சங்க இலக்கியம்
சங்க இலக்கியத் தொகுப்பில் எட்டுத்தொகையும் பத்துப் பாட்டும்
சேர்ந்தவை என்று முன்னரே கண்டோம். எட்டுத் தொகையில் தனித்தனி
எட்டு நூல்கள் அடங்கியுள்ளன. அவ்வெட்டு நூல்களும் தொகை
நூல்களேயாம். அவையாவன: அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை,
புறநானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் ஆகியன.
பத்துப்பாட்டுத் தொகுப்பில் முறையே திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்
படை, சிறுபாணாராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு,
மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,
மலைபடுகடாம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தொகுக்கப்பெற்ற கால வரிசையை
இன்னும் அறுதியிட முடியவில்லை. அகநானூற்றைத் தொகுத்தவர்
உப்பூரிகிழார் மகனார் உருத்திரசன்மர்; தொகுப்பித்தவன் பாண்டியன்
உக்கிரப்பெருவழுதி. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர்;
தொகுப்பித்தவர் இன்னாரெனத் தெரியவில்லை. நற்றிணையைத் தொகுத்தவர்
இன்னாரெனத் தெரியவில்லை; தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன்
மாறன் வழுதியாவான். புறநானூற்றைத் தொகுத்தோர் பெயரும்,
தொகுப்பித்தார் பெயரும் மறைந்துவிட்டன. ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய
கூடலூர் கிழார் என்ற புலவரால் தொகுக்கப்பட்டது; தொகுப்பித்தவன்
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற பெயர் படைத்த சேர
மன்னனாவான்.
பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரும் தொகுப்பித்தவரும் இன்னாரெனத்
தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் ஒரு பதிகம்
சேர்க்கப்பட்டுள்ளது; அப் பத்தைப் பாடியவர் பெயர், பாடப்பெற்ற மன்னன்
பெயர், பாடியவர்க்கு அளிக்கப்பெற்ற பரிசுத்தொகை, பாடப்பெற்றவர் ஆட்சி
புரிந்த கால அளவு ஆகிய செய்திகளை அப்பதிகம் கூறுகின்றது. இப்
பதிகங்கள் யாவும் பிற்காலத்தில் இடைச்செருகல்கள் எனக் கருதப்படுகின்றன.
பதிற்றுப்பத்துப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் வேறு; தொகுக்கப்பட்ட காலம் வேறு; எனவே, இந்நூல் எழுந்த
காலத்தைக் கணித்தறிதல் முற்றுப் பெறாததொரு முயற்சியாகவே
இருந்துவருகின்றது.
கலித்தொகை சங்க இலக்கியம் யாவற்றுக்கும் காலத்தால்
பிற்பட்டதெனக் கருதப்படுகின்றது; அல்லாமல் சங்ககாலத்தின் இறுதியில்
இயற்றப்பட்டதெனக் கொள்ளுவதுமுண்டு. அகப்பொருளைப்பற்றிய சங்க
இலக்கியங்கள் அனைத்தும் களவியலுக்கு உடம்பாடான ஒத்த காமத்தை
அடிப்படையாகக் கொண்டவை. கைக்கிளை, பெருந்திணை என்னும் ஒவ்வாக்
காமத்தைப் பற்றிய பாடல்களை அவற்றுள் காணமுடியாது. ஆனால், குறிஞ்சிக்
கலியில் பெரும்பாலான பாடல்கள் கைக்கிளையையும் பெருந்திணையையும்
பற்றியனவாகவே காணப்படுகின்றன. ‘மையின் மதியின் விளங்கு முகத்தாரை
வவ்விக்கொளலும் அறன் எனக் கண்டன்று’ என்று குறிஞ்சிக் கலிப்பாடல்
(கலித்.62) ஒன்று கூறுகின்றது. மகளிரைக் கவர்ந்து சென்று மணத்தலை
வடமொழியாளர் இராக்கத மணம் என்பர். தொல்காப்பியர்
பெருந்திணையாவது ஒவ்வாத காமம் என்று கூறினாரே யன்றி மகளிரை
வௌவிச் செல்லும் இராக்கத மணமுறைக்கு விதி ஏதும் வகுத்திலர், ‘இராக்கத
மணம் அறன்’ என்று தொல்காப்பியரோ, சங்ககாலப் புலவர்களோ எங்கும்
எடுத்துக் கூறினாரிலர். ஆரியர்பால் வழங்கிய எண்வகை மணங்களுள்
இராக்கத மணமும் ஒன்று. தமிழரிடம் இவ்வகை மணமுறை வழங்கியதில்லை.
தம் காலத்து வழங்காத ஒரு பழக்கத்தைப் பாராட்டிப் பழந்தமிழ்ப் புலவர்கள்
செய்யுள் இயற்றியலர். எனவே, ‘இராக்கத மணம் அறன்’ என்னும்
இச்செய்யுளும் இதைப் போன்ற ஏனைய கலிப்பாக்களும் கடைச்சங்க
காலத்துக்கு பிற்பட்டவை எனக் கொளல் வேண்டும். மற்றும் ‘தெருவின்கண்
காரணமின்றிக் கலங்குவார்க் கண்டுநீ வாரணவாசிப் பதம் பெயர்த்தல் ஏதில’
என்னும் கூற்று ஒன்று குறிஞ்சிக் கலியில் (கலித். 60) காணப்படுகின்றது.
வாரணவாசி என்னும் சொல் சங்க நூல்கள் ஒன்றிலேனும் வழங்கப்படாத
தொன்றாகும்.
அடுத்து, பிறிதொரு கலியில் ஆரியக் கடவுளரான ‘காமனாரும்’, அவர்
தம்பி ‘சாமனாரும்’ வருகின்றனர். இப் பெயர்களையும் சங்க நூல்களில்
காணமுடியாது. காமனைப்பற்றிய செய்திகள் பிற்காலத்திய சமண, பௌத்த
காவியங்களிலும், ஆண்டாள் பாசுரங்களிலும், பெருங்கதையிலும் காணப்படு
கின்றன. கலித்தொகை முழுவதிலும் மூவேந்தருள் பாண்டிய மன்னன்
ஒருவனைப்பற்றியே பாடல்களே உள்ளன; ஏனைய இருவரைப்பற்றியும் ஒரு குறிப்பேனும் இந்நூலில் இல்லை. வையை யாறு,
கூடல் நகரம் ஆகியவற்றைத் தவிர்த்து வேறு ஓர் ஆற்றின் பெயரோ,
நகரத்தின் பெயரோ கலித்தொகையில் காணவில்லை. மற்றும் பிற சங்க
இலக்கியங்களில் தொகுக்கப்பட்டுள்ள அகத்துறைப் பாடல்களில்
குறிப்பிடப்பெறும் புலவர்கள், மன்னர்கள், வள்ளல்கள் ஆகியவர்களின்
பெயர்கள் கலித்தொகையில் ஒரு பாட்டிலேனும் பயின்று வருவதில்லை.
மேலே காட்டிய சான்றுகளும் கலித்தொகையானது, சங்க காலத்துக்குப்
பிற்பட்டு எழுந்த இலக்கியமாகும் என்னும் கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
தமிழகம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு
வரையில் களப்பிரர் விளைத்த குழப்பங்களாலும், பல்லவர்
படையெடுப்புகளாலும் அல்லற்பட்டு நின்றது. சோழரும் பாண்டியரும் தம்
வலியிழந்து, ஆட்சி குன்றி மறைந்து கிடந்தனர். களப்பிரரும் பல்லவரும்
வடமொழியையும், ஆரியக் கொள்கைகளையும், சமண சமயத்தையும் பெரிதும்
பரப்பி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நாயன்மார்களும்,
ஆழ்வார்களும் தத்தம் சமய தத்துவங்களை விளக்கிப் பாடல்களைப் பாடிப்
புராணக் கதைகளையும், மதக் கோட்பாடுகளையும், எடுத்துப் போதித்து
வந்தனர். இந் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நுழைந்துவிட்ட கருத்துகள்,
சொற்கள், மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைக்
கலித்தொகையில் பார்க்கலாம். சைவ சமய வளர்ச்சியும், சமண பௌத்த சமய
வளர்ச்சியும் ஒன்றோடொன்று போட்டியிட்டு மக்களின் கருத்தைச் சமயத்
துறையில் ஈர்த்துக்கொண்டிருந்த ஒரு காலத்தில் கலித்தொகை போன்ற
முற்றிலும் தொகை நூலான இலக்கியம் ஒன்று வெளிவந்திருக்க முடியாது.
எனவே, களப்பிரர் ஆட்சி தொடங்குவதற்கு முன், கி.பி. 2ஆம் நூற்றாண்டு
முதல் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற் கிடையிட்டதொரு காலத்தில் இந்நூல்
இயற்றப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் உடம்பட்டு
வருகின்றனர்.
கலித்தொகை ஆக்கப்பட்ட காலத்தைப் போலவே அதனை ஆக்கியவர்
அன்றி ஆக்கியவர்கள் யார் என்பதைப்பற்றியும் ஆய்வாளரிடையே கருத்து
வேறுபாடு நிகழ்ந்து வருகின்றது. இந் நூல் முழுவதையும் ஒரு புலவரே
பாடினார் என்பர் சிலர்; சிலர் ஒரு கலியை ஒரு புலவராகப் புலவர்கள் ஐவர்
கலித்தொகையைப் பாடினர் என்பர். எனினும், இந் நூலின் ஆசிரியர் நல்லந்துவனார் ஒருவரே என்னும் கொள்கையே பலர் கருத்தையும் கவர்ந்து
வருவதாக தெரிகின்றது.
பரிபாடலைத் தொகுத்தவர்கள் பெயரும் தொகுப்பித்தவர்கள் பெயரும்
இன்று மறைந்துவிட்டன; அவற்றை அறிய முடியவில்லை. சங்க நூல்கள்
ஏனையவற்றைவிடப் பரிபாடலில் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக்
கலந்திருப்பதாலும், ஆரிய புராணக் கதைகள் சேர்ந்திருப்பதாலும் அது
கடைச்சங்க காலத்தின் இறுதி யாண்டுகளில் தோன்றியிருக்கவேண்டு மென்பர்
ஒருசாரார். ஒரு நூல் எடுத்துக்கூறும் செய்திக்கு ஏற்ப அந்நூலின்
சொற்கட்டும் சொல்லாட்சியும் அமையும்; சமய, தத்துவ நூல்களில் வடமொழிக்
கலப்பு மிகுந்திருக்கும். பரிபாடல் பெரிதும் சமயத் தொடர்புடையது. அது
புராணக்கதைகள் பலவற்றை எடுத்தாள்கின்றது. ஆகவே, அதில் வடமொழிச்
சொற்களும் புராணக் கதைகளும் சற்றே கூடுதலாகக் கலந்திருப்பதில்
வியப்பேதுமில்லை. எனவே, பரிபாடலைக் காலத்தால் பிறப்பட்டது எனக்
கூறமுடியாது. மேலும், மேலும், பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனாரின்
பாடல்கள் நான்கு இடம் பெற்றுள்ளன. இவையேயன்றி இவருடைய
பாடல்களுள் 33 கலித்தொகையிலும், ஒன்று அகநானூற்றிலும் (43), ஒன்று
நற்றிணையிலும் (88) சேர்க்கப்பட்டுள்ளன. தொகை நூல்கள் எட்டினுள் இப்
புலவர் ஒருவருடைய பாடல்கள்தாம் நான்கில் இடம் பெற்றுள்ளன. அஃது
இவர்க்குற்ற தனிச் சிறப்பாகும். எனவே, இக் காரணத்தைக் கொண்டும்
பரிபாடலானது பிற சங்க இலக்கியங்கட்குக் காலத்தால் பிற்பட்டதென்னும்
கொள்கையை எளிதில் மறுக்கலாகும்.
பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ள நூல்களும், எட்டுத்தொகை
நூல்களின் பாடல்கள் இயற்றப்பட்ட காலத்திலேயே எழுந்தவையே என்று
வழிவழியாகவும், அகச் சான்றுகளைக் கொண்டும் அறிஞர்கள்
கருதுகின்றார்கள். பத்துப்பாட்டில் வரும் மன்னர்களையும் புலவர்களையும்
எட்டுத்தொகையிலும் காண்கின்றோம். ஆனால்: இத் தொகையில் சேர்ந்துள்ள
பத்துப் பாடல்களும் ஒரே காலத்தில் இயற்றப்பட்டனவல்ல. ஒன்றுக்கும்
மற்றொன்றுக்குமிடையே கால வேறுபாடு உண்டு. இவற்றுள் ஆற்றுப்படைத்
துறையில் பாடப்பெற்றவை ஐந்து. பாணர், கூத்தர், பொருநர், விறலியர்
ஆகியவர்கள் மன்னன் அல்லது வள்ளல் ஒருவனிடம் தாம் பெற்ற பரிசிலைத்
தம்மை எதிர்நோக்கி வந்த இரவலர்க்கு எடுத்துக்கூறி, அவர்களும்
அம்மன்னன் அல்லது வள்ளல்பால் சென்று பசிரில் பெற்றுய்யுமாறு அவர்களை வழிப்படுத்துதலே ஆற்றுப்படை என்னும் செய்யுள் வகையாகும்.
பத்துப்பாட்டில் மட்டுமின்றிப் பதிற்றுப்பத்து, புறநானூறு, புறப்பொருள்
வெண்பாமாலை1 ஆகியவற்றிலும் ஆற்றுப்படைகள் காணப்படுகின்றன.
பத்துப்பாட்டுப் புலவர்கள் சிலரும், அவர்களால் பாடப்பட்டோர்
சிலரும் எட்டுத்தொகை பாடிய புலவர்கள் சிலருடனும், அவர்களால்
பாடப்பட்டோர் சிலருடனும் உடன் காலத்தவராக விளங்குகின்றனர்.
இவ்வுண்மையை வைத்துக்கொண்டு பத்துப் பாட்டுப் பாடல்கள் இயற்றப்பட்ட
காலங்களை ஒருவாறு கணித்தறியக்கூடும். நெடுநல்வாடையின் ஆசிரியரான
நக்கீரர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில்2 கரிகால் வளவனைக்
குறிப்பிடுகின்றார். இச் சோழ மன்னனே பெரும்பாணாற்றுப்படையின்
பாட்டுடைத் தலைவனாகக் காட்சியளிக்கின்றான். நக்கீரர் கரிகாலன்
காலத்தவர் என்பதற்குத் தக்க சான்றுகள் கிடைத்தில வாகையால் அவரை
அம் மன்னனுக்குச் சற்றுப் பிற்பட்டு வாழ்ந்தவர் என்று கொள்ளத்தகும்.
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
இவனும் நக்கீரரும் உடன் காலத்தவர்கள். இருவருமே கரிகாற் சோழனுக்குக்
காலத்தாற் பிற்பட்டவர்கள் ஆவார்கள். எனவே, திருமுருகாற்றுப்படையும்,
நெடுநல்வாடையும், பெரும்பாணாற்றுப்படையும் ஏறக்குறைய ஒரே காலத்தில்
இயற்றப்பட்டவை எனக்கொள்ளுவர்.
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவனான தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே மதுரைக் காஞ்சிக்கும் பாட்டுடைத்
தலைவனாகக் காட்சியளிக்கின்றான். மலைபடுகாடத்தின் தலைவனான நன்னன்
மகன் நன்னன் பெயர் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்படுகின்றது.3 எனவே,
இம் மூன்று பாடல்களும் ஏறக்குறைய ஒரே கால அளவில் இயற்றப்பட்டன
என்று கொள்ளுதல் பொருத்தமாகும். அகநானூற்றுப் பாட்டு ஒன்றில்4
அதன் ஆசிரியரான நக்கீரர் கபிலரைப் பற்றிய செய்தி ஒன்றைத் தருகின்றார்.
அதைக்கொண்டு நெடுநல்வாடைக்கும் மதுரைக் காஞ்சிக்கும் முற்பட்டது
குறிஞ்சிப் பாட்டு என்று ஊகித்தறியலாம்.
1. பு. பொ. வெ. மாலை - 216-219.
2. அகம்- 141.
3. மதுரைக் - 618.
4. அகம்-78.சிறுபாணாற்றுப்படையின் காலத்தைக் கணித்தறிவதற்கு அந்நூலிலேயே
அகச்சான்று ஒன்று கிடைக்கின்றது.5 அந் நூலின் ஆசிரியர் அதில்
கடையேழு வள்ளல்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். இவ் வள்ளல்கள் பரணர்,
கபிலர், முடமோசியார் ஆகிய புலவர்களாலும் வேறு சிலராலும்
பாடப்பட்டவர்கள். ஆகவே, சங்கப் பாடல்கள் பலவற்றுக்கும் காலத்தால்
பிற்பட்டது சிறுபாணாற்றுப்படை எனத் தெரிகின்றது.
முல்லைப்பாட்டின் காலத்தை யறுதியிட வியலவில்லை. இதற்கும்
நெடுநல்வாடைக்குமிடையே பொது இயல்புகள் சில காணப்படுகின்றன.
ஆகையால், முல்லைப் பாட்டின் ஆசிரியரான காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்
வாணிகனார் மகனார் நப்பூதனாரும் நக்கீரரும் ஏறக்குறைய ஒரே காலத்தவர்
என்று கொள்ளுவதற்கு எதிர்ச் சான்றுகள் இல.
திருமுருகாற்றுப்படைக்குத் தனிச் சிறப்பு ஒன்று உண்டு; அச் சிறப்பை
ஏனைய ஆற்றுப்படைகளின்பால் காண முடியாது. அஃதென்னவெனின்,
ஏனைய ஆற்றுப்படைகளின் தலைவர் முடியுடை வேந்தரும், குறுநில
மன்னருமாவர். அவர்கள் வழங்கிய பரிசிலும் கொடையும் உலகியற்
செல்வங்கள். அதனால் புலவர்கள் யாரை ஆற்றுப்படுத்துகிறார்களோ
அவர்களுடைய பெயர்களையே அவ் வாற்றுப்படைகள் தலைப்புகளாகத்
தாங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாகப் பொருநரை ஆற்றுப்படுத்துவது
பொருநராற்றுப் படை; பாணரை யாற்றுப்படுத்துவது பாணாற்றுப் படை;
கூத்தரை யாற்றுப்படுத்துவது கூத்தராற்றுப் படையாகும். ஆனால்,
திருமுருகாற்றுப் படையின் ஆற்றுத்துறை யமைப்பு முற்றிலும் மாறுபடுகின்றது.
உலகியல் அல்லாது வீடுபேற்றை யருளவல்ல வள்ளல் முருகப் பெருமான்
ஒவனேயாவன். அவனுடைய திருவருளைப் பெற்று உயர்ந்தவர் நக்கீரர்.
வீடுபேற்றைக் கருதித் தம்மையணையும் சான்றோரை விளித்து வீடுபேறு
அளிக்கவல்லான் முருகன் ஒருவனே என்று எடுத்துக் கூறித் தாம் பெற்ற
இன்பமான முருகனின் திருவருட் செல்வத்தை அவர்களும் பெற்றுப் பேரின்ப
வாழ்வை யடையுமாறு நக்கீரர் அவரை யாற்றுப்படுத்துகின்றவாறு
அமைந்துள்ளது திருமுருகாற்றுப்படை. ஆற்றுப் படைக்குப் புகலிடமாக
நிற்பவன் முருகன் என்ற முறையில் இவ்வாற்றுப் படைக்குத்
திருமுருகாற்றுப்படை எனப் பெயர் அமையலாயிற்று.
5. சிறுபாண், 84-111.
பத்துப்பாட்டுத் தொகுப்பில் இறுதியாகச் சேர்க்கப்பட்டது
திருமுருகாற்றுப்படையெனச் சில ஆய்வாளர் கருதுவர். ஏனெனில், இந்
நூலில் வடமொழிச் சொல்லாட்சியும், புராணக் கதைகளும் மிகுதியாகக்
காணப்படுகின்றன; ஏனைய ஆற்றுப்படைகளில் அவற்றை அவ்வளவு
காணமுடியாது. ஆனால், இப் பாடல் முருகன் வழிபாட்டைச் சிறப்பித்துக்
கூறுவதென்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். சமயக் கருத்துகளை
உள்ளிட்டு இந் நூல் யாக்கப்பட்டதாகும். சமய வழக்கில் ஏற்கெனவே
வடமொழிச் சொற்களும் கருத்துகளும் புராண வரலாறுகளும் கலந்துவிட்டன
வாகையால் இந்த ஆற்றுப்படையில் அவை மலிந்து காணப்படுவதில்
வியப்பேதுமில்லை. தாம் தேடிப்பெற்ற பத்துப்பாட்டு ஏட்டுச் சுவடிகள்
பலவற்றுள் திருமுருகாற்றுப்படை சேர்ந்திருக்கவில்லை என்று மகாமகோ
பாத்தியாய சாமிநாத ஐயர் தெரிவிக்கின்றார். அதைக்கொண்டு இந்நூல் இத்
தொகுப்பில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதோ என்று ஐயுறவிடமுண்டு.
ஆனால், வைப்பு முறையில் இவ்வாற்றுப் படையானது பத்துப்பாட்டுத்
தொகுப்பில் முதலாவதாகத் திகழ்கின்றது. பிற்சேர்க்கைகள் இறுதியிற்றான்
சேரும் ; தலைப்பில் சேரா. பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் இறுதிப் பத்தும்
மறைந்து போயின. இன்னும் அவை கிடைக்கவில்லை. அதைப்போலவே,
பத்துப்பாட்டினும், முதற்பாட்டான திருமுருகாற்றுப்படை சில காலம்
மறைந்திருக்கக்கூடும்.
சங்க இலக்கியத்தில் காணப்படாத பல புதிய வடமொழிச் சொற்கள்
திருமுருகாற்றுப்படையில் ஆளப் பெற்றுள்ளன. ‘அங்குசம்’6, ‘முகம்’7 என்பன
அவற்றுள் சில. கி.பி. 2, 3 நூற்றாண்டுகளிலேயே தமிழில் வடமொழிக்
கலப்புப் பெருமளவில் ஏற்பட்டுவிட்டது. எனவே, திருமுருகாற்றுப்படையில்
வடசொற்கள் ஆளப்பட்டிருப்பதில் வியப்பேது மில்லை. மேலும், சங்கப்
புலவரான நக்கீரரும், திருமுருகாற்றுப்படையின் ஆசிரியரான நக்கீரரும்
ஒருவரல்லர் ; இரு வேறு காலத்தவர் ஆவர். திருமுருகாற்றுப்படை ஏனைய
பாட்டுகளைவிடக் காலத்தால் பிற்பட்டதாகலாம்; ஆனால், பத்துப்பாட்டுத்
தொகுப்பில் பிற்சேர்க்கை அன்று என்று கொள்ளல் வேண்டும்.
நெடுநல்வாடை ஆசிரியரான நக்கீரர் வானவியல் குறிப்பு ஒன்றைத்8
தம் நூலில் கொடுத்துள்ளார். அதில் மேட இராசியைப்
6. திருமுருகா - 110. 7. திருமுருகா - 92-100.
8. நெடுநல் - 160-2
பற்றிக் கூறுகின்றார். இராசிகளைப்பற்றிய செய்திகளைப் புறப்பாட்டு
ஒன்றிலும்9 அறிகின்றோம். அதைப் பாடியவர் கூடலூர் கிழார் ஆவர். தமிழ்
இலக்கியத்திலோ வடமொழி இலக்கியத்திலோ கி.பி. 300-க்கு முன்பு
இராசிகள், கோள் நிலைகள் திரிதல். ஒரு குழந்தை பிறக்குங்காலையில் உள்ள
கோள்நிலை ஆகிய இம்மூன்றையும்பற்றி ஒரு குறிப்பேனும்
காணப்படுவதில்லை என்பார் எல்.டி. சுவாமிகண்ணு பிள்ளை யவர்கள்.
எனவே, நெடுநல்வாடையும், கூடலூர்கிழாரின் புறப்பாட்டும் கி.பி. 300-க்கு
முன்பு தோன்றியிருக்க முடியாது என்பது இவருடைய கொள்கையாகும். எஸ்.
வையாபுரி பிள்ளையவர்கள் வேறு காரணங்காட்டி நெடுநல்வாடையின்
பழைமையை மறுப்பார். முல்லைப்பாட்டில் ‘கன்னல்’ என்றொரு சொல்
ஆளப்பட்டுள்ளது.10 அச் சொல் நாழிகை வட்டில் என்று பொருள்படும்.
அகப்பாட்டு ஒன்றன் ஆசிரியர் நல்லந்துவனாரும் நாழிகை வட்டிலைக்
கன்னல் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றார்.11 கன்னல் என்னும் சொல்
‘குரோனிஸ்’ (Khrones) என்ற கிரேக்கச் சொல்லின் மரூஉ என்றும், 3ஆம்
நூற்றாண்டில் ரோமர்கள் கன்னல் என்ற நாழிகை வட்டிலைத் தமிழகத்துக்கு
அறிமுகப்படுத்தினார்கள் என்றும், ஆகவே நெடுநல்வாடையானது கி.பி.
மூன்றாம் நூற்றாண்டில் எழுந்த ஒரு நூலாகும் என்றும் வையாபுரி
பிள்ளையவர்கள் கருதுவார். குரானிஸு க்கும் கன்னலுக்கும் தொடர்பு ஏதும்
இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கி.பி. முதல் இரண்டு
நூற்றாண்டுகளிலேயே ரோமரின் வாணிகச் செல்வாக்கு உச்சநிலையை
எட்டியிருந்தது. அக் காலத்திலேயே குரோனிஸ் என்ற நாழிகை வட்டிலை
அவர்கள் தமிழ்நாட்டில் வழக்குக்குக் கொண்டுவந்திருக்கக்கூடும். எனவே,
வையாபுரி பிள்ளையவர்களின் கால அறுதியீடு பிழையற்றது என்று
கொள்வதற்கில்லை. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே
நெடுநல்வாடையின் தலைவனாக நச்சினார்க்கினியர் கொள்ளுகின்றார். இப்
பாண்டியன் வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 90-128. ஆகையால், கி.பி. முதல்
நூற்றாண்டின் இறுதியிலோ, இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ
நெடுநல்வாடை பாடப்பெற்றிருக்க வேண்டும்.
அடுத்துத் தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்தைச் சிறிது ஆய்வோம்.
இப்போது வழங்கிவரும் தமிழ் இலக்கண
9. புறம் - 229.
10. முல்லைப் - 57-8.
11. அகம் - 48.
நூல்கள் யாவற்றினும் பழைமையானது தொல்காப்பியமாகும். இந்நூல்
இடைச்சங்க காலத்தில் எழுந்ததாக இறையனார் களவியல் உரையாசிரியர்
கூறுவார். அப்படியாயின் அது கி.மு. நான்காம் நூற்றாண்டில் தோன்றியதெனக்
கொள்ளலாம். தொல்காப்பியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்
அனைத்தினுக்கும் முற்பட்டதாகும். இதற்கு முரணாகச் சில ஆராய்ச்சியாளர்
தொல்காப்பியம் கடைச் சங்க நூல்கள் யாவற்றுக்கும் காலத்தால்
பிற்பட்டதெனக் கால அறுதியிடுவர். மனுதரும சாத்திரம், பரதமுனியின்
நாட்டிய நூல், வாத்சயாயனரின் காமசூத்திரம் ஆகியவற்றை ஆய்ந்து
தொல்காப்பியர் தம் இலக்கண நூலைப் படைத்தார் என்று அவர்கள்
கருதுகின்றார்கள். இவர்கள் கருத்துக்குத் திட்டமான சான்றுகள் கிடையா.
தமிழகத்திலிருந்து பல கருத்துகளும் சொற்களும் வடமொழியில் நுழைந்து
இடம் பெற்றுள்ளன. இவ்விரு மொழிகளுக்கும், வேறு மொழிகள்
சிலவற்றுக்குமிடையே பொதுவான கூறுபாடுகள் பல உள. எனவே,
தொல்காப்பியர் வடமொழி நூல்கள் காட்டிய வழியிலேயே தம் இலக்கணத்தை
இயற்றினார் என்பது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாகும். ‘சமஸ்கிருத
நாடகமும், அதன் தோற்றமும் மறைவும்’ என்னும் நூலின் ஆசிரியரான
இந்துசேகர் என்பார் தமிழ்நாட்டில் பரதர் என்ற ஒரு குலம் இருந்ததென்றும்,
நாட்டியம் ஆடுவதும் நடிப்பதும் அவர்களுடைய தொழிலாகும் என்றும்,
ஆரிய வேதியருக்கு இக்கலையில் உடம்பாடு கிடையாது. ஆகையால்,
இவற்றைப் பயின்று வந்தத் தமிழ் பரதரை அவர்கள் தாழ்வாகக் கருதி
வந்தனர் என்றும் கூறுகின்றார்.
வச்சிரநந்தி என்ற சமணர் தொடங்கிய ‘திராமிள’ சங்கமே தமிழ்ச்
சங்கம் என்னும் பெயரில் வழங்கி வந்தது என்றும், அச் சங்கம் கி.பி. 470-ல்
செயல்படத் தொடங்கிற்று என்றும், அதனின்றும் வெளியான முதல் தமிழ்நூல்
தொல்காப்பியமே என்றும் வையாபுரி பிள்ளையவர்கள் தம் ஆழ்ந்த
தமிழாய்வின் பயனாய் வெளியிட்டது மற்றொரு வியப்பூட்டும் ஊகமாகும்.
இதை வரலாற்று உண்மையாக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளார்கள்.
தமிழ்நாட்டில் சமணத்தைப் பரப்புவதற்காகவே ஏற்பட்டது வச்சிரநந்தியின்
திராமிள சங்கம் என்பது. தமிழ் மொழியில் இலக்கிய இலக்கணம்
தோற்றுவித்து மொழிக்கு வளமூட்டுவதில் அதற்கு ஈடுபாடே கிடையாது.
எனவே, அச் சங்க காலத்துக்குச் சாலவும் முற்பட்டது தொல்காப்பியம்
என்பது தேற்றம். தொல்காப்பியரின் காலத்தைப் போலவே அவருடைய சமயக்
கொள்கைகளும் இன்னவென அறிந்துகொள்ள முடியவில்லை. தொல்காப்பியர்
சமணர் என்று ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். தொல்காப்பியம்
அரங்கேற்றப்பட்ட காலத்தில் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்
பெயர் தோற்றிப் பல் புகழ் நிறுத்த படிமையோனே’ என்று தம் புகழை
நிலைநாட்டிக் கொண்டவர் எனப் பனம்பாரனார் தொல்காப்பியரைப்
பாராட்டிச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள
ஐந்திரம் என்னும் நூலைப்பற்றியும், படிமை என்னும் சொல்லைப்பற்றியும்
ஆராய்ச்சியாளரிடையே முரண்பாடான கொள்கைகள் காணப்படுகின்றன.
ஐந்திரம் என்பது ஐந்திர வியாகரணம் என்னும் பெயரின் குறுக்கமாகும்.
வடமொழியின் வளர்ச்சியை முன்னிட்டு அது இந்திரனால் இயற்றப்பட்டதாகக்
கருதுகின்றனர். இந்திரனால் செய்யப்பட்ட நூல் ஐந்திரம் என்னும் பெயர்
ஏற்றது வடமொழி வழக்கு. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்ற
பனம்பாரனார் கூற்றுக்குச் சிவஞான முனிவர், ‘வட மொழியினும்
வல்லனாயினான் என்பார் ஐந்திரம் நிறைந்த ‘தொல்காப்பியன்’ என்று
பொருள் உரைத்தார். தொல்காப்பியர் காலத்தில் ஐந்திரமானது வடமொழியில்
சிறந்த இலக்கண நூலாக விளங்கிற்று. இதையும் தொல்காப்பியர் நன்கு
பயின்றிருந்தாராகலின் அவரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று
பனம்பாரனார் கூறினார். மற்றொரு புகழ் பெற்ற இலக்கண நூலான
பாணினீயம் அக்காலத்து வழக்கில் இல்லை. அப்படி அது
வழங்கியிருக்குமாயின் பனம்பாரனார் தொல்காப்பியரைப் ‘பாணினீயம்
நிறைந்த தொல்காப்பியன்’ என்று பாராட்டியிருப்பார்.
இந்திரனால் செய்யப்பட்ட நூலினை, ‘விண்ணவர் கோமான் விழுநூல்’
என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.12 இங்குச் சுட்டப்படுவது ஐந்திர
வியாகரணம் என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கருதுகின்றார்.
மாங்காட்டு மறையோன், ‘புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர்
கோமான் விழுநூல் எய்துவிர்’ என்று கூறினான்; அவன் வைதிக மறையோன்,
அவனுக்கு மறுமொழியாகக் கவுந்தியடிகள் ‘கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்பாட்டியற்கையின் விளங்கக் காணாய்’ என இயம்பினார்.13
12. சிலப்-11 : 98-99.
13. சிலப்-11 : 154-155.அதாவது, “தேவர்களும் ஆயுள் கற்பத்தினை மிகவுடைய இந்திரன்
தோற்றுவித்த வியாகரணத்தினை எம்முடைய அருக குமரன் அருளிச்செய்த
பரமாகமங்களில் காண்கின்றிலையோ?” என்பது இதன் விளக்கம். மறையோன்
கூறிய ஐந்திரமும், கவுந்தியடிகள் குறித்த பரமாகமமும் வேறு வேறென்றும்,
கவுந்தியடிகள் சமணப் பற்றுடையவராகலின், வைதிக நூலான ஐந்திரத்தைத்
தாழ்த்திச் சமண நூலாகிய பரமாகமத்தை உயர்த்திக் காட்டினார் என்றும்
அறிகின்றோம். சமண முனிவராகிய இளங்கோவடிகளே கவுந்தியடிகளின்
வாயிலாக ஐந்திரம் ஒரு வைதிக நூலாகும் என்று புலப்படுத்தியுள்ளார்.
எனவே, தொல்காப்பியனார் காலத்தில் வழக்கிலிருந்த ஐந்திர வியாகரணம்
இளங்கோவடிகள் காலத்தில் வழக்கொழிந்து, மாங்காட்டு மறையோன்
கூறியபடி, புண்ணிய சரவணம் படிந்து தெய்வத்தினிடம் கேட்டுத் தெளிந்து
கொள்ள வேண்டிய அளவுக்கு நுணுகிவந்து இறுதியில் மறைந்தே போயிற்று.
மறைந்துபோன ஐந்திரத்தைச் சிவபெருமான் பாணினிக்கு உரைசெய்தார்
என்பது வடமொழி மரபு. திருநாவுக்கரசரும் ‘இந்திரத்தை இனிதாக ஈந்தார்
போலும்’ என்று சிவபெருமானைப் பரவுகின்றார்.14
பனம்பாரனார் தம் சிறப்புப் பாயிரத்தில், ‘பல்புகழ் நிறுத்த
படிமையோன்’ என்று புகழ்ந்திருப்பதைச் சற்று ஆய்வோம். படிமையோன்
என்னும் சொல் சமண சமயத்து வழங்கும் சொல்லென்றும், அதனால்
தொல்காப்பியனாரைச் சமண சமயத்தினர் என்றும் சிலர் கூறுவர்.
உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இச் சொற்றொடருக்குப் ‘பல புகழ்களையும்
இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை யுடையோன்’ என்னும்
பொருள் பகர்வார். படிமை என்னும் சொல் சமண சமயத்துக்கே
உரித்தானதொரு சொல்லன்று. அப்படி அஃது இருந்திருக்கு மாயின்
பிறசமயத்தினர் அக் காலத்தில் அதை எடுத்து ஆண்டிருக்க மாட்டார்கள்.
பதிற்றுப்பத்து 74ஆம் பாடலில் ‘கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி
வேட்டனை உயர்ந்தோர் உவப்ப... கூறினை பெருமநின் படிமையானே’
என்னும் அடிகளில் வைதிக ஒழுக்கம் பாராட்டப்படுகின்றது. இங்குப்
படிமையான் என்னும் சொல் தவவொழுக்கம் உடையவன் எனப்
பொருள்படுகின்றது. படிமை என்ற சொல்லின் பகுதி ‘படி’ என்பதாம். படி
என்னும் சொல் நிலத்தின் தன்மையைக் குறித்து நிற்கும்.15 நிலத்தின்
நீர்மையான ‘தன்மை’ என்னும்
14. தேவாரம்-6-28-8.
15. தொல்.பொருள் அகத்-82.
பொருளில் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் இது பயின்று வரக்
காணலாம். ‘இப் படியன் இந் நிறத்தன்’ என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.
‘ஏசும்படியோர் இளங்கொடியாய்’ என்னும் சொற்றொடரில் ‘படி’ என்பதற்கு
அடியார்க்குநல்லார் ‘வடிவு’ என்று பொருள் கூறுகின்றார்.16 ‘பாரோர் காணாப்
பலர் தொழு படிமையன்’17 எனச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்18
முறையே சாரணனது வடிவமும், விஞ்சையனின் வடிவமும்
சிறப்பிக்கப்பட்டுள்ளன. படிமை என்னும் சொல் படிவம் எனவும்
வழங்குவதுண்டு. ‘தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப்
பார்ப்பன மகனே’ என்று குறுந்தொகைச் செய்யுள் ஒன்றில்19
சொல்லாட்சியுண்டு. எனவே, படிமை என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லேயாகும்;
அது பிராகிருதச் சொல்லன்று. இஃதே ‘படிமா’ என்று திரிந்து பிராகிருதத்தில்
நுழைந்திருக்கக் கூடும். ஆகவே, படிமை என்னும் சொல்லைக் கொண்டு
தொல்காப்பியனாரைச் சமணர் என்று கூறுவது எவ்விதத்திலும் ஒவ்வாததாகும்.
தொல்காப்பியர் வகுத்த இலக்கண விதிகள் சிலவற்றைப் பரணர், கபிலர்
போன்ற ஒருசில கடைச்சங்கப் புலவர்கள் கையாளவில்லை என்று சிலர்
கூறுகின்றனர். ஆகவே, கடைச் சங்கத்துக்கும் பிற்பட்ட காலத்தினர்
தொல்காப்பியர் என்பது இவர்களுடைய வாதமாகும். கடைச் சங்கப்
புலவர்களான புகழ் பெற்ற பரணரும் கபிலரும் ஒரு சொல்லாட்சியை வழக்கில்
கொண்டு வந்திருந்தால் அவர்களுக்குப் பிற்பாடு வரும் ஓர் இலக்கண
ஆசிரியர் அவ்விருவரின் சொல்லமைப்புக்கு இலக்கண விதிகள்
வகுத்திருப்பர். வழங்கிவரும் இலக்கியத்துக்கு இலக்கண விதிவகுத்தலே
இயல்பும் மரபுமாம். அப்படியாக, சங்கப் புலவர்கட்கு முரண்பாடாகத்
தொல்காப்பியனார் இலக்கணம் கண்டிருக்கமாட்டார். எனவே, இவ்வெடுத்துக்
காட்டைக் கொண்டே ஓர் உண்மையை அறியவேண்டியுள்ளது. தம் காலத்து
வழங்கிய தமிழுக்குத்தான் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தார் ;
அவருடைய காலத்துக்குப் பிறகு தமிழரின் வாழ்க்கை விரிவுற்றது. வெளி
உலகத் தொடர்பும் தமிழகத்துக்குக் கிடைத்தது. அவ்விரிவுக்குத் தக்கவாறு
சொற்கள் பெருகின. சில சொற்கள் தொல்காப்பிய விதிகளுக்கு முரணாகவும்
அமையலாயின.
16. சிலப். 9 : 16.
17. சிலப். 15 : 158.
18. மணிமே. 3 : 37.
19. குறுந். 156
இம் முரண்பாடுகளுக்கு அமைதி காணும் பொருட்டுப் பவணந்தி முனிவர்
போன்ற பிற்கால இலக்கண ஆசிரியர்கள் ‘பழையன கழிதலும், புதியன
புகுதலும் வழுவல, கால வகையினானே’ என்ற ஒரு தத்துவத்தின்
அடிப்படையில் பல புதிய இலக்கண விதிகளை நிறுவிக் கொடுத்தனர்.
கடைச் சங்க காலத்தில் களவுவழித் திருமணம் நடைபெற்று
வந்ததென்றும், தொல்காப்பியர் காலத்தில் அம் முறை மாறிப் பெற்றோரே
முன்னின்று திருமணம் முடித்து வைக்கும் இக் கால மணமுறை வழக்குக்கு
வந்துவிட்டதென்றும், அக் காரணத்தை முன்னிட்டே தொல்காப்பியனார்
‘பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’20
என்னும் நூற்பா இயற்ற வேண்டியிருந்ததென்றும் சிலர் கூறுவர். இதுமுற்றிலும்
பொருந்தாததொரு வாதமாகும். களவு, கற்புத் துறைகளின் படியே
வாழ்க்கைக்கு நிறுவப்பட்ட இலக்கண விதிகளில் நூற்றுக்கு நூறு சமுதாயத்தில்
வாழ்க்கை நடைபெற்று வந்ததென்று திட்டமாகக் கூறுவதற்கில்லை.
அவ்விதிகளுக்குப் புறம்பான நடைமுறைகளும் தோன்றிப் பழக்கவழக்கங்களாக
அமைந்து விட்டிருக்கக்கூடும். இதைக்கொண்டே தொல்காப்பியர் கடைச் சங்க
காலத்துக்குப் பின்னிட்டு வாழ்ந்தவர் என்று கொள்ளுதல் கூடாது. மற்றும்
‘பொய்யும் வழுவும்’ என்னும் நூற்பாவே இடைச்செருகல் என்று
கருதுபவர்களும் உளர்.
‘ஐயர்’ என்னும் சொல் கி.பி. 15ஆம் நூற்றாண்டின் இடைக்காலம்
வரையில் பிராமணரைக் குறித்து நின்றதில்லை. பிராமணரும் தம் பெயருக்குப்
பிறகு, ‘ஐயன்’ என்றே குலப்பட்டமாக எழுதிக்கொள்ளுவது வழக்கமாக
இருந்ததே யொழிய, தம்மை ‘ஐயர்’ என்று கூறிக்கொண்டதற்குச் சான்றுகள்
இல்லை. ‘ஐயர்’ என்னும் சொல் முதன்முதல் இறைவனையே குறித்து நின்றது.
கல்வெட்டுகளிலும் பிராமணருக்கு ‘ஐயர்’ என்னும் குலப் பெயர்
வழங்கவில்லை ; சடங்கவி, பட்டர் போன்ற பட்டப் பெயர்களே
காணப்படுகின்றன. ஐயர் என்னும் சொல் தலைமைச் சிறப்புடைய
பெரியோரைக் குறித்து வழங்கும் தனிச் சொல்லாகப் பிற்காலத்தில் பொருள்
மாற்றம் ஏற்றது. ஆண்டவனின் அடியவரையும் ஐயர் என்று அழைத்தல்
மரபாக இருந்தது. அவர்களை நாயனார் என்றும் தேவர் என்றும்
அழைப்பதுமுண்டு. இவர்களும் ஐயர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
சேக்கிழார் கண்ணப்பநாயனாரைச் ‘சார்வலைத் தொடக்கு
20. தொல். பொருள். கற்பு. 4.
அறுக்க ஏகும் ஐயர்’21 என்றும், திருநாளைப் போவார் புராணத்தில்
திருநாளைப்போவாரை ‘ஐயரே, ! அம்பலவர் அருளால் இப்பொழு
தணைந்தோம்’22 என்றும் திருஞான சம்பந்த நாயனார் புராணத்தில்
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரை, ‘ஐயர் நீர்’23 என்றும் குறிப்பிடுதல்
சிறப்பாக நோக்கத் தக்கதாம். மக்களிலும் தேவர் உயர்ந்தவராகக்
கருதப்படுவர். ஐயன் என்னும் சொல் கடவுளரையும் குறித்து நிற்பதுண்டு.
சாத்தன் என்ற கடவுளை ஐயனார் என்று சிறப்பு விகுதியிட்டு
அழைக்கின்றோம். ஐயன் என்பதன் பெண்பால் ஐயை. பெண்களுள்
சிறந்தவரை முற்காலத்தில் ‘ஐயை’ என்று அழைப்பார். ‘ஐ’ வியப்பாகும்
என்பது இலக்கண மரபு.24 ஐயன் வியக்கத்தக்க பெருடையவன் என்பது
பொருள். பெண்பாலரிற் சிறந்தவர்கள் ‘ஐயள்’25 என்று அழைக்கப்பட்டனர்.
ஆரிய வேதியர் தென்னாட்டுக்கு வந்த பிறகு பார்ப்பார் என்றும், அவர்களுள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகியவர்கள் அந்தணர் என்றும்
அழைக்கப்பட்டனர். எனவே, ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்
யாத்தனர் கரணம் என்ப’ என்னும் நூற்பாவில் ஆளப்பெற்றிருக்கும் ஐயர்
என்னும் சொல் மக்களிற் சிறந்த சான்றோரைக் குறிப்பதாகக் கொள்ள
வேண்டுமே யல்லாது பிராமணரைக் குறிப்பாகக் கொள்ளுவதற்குச் சான்று
ஏதும் இல்லை.
சேர சோழ பாண்டிய மன்னர் மூவரையும் தொல்காப்பியம்
குறிப்பிடுகின்றது. அதனால் இந்நூல் சாலவும் பிற்பட்டதாக இருக்க வேண்டும்
எனக் கூறுவர் கே. என். சிவராஜ பிள்ளை அவர்கள். இவர் கொண்டுள்ள
முடிபானது வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் முரண்பாடானதாகும்.
காத்தியாயனர் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே சோழரைப்பற்றியும்
பாண்டியரைப்பற்றியும் எழுதியுள்ளார். இம் மன்னரைப் பற்றிய குறிப்புகள்
ஹதீகும்பாக் கல்வெட்டுகளிலும் (கி.மு. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
வருகின்றன. எனவே, தொல்காப்பியர் தம் நூலில் அம் மூன்று மன்னரையும்
குறிப்பிடுவதில் வியப்பேதுமில்லை.
21. பெரிய பு. கண். நாய. 70.
22. பெரிய. பு. திருநா. நாய 30.
23. பெரிய பு. திருஞான. 133.
24. தொல். சொல், உயிரியல், 87.
25. ஐங்குறு. 255.
தொல்காப்பியத்தைக் காலத்தால் மிகவும் பிற்பட்டதொரு நூலாகக்
கொண்டவர்களுள் தலையாயவர் வையாபுரிப் பிள்ளையவர்கள். அவரும்
அவரைப் பின்பற்றி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி முதலியோரும் தம் கருத்துக்கு
உறுதி தேடிப் பல சான்றுகளை நாடினார்கள். அவற்றுள் ஒன்று
தொல்காப்பியர் ‘ஓரை’ என்னும் சொல்லுக்குத் தம் இலக்கணத்தில்
இடமளித்திருப்பதாகும் ; ‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த
ஒழுக்கம் கிழவோற்கில்லை’26 என்பது தொல்காப்பியத்தின் நூற்பாக்களுள்
ஒன்று. இதில் வரும் ‘ஓரை’ என்னும் சொல் ‘ஹோரா’ என்னும் கிரேக்கச்
சொல்லின் மரூஉ என்றும், ஹோரா என்னும் சொல் முதலில் கிரேக்க
மொழியிலிருந்து சமஸ்கிருத சோதிட நூல்களில் கி.பி. மூன்று நான்காம்
நூற்றாண்டுகளில் நுழைந்து, பிறகு வட மொழிச் சோதிட நூல்களின் மூலம்
தமிழில் புகுந்து வழக்கேற்றது என்றும் அவர் ஊகித்தார். இதைக்கொண்டு
தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தைக் கி.பி. 500 என்று அவர் அறுதியிட்டு
மகிழ்ந்தார். கிரேக்கருடன் தமிழர் நேர்முகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள்;
யவனரின் நாழிகை வட்டில் தமிழகத்தில் பயன்பட்டு வந்தது. ஆகையால்,
ஹோரா என்னும் சொல் கிரேக்கர்கள் தமிழருக்கு நேரில் வழங்கிய
சொற்களில் ஒன்றாகும். இந்தச் சொல் நேரடியாகத் தமிழில் நுழைந்து ஆட்சி
பெற்றிருக்கவும், இவ்வறிஞர்கள் வடமொழியின் இடையீட்டை நாடினமை
என்ன காரணமோ அறியோம். ‘ஓரை’ என்னும் சொல்லுக்கு நச்சினார்க்கினியர்
தவறாகப் பொருள் கொண்டதன் விளைவாக ஏற்பட்ட குழப்பமே
காரணமாகவும் இருக்கலாம்.
ஓரை எனுஞ் சொல் இந் நூற்பாவில் ‘விளையாட்டு’ என்னும் பொருளில்
ஆளப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர்.27 ஓரை
என்னும் சொல் விளையாட்டு என்னும் பொருளில் வழங்கும் தனித் தமிழ்ச்
சொல்லாகும். ‘கோதை ஆயமொடு ஒரை தழீஇ’28 எனவும், ‘ஒரை ஆயம்’29
எனவும், ‘ஓரை மகளிர்’30 எனவும், ‘ஓரை யாயத்து ஒண்டொடி மகளிர்’31
எனவும், ‘விளையாடு ஆயமொடு ஓரை யாடாது’32 எனவும் இச்
26. தொல். பொருள், களவு. 44
27. வெள்ளைவாரணர், தமிழ் வரலாறு (தொல்காப்பியம்) பக். 125
28. அகம். 48, 16
29. அகம், 219
30. குறுந். 401
31. புறம். 176 32. நற்றி. 68 : 1

No comments:
Post a Comment