Monday, 9 February 2015

சங்க இலக்கியம் -03

சங்க இலக்கியம் -03

மேலும் மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகிய இவ்விரு காப்பியங்களும்
சில அரசியல் அமைப்புகளைப்பற்றிக் கூறுகின்றன. அவற்றைக்கொண்டு
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றுக்குப் பிற்பட்ட ஒரு காலத்தில் இக்
காப்பியங்கள் ஆக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ளவேண்டும்.
எண்பேராயம், ஐம்பெருங்குழு என்ற அரசவைகளைப்பற்றிய செய்திகளை
முதன்முதல் இக் காப்பியங்களிற்றான் நாம் கேள்வியுறுகின்றோம். இவை
மன்னருக்கு மந்தணம் கூறும் அவைகளா, அன்றி அவர்களுடைய
திருவுலாக்களை அணி செய்யும் குழுக்களா, எஃது என்று திட்டமாகத்
தெரியவில்லை. சங்க இலக்கியங்கள் இவ்வாயத்தைப்பற்றியும், குழுவையும்
பேசுவதில்லை. சங்க காலத்துக்குப் பிறகு மன்னரின் கோன்மை உயர்ந்து
கொண்டு போகவே மக்கள் நலனின் பாதுகாப்புக்காக இவ்வவைகள்
நிறுவப்பட்டன என்று எண்ண வேண்டியுள்ளது. 

     மற்றும் இக் காப்பியங்களின் காலத்தில் நல்ல நெடுஞ்சாலைகள்
அமைக்கப்பட்டிருந்தன. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கொடும்பாளூர் சென்ற
சாலையும், பின்னைய ஊரிலிருந்து மதுரைக்குச் சென்ற சாலையும் நன்றாகச்
செப்பனிடப்பட்டிருந்தன. ஏரி, காடு, மலைச்சாரல், நெல்வயல்,
கருப்பந்தோட்டம், வெள்ளைப் பூண்டும் மஞ்சளும் விளைந்த
தோட்டக்கால்கள், தெங்கு, மா, பலா முதலிய மரங்கள் செறிந்த குளிர்ந்த
தோப்புகள் ஆகியவற்றினூடே அந் நெடுஞ்சாலைகள் அமைந்திருந்தன. சங்க
காலத்தில் இத்தகைய திட்டமிட்டுச் செப்பனிடப்பட்ட நெடுஞ்சாலைகள்
அமைந்திருந்தனவெனத் தெரியவில்லை. 

     சங்க இலக்கியங்கள் காதல், கற்பு, போர் ஆகிய அகத்திணை,
புறத்திணைப் பொருள்கள்பற்றியே பேசுகின்றன. ஆனால், இவ்விரு
காப்பியங்களிலோ வளர்ந்து வந்த வாழ்க்கைக் கூறுபாடுகள் பலவற்றைக்
காண்கின்றோம். நகர வாழ்க்கை, கலைப்பயிற்சி, சமயத்தத்துவச் சொற்போர்கள்,
ஊழ் வந்து உறுத்தல், பொய் புரட்டுகள் ஆகியவற்றைப் போன்ற புதுமைகள்
பல இக் காவியங்களில் இடம் பெற்றுள்ளன. உண்டு, உடுத்து, குடித்து, காதல்
புரிந்து, இல்லறம் ஓம்பி, புலவர்களைப் புரந்து, பாணர், விறலியர் கூத்தைக்
கண்டும் இசையைக் கேட்டும் மகிழ்ந்து, மன்னனுக்காகப் போர் புரிந்து எளிய வாழ்க்கையை நடத்தி வந்த சங்ககாலத் தமிழ்ச் சமூகம் நெடுந்தொலைவு 

கடந்து வந்து இக் காப்பிய காலங்களில் பலவகையான வளர்ச்சிகட்கும்,
வேறுபாடுகட்கும், சிக்கல்கட்கும் உட்பட்டுக் காணப்படுகின்றது. பல பண்டைய
தமிழ்ப் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் மாறிப்போய்விட்டன.
‘யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம் முறைக்கேளிர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயர்நீர் போல, அன்புடைய
நெஞ்சம் தாம்கலந் தனவே’57 என்று காதலன் தன் காதலியைப் பாராட்டி
மணம் புரிந்து கொண்ட காலம் நழுவி, கோவலன் கண்ணகி இவ்விருவரின்
பெற்றோரும் மணவணி காண மகிழ்ந்து, மாமுது பார்ப்பான் மறைவழி
காட்டிடத் தீவலம் செய்து அவ்விருவருக்கும் மணம் புரிவித்த ஒரு காலம்
வளர்ந்து வந்துவிட்டது. ஆரியப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் பல
தமிழரின் வாழ்க்கையில் குடிபுகுந்துவிட்டன. சேயோன், மாயோன், வேந்தன்,
வருணன், கொற்றவை என்ற சங்க காலத்தெய்வங்களுடன் இக் 
காப்பியங்களின் காலத்தில் வேற்படை, வச்சிரப்படை, ஐராவதம், பலதேவன்,
சாதவாகனன், அருகன், சந்திரன், சூரியன் ஆகிய கடவுளரின் வழிபாடும்
சிறப்பாக நடைபெற்று வந்தது.58 ஐந்தெழுத்தும் எட்டெழுத்தும் 
ஓதப்படவாயின ;59 ‘தொண்ணூற்றாறுவகைச் சமய சாத்திரத் தருக்கக்
கோவை’யில் வல்லவரான பாசண்டர்களைச் சிலப்பதிகாரத்தில் 
காண்கின்றோம். இவர்கள் சங்க காலத்தில் காணப்பட்டிலர். ‘சுடலை
நோன்பிகள்’ என்றும், ‘உலையா உள்ளமொடு உயிர்க்கடனிறுத்தோர்’ என்றும்
காபாலிகர் மணிமேகலையிற் பாராட்டப் பெறுகின்றனர். இவர்களைப்பற்றியும்
சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை. 

     சமணமும் பௌத்தமும் ஒன்றோடொன்று ஒத்து வளர்ந்து எங்கும் பரவி
இருந்த ஒரு காலத்தில் இவ்விரு காப்பியங்களும் இயற்றப்பட்டிருக்க 
வேண்டும். ஆகையால், அவற்றுள் சமண பௌத்த சமயத் தத்துவங்கள்
விளைக்கப்பெறுகின்றன. இவ்விரு சமயங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே
தமிழகத்தில் நுழைந்து விட்டனவாயினும் சங்க இலக்கியங்களில் அவற்றைப்
பற்றிய குறிப்புகள் மிகவும் குறைவு. சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான
இளங்கோவடிகளை ஒரு சமணத் துறவி என்பர். மணிமேகலையானது 
பௌத்தக் கொள்கைகளைத் தமிழகத்தில் 

     57. குறுந். 40 
     58. சிலப். 9 : 9-15 
     59. சிலப். 11 : 128.
பரப்பும் சமய நோக்குடனே இயற்றப்பட்டதெனத் தோன்றுகின்றது. சமணரின்
செல்வாக்கு ஓங்கி நின்ற காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டாகும். வச்சிரநந்தி
என்ற சமணர் கி.பி. 470-ல் திராமிள சங்கம் என்று ஒரு தமிழ்ச் சங்கத்தைத்
தோற்றுவித்தார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில இச்சங்கத்தை 
மருவிய நூல்களாம் எனவும் சிலர் எண்ணுகின்றனர். காஞ்சிபுரத்தில் 
கி.பி. 4, 5, 6ஆம் நூற்றாண்டுகளில் பௌத்தரின் செல்வாக்குப் பெரிதும்
பரவியிருந்தது. சமணம், பௌத்தம் ஆகிய இவ்விரு சமயங்களேயன்றிச்
சைவமும் அதன் உட்பிரிவுகளும், வைணவமும், உலோகாயதமும், பூதவாதமும்
செழிப்புடன் காணப்பட்டன. சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூர் எடுத்த
காதையிலும், வேட்டுவவரியிலும் ஆய்ச்சியர் குரவையிலும் சமய
வளர்ச்சியையும், மக்களுக்குச் சமயங்களில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த
ஈடுபாட்டையும் அறிகின்றோம். எல்லாச் சமயத்தினரும் பூசல்கள் இன்றி
ஒருமித்து வாழ்ந்து வந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் ஒருவர் வேத
நெறியையும் மற்றொருவர் சமணத்தையும், பிறிதொருவர் பௌத்தத்தையும்
சார்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

     இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இயல், இசை, நாடகம் என்னும்
முத்தமிழையும் கையாண்டுள்ளார். அவர் தமக்கு வேண்டிய இசை, கூத்து
நுணுக்கங்களைப் பரத நாட்டிய சாத்திரம் என்னும் வடமொழி நூலினின்றும்
கற்றார் என்றும், அதனால் சிலப்பதிகாரம் காலத்தால் மிகவும் பிற்பட்டநூல்
எனவும் கொள்ளுவர் வையாபுரி பிள்ளையவர்கள். இளங்கோவடிகள் பரத
நாட்டிய சாத்திரத்தைப் பயின்றிருக்கக்கூடும். ஏனெனில், அவ் வடமொழி
நூலினுள் கூறப்படும் சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதி என்னும் நான்கு
வகையான ‘விருத்தி’ என்னும் நாடக உறுப்பினைப்பற்றி அவர்
விளக்குகின்றார்.60 பரத நாட்டிய சாத்திரம் தோன்றிய காலமே இன்னும்
வரையறுக்கப்படவில்லை. சிலர் அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டதென்றும், சிலர் அது கி.பி. 4ஆம் நூற்றாண்டின் படைப்பு
என்றும் கருத்து வேறுபடுவர். தமிழகத்தில் சங்க காலத்திலேயே பாட்டும்,
கூத்தும் மக்கள் பயின்று வந்த சிறந்த கலைகளாக விளங்கின. பாணரும்
விறலியரும் இக்கலைகளை நாடெங்கும் பரவுமாறு செய்து வந்தனர். 
மன்னர்கள் அவர்களுடைய கலையறிவைப் பாராட்டிப் பரிசில்களை வாரி
வழங்கினர். சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் மக்கள் சமூகம் பல துறைகளில்
வளர்ச்சி பெற்றிருந்தது. ஆடல்பாடல் துறையும் 

     60. சிலப். 3 : 13இல் அடியார்க்கு நல்லார் விளக்கவுரை காண்க.

அவற்றுள் ஒன்றாகும். தமிழகத்தில் முழு வளர்ச்சி பெற்றிராத ஒரு
கலையைப்பற்றிக் கூறும்போது இளங்கோவடிகள் அதைப் பற்றிய வடமொழி
நூல் விளக்கங்களை எடுத்துக் காட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டிராது.
ஏற்கெனவே முழு வளர்ச்சி பெற்றிருந்த கூத்து இசையாகிய கலைகளைப்
பற்றிய விரிவுகளை அவர் எடுத்துக் கூறியிருப்பதில் வியப்பேதுமில்லை.
சிலப்பதிகாரத்தில் சிறந்து வளர்ந்த இரு பெரும் மொழிகளிடையே கருத்துப்
பரிமாற்றங்கள் நடைபெறவில்லை என்று கூறமுடியாது. தமிழர்கள்
வளர்த்திருந்த நாட்டியக் கலையினின்றும் பல புதுமைகள் வடமொழியில்
ஏற்புண்டு. புதிய வடிவத்தில் புதிய பெயர்களைப் புனைந்து
வெளிவந்திருக்கக்கூடும்.பரத நாட்டியம் என்னும் பழந்தமிழரின் கூத்து
முறைகள் பல நூற்றாண்டுகளாகத் தம் தூய்மையையும், இனிமையையும்,
பெருமையையும் விரிவையும் இழக்காமல் இன்றும் தமிழகத்தில் பயின்று
வருகின்றன. வடஇந்தியாவில் பரதநாட்டியம் அறவே மறைந்து ஒழிந்து
போயிற்று. அங்கு மூலைக்கு மூலை பலப் பலவான நாட்டிய வகைகள் 
தோன்றி வளர்ந்து வந்துள்ளன. அவற்றுள் ஒன்றிலேனும் பரத நாட்டிய
முறையின் சிறப்புகளைக் காணவியலாது. சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக்
காதையில் இளங்கோவடிகள் எடுத்து விளக்கும் பண்முறைகள் தேவாரப்
பண்களைவிட, குடுமியாமலைக் கல்வெட்டுப் பண்களைவிட மிகவும்
பழமையானவை. 

     கோவலனும் கண்ணகியும் முதன்முதல் பூம்புகாரைவிட்டு மதுரைக்குப்
புறப்பட்ட நாளன்றும், இறுதியில் கண்ணகி மதுரைக்கு எரியூட்டிய நாளன்றும்
காணப்பட்ட கோள்நிலை முதலியவற்றின் அடிப்படையில், வானவியல்
கணிப்பின்படி காலத்தை அறுதியிட்டுச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 
கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்று எல். டி.
சுவாமிக்கண்ணுபிள்ளை அவர்கள் எண்ணுகின்றார். ஆனால், வானவியலின்படி
காலங்கணிப்பதற்குப் போதுமான கோள்நிலைக் குறிப்புகளைச்
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தரவில்லை. வானவியலின்
அடிப்படையிலேயே வேறொரு ஆய்வாளரும் (எம்.இராமராவ்) இக்
காப்பியங்கள் கி.பி. 146-க்கும் கி.பி. 587-க்கும் இடையில் ஆக்கப்பட்டிருக்க
வேண்டும் என்றும் கூறுகின்றார். இளங்கோவடிகளோ உரையாசிரியரோ
கோள்நிலையை அறுதியிட்டுத் தெரிவிக்கவில்லை. சிலப்பதிகாரத்தில்
கிடைக்கும் சில குறிப்புகளைமட்டும் கொண்டு காலங்கணித்தல் திருத்தமாக
இராது. எனவே, இவ்விரு அறிஞரின் காலக் கணிப்புகள் பொருந்தாதவை 
எனப் புறக்கணிக்கப்பட வேண்டியவையாம். சோதிட நூலின்படி அமைந்துள்ள காலக் கூறுபாடுகளான திங்கள்,

பக்கம், நாள் ஆகியவற்றைத் தமிழர் பழங்காலத்திலேயே அறிந்திருந்தனர்.
அதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. சில நூற்றாண்டுகட்கு முன்புதான்
பயின்றனர் என்று சில ஆய்வாளர் மேற்கொள்ளும் கருத்துக்கு ஆழமின்று.
இடபம் முதலான பன்னிரண்டு இராசிகளையும் கோள்கள் திரிந்துவரும்
வானமண்டிலத்துக்குள் அமைந்திருக்கும் நாண்மீன்களையும் கோள்நிலை
திரிவதாலும், புகைமீன் வீழ்வதாலும், நாண்மீன் ஒவ்வொன்றுடனும் நிலாக்கூடி
வருவதாலும் ஏற்படக்கூடிய விளைவுகளையும் தமிழர் அறியாதவர்களல்லர்.
ஞாயிறானது மேட இராசி தொடங்கி, இராசிதோறும் பெயர்ந்து செல்லுவதை
நெடுநல்வாடை ஆசிரியர் நக்கீரர் அறிந்திருந்தார்.61 கூடலூர்கிழார் 
இராசியின் பெயர், அதில் ஞாயிறு நின்ற நிலை, வெள்ளி எனும் கோள் 
நின்ற நிலை, நாண்மீன்கள் எழுவதும், அமர்வதும், எரிமீன் விழுவதும்
ஆகியவற்றைத் தம் பாடல் ஒன்றில் விளக்குகின்றார்.62 இராசிகளுக்கும்
நாண்மீன்கட்கும் அவர் தமிழ்ப் பெயர்களையே அளித்துள்ளார். உறையூர்
முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவரின் செய்யுள் ஒன்று புறநானூற்றில் 
இடம் பெற்றுள்ளது.63 வானத்தில் ஞாயிறு இராசிதோறும் பெயர்ந்து
செல்லுவதையும், அங்கு ஒரு குறிப்பிட்ட வட்டமான வழியிலேயே அது சுற்றி
வருவதையும், காற்று இயங்குவதையும், ஆகாயம் நிலைத்து நிற்பதையும், சில
கணிகள் தாம் நேரில் சென்று அளந்தறிந்தனர் போல இருக்குமிடமிருந்தே
கோள்களைக் கணித்து அறியக்கூடிய ஆற்றல் பெற்றிருந்ததையும் பழந்தமிழர்
அறிந்திருந்தனர். வானத்தில் மின்னுவன ‘மீன்கள்’, ஞாயிற்றின் ஒளியைக்
கொண்டு மின்னுவது ‘கோள்’. கோள்களின் இயக்கங்களைக் கணித்துப்
பின்வருவனவற்றை முன்னரே கூறும் ஆற்றல் வாய்ந்தவருக்குக் ‘கணி’ 
அல்லது ‘கணியன்’ என்று பெயர். கணிகளின் தலைவன் ‘பெருங்கணி’
எனப்பட்டான். சங்க இலக்கியத்தில் கணியைப் பற்றிய குறிப்புகள் பலவற்றைக்
காணலாம். கணியன் பூங்குன்றனார் என்பவரும் ஒரு கணியேயாவார். இவர்
‘யாதும் ஊரே, யாவருங் கேளிர்’64 என்று பாடி மக்கள்பால் இருக்க 
வேண்டிய மிகச் சிறந்ததொரு பண்பாட்டை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்.
இவர் சோதிடக் கலையில் வல்லுநராக இருந்தார். 

     61. நெடுநல். 160, 161
     62. புறம். 229 
     63. புறம். 20.
     64. புறம், 192.
தமிழருக்கும் பாபிலோனியா, சுமேரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு
மிடையே முற்காலத்திலேயே விரிவான கடல் வாணிகம் நடைபெற்று வந்த
செய்தியை முன்னரே அறிந்தோம். அந் நாடுகள் அனைத்தும் விண்மீன்கள்,
கோள்கள் ஆகியவற்றைப்பற்றி நன்கு அறிந்திருந்தன. அவர்களுடன் 
வாணிகத் தொடர்பு கொண்டவர்களும், பண்டைய நாளிலேயே விண்மீன்
களின் துணைகொண்டு திசையறிந்து ஆழ்கடலோடியவர்களுமான தமிழ் 
மக்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்றான் வானவியல் அறிவை
வளர்த்துக்கொண்டார்கள் என்னும் கூற்று அடிப்படையிலேயே
பிழைபட்டதெனக் கொள்ளவேண்டும். கடலோடும் மக்கள் யாருமே வடமீன்,
கோள்களுள் ஒளிமிக்கவையான வெள்ளி, வியாழன், செவ்வாய் ஆகியவற்றின்
வான நிலையைக் கண்டு காலத்தையும் திசையையும் கணிக்காமல் மரக்கலம்
ஓட்ட முடியாது. கடல் பயணம் செய்தவனைக் ‘குலக்கேடன்’ என்று
ஒதுக்கிவைத்தும், அவனுடைய நாக்கையும் மூக்கையும் சுடரால் சுட்டு
அவனுக்குக் கழுவாய் செய்தும், கடல் பயணத்துக்கு இழுக்குக் கற்பித்த
ஆரியரிடம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே திரைகடலோடிய தமிழர்கள்
வானவியல் பயின்றார்கள் என்னும் கூற்று சாலவும் பழுதுபட்டதாகும். 

     திருக்குறளில் ஏழுநாள் கால அளவாகிய வாரத்தைப்பற்றிய குறிப்பு
ஒன்று உண்டு.65 இந் நூல் சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும்
முற்பட்டது என்பதை யறிவோம். திருஞானசம்பந்தர் (7ஆம் நூற்றாண்டு) ஏழு
கிழமைகளின் பெயர்களையும் ஒரு பதிகத்தில் வைத்துப் பாடியுள்ளார்.66
செவ்வண்ணக் கோளைச் ‘செவ்வாய்’ என்றும், பொன்வண்ணமாகக் காட்சி
யளிக்கும் வியாழனைப் ‘பொன்’ என்றும், வெண்ணிறக் கோளை ‘வெள்ளி’
என்றும், நீலவண்ணக் கோளான சனியை ‘நீலன்’ என்றும், ‘காரி’ என்றும்
பழந்தமிழர் சுட்டிக் காட்டினர். இலக்கிய அகச் சான்றுகளைக் கொண்டே
பண்டைய தமிழரின் வானவியல் நுண்ணறிவைக் கண்டு வியப்புறலாகும்.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பிற்காலத்தியவை என்று கருதும்
ஆய்வாளர்கள் காட்டும் சான்று மற்றொன்றும் உண்டு. மணிமேகலையின்
‘தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை’யில் மணிமேகலை கேட்டறிந்த
பௌத்த அறம் திந்நாகர் என்ற பௌத்த அடிகளின் அறிவுரைகளேயாம்
என்றும், ஆதலால் இக் 

     65. குறள் 1278.
     66. தேவாரம். 2.85 : 1

காப்பியங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்தவை
என்றும் அவ்வாய்வாளர் கூறுவர். மணிமேகலை அறங்கேட்டது அறவண
அடிகளிடம். திந்நாகர் காஞ்சிமா நகரில் பிறந்து வாழ்ந்தவர். அவரே அறவண
அடிகளாரிடம் அறங்கேட்டுத் தெளிவு பெற்றிருக்கக்கூடும். மணிமேகலை
வரலாறு நிகழ்வதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் அறவண
அடிகள் என்று இக் காப்பியம் கூறுகின்றது. திந்நாகர் அறவண அடிகளுக்குப்
பிற்பட்டிருந்த பௌத்த அறிஞர்களிடம் அறங்கேட்டுத் தெளிந்திருப்பார் 
என்று ஊகிக்க இடமுண்டு. 

     மொழியியல் கூறுபாடுகள் சிலவற்றைக் கொண்டும் இவ்விரு
காப்பியங்களையும் காலத்தால் பிற்பட்டவை எனவுங் கூறுவர். பழஞ் சங்க
இலக்கியங்களில் காணப்படும் கருத்து அமைப்புகள், சொல்லாட்சி முதலிய
கூறுபாடுகளுக்கும் இக் காப்பியங்களின் இலக்கிய நடை, சொல்லாட்சி
முதலியவற்றுக்குமிடையே ஆழ்ந்த வேறுபாடு உண்டு. இந் நூல்களில் 
செய்யுள் இலக்கணத்தின் வளர்ச்சியைக் காண்கின்றோம். இவற்றில்
ஆளப்பெறும் ; ‘நான்’, ‘உன்’, ‘இந்த’ என்னும் சொற்கள் சங்க
இலக்கியங்களில் ஆளப் பெறுவதில்லை. மேலும், நரபலி, சாபம், விதானம், 
கலி, சித்திரம், பரகதி, விரதம், சாந்தி, தோரணம், நாதன் ஆகிய வடமொழிச்
சொற்கள் இக் காப்பியங்களில் விரவி வருகின்றன. இக்காரணம் போதிய
சான்றாகாது. ஆரிய மொழியுடன் தொடர்புகொண்ட சமணமும் பௌத்தமும்
இக் காப்பியங்களுள் தொடக்க முதல் இறுதிவரையில் ஆங்காங்கு விளக்கம்
பெறுகின்றன. வேறு சில சமயங்களின் கருத்துரைகளும் இவற்றில் இடம்
பெற்றுள்ளன. எனவே, இவற்றில் வடமொழிக் கலப்புச் சற்று மிகுதியாகவே 
காணப்படுவதில் வியப்பேதுமில்லை. இம் மொழிக்கலப்பைக் கொண்டு இக்
காப்பியங்கள் சங்க இலக்கியங்கட்குச் சற்றே பிற்காலத்தியவை என்று
ஊகிக்கலாமே அல்லாது பல நூற்றாண்டுகள் பிற்பட்டவை என்று
கொள்ளுவதற்கு இடமில்லை. 

     ‘பங்களர்’ என்று ஒரு சொல் சிலப்பதிகாரத்தில் ஆளப்பெறுகின்றது.67
இது வங்க நாட்டைக் குறிக்கும் என்றும், கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்
கல்வெட்டுகளிற்றான் இச் சொல் இடம் பெற்றுள்ளதென்றும், ஆகையால்
சிலப்பதிகாரம் 11ஆம் நூற்றாண்டிலோ, அதற்கு இருநூறு ஆண்டுகள்
முந்தியோ இயற்றப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.
பங்களர் என்னும் பெயர்ச் சொல் வங்க நாட்டைத்தான் குறிக்கின்றது 

    67. சிலப்.25: 157

என்று திட்டமாகக் கூறமுடியாது. எந்தச் சொல்லும் முதன் முதல் மக்களின்
பேச்சு வழக்கில் பயின்றுவரவேண்டும். அதன் பின்னர்த் தான் அது
கல்வெட்டில் இடம் பெறும். அன்றியும் இக் கல்வெட்டுக்குக் காலத்தால் 
முந்திய கல்வெட்டு ஒன்றில் இச் சொல் ஆளப் பெறவில்லை என்பதற்கு 
என்ன சான்று உளது? நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் வெளியானவை
ஒரு சிலவே ; வெளியாகாமல் கிடப்பவை பல்லாயிரம் உண்டு. அவற்றில்
ஏதேனும் ஒன்றில் பங்களம் என்னும் பெயர்ச்சொல் ஆளப் பெற்றிருக்கக்
கூடும். இஃதேயன்றித் தென்னார்க்காடு மாவட்டத்தில் பங்களர் எனப் பெயர்
பெற்றிருந்த மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதையும் ஈண்டுக் கருத்தில்
வைக்க வேண்டும். 

     சிலப்பதிகாரத்தில் காவிரியாறு ‘காவேரி’ என்று அழைக்கப்படுகின்றது.
அதனாலும் இக் காப்பியம் பிற்பட்டதென்பர். சிலப்பதிகாரத்தில் இசைப்
பாட்டுகள் நிரம்பிய கானல் வரியில் மட்டுந்தான் ‘காவேரி’ என்னும் சொல்
ஆளப்படுகின்றது. மற்றெல்லா இடங்களிலும் ‘காவிரி’ என்னும் பெயரே
வழங்குகின்றது. காவேரி என்னும் சொல் இசைக்குத் தக்கதான ஒலி நெகிழ்ச்சி
கொண்டுள்ளது. கோவலன் யாழை வாங்கிக் ‘காவேரி’ என்று அழைத்துப்
பாடத் தொங்குகின்றான் என்பதைக் கூறுமிடத்திலும் இளங்கோவடிகள்,
‘காவிரியை நோக்கினவும், கடற்கானல்வரிப் பாணியும் மாதவி தன் மனம் 
மகிழ வாசித்தல் தொடங்குமன்’ என்று ‘காவிரி’ என்னும் பெயரையே
ஆண்டுள்ளதை நோக்கவேண்டும்.68 

     சிலப்பதிகாரம் வழக்குரை காதையின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ள
மூன்று வெண்பாக்களில் முதல் வெண்பா69 அறத்தைப் பற்றிப் பேசுகின்றது.
பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகிய நான்மணிக்கடிகையில் வரும் ஒரு
செய்யுளும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றது. எனவே, சிலப்பதிகாரம்
காலத்தால் நான்மணிக்கடிகையினும் பிற்பட்டதாகும் என்றுங் கூறுவர். இங்குக்
குறிக்கப்பெறும் ‘அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்’ என்னும் மொழி
‘பல அவையாரால்’ நாட்டப்பட்ட ஓர் அறமொழியாம் என்று அந்த
வெண்பாவே தெரிவிக்கின்றது. எனவே, அம்மொழி புதிதன்று ; ஒருவரால்
மட்டும் நிறுத்தப்பட்டதன்று. மற்றும் பழமொழி நானூற்றைக் கற்று
இளங்கோவடிகள் ‘முற்பகல்செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல்
காண்குறூஉம் 

     68. சிலப். 7 : 19, 20. 
     69. சிலப். 20 ; வெண்பா-1

பெற்றியகாண்’70 என்று பாடினார் என்றும் கூறுவர் இவ் வாய்வாளர். 
ஆனால், இதே கருத்தை நிறுத்தித் திருவள்ளுவர் ‘பிறர்க் கின்னா முற்பகல்
செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்று ஒரு குறட்பாவைத்
தந்துள்ளார். எனவே, திருக்குறளைக் கற்றும் இளங்கோ இவ்வற மொழியைத்
தம் நூலில் சேர்த்திருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது. 

     மேலே கூறியவற்றால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் சேரன்
செங்குட்டுவன் வாழ்ந்த காலத்திலேயே இயற்றப்பட்டிருக்க முடியாது என்று
கொள்ள வேண்டியுள்ளதாயினும், கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டில் அவை
எழுந்தன என்று கூறி அவற்றின் பழைமையை மறுப்பது ஆய்வுக்குச் 
சற்றேனும் ஏலாததாகும். அண்மையில் ஓர் ஆசிரியர் அதைக் கி.பி. 13ஆம்
நூற்றாண்டைச் சார்ந்ததெனக் கூறியிருப்பது பெரும் விந்தையே. தமிழகத்தில்
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ வைணவ மறுமலர்ச்சி மேலீட்டினால் சமயப்
பூசல்கள் மலிந்திருந்தன. பௌத்தமும் சமணமும் வீறடங்கித் தாழ்ந்து வந்து
கொண்டிருந்தன. ஆனால், அவ்விரு சமயங்களும் சைவ வைணவ சமயங்கள்
ஒத்திருந்து எவ்வித வேறுபாடுகளுமின்றி மக்கள் வாழ்க்கையில் இடம்
பெற்றிருந்த காலத்தில் இவ்விரு காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன வாகையால்
அவற்றைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டனவாகக் கொள்ளுதலே
பொருத்தமாகும். அஃதுடன் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்றான் கணபதி வழிபாடு
தமிழகத்தில் தொடங்கிற்று. சிலப்பதிகாரத்தில் அதைப் பற்றிய குறிப்புகளே
காணப்படவில்லை. எனவே, சிலப்பதிகாரம் 7ஆம் நூற்றாண்டுக்கு முந்திய
காலத்தின் படைப்பு என்பதில் ஐயமேதுமில்லை. இளங்கோவடிகள் சேரன்
செங்குட்டுவன் உடன்காலத்தவர் அல்லர் ; பிற்காலத்தவர். தம் காப்பியத்துக்கு
ஏற்றதொரு பின்னணியைப் படைத்தளிக்க இவர் எண்ணினார். அக்
காரணத்தால் சேரன் செங்குட்டுவன் காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டில்)
காப்பியக் கதை நிகழ்ந்ததாகக் கற்பனை செய்தார். அதனால் காஞ்சியைப்
பற்றிப் பலமுறை தம் காப்பியத்தில் குறிப்பிடுகின்றாராயினும் அதில் பல்லவ
மன்னரைப் பற்றியோ களப்பிரரைப்பற்றிய குறிப்போ கொடுக்கவில்லை.
எனினும், இவ்விரு காப்பிய ஆசிரியர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்தை
யடுத்து இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்தவர்கள் ஆதலால்,
கதையின் கற்பனையானது வரலாற்று உண்மையுடன் ஒத்து நடக்கின்றது. பல
நூற்றாண்டுகளுக்குப் பின்பு 

     70. சிலப். 2 : 3.4

அவர்கள் வாழ்ந்தவர்களாக இருந்திருப்பின் இவ் வொப்புமையைக் காண
முடியாது. 

     புத்த தத்தர், மணிமேகலைச் சான்றுகளைக் கொண்டும், அக் காலத்திய
அரசியல், சமுதாய, சமய நிலவரங்களைக் கொண்டும் இவ்விரு காப்பியங்களும்
கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டவை என்றும், இரண்டாம்
நூற்றாண்டில் எழுந்தனவல்ல என்றும், கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகட்கு 
மிகவும் முற்பட்டவை என்றும் ஒரு முடிவுக்கு வருவது இயைபுடைத்தாகும்.71 

     71. சேர நாட்டில் குணவாயில் கோட்டம் கி.பி. 9ஆவது நூற்றாண்டு
தோன்றியதெனவும் அக் காரணத்தால் சிலப்பதிகாரம் கி.பி. 9 ஆவது
நூற்றாண்டைச் சார்ந்ததென்றும் பேராசிரியர் நாராயணன் கூறியிருப்பது
நம்பத்தக்கதன்று. திருச்சிராப்பள்ளிக்கடுத்த கரூரின் அண்மையில் ஒரு
குணவாயூர் இருந்தது. இளங்கோவடிகள் அங்குச் சிலப்பதிகாரத்தை
இயற்றியிருக்கலாம்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...