Monday, 9 February 2015

பாண்டிய மன்னர்

                                     அரச பரம்பரை 

பாண்டிய மன்னர்
     சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள் காலத்தால் மிகவும் முற்பட்டவன்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பான். இவனுடைய அரசவையிற்றான்
தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டது என்று நச்சினார்க்கினியர் கூறுவார்.252
இவன் முடிசூடிக் கொண்டு நெடுங்காலம் ஆண்டு வந்தான் எனத் 
தெரிகின்றது. ‘நெடியோன்’ என்று இவனைச் சங்க நூல்கள் பாராட்டு
கின்றன.253 இவன் வழியில் வந்தவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
என்பவன். இவனை வேள்விக்குடிச் செப்பேடுகள், ‘கொல்யானை பலவோட்டிக்
கூடாமன்னர் குழாந் தவிர்த்த-பல்யாக (சாலை) முதுகுடுமிப் பெருவழுதியெனும்
பாண்டியாதிராசன்’ என்று புகழ்ந்துரைக்கின்றன. சங்கநூல் தரும் செய்தி
செப்பேடுகளினால் சான்று பெறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இப் பாண்டிய
மன்னன் வேதியருக்குப் பல யாகசாலைகள் அமைத்துக் கொடுத்தான் என்றும்,
இவனே பல வேள்விகளைச் செய்வித்தான் என்றும் கூறுவர்.254 

     சங்ககாலப் பாண்டியருள் சிறந்து விளங்கிய மற்றொருவன்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பவன்,
மதுரைக்காஞ்சிக்கும் நெடுநல்வாடைக்கும் இவனே பாட்டுடைத் தலைவனாகக்
காட்சியளிக்கின்றான். நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே அரசுகட்டில்
ஏறினான். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் 

     251. நா. திவ். பிர. 1505. 
     252. தொல். பாயி. உரை (நச்சி) 
     253. மதுரைக். 60-61.
     254. புறம். 6, 9, 12, 15, 64.

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், திதியன், எழினி,
எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும்
ஒன்றுகூடி மதுரையின்மேல் படையெடுத்தனர் ; நகரை முற்றுகையிட்டனர்.
பாண்டியன் வீரத்துடன் போராடி மதுரையை விடுவித்துக் கொண்டதுமன்றிப்
பகைவரைத் துரத்திக்கொண்டுவந்து தலையாலங்கானம் என்ற இடத்தில்
அவர்கள் அனைவரையும் ஒருங்கே முறியடித்தான்.255 சேர மன்னனைச்
சிறைபிடித்துப் பாண்டிநாட்டுச் சிறையில் அடைத்து வைத்தான். எவ்வி என்ற
வேளிர் மன்னனுடைய மிழலைக் கூற்றத்தையும், முத்தூற்றுக் கூற்றத்தையும்
கைப்பற்றித் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான். இப் பாண்டியன் தானே
புலமை சான்றவனாக விளங்கினான். கல்வி கற்றலின் பெருமையையும்
சிறப்பையும் வியந்து கூறும் இவனுடைய பாடல் ஒன்று புறநானூற்றில்
சேர்க்கப்பட்டுள்ளது.256 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பானும்,
கண்ணகி வழக்கில் அறம்பிழைத்து உயிர் நீத்தவனும் இம் மன்னனேயாவான்
என்று நினைப்பதற்கு இடமுண்டா? தலையாலங்கானத்துப் போரில் இந்
நெடுஞ்செழியன் பெற்ற மாபெரும் வெற்றியை மூன்றாம் இராசசிம்ம
பாண்டியனுடைய சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. 

     பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி என்ற மன்னன்
கடைச்சங்கப் பாண்டிய மன்னருள் இறுதியாய் வாழ்ந்தவனாவான். இவன் தன்
பகைவன் வேங்கை மார்பனை வென்று அவனுடைய கானப்பேரரணைக்
கைப்பற்றினான்.257 மாவெண்கோ என்ற சேர மன்னனுடனும், இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழனுடனும் நட்புப் பூண்டிருந்தான்.258
இவனே சிறந்த புலவனாக விளங்கினான். திருக்குறளைப் பாராட்டும் வெண்பா
ஒன்று இவன் பேரால் காணப்படுகின்றது.259 எட்டுத் தொகையுள்
அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இம் மன்னனே யாவான். இவனுடைய
அரசவையிற்றான் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டதாகக் 
கருதுகின்றனர். இவனைப் பற்றிய குறிப்புகள் இறையனார் அகப்பொருள்
உரையிலும், சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றன. இவனை ஐயூர்
மூலங்கிழாரும்,260 ஒளவையாரும்261 பாடியுள்ளனர். இவன் பாடியதாகக்
கொள்ளப்படும் பாட்டு 

     255. புறம். 19, 23 ; நற்றி. 387.
     256. புறம். 183. 
     257. புறம். 21.
     258. புறம். 367. 
     259. திருவள். மாலை. 4. 
     260. புறம். 21. 
     261. புறம். 367

ஒன்று அகநானூற்றிலும்,262 மற்றொன்று நற்றிணையிலும்263
சேர்க்கப்பட்டுள்ளன.

     மேலே குறிப்பிடப்பட்ட பாண்டியரே அன்றி வேறு சில பாண்டிய
மன்னரின் பெயர்களும் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன.
அவர்களைப் பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை. சங்க காலத்துப் பாண்டிய
மன்னருள் பன்னிருவர் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கினர் என்பது
பாராட்டத் தக்கதாகும். இவர்களுடைய பாடல்கள் புறநானூறு, அகநானூறு,
நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.
குறுநில மன்னர்கள்
     தமிழகத்தில் குறுநில மன்னர்கள் பலர் ஆங்காங்கு வாழ்ந்திருந்தனர்;
அவர்களுள் வேளிர்கள் என்பவர்கள் ஒரு குடியைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுள் சிறந்தவன் ஆய் அண்டிரன் என்ற மன்னன். அவனைப் பாடிய
புலவர்கள் பலர்.264 அவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக
வரிசைப்படுத்தப்பட்டுள்ளான். அவன் பொதிய மலையை ஆண்டுவந்தான்.
கொங்கு நாட்டைத் தனக்குப் பணிய வைத்தவன். ஆய் அண்டிரன் மிகச்
சிறந்த பண்பாளன் என்று ஒளவையார் பாடியுள்ளார்.265 இப் பிறப்பில்
செய்யும் நன்மை மறுபிறப்புக்கு உதவும் என்று கருதித் தன் பொருளைக்
கொடையாக அளித்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அல்லன் ஆய்
என்று அவன் பாராட்டப் பட்டுள்ளான்.

     கபிலரின் நண்பனான பாரி என்பான் மற்றொரு வேளிர் குலத்
தலைவனாவான். பாண்டி நாட்டில் கொடுங்குன்றம் என்ற இடத்தினின்றும்
ஆட்சி புரிந்து வந்தான். கேட்டவர்கள் கேட்டவாறே வாரி வழங்கிய வள்ளல்
என்று பிற்காலத்தவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்266 பாடியுள்ளார். ‘ஒசிந்த
கொடி முல்லைக்குக் கொழு கொம்பாகத் தன் தேரை நிறுத்தினான் இவன்’
என்று கூறுவார்.267 இவனைப்பற்றிக் கபிலர் பாடிய பாடல்கள் பல. சேர
சோழ பாண்டியர் ஆகிய மூவரும் இவனுடைய கோட்டையை
முற்றுகையிட்டனர். முற்றுகை அளவு கடந்து நீடித்தது. கோட்டைக்குள்
உணவுப்பண்டங்கள் குறைந்துவிட்டன. கபிலர் பல கிளிகளைப் பிடித்துப்
பயிற்றுவித்துப்

     262. அகம். 26.
     263. நற்றி. 98.
     264. புறம். 127, 240, 241, 374, 375.
     265. புறம். 34.
     266. தேவாரம். 7 : 34 ; 2
     267. சிறுபாண். 89-91

பகைவரின் படைகளுக்கு அப்பாலிருந்து நெற்கதிர்களைக் கொண்டுவரும்படி
ஏவினார். அவை கொணர்ந்த நெல்மணிகளைக் கொண்டு பாரியின் உணவுக்
குறையைத் தீர்த்து வைத்தார். ஆனால், எத்தனை நாள் இந்நிலை நீடிக்கும்?
இறுதியில் பாரி வள்ளல் தோற்றுவிட்டான் ; போரில் மாண்புடன்
மரணமடைந்தான். அவனுடைய இரு பெண்மக்களையும் தம்முடன்
அழைத்துக்கொண்டு சென்று பல மன்னர்களை யண்டி அவர்களை
மணந்துகொள்ளும்படி கபிலர் வேண்டிக்கொண்டார். பாரியின் புகழில்
அழுக்காறுற்றிருந்த அம் மன்னர்கள் மறுக்கவே அப் பெண்களைச் சில
பார்ப்பனப் பெரியாரிடம் ஒப்படைத்து விட்டு வாழ்க்கையில் சலிப்புற்று அவர்
வடக்கிருந்தார். இச் செய்தி புறப்பாட்டு ஒன்றின் அடிக்குறிப்பு ஒன்றினால்
தெரிய வருகின்றது.268 ஆனால், அவர் அவ்வாறு தம் வாழ்க்கையை
மடித்துக் கொண்டதாக அகச்சான்று ஏதும் கிடைத்திலது. இப் பெரும் புலவரே
சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனை அடுத்துப் பதிற்றுப்பத்துப்
பாடல்களுள் ஒரு பத்தை அவன்மேல் பாடி நூறாயிரம் பொன்னையும், ஒரு
மலைமீதேறி நின்று கண்ணுக்கெட்டியவரை தோற்றிய நாட்டையும் பரிசிலாகப்
பெற்றார். கபிலரைப் ‘புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்’ என்று
மாறோக்கத்து நப்பசலையார் புகழ்ந்துள்ளார்.269 பிற்காலத்தில் அகவற்பா
ஒன்று பாடிய கபிலர் வேறு, இவர் வேறு ஆவார்.

     குறுநில மன்னர்கள் இன்னும் வேறு பலர் வாழ்ந்திருந்து சிறப்புற்றுப்
புலவர்களால் பாடப்பெறும் பேற்றையடைந்துள்ளார்கள்.
இலங்கை

     தமிழகத்து வரலாற்றுடன் இலங்கையின் வரலாறும் இணைந்து
வந்துள்ளது. இலங்கையின் வரலாற்றைத் தெரிவிக்கும் நூல்கள் யாவும்
தமிழகத்தைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளன. அத் தீவில் கி. மு.
188-77 ஆம் ஆண்டுகளில் இரு தமிழர்கள் நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி
அரசாண்டு வந்தனர். அவர்களுடைய ஆட்சி முடிவுற்ற பிறகு மீண்டும்
சிங்கள மன்னன் ஒருவன் அரசுரிமை ஏற்றான். இவனும் எளாரா என்ற
தமிழன் ஒருவனிடம் தோற்றுத் தன் ஆட்சியைப் பறிகொடுத்தான். எளாரா
என்பவன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் (கி. மு. 145-101) இலங்கையை
ஆண்டு வந்தான்.

     268. புறம். 236.
     269. புறம். 126.
இவன் துட்டகாமணி என்ற சிங்கள மன்னன் கைகளில் தோல்வியுற்று
உயிரிழந்தான். துட்டகாமணிக்குப் பிறகு நாட்டில் அரசுரிமைப் போராட்டமும்
அதனால் கிளர்ச்சிகளும் எழுந்தன. அவற்றுக்கு ஒரு முடிவுகட்டி வட்டகாமணி
என்பான் பட்டத்துக்கு வந்தான் (கி.மு.43). அவன் காலத்தில்
இலங்கையின்மேல் தமிழரின் படையெடுப்பு ஒன்று நேர்ந்தது. தமிழரின்
கைகளில் நாட்டின் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டைத் துறந்துவிட்டு
ஓடிவிட்டான். ஆனால், மீண்டும் அவன் இலங்கையில் தோன்றித் தமிழரை
முறியடித்து அரசைக் கைப்பற்றிக் கொண்டான்.

     வசபன் என்ற மன்னன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் (கி. பி. 127-171)
இலங்கையை ஆண்டு வந்தான். அவனுடைய காலத்திற்றான் சோழன்
கரிகாலன் இலங்கையின்மேல் படையெடுத்தான். ஆனால், கயவாகு என்ற
சிங்கள மன்னன் (கி.பி.174-196) சோழர்களை நாட்டைவிட்டு வெருட்டி
இலங்கை முழுவதையும் தன் குடையின்கீழ்க் கொண்டு வந்தான். அஃதுடன்
அமையாமல் அவன் சோழ நாட்டின்மேலும் படையெடுத்து வந்தனன் எனவும்,
அவனுடன் சோழ மன்னன் ஒருடன்படிக்கை செய்து கொண்டதாகவும் சிங்கள
வரலாறுகள் கூறுகின்றன.
சங்க காலத்தின் இறுதி

     மதுரைமா நகரில் நடைபெற்று வந்த கடைச்சங்கம் கி.பி. மூன்றாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுற்றது. பாண்டி நாட்டில் மிகக்
கொடியதொரு பஞ்சம் நேர்ந்ததாகவும் பன்னிரண்டாண்டுகள் அது
நீடித்திருந்து மக்களை வாட்டியதாகவும், பாண்டிய வேந்தன் சங்கப்
புலவர்களைப் பாதுகாக்க இயலாதவனாய் வெளியே பல இடங்கட்கும் சென்று
வாழும்படி அவர்கட்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டான் என்றும், அஃதுடன்
தமிழ்ச் சங்கம் இறுதியான முடிவை எய்தியது எனவும் செவிவழி வரலாறுகள்
கூறுகின்றன. தமிழ்ச் சங்கம், முடிதற்கு வேறு காரணங்களும் சிலர் காட்டுவர்.
அவை ஒன்றுக்கேனும் போதிய சான்றுகள் இல்லை. எனினும், சங்கம்
அழிவுற்றதற்கும், தமிழரின் பண்டைய பண்பாடுகளும் கலைகளும் மறைந்து
போனதற்கும் தக்க காரணங்கள் இல்லாமற் போகவில்லை. ஏற்கெனவே
ஆரியப் பண்பாடுகளாலும் சமயக் கருத்துகளாலும் சமுதாயக்
கொள்கைகளாலும் அரிப்புண்டிருந்த தமிழரின் சமூகம் வேறு பல
புரட்சிகளுக்கும் உட்படுவதாயிற்று. தமிழகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின்
தொடக்கத்திலேயே களப்பிரர் என்ற ஒரு குலத்தினரின்
படையெடுப்புக்குட்பட்டு
அல்லலுற்றது. அவர்கள் தமிழரல்லர் ; பிறமொழியாளர். அவர்கள் மாபெரும்
சூறாவளியைப்போல நாட்டில் நுழைந்து மக்களைக் கொன்று குவித்து
உடைமைகளைச் சூறையாடினர். சோழரையும் பாண்டியரையும் வெருட்டி ஓட்டி
அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றிச் சிலகாலம் அரசாண்டு வந்தனர்.
அயல்நாட்டினர் வேறு ஒரு நாட்டை வென்று கைக்கொண்ட பிறகு
அவர்களுடைய மொழி, இலக்கியம், கலை, நாகரிகம் ஆகியவற்றை
அழிப்பதையே தம் முதற் கடமையாகக் கொள்ளுவர். இது வரலாறு கண்ட
உண்மையாகும். பேராசிரியர் பி.ஜி.எல். ஸ்வாமி களப்பிரர், கங்கர்களே
என்றும், ஒருசில ஆண்டுகளே தமிழகத்தில் இருந்தனரென்றும் கூறுவது 
ஒப்புக் கொள்ளக் கூடியதன்று. ஆரியரால் விளைவிக்கப்பட்ட பண்பாட்டுப்
புரட்சியினாலும், களப்பிரரால் நேர்ந்த அரசியல் புரட்சியினாலும் தமிழர்
வாழ்வு சீர்குலைந்தது ; அவர்களுடைய மொழிக்கும், நூல்களுக்கும்,
கலைகளுக்கும், பண்பாட்டுக்கும் தீரா இன்னல்களும் இடையூறுகளும் 
நேர்ந்தன. தமிழை வளர்த்துவந்த சங்கமும் தமிழ்க் கலையும் அழிவதற்கு
நெருக்கடி ஒன்று தோன்றிற்று. 

     தமிழகத்தில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓரிருள்
பரவத் தொடங்கிற்று. தழிக வரலாற்று அரங்கில் ஒரு காட்சி முடிவுற்றுத்
திரையும் விழுகின்றது. மீண்டும் அத்திரையானது மேலே சுருண்டெழுவதற்குள்
முந்நூறு ஆண்டுகள் உருண்டோடிவிடுகின்றன.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...