Monday 9 February 2015

அரச பரம்பரை

                                          அரச பரம்பரை 
சேரர்
     சங்க இலக்கியத்தில் முந்நூற்றுக்கு மேற்பட்ட மன்னர்களின் பெயர்கள்
காணப்படுகின்றன. ஆனால், அவர்களுடைய அரசியல் வரலாற்றைத்
தொடர்ச்சியாக எழுதுவதற்கான குறிப்புகள் சங்க நூல்களில் கிடைக்கவில்லை.
வேந்தர்கள் பலர் வியப்பூட்டும் வீரச்செயல்கள் ஆற்றியுள்ளனர்.
பாரதப்போரில் பங்கு கொண்டவரெனக் கூறப்படும் மன்னர் மூவரின்
பெயர்கள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. வரலாற்றில் நம் கருத்தை
முதன் முதலாகக் கவர்பவன் உதியஞ்சேரல் என்னும் சேர மன்னனாவான்.
பாரதப்போரில் கலந்துகொண்ட கௌரவ, பாண்டவ சேனைகளுக்குப்
பெருஞ்சோறு வழங்கினான் இம் மன்னன் என்று தமிழ் இலக்கியத்தில் சில
குறிப்புகள் காணப்படுகின்றன.237 இப்போது மறைந்து கிடக்கும்
பதிற்றுப்பத்தின் முதற்பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனே என்று எண்ண
இடமுண்டு. பாரதப் போரில் சோறு வழங்கியவன் இச் சேர மன்னன்றானா
என்பதைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் ஆய்வாளரிடையே
காணப்படுகின்றன. இவன் மகன் இமயவரம்பன் இரண்டாம் பத்துக்குப்
பாட்டுடைத் தலைவனாக விளங்குகின்றான். இவன் அரபிக் கடலில்
கடற்கொள்ளை நடத்தி வந்த கடம்பர்களை வென்று அவர்களுடைய காவல்
மரமான கடம்பை அறுத்து வெற்றிக்கொடி நாட்டினான். இவன் யவனர்களைப்
பல போர்களில் தோல்வியுறச் செய்தான்.238 வடஇந்தியாவில் இமயமலை
வரையிலும் படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரை வணங்கவைத்தான்.239
இவனைப் பற்றிக் குமட்டூர்க் கண்ணனார் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில்
இரண்டாம் பத்தாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

     சேர மன்னருள் மிகவும் சீருடனும் சிறப்புடனும் திகழ்பவன் சேரன்
செங்குட்டுவன் ஆவான். இவன் இமயவரம்பனுக்கு இரண்டாம்
மனைவியின்பால் பிறந்தவன். சோழன் கரிகாலன் இறந்த பிறகு அவனுடைய
மகன் கிள்ளிவளவன் அரசுகட்டில் ஏறாதவாறு சோழ இளவரசர்கள் எழுவர்
கிளர்ச்சி செய்தனர். செங்குட்டுவன் கிள்ளிவளவனுக்குப் போர்த் துணை நல்கி
அவனுக்கு முடிசூட்டுவித்தான்.

     237. புறம். 2 ; அகம். 233 ; சிலப்.23 : 55.
     238. பதிற்றுப் பதி. 8.
     239. புறம். 39 : 15-16 ; அகம்.396 : 17

சேரர்களின் பரம்பரையில் விளங்கிய மற்றொரு வேந்தன்
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பான். குட்டநாட்டின் மேல்
படையெடுத்துவந்தவர்களான சதகன்னர்களை முறியடித்தவன் இவன்.

     செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மற்றொரு சேர மன்னனைப்
பற்றிக் கபிலர் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாகச் சேர்க்கப்
பட்டுள்ளது. இவன் மகன் பெயர் பெருஞ்சேரல் இரும்பொறை என்பதாகும்.
தகடூர் என்ற இடத்தில் நிகழ்ந்த பெரியதொரு போரில் சோழ பாண்டிய
மன்னரை முறியடித்து வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றி யொன்றைக்
கொண்டான். இவனுடைய போர்த்திறனை வியந்து ‘தகடூர் யாத்திரை’ என்னும்
ஒரு நூலை ஒரு புலவர் பாடினார். இந் நூல் இப்போது மறைந்து விட்டது.
பெருஞ்சேரல் இரும்பொறை தமிழ்ப் புலவர்களைப் பெரிதும் பாராட்டிப்
புரந்தவன்.

     பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்துத் தலைவன் இளஞ்சேரல்
இரும்பொறை என்பவன். கோப்பெருஞ் சோழனையும், இளம் பழையன்
மாறன் என்ற பாண்டியனையும், விச்சி என்ற குறுநில மன்னன் ஒருவனையும்,
இச் சேர மன்னன் போரில் வென்றான்.240
சோழர் 

     சங்க இலக்கியங்களுள் மிகவும் பழையன எனக் கருதப் பெறும்
பாடல்களால் தொகுக்கப்பட்டுள்ள புறநானூற்றில் பல சோழ மன்னர்களைப்
பற்றிய செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. அவர்களைப் புலவர் பலர்
பாடியுள்ளனர். எனினும், அவர்களைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும்
திட்டமாகக் கிடைக்கவில்லை. அவர்களுள் தலைசிறந்து விளங்குபவன்
சோழன் கரிகால் பெருவளத்தான் ஆவான். இவன் பொருநராற்றுப்படைக்கும்
பட்டினப்பாலைக்கும் பாட்டுடைத் தலைவனாகக் காட்சி தருகின்றான்.
இவனுடைய தந்தை சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தூர்
வேளிடை மகள் கொண்டான். கரிகாற்சோழன் நாங்கூர் வேளிடை பெண்
கொண்டான்.241 இவனுடைய அம்மான் இருப்பிடர்த்தலையார். இவன்
இளமையில் தீயில் சிக்கி உயிர் பிழைத்தான். முதியோர் இருவர் தம்முள்
மாறுபட்டு வந்து கரிகாலனிடம் வழக்குத் தீர்த்துக்கொள்ள விரும்பினர்.
ஆனால்,

    240. புறம். 200 : 8
    241. தொல். பொருள். அகத். 30 (நச்சர் உரை)

இவன் இளையோன் என்று கருதி இவனை இகழ்ந்தனர். கரிகாலன் தானும் 
ஒரு முதியோன் போல உருமாறி வந்து அவ் வழக்கை நேர்மையுடன் தீர்த்து
அவர்களை மகிழ்வித்தான்.242 இவன் கருவூரில் தங்கியிருந்தபோது
கழுமலத்திலிருந்து யானை ஒன்று வந்து இவனைத் தன் முதுகின்மேல்
ஏற்றிக்கொண்டு வந்து அரியணையின்மேல் அமர்த்திற்றாம். 

     கரிகாலன் தமிழ்ப் புரவலன். தன்மீது பட்டினப்பாலை என்னும் நூலைப்
பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு இவன் பதினாறு நூறாயிரம் 
பொன் பரிசளித்தான் என்று கூறப்பட்ள்ளது.243 முடத்தாமக் கண்ணியார்
என்ற மற்றொரு புலவர் இவன்மேல் பொருநராற்றுப்படையைப் பாடியுள்ளார். 

     தஞ்சைக்கு இருபத்துநான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெண்ணி
என்னும் ஊரில் நிகழ்ந்த ஒரு போரில் சோழன் கரிகாலன் சேரன்
பெருஞ்சேரலாதனையும், பாண்டியன் ஒருவனையும் பதினொரு வேளிரையும்
ஒருங்கே தோல்வியுறச் செய்தான்.244 இவனைப் பற்றிய பாடல்கள்
புறநானூற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. இமயம்வரையில் படையெடுத்துச் சென்று
தன்னை எதிர்த்து நின்ற மன்னர் அனைவரையும் வணக்கி இமயத்தில் புலி
இலச்சினையைப் பொறித்துத் திரும்பினான். தன் தோள் வல்லமையினால்
தமிழகம் முழுவதையும் கரிகாலன் தன் ஆட்சியின்கீழ்க் கொணர்ந்தான். 

     கரிகாலன் இலங்கையின்மேல் படையெடுத்துச் சென்றான். அது
இவனுடைய வாழ்க்கையிலேயே ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இலங்கையின்
வரலாற்றைக் கூறும் மகாவமிசம் என்னும் நூலில் இப் படையெடுப்பைப் 
பற்றிய செய்திகள் காணப்படவில்லை. எனினும், இலங்கையின் பிற்காலத்திய
வரலாறுகள் அதைப் பற்றிக் கூறுகின்றன. இலங்கைப் போரினால் 
கரிகாலனுக்கு விளைந்த நன்மைகள் பல. அவன் சிங்களவர் பன்னீராயிர
வரைச் சிறை செய்து கொண்டுவந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கோட்டை
கட்டுவதற்கு அவர்களைப் பணிகொண்டான். 

     கரிகாலன் தன் குடிமக்களுக்குப் பல நன்மைகள் புரிந்தான். அவற்றுள்
மிகவும் சிறப்பானது காவிரியாற்றின்மேல் இவன் கட்டிய அணையேயாகும்.
மக்களுக்கு உணவை வழங்கிய உழவுத் 

     242. மணி. 4 : 107-108; பொருநர். 187-8 : பழமொழி, 21, 62, 105. 
     243. கலிங். 198. 
     244. பொருநர். 146-8 ; அகம். 55 : 10-11; 246:8-13; புறம். 7, 66, 224.

தொழிலை வளர்த்தலில் பழங்காலத் தமிழ்மன்னர்கள் கண்ணுங் கருத்துமாக
இருந்து வந்தனர்.245 ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும்
பேருண்மையை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். கரிகாலன்
திருவரங்கத்துக்கு மேற்கே பெரியதோர் அணையைக் கட்டிப் பல
கால்வாய்களின் மூலம் காவிரித் தண்ணீரை உழவுக்குத் திருப்பிவிட்டான். அக்
கால்வாய்களுள் மிகவும் பெரியது இப்போது வெண்ணாறு என்று
வழங்குகின்றது. தஞ்சை மாவட்டத்துக்குச் செழுமையை வழங்குவது அவ்வாறு
தான். கரிகாலன் ஆட்சியில் மேலும் பல ஆக்கப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன. உள்நாட்டு அயல்நாட்டு வாணிகங்கள் செழிப்புடன்
நடைபெற்று வந்தன. இசையும் கூத்தும் வளர்ந்தன. சமணப்பள்ளிகள் பலவும்,
பௌத்தப் பள்ளிகள் பலவும் பூம்புகாரில் பூசல்கள் ஏதும் இன்றி நடைபெற்று
வந்தன.246 

     சோழநாட்டில் அரசுரிமைப் போர்கள் நடைபெற்றன. சேட்சென்னி 
என்ற நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் அரசுரிமைப் போராட்டம் 
நெடுநாள் நீடித்து வந்தது. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டைக்குள்ளிருந்து
போர் செய்து கொண்டிருந்தான். நலங்கிள்ளியின் தம்பியான மாவளத்தான்
என்பவன் அக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தான். முற்றுகை
அகலவுமில்லை; நெடுங்கிள்ளி பணிந்து வரவுமில்லை. கோட்டைக்குள்
குழந்தைகள் பாலின்றிப் பசியால் அரற்றின. சூடுவதற்கு மலர்கள் இன்றிப்
பெண்கள் வெறுங்கூந்தல் முடித்தனர். மக்கள் குடிக்கவும் தண்ணீரின்றித்
தவித்தனர். கோவூர்கிழார் என்ற புலவர் இத் துன்பங்களைக் கண்ணுற்று
உளமுடைந்தார். மக்கள் பட்ட இன்னல்களை அவர் நெடுங்கிள்ளிக்கு 
எடுத்துக் காட்டி, ‘நீ அறமுடையவனாயின் கோட்டை வாயிலைத் திறந்துவிடு.
மறம் உடையவனாயின் போர் செய்’ என்று இடித்துக் கூறினார்.247 மன்னன்
அவருடைய அறவுரைக்கு இணங்கவில்லை. எனவே, அவர் நலங்கிள்ளியையும்
ஒருங்கே விளித்து, ‘நீங்கள் இருவரும் ஒரே குலத்தினர். உங்களுக்குள் 
ஒருவர் தோற்றாலும், தோல்வி என்னவோ சோழர் குலத்துக்குத்தானே.
நீங்களோ வெற்றியடைவது என்பது முடியாது. ஆகவே, இப் போரைக்
கைவிடுங்கள்’ என்று அறிவுறுத்தினார். வேறொரு சமயம், இளந்தத்தன் என்ற
புலவர் ஒருவரைப் பகையொற்றன் என்று ஐயுற்ற நலங்கிள்ளி அவரைக்
கொல்ல முயன்றான். அப்போது கோவூர்கிழார் இவ்விக்கட்டில் 

    245. பட்டினப். 205.
    246. பட்டினப். 53. 
    247. புறம். 44.
    248. புறம். 47.

குறுக்கிட்டு உண்மையை விளக்கி அப் புலவரைக் காப்பாற்றி விட்டார்.248 

     கிள்ளிவளவன் நாட்டில் பல தீநிமித்தங்கள் தோன்றின. எரிகொள்ளிகள்
வானத்திலிருந்து எட்டுத் திசைகளிலும் கீழே விழுந்தன. மரங்கள் பற்றி
எரிந்தன. அச்சந்தரக்கூடிய பறவைகள் கூவின. பற்கள் உதிர்ந்து கீழே
கொட்டுவது போலவும், தலையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவது
போலவும், பன்றிமேல் ஏறுவது போலவும், உடுத்தின ஆடையைக் களைவது
போலவும், படைக்கலங்கள் கழன்று விழுவது போலவும் மக்கள் பல
தீக்கனவுகள் கண்டனர். இத்தனை தீய குறிகளையும் பொருட்படுத்தாதவனாய்
மன்னன் போர்க்கோலங்கொண்டான். அவனுடைய அறியாமையை
எடுத்துக்கூறிக் கோவூர்கிழார் அவனுடைய போர் முனைப்பைத் தணிக்க
முயன்றார்.249 

     சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சோழன் இலவந்திகைப்
பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய 
கிள்ளிவளவன், சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்,
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் நெய்தலங்கானல்
இளஞ்சேட் சென்னி, சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி எனப் பல
சோழ மன்னர்கள் சங்ககாலத்தில் அரசு புரிந்து புலவர் பெருமக்களின்
பாக்களில் புகழுடம்பு பெற்றுள்ளனர். இச் சோழ வேந்தர் அனைவரினும்
மேலான புகழ் மாலைகளைப் பெற்று விளங்குபவன் சோழன் 
கோச்செங்கணான் என்பவன். இவன் திருப்போர் என்ற இடத்தில் சேரன்
கணைக்கால் இரும்பொறையை வென்று புறங்காட்டச் செய்தான். அவனைச்
சிறை செய்து குடவாயிற் கோட்டத்துச் சிறையில் அடைத்துவைத்தான். சேர
மன்னனுக்கு ஒரு சமயம் நீர்வேட்கை ஏற்படவே காவலாளரைத் தண்ணீர்
கேட்டான். அவர்கள் காலந் தாழ்த்துத் தண்ணீர் கொணர்ந்தனர். சேரன் 
அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, ‘மன்னர்கள் குலத்தில் ஆண் குழந்தை 
இறந்து பிறந்தாலும், ஊன் பிண்டம் ஒன்று பிறந்தாலும், அதைப் பிறந்தவாறே
மண்ணில் அடக்கம் செய்வது மன்னர் அறத்துக்கு இழுக்காதலால் அதை ஒரு
வாளினால் பிறந்த பிறகே அடக்கம் செய்வர்’250 என்னும் பொருள்பட ஒரு
பாடலை இயற்றித் தன் மானமுடைமையைப் புலப்படுத்தினான். அவனுடைய
நண்பரான பொய்கையார் என்ற புலவர் ‘களவழி நாற்பது’ என்னும் 

     248. புறம். 47. 
     249. புறம். 41 
     250. புறம். 74.

அரியதொரு நூலைப் பாடிச் சோழனை மகிழ்வித்துச் சேர மன்னனைச்
சிறையினின்றும் மீட்டார். இப் போர் கழுமலம் என்ற இடத்தில் 
நடைபெற்றதாக இந்நூல் தெரிவிக்கின்றது. இது பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 

     சோழன் செங்கணான் மிகவும் சிறந்த சிவத்தொண்டன். இவன்
‘எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து’ உலகம் ஆண்டதாகத்
திருமங்கையாழ்வார் பாடுகின்றார்.251 இவன் வைணவக் கோயில்களும்
எடுப்பித்தான். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையில் நாயன்மார்
வரிசையிலே கோச்செங்கணானும் சேர்க்கப்பட்டிருப்பது அவனுடைய
பெருமையை எடுத்துக்காட்டுகின்றது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...