Monday, 9 February 2015

பல்லவர்கள்

 பல்லவர்கள்

     இந்தியாவிலேயே மிகச் சிறந்த நகரங்களாக விளங்கியவை ஏழு என்பர்.
அவற்றுள் சிறந்தோங்கி வருவது காஞ்சிபுரமாகும். பண்டைய புகழினும், கல்வி,
கலை, சமய தத்துவங்கள், நாகரிகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியிலும்
மேம்பட்டு விளங்குவது இந் நகரம். இங்குக் காணப்படும் நூற்றுக்கணக்கான
கோயில்களும், குளங்களும் மறைந்துபோன பேரரசுகளையும், பேரரசர்களையும்
நினைவூட்டுகின்றன. காஞ்சிமாநகரம் ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுக் காலம்,
கி.பி. மூன்று முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையில், பல்லவரின் ஆட்சியில்
இருந்துவந்தது.

     சென்ற ஐம்பது ஆண்டுகளாகவே பல்லவர்கள், யார், எங்கிருந்து
வந்தவர்கள் என்னும் ஆய்வு வரலாற்று ஆராய்ச்சியாளரால்
மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. எனினும், அவர்களுக்குள் உடம்பாடான
முடிவு ஒன்றும் ஏற்படவில்லை. பல்லவர்கள் ஆதியில் வாழ்ந்த இடம்
இன்னதென்பதும், தமிழகத்துக்கு எப்படி வந்தனர் என்பதும் இன்னும்
மறைபொருளாகவே இருந்துவருகின்றன. சங்க இலக்கியத்தில் பல்லவரைப்
பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. ஆனால், பல்லவர்கள் எழுதி
வைத்துச் சென்ற கல்வெட்டுகள், எழுதிக் கொடுத்துள்ள செப்பேடுகள்
ஆகியவற்றைக்கொண்டு அவர்களைப் பற்றிய வரலாற்றை ஒருவாறு கோவை
செய்துகொள்ளலாம். பல்லவர்களுடைய கல்வெட்டுகள் மகேந்திரவாடி,
தளவானூர், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி, திருக்கழுக்குன்றம், வல்லம்,
மாமண்டூர், மண்டகப்பட்டு, சித்தன்னவாசல், மாமல்லபுரம் ஆகிய இடங்களில்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர்கள் முதன்முதல் பிராகிருத மொழியில்
சாசனங்களைப் பொறித்து வந்தனர் (கி. பி. 250-350). பிறகு சமஸ்கிருத
மொழியில் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் பொறிக்கும் வழக்கத்தை
மேற்கொண்டனர். கி. பி. 7ஆம் நூற்றாண்டில் கிரந்த-தமிழ் எழுத்தில்
எழுதப்பட்டன.

     பல்லவரின் அரசியல் முறைகள் ஆதியில் சாதவாகனரின் அரசியல்
முறைகளுடனும், கௌடிலியரின் அர்த்தசாத்திரக் 
கோட்பாடுகளுடனும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. 
பல்லவருடைய பண்பாடுகள் பலவும் தமிழ் மன்னருடைய பண்பாடுகட்கு
முற்றிலும் முரண்பாடாகக் காணப்பட்டன. அவர்கள் வடமொழியையே போற்றி
வளர்த்தனர். இக் காரணங்களைக் கொண்டு பல்லவர் பரம்பரையின் 
தொடக்கம் தமிழகத்துக்குப் புறம்பாக ஏற்பட்டிருக்கவேண்டும் என்று
ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர். சாதவாகனரின் ஆட்சி குன்றிவரும்போது
பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினார்கள் என்றும், அதற்கு
முன்பு அவர்கள் சாகர்களுடன் இணைந்திருந்து மேற்கிந்தியப் பகுதிகளிலும்,
சிந்து வெளியிலும், ‘பஹ்லவர்’ அல்லது ‘பார்த்தியர்’ என்ற பெயரில் குடியேறி
வாழ்ந்து வந்தார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. அப்படியாயின்
அவர்கள் காஞ்சிபுரத்துக்கு ஏன் வந்தார்கள் என்னும் கேள்விக்கு விளக்கங்
கிடைக்கவில்லை. பல்லவர்களுடைய கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்
பஹ்லவர் என்னும் சொல்லே வழங்கப்படவில்லை. பல்லவர்கள் அசுவமேத
யாகம் வேட்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், பஹ்லவர்களிடம்
இவ்வழக்கம் காணப்படவில்லை. அவர்கள் அந்நியப் பண்பாட்டினர்.
காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயிலில் யானையின் மத்தகத்தைப்
போன்று வடிவமைக்கப்பட்ட உருவம் ஒன்று மணிமுடி சூடிய கோலத்தில்
தீட்டப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பல்லவர்கள் பார்த்தியர்களைச்
சேர்ந்தவர்கள் எனவுங் கூறுவர். ஏனெனில், இந்தோ பாக்டிரிய மன்னனான
டெமிட்டிரியஸ் என்பான் ஒருவனுடைய உருவம் அவனுடைய நாணயம்
ஒன்றின்மேல் இத்தகைய முடியுடன் காட்சியளிக்கின்றது. இச் சான்று
ஒன்றைமட்டுங் கொண்டு பல்லவர்கள் பார்த்தியர்களைச் சேர்ந்தவர்கள் 
என்று கொள்வது பொருந்தாது. 

     பல்லவர்கள் வாகாடகர்களுள் ஒரு பிரிவினர் என்றும், 
வாகாடகர்களைப் போலவே பல்லவர்களும் தம்மைப் பார்த்து வாசக்
கோத்திரத்தினராக கூறிக்கொள்கின்றனர் என்றும், இவர்கள் இரு 
பிரிவினருமே பிராமணக் குலத்தினர் என்றும், பல்லவரைச் சார்ந்த வீரகூர்ச்சா
என்பான் ஒருவன் நாக கன்னிகை ஒருத்தியை மணந்தான் என்றும் கூறுவர்.
சோழன் வெள்வேற் கிள்ளிக்கும் பீலிவளை என்ற நாக கன்னிகைக்கும்
தொண்டைமான் இளந்திரையன் பிறந்தான். அவனுடைய பெயரினால்
தொண்டைமண்டலம் தோற்றுவிக்கப்பட்டது. இவ் வரலாற்றை மணிமேகலை
தருகின்றது. இதனுடன் கூர்ச்சா என்பவன் நாககன்னிகைகைய மணந்த செய்தி
முரண்படுகின்றது. தளவானூர்க் குகைக் கல்வெட்டுகளில் மகேந்திரவர்ம பல்லவனே ‘தொண்டை’
மாலை யணிந்தவன் எனக் குறிப்பிடப்படுகின்றான். பல்லவர்கள்
சாதவாகனரின்கீழ்க் குறுநில மன்னராகவும், ஆட்சி அலுவலராகவும் 
செயற்பட்டு வந்தனர் என்றும், ‘பல்லவர்’ என்னும் சொல்லும் தொண்டையர்
என்னும் சொல்லும் ஒரு பொருளையே குறிக்குமென்றும், சாதவாகனப் பேரரசு
வீழ்ச்சியுற்ற பிறகு இப் பல்லவர்கள் காஞ்சிபுரத்தில் தம் பெயரில் ஆட்சிப்
பரம்பரை யொன்றைத் தொடங்கினர் என்றும், அதன் பின்னர்த் 
தொண்டையர் என்னும் பெயர் மறைந்து பல்லவர் என்னும் பெயருக்கு
இடங்கொடுத்தது என்றும் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் கருதுவார். 

     பல்லவர்கள் தொண்டை மண்டலத்திலேயே தோன்றியவர்கள் என்னும்
கொள்கைக்கும் போதிய சான்றுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. மோரிய
மன்னன் அசோகனின் குடிமக்களுள் புலிந்தர் என்றோர் இனத்தவரும்
இருந்தனரென அப்பேரரசனின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அக்காலத்தில்
தொண்டை மண்டலத்தில் குறும்பர் என்ற ஓரினத்தினர் வாழ்ந்து வந்தனர்.
இவர்களே அப் புலிந்தர்கள் போலும். தொண்டை மண்டலத்தில் இரு பெரும்
கோட்டங்களில் ஒன்றுக்குப் புலி நாடு என்றும் மற்றொன்றுக்குப் புலியூர்க்
கோட்டம் என்றும் பெயர் வழங்கிற்று. வயலூர் என்ற இடத்தில்
இராசசிம்மனின் தூண் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அக் கல்வெட்டில்
அசோகனின் முன் பரம்பரையைக் கூறிவரும்போதும் அசுவத்தாமாவின்
பெயரையடுத்தும், அசோகன் பெயருக்கு முன்பும் ‘பல்லவன்’ என்னும் ஒரு
பெயர் காணப்படுகின்றது. எனவே, அசோகனுக்கு முன்னே பல்லவப் பரம்பரை
இருந்ததாக ஊகிக்க இடமுள்ளது. அசோகனின் கல்வெட்டுகள் சிலவற்றுள்
புலிந்தர்கள் ‘பலடர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். பலடர் என்னும் சொல்
காலப் போக்கில் பல்லவர் என்றும் மாறியிருக்கக் கூடும் என்றும் சிலர்
எண்ணுகின்றனர். தொண்டை மண்டலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து
கி.பி. முதல் நூற்றாண்டு வரையில் மிகவும் புகழ்பெற்று விளங்கியதற்கு
மணிமேகலை சான்று பகர்கின்றது. கரிகால் சோழன் கி.பி. இரண்டாம்
நூற்றாண்டில் பாலாற்றுக்குத் தென்புறத்திலிருந்த தொண்டை மண்டலப்
பகுதியை வென்று சோழ நாட்டுடன் இணைத்துக் கொண்டான். அப்போது
காஞ்சிபுரத்தில் வழங்கிவந்த மோரிய நிறுவனங்களை அவன் அழித்திருக்க
முடியாது. ஏனெனில், பல்லவர்கள் சாதவாகனருக்குத் திறை செலுத்தி வந்தனர்.
ஆகையால், சாதவாகனருடைய பாதுகாப்பு காஞ்சிபுரத்துக்கு அரண் செய்தது. சாதவாகனரின் ஆட்சி கி.பி. 225-ல் வீழ்ச்சியுற்றது.
அவர்களுக்குப் பின்னர்க் காஞ்சிபுரத்தில் பல்லவரே முழு ஆட்சிப்
பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். நாளடைவில் அவர்களுடைய 
ஆட்சியானது காஞ்சிபுரத்திலிருந்து வடக்கில் கிருஷ்ணா நதிவரையில் 
பரவிற்று. மயிதவொளு, ஹீரஹதஹள்ளி என்னும் ஊர்களில் கிடைத்துள்ள
சிவஸ்கந்த வர்மனின் பிராகிருத மொழிச் செப்பேடுகளில் இதற்குச் சான்றுகள்
காணப்படுகின்றன. சாதவாகனருடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தால்
பல்லவர்கள் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பயிற்சி
மிக்கவர்களாக இருந்தனர்; அம் மொழிகளிலேயே சாசனங்களையும் பொறித்து
வைத்தனர். ஆகவே, பல்லவர்கள் சாதவாகனரின் குலத்தைச் சார்ந்தவர்கள்
என ஊகிக்கவும் இடமுண்டு. 

     சிவஸ்கந்தவர்மன் கி.பி. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
காஞ்சிபுரத்தினின்றும் அரசாண்டான். அப்போது அவனுடைய அரசு வடக்கே
கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கில் தென்பெண்ணை வரையில் பரவியிருந்தது.
அவன் காலத்திய சாசனங்கள் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டன. 

     ஸ்கந்தவர்மன் வழிவந்தவன் விஷ்ணுகோபன். அவன் ஏறத்தாழக் கி.பி.
350-375 ஆண்டுகளில் ஆட்சி புரிந்தவன். சமுத்திரகுப்தன் என்ற மோரிய
மன்னனிடம் தோல்வியுண்ட பன்னிரண்டு தட்சிணாபத அரசருள்
விஷ்ணுகோபனும் ஒருவன். 

     பல்லவ சமஸ்கிருதச் செப்பேடுகளில் பதினாறு மன்னரின் பெயர்கள்
காணப்படுகின்றன. அவர்கள் கி.பி. 330-575 கால அளவில் ஆண்டு
வந்தவர்கள். பல்லவ மன்னர் பரம்பரையில் முன்னே கூறப்பட்ட வீரகூர்ச்சா
என்பவனும், பிறகு ஸ்கந்தசிஷ்யனும் ஆண்ட காலத்தில் காஞ்சிபுரத்தில்
பிராமண கடிகைகள் நடைபெற்று வந்தன. அவை பிராமணருக்கு
வடமொழியையும், வேதங்களையும் பயிற்றிவந்தன. அவற்றின் நிருவாகத்தில்
ஏதோ ஒழுக்கக் கேடுகள் நேர்ந்தன போலும். அரசாங்க ஆணைகட்குக்
கட்டுப்படாமல் அவை எதிர்ப்புக் காட்டியிருக்க வேண்டும். அதனால்
ஸ்கந்தசிஷ்யன் படைவலிமையைக் கொண்டு அவற்றைக் கைப்பற்றினான்.

     சமுத்திரகுப்தன் கைகளில் விஷ்ணுகோபன் தோல்வியுற்ற பிறகு
காஞ்சிபுரத்து அரசியலில் பெருங்குழப்பமும் சிக்கல்களும்  ஏற்பட்டன. குமாரவிஷ்ணு என்பவன் மிகவும் முயன்று காஞ்சிபுரத்தைக்
கைப்பற்றினான் என்று வேலூர்ப்பாளையம் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.2
விஷ்ணுகோபனுக்கும் குமார விஷ்ணுவுக்கும் இடையிட்ட காலத்தில் நேர்ந்த
குழப்பங்கட்குக் காரணம் காஞ்சிபுரத்தின்மேல் சோழன் செங்கணான் படை
யெடுத்ததேயாகும். 

     பல்லவர் பரம்பரையில் சிம்மவர்மன் என்பவன் சு. கி. பி. 436-ல்
அரசுகட்டில் ஏறினான். இவனுடைய ஆட்சிக்குப் பிறகு இரண்டாம் 
சிம்மவர்மன் மணிமுடி தரித்துக் கொண்டான்.(கி.பி. 575). அவன் காலத்தில்,
தொடக்க முதல் இறுதிவரையில் நாட்டில் களப்பிரர் படையெடுப்பினால்
கலகமும் கிளர்ச்சியும் குழப்பமும் மேலிட்டன. அவன் மகன் சிம்மவிஷ்ணு
என்பவன் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசுரிமை ஏற்றான். பல்லவ
காலத்திய இலக்கிய வளர்ச்சியும், பண்பாட்டு மேம்பாடும், அரசியல் விரிவும்
சிம்மவிஷ்ணுவின் காலத்திலிருந்தே தொடங்குகின்றன. இவன் களப்பிரரையும்
சேர, சோழ, பாண்டிய மன்னரையும், மாளவரையும், சிங்களவரையும் வென்று
வாகை சூடினான் என்று காசக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.3 இவனுடைய
அரசாட்சியானது தெற்கில் கும்பகோணம் வரையில் விரிவுற்று நின்றது.
இவனுடைய அரசவைப் புலவரான பாரவி என்பார் ‘கிராதார்ச்சுனீயம்’ 
என்னும் வடமொழிக் காவியத்தை இயற்றினார். சிம்மவிஷ்ணுவின் உருவமும்,
இவருடைய பட்டத்தரசிகள் இருவரின் உருவமும் மாமல்லபுரத்தில்
புடைப்போவியங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 

     சிம்மவிஷ்ணுவுக்குப் பிறகு அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மன் (சு.
கி. பி. 600-630) பட்டத்துக்கு வந்தான். இவனுக்கு விசித்திரசித்தன் என்றொரு
விருது பெயருமுண்டு. பல்லவர் பரம்பரையிலேயே புகழ் ஏணியில் ஏறி நின்ற
முதல் மன்னவன் மகேந்திரன்தான். இவன் காலத்தில்தான் பல்லவ சளுக்கப்
போர்கள் தொடங்கலாயின. பல்லவர்களுக்கும் கடம்பர்களுக்கு மிடையே
நெருங்கிய நட்புறவு இருந்து வந்தது. சளுக்க மன்னனான இரண்டாம்
புலிகேசியின் முன்னோர்கள் கடம்பரை வென்று அடிபணிய வைத்தனர்.
அதனால் கடம்பரின் நண்பர்களான பல்லவர்களுக்கும் சளுக்கர்களுக்கும்
அடிக்கடி போரும்  
பூசலும் மூண்டு வந்தன. சளுக்கர்கள் வேங்கியைப் கைப்பற்றி
மகேந்திரன்மேல் வெற்றிகண்டனர். காஞ்சிபுரத்தை யடுத்துள்ள புள்ளலூர்
என்ற இடத்தில் மகேந்திரவர்மன் சளுக்கரை அழித்தான் என்று காசக்குடிச்
செப்பேடுகள் கூறுகின்றன. இவன் செந்தகாரி (கோயில் கட்டுபவன்),
மத்தவிலாசன் (இன்பம் விரும்புபவன்), சித்திரகாரப் புலி (ஓவியர்க்குப் புலி)
என்ற விருதுகள் சிலவற்றையும் மேற்கொண்டான்.

     ஒரே பாறையில் குடைந்து கோயில்கள் அமைக்கும் சிற்ப மரபானது
தமிழகத்தில் முதன்முதல் மகேந்திரவர்மனாற்றான் தோற்றுவிக்கப் பெற்றது.
புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள மண்டகப்பட்டு, திருச்சிராப்பள்ளி, பல்லாவரம்,
செங்கற்பட்டுக்கு அண்மையிலுள்ள வல்லம், மாமண்டூர், தளவானூர்,
சீயமங்கலம், மகேந்திரவாடி ஆகிய இடங்களிலும் இவன் குகைக் கோயில்கள்
குடைந்துள்ளான். அக் கோயில்களில் அவன் பொறிப்பித்த கல்வெட்டுகளும்
காணப்படுகின்றன. ‘செங்கலின்றி, மரமின்றி, உலோகமின்றி, காரையின்றிப்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களுக்கு விசித்திரசித்தன் இக்
கோயிலை ஆக்கினான்’ என்று இவனுடைய மண்டகப்பட்டுக் கல்வெட்டு
வியந்து கூறுகின்றது. மகேந்திரவர்மன் மகேந்திரவாடி ஏரியைக் கட்டி
உழவுக்கு உதவினான். சிற்பத்திலும் ஓவியத்திலும் மட்டுமன்றி இசையிலும்
இவ்வேந்தன் வல்லுநனாக இருந்தான். இவனுடைய இசைப் புலமைக்குக்
குடுமியாமலைக் கல்வெட்டுச் சான்று எனச் சிலர் கருதுகின்றனர். இக்
கல்வெட்டுச் சற்றுப் பிற்காலத்தைச் சார்ந்தது என வேறு சிலர் கூறுகின்றனர்.
இதுபற்றி இறுதியான முடிவுக்கு வரமுடியாது.

     மகேந்திரவர்மன் ஆதியில் சமணனாக இருந்தான். திருநாவுக்கரசரிடம்
ஈடுபாடுகொண்டு பிறகு சைவ சமயத்தைத் தழுவினான். இவன் சிவலிங்க
வழிபாடு உடையவன் என்று திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டுக் கூறுகின்றது.
தான் சைவனான பிறகு பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூரில்) இருந்த ஒரு
சமணப் பள்ளியை இடித்து நிரவினான்.  

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...