Monday, 9 February 2015

                                   தமிழக வரலாறு - 04

2. தமிழகத்தின் இயற்கை அமைப்புகள்:-

     விந்தியமலைத் தொடரும், சாத்பூராமலைத் தொடரும் ஆழ்ந்த
நருமதைப் பள்ளத்தாக்கும், தபதியாறும், தண்ட காரணியக் காடுகளும் வட
இந்தியாவென்றும் தென்னிந்தியாவென்றும் இந்தியாவை இரு பகுதிகளாகப்
பிரித்து நிற்கின்றன. வடஇந்தியாவில் கைபர், போலன் கணவாய்களின் மூலம்
அன்னியரின் படையெடுப்புகள் பல நேர்ந்துள்ளன. அவற்றின் மூலம் அங்கு
மக்களின் இனக்கலப்பும், அரசியல் திருப்பங்களும், ஒழுக்கம், மொழி, கலை,
பண்பாடு ஆகியவற்றில் மாற்றங்களும் பெருவாரியாக ஏற்பட்டுள்ளன.
அவற்றைப் போன்ற பெருவாரியான மாறுபாடுகள் ஏதும் இன்றித் தமிழ்நாட்டு
மக்கள் ஓரளவு அமைதியாகத் தம் வாழ்க்கையை நடத்திச் சென்றார்கள்.
நெடுங்காலம் அவர்களுடைய சால்புகளும், சமூக இயல்புகளும் தனித்து நின்று
வளர்ந்துவந்தன. அதற்குப் பெருந்துணையாக நின்றது தமிழ்நாட்டின் இயற்கை
அமைப்பேயாகும்.

     பழந்தமிழ் நாட்டின் எல்லைகள் : வடக்கில் தக்காணப் பீடபூமியும்,
கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் கடல்களும் பழந்தமிழகத்தின்
எல்லைகளாக அமைந்திருந்தன. மேலைக் கடற்கரையையொட்டி ஏறக்குறைய
80 கிலோமீட்டர் தொலைவுவரை மேற்குமலைத்தொடர் அமைந்திருக்கின்றது.
சில இடங்களில் இது கடலைவிட்டு 150 கிலோமீட்டர் விலகியும், 8
கிலோமீட்டர் அளவுக்கு நெருங்கியும் இருப்பதுண்டு. இம் மலைத்தொடரின்
மிக உயரமான சிகரம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதற்குத்
‘தொட்ட பெட்டா’ (பெரிய மலை) என்று பெயர். அதன் உயரம் 2672 மீட்டர்
ஆகும். தெற்கே ஆனைமுடி என்னும் மற்றொரு சிகரம் உள்ளது.

     மேற்குமலைத் தொடர் மிகப் பெரியதொரு சுவர்போலக்
காட்சியளிக்கின்றது. இதில் கணவாய்கள் மிகவும் குறைவு. கோயமுத்தூருக்கு
அண்மையிலுள்ள பாலக்காட்டுக் கணவாயும், திருநெல்வேலி மாவட்டத்தின்
எல்லையில் உள்ள ஆரல்வாய் மொழிக் கணவாயும், இம் மாவட்டத்தின்
மேற்கில் உள்ள செங்கோட்டைக் கணவாயும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
மேற்கு மலைத்தொடரின் ஆனைமலைகள் சிறப்பானவை; இத் தொடர்

முழுவதிலும் காடுகள் அடர்ந்து செழித்து வளர்ந்துள்ளன. விரிந்து ஆழ்ந்த
பள்ளத்தாக்குகளும், முகில் தவழும் குவடுகளும், துள்ளி விழும் அருவிகளும்
மேற்குமலைத் தொடரை அணி செய்கின்றன. இங்கு வளர்ந்திருக்கும் வளமான
காடுகளில் கட்டடங்கள் கட்டப் பயனாகும் உயர்தரமான தேக்கு மரங்களும்,
நூக்கமரங்களும், கடுக்காய் வேங்கை மரங்களும் செழித்து வளர்கின்றன. இக்
காடுகளில் யானைகள் கூட்டங் கூட்டமாக உயிர் வாழ்கின்றன. வேங்கை, புலி,
சிறுத்தை, கரடி, காட்டெருமை முதலிய வன விலங்குகளும், மான், கடம்பை
முதலியவையும், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற சிறு விலங்குகளும்
ஏராளமாகக் காணப்படுகின்றன. 

     மேற்குமலைத் தொடரைப் போலக் கிழக்குமலைத் தொடர் அவ்வளவு
உயரமும், வனப்பும், வன வளமும் உடையதன்று. அது தொடர்ந்தும்
இடைவெளியின்றியும் அமையவில்லை. பல இடங்களில் அது சிதறுண்டு
காணப்படுகின்றது. மேற்கு மலைத் தொடரைவிடக் கிழக்குமலைத்தொடர்
மிகவும் பழைமையானதென்று புவியியலார் கூறுவர். இது ஒரிஸ்ஸா 
மாநிலத்தில் தொடங்கித் தெற்கு நோக்கிக் காணப்படுகின்றது. சென்னைக்கு
வடக்கே சுமார் 320 கிலோமீட்டர் நீளத்துக்கு இது சுமார் எண்பது
கிலோமீட்டருக்கு மேல் கடற்கரையை விட்டு விலகிச் செல்லுவதில்லை.
சென்னை நகருக்கு மேற்கில் இத்தொடர் தென்மேற்காக ஒதுங்கி நீண்டு 
நீலகிரி மாவட்டத்தில் மேற்குத் தொடருடன் இணைகின்றது. 

     மேற்குமலைத் தொடருக்கும் கிழக்குமலைத் தொடருக்கும் இடையிட்ட
சமநிலப் பகுதியானது மேற்கு-கிழக்காகச் சரிந்து காணப்படுகின்றது.
இக்காரணம்பற்றி மேற்குமலைத் தொடரில் தோன்றும் ஆறுகள் யாவும்
மேற்கினின்றும் கிழக்காக ஓடி வங்கக் கடலில் கலக்கின்றன. பாலாறு, 
செய்யாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, தாமிரவருணி ஆகியவை
தமிழ்நாட்டு ஆறுகளில் சிறந்தவையாம். மேற்குமலைத் தொடரில்
உற்பத்தியாகும் சிற்றாறுகள் பல கேரள நாட்டுக்கு வளமூட்டி அரபிக் கடலில்
கலக்கின்றன. பெரியாறும், பாரதப்புழையும் அவற்றுள் சிறந்தவையாம். 

     தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது
காவிரியாகும். கங்கையாற்றைப் போலவே இஃதும் நினைப்பார் நெஞ்சில்
பெருமிதத்தையும் இன்பக் கிளர்ச்சியையும் தூண்டவல்லது. காவிரியானது
கருநாடக மாநிலத்தைச்சார்ந்த குடகில் உற்பத்தியாகித் தென்கிழக்காக ஓடி வங்கக் கடலில்
கலக்கின்றது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த பல பட்டணங்கள்
இவ்வாற்றங்கரைகளின்மேல் அமைந்துள்ளன. கருநாடக மாநிலத்தில்
சிவசமுத்திரம் அருவிக்கு அண்மையில் அமைந்துள்ள தலையரங்கமும், 
மைசூர் நகரத்துக்கு 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீரங்கப் 
பட்டணமும், தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற திருவரங்கமும் 
காவிரியாற்றின் இடையில் உள்ள மூன்று அரங்கங்கள். இவை யாவும்
வைணவத் திருப்பதிகள். திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 15 கிலோமீட்டர்
தொலைவில் காவிரியாறானது இரு கிளைகளாகப் பிரிகின்றது. தென் 
கிளைக்குக் காவிரி என்றும், வட கிளைக்குக் கொள்ளிடம் என்றும் பெயர்.
இவ்விரு கிளைகளும் சிறிது தொலைவு ஓடி மீண்டும் ஒன்றுகூடுகின்றன.
இவற்றின் இடையிட்ட தீவில் திருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்று
வழங்கப்படும் பகுதியில் வைணவக் கோயிலும், திருவானைக்கா என்று
வழங்கப்படும் பகுதியில் சிவன் கோயிலும் அமைந்துள்ளன. காவிரியாறானது
கடலில் கலக்குமிடத்தில் பண்டைய காலத்தில் புகழ்பெற்ற நகரமான
காவிரிப்பூம்பட்டினம் செழிப்புற்று விளங்கிற்று. இந் நகரத்துக்குப் புகார்
என்றும், பூம்புகார் என்றும் பெயர்கள் உண்டு. காவிரியின் புகழாக
அமைந்துள்ள பாடல்கள் சங்க இலக்கியத்தில் பல உள்ளன. 

     சேர்வராயன் மலைகள், கல்ராயன் மலைகள், பச்சை மலை 
ஆகியவற்றின் சரிவுகளில் துள்ளியோடும் அருவிகள் ஒன்று கூடி
வெள்ளாறாகின்றது. இந்த ஆறு கிழக்கு நோக்கி ஓடிச் சிதம்பரத்துக்கு 16
கிலோமீட்டர் வடக்கே பறங்கிப்பேட்டையில் கடலில் கலக்கின்றது.
வெள்ளாற்றைப் பலகாலம் சோழநாட்டின் எல்லையாகக் கொண்டிருந்தனர்.
தொண்டை நாட்டில் ஓடும் பாலாறானது கருநாடக மாநிலத்தில் நந்திதுர்க்கம்
என்னும் மலைப்பகுதியில் தோன்றுகின்றது. அது கிழக்காக ஓடி வட 
ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களைக் கடந்து சென்று சதுரங்கப்
பட்டினத்தினருகில் கடலுடன் கலக்கின்றது. பெருமழை பெய்தாலன்றி
இவ்வாற்றில் வெள்ளம் பெருகுவதில்லை. அக்காரணத்தால் பாலாற்று
வெள்ளத்தால் நிரம்ப வேண்டிய ஏரிகள் யாவும் பெரும்பாலும் வறண்டே
காணப்படும். ஆற்று மணலில் கால்கள் கோலியும், ஆற்றுப் படுகைகளில்
கிணறுகள் தோண்டியும் உழவர்கள் பாசன நீர் இறைத்துக் கொள்ளுவார்கள். 

     தென்பெண்ணையாறானது கருநாடக மாநிலத்தில் சென்னராயன் 
பேட்டை என்னும் இடத்தில் உற்பத்தியாகின்றது.பிறகு அது தமிழ்நாட்டில் இறங்கிச் சேலம், தென்னார்க்காடு மாவட்டங்களில்
ஓடிக் கடலூருக்கு அண்மையில் கடலுடன் கலக்கின்றது. வைகையாறு பழநி
மலையில் தோன்றுகின்றது; அது மதுரை மாநகருக்குச் சீரையும் சிறப்பையும்
வழங்குகின்றது ; மதுரையைக் கடந்து, கிழக்கு நோக்கிப் பாய்ந்து சென்று
வங்கக் கடலோடு கலக்கின்றது. இவ் வாற்றிலும் ஆண்டு முழுதும் தண்ணீர்
ஓடுவதில்லை. மேற்குமலைத் தொடரில் பொழியும் மழை நீரை அணைகள்
கட்டித் திருப்பி வைகையில் செலுத்துகின்றனர். வைகையாறும் பண்டைத் 
தமிழ் இலக்கியங்களில் புகழையும் பாராட்டையும் பெற்றுள்ளது. 

     தாமிரவருணியாறு திருநெல்வேலி மாவட்டத்துக்கு நீர் வளத்தை
வழங்குகின்றது. தென்மேற்குப் பருவக் காற்றினால் மேற்குமலைத் தொடரின்
தென்கோடியில் அடைமழை பெய்யும். அம் மழைநீர் முழுவதும்
தாமிரவருணியில் திரண்டோடி வங்கக் கடலில் கலக்கின்றது. எகிப்து
மக்களுக்கு நைல் நதி எவ்வாறு உயிர்நாடியாக விளங்குகின்றதோ அவ்வாறே
தென்பாண்டி நாட்டுக்குத் தாமிரவருணி உதவுகின்றது என்பர். 

     கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில் பல சிற்றாறுகள்
ஓடுகின்றன. அவற்றுள் புகழ்பெற்றது பழையாறு என்பது. பல சிற்றாறுகள்
ஒன்றுகூடிப் பழையாறு உருவாகின்றது. அச் சிற்றாறுகளில் ஒன்று
மகேந்திரகிரியின் தென்புறம் தோன்றிக் கானாறுகள் பலவற்றுடன் கூடிப்
பூதப்பாண்டி, கோட்டாறு, நாகர்கோயில், சுசீந்திரம் ஆகிய ஊர்களை
அணைத்துச் சென்று மணக்குடி என்னும் இடத்தில் கடலில் கலக்கின்றது.
இவ்வாறு உற்பத்தியாகுமிடத்தில் இதன்மேல் பண்டைய காலத்தில் 
கட்டப்பெற்ற அணை ஒன்று உள்ளது. இவ்வணைக்குப் ‘பாண்டியன் அணை’
என்று பெயர் வழங்குகின்றது. இவ்வாற்றை மக்கள் ‘பறளியாறு’ என்றும்
பெயரிட்டழைக்கின்றனர். சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் ‘பஃறுளி’யாறும் 
இப் பறளியாறும் ஓராற்றினையே குறிக்கின்றனவா என்பதைப்பற்றி
ஆய்வாளரிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

     தமிழகத்து மக்கள் தொன்றுதொட்டு மழையையே நம்பி வாழ்ந்து
வந்துள்ளனர்; உழவுத்தொழிலைப் போற்றி வளர்த்து வந்துள்ளனர். அவர்கள்
செய்து வந்த ஏனைய தொழில்கள் யாவும் உழவுக்குத் துணைபுரிவனவாகவே
அமைந்திருந்தன. மழைத்துளியின்றிப் பசும்புல்லும் தலைகாட்டாது என்பார்
திருவள்ளுவர். உயர்ந்த மலைகளும் அடர்ந்த காடுகளும்நிறைந்த பழந்தமிழ்நாட்டில் வானம் பொய்க்காமல் காலமழை பொழிந்து
வந்தது. குறித்த காலத்தில் ஆறுகள் பெருக்கெடுத்து ஏரிகளையும்
குளங்களையும் நிரப்பின. அதனால் உழவுத் தொழில் செழித்து உணவுப்
பண்டங்கள் குறைவின்றிக் கிடைத்து வந்தன. ஆயினும் சில காலங்களில்
பருவமழை பெய்யாது மக்கள் பெரும் துயரத்திற்குள்ளானதுமுண்டு. 

     தமிழகத்துக்கு மழையை வழங்குவன இரு பருவக் காற்றுகள். ஒன்று
தென்மேற்குப் பருவக்காற்று ; மற்றொன்று வடகிழக்குப் பருவக்காற்று. ஜூன்
மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் தென்மேற்குப் பருவக்காற்று
வீசுகின்றது. இது இந்துமாக்கடலையும், அரபிக் கடலையும் கடந்து வந்து 
மேற்கு மலைத்தொடரின் மேற்புரத்தைத் தாக்குகின்றது. அதனால்
அங்கெல்லாம் பெருமழை பெய்கின்றது. அதனால் கேரள நாட்டுக்குக்
குறைவின்றி நீர்வளம் சுரக்கின்றது. கேரளத்தில் ஓராண்டில் சராசரி 200
சென்டிமீட்டர் மழை பெய்கின்றது. தென்மேற்குப் பருவக் காற்றானது 
உயரமான மேற்கு மலைத் தொடரைக் கடந்து வீசுவதில்லை. இதனால்
தமிழ்நாட்டுக்குப் போதிய நீர்வளம் கிடைப்பதில்லை. எனினும், இக் காற்றுப்
பாலக்காட்டுக் கணவாயின் வழியே நுழைந்து வந்து சவ்வாது
மலைகளின்மேலும், சேர்வராயன்மலைகளின் மேலும் மோதி அவ்வப்
பகுதிகளில் சிறிதளவு மழை பயக்கின்றது. இவையே யன்றி வேறு சில
இடங்களும் இக் காற்றினால் மழைவளம் பெறுவதுண்டு. பட்டுக்கோட்டை,
தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, பொள்ளாச்சி, கோயமுத்தூர், தென்காசி,
கன்னியாகுமரி ஆகியவை அத்தகைய இடங்களுள் சில. ஆகஸ்டு மாதத்தின்
இடையில் காவிரியாற்றோரப் பகுதிகளிலும், காவிரியின் கழிமுகத்திலும்,
தென்மேற்குப் பருவக்காற்றினால் நல்ல மழை பெய்வதுண்டு. ஆகஸ்டின்
பிற்பகுதியிலும், செப்டம்பர் முழுவதிலும் காஞ்சிபுரத்துக்கும் திருப்பத்தூர்
(இராமநாதபுரம்) நகரத்துக்கும் இடையிட்ட கடலோர மாவட்டங்களிலும்,
மரக்காணம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களிலும் இப் பருவக் 
காற்று மழையைக் கொடுப்பதுண்டு. நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி
ஆகிய உள்நாட்டு ஊர்களில் அக்டோபர் மாதத்தில்தான் மழையை
எதிர்பார்க்கலாம். அச் சமயம் தென்மேற்குப் பருவக்காற்று ஓய்வுற்று
வடகிழக்குப் பருவகாற்றானது தொடங்குகின்றது. இக்காற்று அக்டோபர்
மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் வீசும். தென்மேற்குப்
பருவக்காற்றைப்போல இக் காற்றினால் அடைமழை பெய்வதில்லை. எனவே,
மேற்குமலைத் தொடரின் கீழ்ப்புறம்சமவெளிப் பகுதிகளில் கிடைக்கக் கூடிய மழைவளம் மிகவும் குறைவுதான் ;
ஓராண்டில் சராசரி 100, 125 சென்டிமீட்டருக்கு மேல் இராது. பொதுவாகத்
தமிழ்நாட்டில் ஐப்பசி (அக்டோபர்-நவம்பர்) மாதம் முழுவதிலும் நல்ல மழை
பெய்வதுண்டு. வடகிழக்குப் பருவக் காற்று கார்த்திகை மாதத்தில் மெலிவுற்றுச்
சிறிதளவு மழையையே கொடுக்கின்றது. பிறகு அறவே ஓய்ந்து விடுகின்றது. 

     வடகிழக்குப் பருவக்காற்றும் சிற்சில ஆண்டுகளில் ஒழுங்காக
வீசுவதில்லை. வானம் பொய்க்கும்போது நாட்டில் வறட்சி ஏற்படும். வறட்சி
காலங்களில் மக்கள் கிணறு, கயம், ஊற்றுக் கால்கள் ஆகிய நீர்நிலைகளை
நாடுவார்கள். சில சமயம் வடகிழக்குப் பருவக்காற்றினால் அளவுக்கு மீறிய
மழையும் பெய்வதுண்டு ; புயலும் வீசும். வங்கக் கடலில் அவ்வப்போது காற்று
மண்டலங்களில் அழுத்தம் ஏற்படுவதுண்டு. அப்போதெல்லாம் புயற்காற்று
ஒன்று உருவாகி, நாட்டுக்குள் நுழைந்து கடற்கரை வட்டங்களில்
பெருமழையைக் கொடுக்கும், புயலாலும் வெள்ளத்தாலும் உயிருக்கும்
உடைமைக்கும் சேதம் விளையும் ; உழவுத் தொழிலுக்கும் ஊறு நேரும். இக்
காரணத்தால் பெருமழையை அடுத்தும் நாட்டில் பஞ்சம் நேரிடுவதுண்டு.
பொதுவாகத் தென்னிந்தியாவில் கோடையிலோ, கார்காலத்திலோ மிதமிஞ்சிய
தட்பவெட்ப வேறுபாடு ஏற்படுவதில்லை. 

     மக்களின் வாழ்க்கைக் கூறுகளை மாற்றியமைக்கக்கூடிய இயல்பு
பெருமழைக்கும், வறட்சிக்கும், குளிருக்கும், வெயிலுக்கும் உண்டு. 

     இக் காலத்தில் விஞ்ஞானத்தின் துணைகொண்டு இயற்கையால் 
விளையும் இன்னல்களும், இடர்ப்பாடுகளும் வாழ்க்கைக்கு ஊறு விளைக்காமல்
ஓரளவு பாதுகாத்துக் கொள்ளக்கூடும். ஆற்றின்மேல் அணையிட்டு 
ஏரிகளையும் குளங்களையும் நிரப்பிக் கொள்ளுகின்றோம் ; பெரிய பெரிய
நீர்த்தேக்கங்களையும் அமைத்துக் கொள்ளுகின்றோம் ; வறட்சி ஏற்படும்
போது கிணறுகள் தோண்டி மின்இயந்திரங்களைக் கொண்டு நீர் இறைத்துக்
கொள்ளுகின்றோம். ஆனால், பழங்காலத்தில் இயற்கையாற்றலின்
வெறியாட்டங்களுக்கு அஞ்சிச் செயலற்று நின்றனர். ‘வருவது வழியில்
நில்லாது’ என்று எண்ணி நன்மையையும் தீமையையும் வந்தது வந்தவாறே
ஏற்றுக்கொண்டனர். காற்றும், மழையும், தட்ப வெப்பங்களும் மக்கள் 
வாழ்க்கை இயல்புகளை மாற்றக் கூடியவை என்பது விஞ்ஞானங் கண்ட
உண்மை. அவ்வாறே மக்களின் இயல்பு அவர்கள் வாழும் இடங்கட்குஏற்ப அமைகின்றது என்பதும் உண்மை. அரிஸ்டாட்டில், கோபினோ, போடின்,
மான்டஸ்கியூ ஆகிய அறிஞர்கள் இவ்வுண்மையில் பெருநம்பிக்கை
கொண்டிருந்தனர். இதற்குச் சார்பாகப் பல சான்றுகள் உலக வரலாற்றிலும்
காணக் கிடக்கின்றன. 

     குன்றுகளிலும் காடுகளிலும் கடலோரங்களிலும் வாழும் மக்கள் உழுது
பயிரிட்டு நாடு நகரங்களை அமைத்து வாழும் மக்களைவிட நாகரிகத்தில்
தாழ்ந்தவராகவே காணப்படுகின்றனர். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்
கொள்ளவும், கலைகளை வளர்த்துக் கொள்ளவும், அயலாருடன் தொடர்பு
கொள்ளவும், ஆற்றோர வெளிகளில் வாழ்ந்துவந்த உழவர்களுக்கே 
வாய்ப்புகள் மலிந்திருந்தன என்ற உண்மையை வரலாற்றுச் சான்றுகள் பல
விளக்குகின்றன. உழவுத்தொழிலே நாகரிகத்தின் உயர்ந்த சின்னமாகக்
கருதப்பட்டது. ‘சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்’1 என்றும், ‘உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார் ; மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்’2 என்றும்
உழவைப் பாராட்டிப் புகழ்ந்தது பழந்தமிழரின் பண்பாடாகும். 
பழந்தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய நகரங்கள்
யாவும் ஆற்றோரங்களிலேயே அமைந்து வளர்ந்து வந்திருக்கின்றன.
உழவுத்தொழிலுக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்பட்டிருந்த நெருங்கிய
தொடர்புக்கு இஃதோர் சிறந்த சான்றாகும். 

     சமவெளிகளும், காடும், மலையும், கடலும் மக்களுக்கு உணவுப்
பண்டங்களையும் அவர்கட்கு வேண்டிய ஏனைய வாழ்க்கை வசதிகளையும்
வழங்கின. ஆற்றோரங்களிலும் உள்நாட்டு நன்செய் நிலங்களிலும் நெல்லும்
கரும்பும் பயிராயின. புன்செய்ப் பயிர்களான கேழ்வரகு, கம்பு, தினை, சாமை,
வரகு, சோளம், துவரை, மொச்சை ஆகியவை சமவெளிகளிலும் மலையிலும்
காட்டிலும் விளைந்தன. பயறு வகைகளும், பருத்தியும் எந்த வகையான
நிலத்திலும் பயிராகக் கூடியன. மயிற்பீலி, யானைத் தந்தம், கட்டடமரம்,
கடுக்காய், நெல்லிக்காய் போன்ற மருத்துவச் சரக்குகள் காடுபடு பொருள்கள். 

     பண்டைக் காலத்தில் மத்தியதரைக் கடல் நாடுகளுக்கும்
சீனாவுக்குமிடையே கடல் வாணிகம் நடைபெற்று வந்தது. 

    1. குறள், 1031. 
    2. குறள், 1033
வாணிகச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த மரக்கலங்கள் தமிழகத்தைச் 
சுற்றிக் கொண்டுதான் ஊர்ந்து செல்லவேண்டும். ஆகவே, இவ் வாணிகத்தில்
தமிழகத்துக்கும் தொடர்பு ஏற்பட்டது. தமிழகத்தின் கீழைக் கடற்கரையிலும்
அரபிக் கடல் ஓரத்திலும் பல துறைமுகங்கள் அமைந்திருந்தன. கேரளத்தின்
கரையோரங்களில் கடல்நீர் உட்புகுந்து விரிவாகத் தேங்கியிருப்பதைக்
காணலாம். இத் தேக்கங்களுக்குக் காயல்கள் என்று பெயர். அந்நிய நாட்டுக்
கப்பல்கள் வந்து தங்குவதற்கு இத் துறைமுகங்களும் காயல்களும் மிகவும்
வசதியாக இருந்தன. இத் துறைமுகங்கள் யாவும் சிறியவை யாகையால் இங்கச்
சிறு சிறு மரக்கலங்களே நங்கூரம் பாய்ச்சலாம். சென்ற மூவாயிரம்
ஆண்டுகளில் கடற்கரையோர அமைப்பில் பல புவியியல் மாறுபாடுகள்
ஏற்பட்டுள்ளன. புகழ்பெற்ற பண்டைய துறைமுகங்கள் சில பிற்காலத்தில்
அழிந்துபோயின; சில தம் சிறப்பில் குன்றிவிட்டன. பண்டைய
துறைமுகங்களான காயலும் கொற்கையும் இப்போது மணல்மேடிட்டுக்
கிடக்கின்றன ; கடல் விலகிச் சென்றுவிட்டது. பூம்புகார் கடலில் மூழ்கி
விட்டது. மாபெரும் நகரம் செழித்தோங்கி இருந்த அந்த இடத்தில் இப்போது
மீனவர்கள் குப்பங்களே எஞ்சியுள்ளன. தமிழக அரசு இதைச் சிறப்பாகப்
புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பல்லவர் காலந் தொடங்கிப் பல
நூற்றாண்டுகள்வரை மாமல்லபுரம் மிகப்பெரிய துறைமுகமாக விளங்கி வந்தது.
பிறகு அது பொலிவிழந்து அழிந்து போயிற்று. கேரளக் கடற்கரையில் நீண்ட
காலம் வாணிகக் கப்பல்கள் வந்து தங்குவதற்கு இசைவாக இலங்கிய
வைக்கரையும், முசிறியும், தொண்டியும் பிற்பட்டு அழிந்து மறைந்துவிட்டன. 

     இலங்கைத் தீவு, மாலத் தீவுகள், இப்போது பர்மா, மலேசியா,
இந்தோனேசியா என்னும் பெயரில் வழங்கும் நாடுகள், சீயம் (தற்காலத்
தாய்லாந்து), காம்போசம், சீனம் ஆகிய நாடுகளுடன் தமிழகம் மிக நெருங்கிய
வாணித் தொடர்பும் வரலாற்றுத் தொடர்பும் கொண்டிருந்தது. 

     தமிழகத்தில் எல்லைகள் அவ்வப்போது மாறுபட்டு வந்துள்ளன.
ஆதிகாலத்தில், அதாவது தலைச்சங்க காலத்தில், தமிழகம்
தென்கடலுக்கப்பாலும், தொலை தூரம் பரவி இருந்தது என்று கூறும் சில
குறிப்புகள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. அப்படிப்
பரவியிருந்த நிலப்பகுதி மட்டும் நாற்பத்தொன்பது நாடுகளாகப்
பிரிக்கப்பட்டிருந்ததாம். ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் தமிழ் இலக்கண
நூலின் உரையாசிரியர் இப்பெயர்களைத் தம் உரையில் கொடுத்துள்ளார்.3
இப்போது வழக்கில் உள்ள தமிழ் இலக்கணங்களில் மிகவும் பழமையானதாகக்
கருதப்படுவது தொல்காப்பியமாகும். மொழிக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் ஓர்
இலக்கணத்தை, அதாவது ‘கையாளும் அழகை அல்லது நெறியை’ வகுப்பது
இந் நூல். இதற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கியவர் பனம்பாரனார் என்பார்.
இவர் தொல்காப்பியருடன் ஒரே பள்ளியில் மாணவராகப் பயின்றவர் என்பர்.
இவருடைய சிறப்புப் பாயிரத்தில் தமிழ்நாட்டின் எல்லைகள்
குறிக்கப்பட்டுள்ளன. ‘வடவேங்கடம் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு
நல்லுலகம்’4 என்று இவர் தமிழகத்தின் எல்லையை விளக்குகின்றார்.
தமிழகத்தின் கிழக்கிலும் மேற்கிலும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே இவ்விரு
திசைகளிலும் நாட்டின் எல்லையைப் பனம்பாரனார் எடுத்துக் கூறவில்லை.
ஆனால் வடஎல்லையையும் தென்னெல்லையையும் மட்டும் அவர் கூறுவதில்
பொருள் உண்டு. ‘கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின், தெற்கும்
எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின்
கூறப்படாவாயின’ என்று இளம்பூரணர் விளக்கம் தருகின்றார்.
தொல்காப்பியத்தின் உரையாசிரியர்களுள் இவரும் ஒருவர். பிற மொழி
வழங்கும் நிலப் பகுதியிலிருந்து தமிழ் வழங்கும் நிலத்தினைப் பிரித்து
உணர்த்துதற் பொருட்டே ‘வடவேங்கடம் தென்குமரி’ என்று பனம்பாரனார்
பாயிரம் வகுத்தார் என்பது இளம்பூரணரின் கொள்கை. ஒரு நாட்டுக்கு
அகப்பாட்டு எல்லை என்றும் புறப்பாட்டு எல்லை என்றும் இருவேறு
எல்லைகள் உண்டு. அகப்பாட்டு எல்லை நாட்டின் வரம்புக்கு உட்பட்டதாகும்.
புறப்பாட்டு எல்லை அவ் வரம்புக்கு அப்பாற்பட்டதாகும். பனம்பாரனார் 
கூறும் எல்லைகளான வேங்கடமும் தென்குமரியாறும் அகப்பாட்டெல்லைகள்
என்பது இளம்பூரணரின் கருத்து. ஆகவே, வேங்கடத்துக்கு வடக்கும்,
குமரிக்குத் தெற்கும் சில நிலப்பகுதிகள் அமைந்திருந்தன எனக் கருதவும்
இடமேற்படுகின்றது. குமரியாற்றுக்குப் புறம்பாய் விரிந்து கிடந்த தென்னிலப்
பகுதிக்குக் குறும்பனை நாடு என்று பெயருண்டு என்றும், செந்தமிழல்லாத
திரிந்த தமிழ் அங்கு வழங்கி வந்ததால் குறும்பனை நாட்டைப் பனம்பாரனார்
தமிழ்நாட்டு எல்லைக்குப் புறம்பாக ஒதுக்கினார் என்றும், ‘கடல்
கொள்ளப்படுவதன் முன்பு பிற நாடும் உண்மையின், தெற்கும் எல்லை
கூறப்பட்டது’ என்றும் இவ்வுரையாசிரியர் 

    3. இறையனார் அகப்பொருள் பாயிரம் உரை. 
    4. தொல், சிறப்புப் பாயிரம்.

கருதுவர். இந்தப் ‘பிற நாட்டில்’ ‘பஃறுளியாறு’ என்ற ஓர் ஆறும், 
குமரிக்கோடு என்ற ‘பன்மலையடுக்கத்து’ மலைத்தொடர் ஒன்றும்
இருந்தனவென்றும், அக் காலத்திற்றான் தொல்காப்பியர் வாழ்ந்திருந்தார்
என்றும், அவர் காலத்துக்குப் பின்பு இக் காலத்திய குமரிமுனை வரையில்
தென்னிலப் பகுதி கடலில் மூழ்கிப் போயிற்று என்றும், இக் காரணத்தினால்
காலத்தால் தொல்காப்பியருக்குப் பிற்பட்டவரான இளங்கோவடிகள் தாம் 
பாடிய சிலப்பதிகாரத்தில், ‘நெடியோன் குன்றமும் தொடியோள் பவ்வமும்,
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு’ என்று கடலைத் தமிழகத்துக்குத் 
தென் எல்லையாக வகுத்தார் என்றும் கொள்ள வேண்டும். பஃறுளியாறு
என்பது குமரியாற்றுக்குத் தென்புறத்தில் பன்மலை யடுக்கத்தில் ஓடிற்று.
முதன்முதல் கடல்கோளுக்கு உட்பட்டது பஃறுளியாறுதான். பிறகுதான்
குமரிமலைத் தொடர் கடலில் மூழ்கி மறைந்து போயிற்று. இளம்பூரணர்,
இறையனார் அகப் பொருளின் உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் 
ஆகியோர் அனைவரும் குமரிமுனைக்குத் தெற்கிலும் தமிழகம்
நெடுந்தொலைவு பரவி இருந்தது என்று கருதினர். இவர்கள் கூற்றைப்
புனைந்துரை என்றோ, பிற நாடுகளையும் பிற மொழிகளையும் தாழ்த்தித்
தமிழ்நாட்டையும் தமிழ்மொழியையும் உயர்த்திப் புகழ் தேடினர் என்றோ
கொள்வதற்கில்லை. சான்றோர் மொழிகளைக் கொண்டும், தத்தம் காலத்தில்
மக்கள் சமுதாயத்தில் நிலவி வந்த பழங்காலச் செய்திகளைக் கொண்டும் தம்
ஊகத்தைக் கொண்டும் இவர்கள் இம் முடிவுக்கு வந்துள்ளனர் என்பதில்
ஐயமில்லை. நமக்குக் கண்கூடான காரணங்கள் ஏதும் தோன்ற
வில்லையாயினும் பல காலமாக நிலவி வரும் பழங்கொள்கைகளைப்
புறக்கணித்தல் அறிவுடைமையன்று.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...