அதன் வரலாறு தமிழில்
வெளியாகவில்லை. அக் குறையைத் தவிர்க்கும் பொருட்டே இந்நூல்
இயற்றப்பட்டுள்ளது. தமிழரின் மரபும், பண்பாடும், தமிழ் மொழியும் காலச்
சுழல்களில் சிக்குண்டும், அந்நியக் கலப்புகள் பலவற்றுக்கு உட்பட்டும் சில
மாறுதல்களை ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டு வரலாற்றைத்
தனிப்பட்டதொன்றெனக்

    கருதாமல் இந்திய வரலாற்றுடன் பிணைந்திருப்பதாகவே
கொள்ளவேண்டியுள்ளது. வரலாறு கண்ட உண்மைகளைப் புறக்கணிக்காமல்
உண்மையை நாடி, நாட்டின் வரலாற்றை உருவாக்குவது தேவை.
அஃதேயன்றிப் பழந்தமிழகத்தின் வரலாறானது பண்டைய எகிப்து,
பாபிலோனியா, சுமேரியா, ரோம், கிரீசு ஆகிய நாடுகளின் வரலாறுகளுடன்
தொடர்பு கொண்டுள்ளது.

    பண்டைய நாள்களில், பொதுவாக இந்தியாவிலும், சிறப்பாகத்
தமிழகத்திலும் வரலாற்று நிகழ்ச்சிகளை ஏடுகளில் எழுதி வைக்கும்
வழக்கத்தை மக்கள் மேற்கொண்டிலர். மிகச் சிறந்த இலக்கியங்களையும்
உரைகளையும் படைத்துக் கொடுத்த பழந்தமிழர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளைக்
குறித்துவைக்காமற் போனது வியப்பினும் வியப்பாக உள்ளது. இக் காரணத்தால்
வரலாற்று ஆசிரியர்கள் தமிழரின் வரலாறு ஒன்றை எழுதுவதில் பல
இடுக்கண்களுக்குட்பட்டு வந்துள்ளனர். ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாய்த்
தமிழகத்தின் வரலாறுகள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. பழந்தமிழர்கள்
வரலாற்றுக் குறிப்புகளை விட்டுச் செல்லவில்லையே ஒழிய அவர்களுடைய
வாழ்க்கைகளைப் பற்றிய புதைபொருட் சின்னங்கள், இலக்கியக் குறிப்புகள்
ஆகியவை மிகுதியாகவே நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றைக்
கொண்டும் அயல்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் பண்டைய தமிழர்களைப்
பற்றித் தத்தம் நூல்களில் கொடுத்துள்ள குறிப்புகளைக் கொண்டும் பண்டைய
தமிழரின் வரலாற்றைப் பற்றியும், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றியும்,
இயன்றவரை திருத்தமான பண்டைய வரலாறு ஒன்று வகுப்பது அரிதாகத்
தோன்றவில்லை. 

     தமிழக வரலாற்றைக் கீழ்க்காணுமாறு பகுத்துக் கொள்ளலாம்:
வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், பாண்டியர்
சோழரின் பேரரசுக் காலம், மத்திய காலம், பிற்காலம் என ஆறு காலங்களாக
வரையறுத்துக் கொள்ளலாம். இப் பல்வேறு காலங்களில் வாழ்ந்துவந்த
தமிழரின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்தறிவதற்கு நமக்கு உதவியுள்ளவை
புதை பொருள்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டைப் பற்றி அயல்நாட்டு
வரலாற்று நூல்களில் காணப்படும் குறிப்புகள், புராணங்கள், சமய
இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், முஸ்லிம் வரலாற்று
ஆசிரியர்களின் குறிப்புகள், பிரிட்டிஷ் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகள்,
அரசாங்கங்கள் ஆகியவற்றின் ஆவணங்கள், டச்சு போர்ச்சுகீசியப்
பாதிரிகளின் நாட்குறிப்புகள், கடிதங்கள், அறிக்கைகள், புதுச்சேரி
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புப் போன்ற ஆவணங்கள்
ஆகியவையாம். பிற்கால வரலாற்றிற்கு இந்திய விவரங்களின் ஆவணங்கள்
மிகப் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும்
அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக்
காலத்து மக்களின் கலை வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. ஆகையால்,
வரலாறு எழுதும் முயற்சிக்கு அவை பெரிதும் துணைபுரிகின்றன. 

     இலக்கியங்களும் புராணங்களும் அளிக்கும் சான்றுகளை விடப்
புதைபொருள்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும் அளிக்கும் சான்றுகள்
பெரிதும் நம்பத் தகுந்தவையாக உள்ளன. ஆனால், விரிவான வரலாறு ஒன்று
எழுதுவதற்கு இவையும் போதுமானவை என்று கூறமுடியாது. தமிழகத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் முப்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை
இன்னும் பதிப்பிக்கப்படாமலே உள்ளன. அவை வெளியாகக் கூடிய செய்திகள்
இப்போது தொகுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு முரண்பாடாகவும், விளக்கங்
கொடுக்கக்கூடியனவாகவும், கூடுதலான தகவல்கள் அளிக்கக்கூடியனவாகவும்
இருக்கக்கூடும். நாணயங்கள் அளிக்கும் சான்றுகளும் முழுமை இருக்கக்கூடும்.
நாணயங்கள் அளிக்கும் சான்றுகளும் முழுமையானவையல்ல. பல நாணய
வரிசைகட்குக் காலங்கணித்தல்எளிதாகத் தோன்றவில்லை ; அதில் பல கருத்து வேறுபாடுகளும் உண்டு.
ஆனால், சங்க கால வரலாற்றுக்கு நாணயங்கள் புரிந்துள்ள உதவி
மதிப்பிடற்கரியதாகும். தாம் அளிக்கும் சான்றுகளுடன் அவை சங்க இலக்கியச்
செய்திகள் பலவற்றையும் மெய்ப்பிக்கின்றன. ஆனால், இந் நாணயங்களில்
பெரும்பான்மையன அந்நிய நாட்டு நாணயங்கள் ஆம்.

     தமிழக வரலாற்றைத் தொகுக்க உதவும் கல்வெட்டுகள் பல்லவர்
காலத்தில்தான் தொடங்குகின்றன. அதற்கு முன்பு நடுகற்கள் ஆங்காங்குத்
தமிழகத்தில் இருந்தனவென்றும், மக்கள் அவற்றை வழிபட்டு வந்தனர்
என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்றேனும் இப்போது
கிடைக்கவில்லை. பல்லவர்கள் காலத்திய கல்வெட்டுகள் ஏழு, எட்டாம்
நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. முதலில் அவை கிரந்த எழுத்துகளில்
பொறிக்கப்பட்டன. பிறகு அவற்றில், தமிழ்மொழிக் கலப்புத் தோன்றுகின்றது.

     மரபுதமிழ் எழுத்து என்றும், வட்டெழுத்து என்றும் தமிழ் எழுத்துகள்
இரு வகையாக ஆளப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்து வரிவடிவங்கட்கும்
தோற்றுவாய் இன்னதென இன்னும் அறியக்கூடவில்லை. ஆனால்,
வட்டெழுத்துக்கள் 9 ஆம் நூற்றாண்டிலேயே தமிழகத்தினின்றும்
வழக்கொழிந்து மறைந்து விட்டன. தொடர்ந்து சிறிது காலம் அவை சேர
நாட்டில் வழக்கில் இருந்துவந்தன. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கல்வெட்டுச்
சாசனங்கள் நூற்றுக்கணக்கில் தமிழகம் முழுவதிலும் கிடைத்துள்ளன.
பாண்டியர் சோழர் காலத்திய வரலாற்றைத் தொகுப்பதற்கும் அவர் காலத்திய
மக்கள் சமுதாயத்தின் நிலையை அறிந்து கொள்ளுவதற்கும்
கல்வெட்டுகளேயன்றி அக் காலத்துப் பொறித்து அளிக்கப்பெற்ற செப்பேட்டுப்
பட்டயங்களும் பெரிதும் துணை புரிகின்றன. வேள்விக்குடிச் செப்பேடுகளும்,
பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகளும் கிடைத்திராமற் போனால் ஏழு முதல்
பத்தாம் நூற்றாண்டு வரையிலான பண்டைய பாண்டியர் வரலாறும்,
களப்பிரரைப்பற்றிய சில தகவல்களும் நம் கைக்கு எட்டியிரா. அதைப்
போலவே பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் பரம்பரையைப் பற்றிய
குறிப்புகளும் சில செப்பேடுகளின் மூலமாகவே அறியக்கிடக்கின்றன.

     தமிழக வரலாறு ஒன்று எழுதுவதற்குத் துணைபுரிந்துள்ள சான்றுகளைக்
காலப் பகுப்பின்படியே சீர்தூக்கி ஆராய்வோம்.

     
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் : சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகளுக்குப்
பிறகு தமிழரின் வரலாறும் நாகரிகமும் புதிய கோணங்களிலிருந்து
நோக்கப்பட்டு வருகின்றன. சிந்துவெளி நாகரிகம் பண்டைய தமிழரால்
வளர்க்கப்பட்டது அன்று என்று அண்மையில் சில ஆய்வாளர்கள் தம்
கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எனினும், அந் நாகரிகத்தைப் பற்றிய 

     ஆய்வுகள் புதுமுறை விஞ்ஞான சாதனங்களின் துணையுடன் 
நடைபெற்று வருகின்றன. மொகஞ்சதாரோ, ஹாரப்பா மக்கள் கையாண்ட
எழுத்துகளில் மறைந்து கிடக்கும் செய்திகள் இன்னும் வெளியாகவில்லை ;
அவர்களுடைய எழுத்து முறைகட்கும் இந்தோ ஐரோப்பிய எழுத்து
முறைகட்கும் ஒரு தொடர்பைக் கற்பிக்கும் ஆய்வுகளும் அறிஞர் ஒப்புக்
கொள்ளும் அளவுக்கு விளக்கமாக இல. எனவே, சிந்துவெளி நாகரிகம் இன்ன
மரபினதெனத் தெளிவாகும் வரையில் ஹீராஸ் பாதிரியாரின் கொள்கையையே
நாமும் தொடர்ந்து மேற்கொண்டு வரவேண்டியுள்ளது. ஹாரப்பா
எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பு உண்டென்று அவர்
கருதினார். 

     வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்திருந்த மக்கள்
பெரிய பெரிய பெருங்கற்குழிகளில் (பாழிகளில்) பிணங்களைப் புதைக்கும்
வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகளில் பலவகையான இரும்புக்
கருவிகளும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மட்பாண்டங்களும்
புதைக்கப்பட்டுள்ளன. இத்தகைய புதைகுழிகள் மேற்காசிய நாடுகளிலும்,
வடஆப்பிரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படுகின்றன.
அவற்றுக்கும், தமிழகத்துக் குழிகட்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகின்றன.
ஆதிச்சநல்லூரிலும் புதுச்சேரிப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்ட
புதைபொருள்களுள் பல சைப்ரஸ் தீவிலுள்ள ‘என்கோமி’ என்னும் 
இடத்திலும், பாலஸ்தீனத்திலுள்ள காஸா, ஜெரார் என்னும் இடங்களிலும்
கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களைப் போலவே காணப்படுகின்றன.
இவற்றையெல்லாங் கொண்டு பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளையும்
குடிப் பெயர்ச்சிகளையும் ஒருவாறு நுனித்தறியலாம். 

     சங்க காலம் : இக்காலத்து மக்களின் வாழ்க்கை முறைகளையும்
பண்பாடுகளையும் அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும்
பயன்படுகின்றன. அவற்றில் மன்னர்களின் பெயர்கள் பல காணப்படுகின்றன
வாயினும் அவர்கள் வாழ்ந்த காலத்தை அறிந்துகொள்வதற்குக் கல்வெட்டுகள்
காணப்படவில்லை. தமிழகத்தில் சில இடங்களில் ரோமாபுரி நாணயங்கள்
கிடைத்துள்ளன. அரிக்கமேட்டு அகழ்வாராய்ச்சியில்கி.பி.முதல், இரண்டாம் நூற்றாண்டு ரோமாபுரி நாணயங்கள் கிடைத்துள்ளன.
அந் நூற்றாண்டுகளில் தமிழகத்துக்கும் ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று
வந்த செழிப்பான வாணிகத்துக்கு அவை சான்று பகர்கின்றன. இவ்
வாணிகத்தைப் பற்றிய சில அரிய செய்திகளை ‘எரித்திரியக் கடலின்
பெரிப்ளூஸ்’ (Periplus of the Erithraean Sea) என்னும் ஒரு கிரேக்க
நூலின் மூலமாகவும் அறிகின்றோம். பழம் பாண்டிய மன்னரின் நாணயங்கள்
சில சதுரவடிவிலும், நீண்டசதுர வடிவிலும் கிடைத்துள்ளன. இவற்றில் ஒருபுறம்
மீன் சின்னமும், பின்புறம் யானை அல்லது காளைமாட்டுச் சின்னமும்
பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி.
இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவில்
வெளியிடப்பட்டிருக்கவேண்டும் எனத் தெரிகின்றது. பூம்புகாரில்
அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அவற்றைக்கொண்டு சில வரலாற்றுக்
குறிப்புகளும் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. 

     பல்லவர் காலம் : சங்க காலம் முடிவடைந்த பிறகு சுமார் முந்நூறு
ஆண்டுக்காலம் தமிழகத்தில் என்ன நேர்ந்தது என்று அறிய முடியவில்லை.
தமிழக வரலாற்றில் இதை ஓர் இருண்ட காலம் என்று குறிப்பிடுவதுண்டு. அக்
காலத்தில் நிகழ்ந்த செய்திகளுக்கு உடன்காலச் சான்றுகள் கிடைத்திலவேனும்,
அம்மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் அரசியல், சமய, மொழி
மாறுதல்கள் தோன்றி, தமிழரின் வாழ்வையும் நாகரிகத்தையும் பல புதிய
திருப்பங்கட்கு உட்படுத்தின என்பதை ஊகித்தறியலாம். அவ்விருண்ட
காலத்தில் களப்பிரரால் ஏற்பட்ட அரசியல் மாறுதலுக்கு வேள்விக்குடிச்
செப்பேடுகள் (கி.பி. 768) சான்று பகர்கின்றன. அக் களப்பிரர் காலத்தில் 
சமண பௌத்த சமயங்கள் தமிழகத்தில் மிகப் பெருமளவு வளர்ச்சியுற்றன.
மதுரையில் சமண முனிவர் வச்சிரநந்தி என்பார் தமிழ்ச்சங்கம் ஒன்றைத்
தோற்றுவித்து அதன் மூலம் சமண சமய இலக்கியங்களைத் தமிழில் பெருக்கி
அதற்கு வளமூட்டினார். சோழ நாட்டில் அச்சுத விக்கந்தன் என்ற பௌத்த
மன்னன் பௌத்த விகாரைகளை அமைத்தும், பௌத்த சமய நூல்களை
இயற்றுவித்தும் பௌத்த சமயத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துக்
கொண்டிருந்தான். அவன் ‘களப்ப குல’த்தைச் சார்ந்தவன். களப்பிரரைப்பற்றி
அறிவதற்குக் கன்னட நாட்டுக் கல்வெட்டுகள் சிலவும் பயன்படுகின்றன. சிலர்
வேறு கருத்துகளை வெளியிட்ட போதும் களப்பிரர் கன்னட
நாட்டிலிருந்ததாகவே தோன்றுகின்றது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...