Monday 9 February 2015

தமிழக வரலாறு - 12

                                     தமிழக வரலாறு - 12

சமுத்திரகுப்தர் காலத்திய தூண் ஒன்று அலகாபாத்தில் நிறுத்தப்
பட்டுள்ளது. அதன்மேல் காணப்படும் கல்வெட்டில் ‘மந்தராஜா’ என்னும் 
சொல் சேர்ந்துள்ளது. சில ஆய்வாளர் இந்த மந்தராஜாவே சங்க கால 
மன்னன் ‘மாந்தரஞ்சேரல்’ ஆவன் என்று கூறுகின்றனர். வெறும் 
பெயர்மட்டுங் கொண்டே எதையும் துணியலாகாது. சமுத்திரகுப்தர் கி.பி. 
4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவருடைய உடன்காலத்தவர்
மாந்தரஞ்சேரல் என்று கொள்ளுவதற்குச் சான்றுகள் இல. சேர நாட்டின்மேல்
சமுத்திரகுப்தர் படையெடுத்ததாகத் திட்டமாகத் தெரியவில்லை.
மணிமேகலையில் ‘குச்சரக்குடிகை’, ‘குச்சரக்குடிகைக் குமரியை மரீஇ’ என்னும்
சொற்கள் வருகின்றன. அவை கூர்ச்சரம் என்னும் நாட்டைக் குறிக்கின்றன
என்றும், கூர்ச்சரர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும், சங்க
இலக்கியம் அவர்கள் காலத்திற்றான் எழுந்தது என்றும் மு. இராகவையங்கார்
உரைப்பார். இச்சான்றும் சொல் ஒற்றுமையின் அடிப்படையிற்றான்
நிறுவப்பட்டுள்ளதாகையால் இஃதும் ஏற்புடையதாக இல்லை. இந்திய
அரசாங்கத்தின் புதைபொருளாய்வு இயக்குநரான டாக்டர் என்.பி.
சக்கரவர்த்தியவர்களும், இராகவையங்கார் முடிவை ஒப்புக்கொள்ளுகின்றார்.
தமிழகத்தில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுகள் யாவும் கி.மு. மூன்று,
இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இப் பிராமி எழுத்துகள்
வளர்ச்சியுற்றிராத நிலையில் காணப்படுகின்றன. ஆகையால், நன்கு வளர்ந்து
இலக்கிய இலக்கண வளம் செறிந்து விளங்கும் சங்க நூல்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு தோன்றியிருக்க முடியாது என்பது 

டாக்டர் என்.பி. சக்கரவர்த்தியவர்களின் கருத்தாகும். கல்வெட்டில்
பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளும் சொற்களும் இலக்கண அமைதி 
யில்லாதவை என்பதும், கல்வியறிவில்லாதவர்கள் செதுக்கியவை என்பதும்
அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இவற்றை நோக்கி இவை பொறிக்கப்
பட்ட காலத்திய தமிழின் தரத்தை ஆய்ந்தறிவது தவறாகும். இந்தப் பிராமிக்
கல்வெட்டுகள் யாவும் சமணத் துறவிகளுக்கும், பௌத்த பிக்குகளுக்கும்
குகைப்பள்ளிகள் அளந்தளிக்கப்பட்ட செய்திகளையே குறிப்பிடுகின்றன.
இலக்கியத் தமிழுக்கும் இக் கல்வெட்டு மொழிக்கும் தொடர்பேதுமில்லை. ஒரு
காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டு மொழியைக் கொண்டு அக் காலத்தில்
வழங்கி வந்த மொழியின் வளத்தை அளந்தறிதல் ஆய்வு முறைக்கு ஏலாது.
ஒரு மொழியின் பழைய வடிவத்தைக் கொண்டும் மக்கள் பேச்சு வழக்கைக்
கொண்டும் அம்மொழியின் வளர்ச்சியை அளந்தறிய முடியாது. 

     எஃது எப்படியாயினும் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை போன்ற கேரள
ஆசிரியர்கள் சங்க இலக்கியத்தைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு ஒதுக்குவது
சாலப் பொருத்தமற்றது என்று அறிதல் அரிதன்று. திருஞானசம்பந்தரும்,
திருநாவுக்கரசரும் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி. 630-660) காலத்தில்
விளங்கியவர்கள். அவர்கள் பாடிய தேவாரப் பாடல்களில் யாக்கப்பட்டுள்ள
சொற்கள் எளியவை; இக்காலத்துச் சொற்களுக்குற்ற இலக்கண விதியும்,
சொல்லமைப்பும், பொருளமைப்பும் ஏற்றுள்ளவை. சங்கத் தமிழ்ச்
சொற்களுக்கும் அவற்றுக்குமிடையே ஆழ்ந்த வேறுபாடு உண்டு. சங்கத் 
தமிழ்ச் சொற்களில் பல வழக்கொழிந்தன; பல பொருள் மாறுபட்டுள்ளன; பல
முற்றிலுமே உருமாற்றம் எய்தியுள்ளன. பல சொற்கள் பழைய இலக்கண
விதிகட்குட்பட்டுள்ளன. எனவே, சங்கத் தமிழ் தொடர்ந்து ஆறாம்
நூற்றாண்டுவரையில் வழங்கி வந்திருக்குமாயின், அது தன் வழக்கு மாறி,
அடுத்த நூற்றாண்டிலேயே திடீரென்று தேவாரத் தமிழாக வளர்ந்து
மாற்றமெய்தியிருக்க முடியாது. இலக்கண அமைதியிலோ, சொல்லமைப்பிலோ,
பொருள் கூட்டிலோ தேவாரத் தமிழுக்கு ஒப்பானதொரு மொழி வடிவத்தை
எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பாடல்கள் ஒன்றிலேனும் காணவியலாது.
மேலும், தேவாரப் பாடல்களில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள்
கிடைக்கின்றன. திருஞான சம்பந்தர் தம் திருவாலவாய்த் திருப்பதிகத்தில் ‘கூடல் ஆலவாய்’ என்று குறிப்பிடுகின்றார்.7 ‘நன்பாட்டுப் புலனாய்ச் சங்கம்
ஏறிநற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்...’ என்று திருநாவுக்கரசரும்
பாடியுள்ளார்.8 ஆகவே, இவ்விரு சமய குரவரும் சங்க காலத்துக்குப்
பிற்பட்டவர்கள் என்பது திண்ணம். மாணிக்கவாசகர் கி.பி. 792 முதல் 835
வரை அரசாண்ட வரகுண பாண்டியனின் உடன்காலத்தவர். அவர் தம்முடைய
திருக்கோவையாரில் ‘வான் உயர் மதில்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்...’
என்று சங்கம் வளர்த்த தமிழைப் பாராட்டுகின்றார்.9 கூடல் என்ற பெயர்
வாய்ந்த ஒரு நகரத்தில் அமர்ந்து தமிழாய்ந்த புலவர்கள் மதுரமான
பாடல்களைப் பாடினராதலின் அந்நகரத்துக்கு மதுரை என்றொரு பெயர்
வந்தது. இவ்வினிய பெயரே பிற்பாடு வழக்கில் நின்றுவிட்டதால் சொல்
வழக்கில் கூடல் என்னும் பெயர் மறைந்து இலக்கியத்தில் மட்டும்
காணப்படுகின்றது. முதல் எட்டுச் சைவத் திருமுறை ஆசிரியர்கள்
கூடலைப்பற்றித் தம் பாடல்களில் குறிப்பிட்டிருக்கின்றனராகையால் கூடல்
அல்லது சங்கம் அவர்களுடைய காலத்துக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு
முன்பே நடைபெற்று மறைந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. 

     சங்க இலக்கியங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை
யல்ல என்பதற்கு அவ் விலக்கியங்களிலேயே அகச் சான்றுகள் 
கிடைக்கின்றன. சிங்களத்து மன்னனான கயவாகுவும் சேரன் செங்குட்டுவனும்
உடன்காலத்தவர் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகர்கின்றது.
இதைக்கொண்டு சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்
விளங்கியவன் என அறிகின்றோம். காலத்தால் இம் மன்னனுக்கு முற்பட்ட 
சேர மன்னரைப்பற்றியும் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில்
தொகுக்கப்பட்டுள்ளன. ஆகையால், சங்கப் பாடல்கள் பல கி.பி. இரண்டாம்
நூற்றாண்டுக்கு முன்பே இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது.
கிரீஸ், ரோம் ஆகிய ஐரோப்பிய நாடுகளுடன் பண்டைய தமிழகம்
கொண்டிருந்த வாணிகத்தைப் பற்றி அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை
ஆகியவையும், சற்றே பிற்காலத்து எழுந்த இரட்டைக் காப்பியங்களான
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல செய்திகளைக் கொண்டு மிளிர்கின்றன.
‘...யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு
பெயரும்...’10 என்றும், ‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய்
புனை 

    7. தேவாரம் - 3 : 52 ; 1. 8. தேவாரம் - 6. 76-3 
    9. திருச்சிற்/23.     10. அகம்.49. 
கலத்து ஏந்தி, நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப...’11 என்றும், நீரின் வந்த
நிமிர்பரிப் புரவியும்...’13 என்றும், ‘கலந்தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்...’12 என்றும், ‘யவனத் தச்சரும்
தண்தமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி...’14 என்றும், இன்னும் பலவாறாகவும்
தமிழர் யவனர் தொடர்பு பாராட்டப்பட்டுள்ளது. ஆதியில் யவனர் என்னும்
சொல் கிரேக்கரையே சுட்டி நின்றது; பிறகு ரோமரையும், அடுத்து
அயல்நாட்டினர் அனைவரையுமே அது குறிப்பிடலாயிற்று. தமிழர்-யவனர்
வாணிகத் தொடர்பை இலக்கிய அகச்சான்றுகளும், கி.பி. 1, 2ஆம்
நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களான கிரேக்க, ரோம நூலாசிரியர் சிலரின்
நூல்களும் மெய்ப்பிக்கின்றன. ஆர்மஸ் துறைமுகத்திலிருந்து இந்தியாவுக்குச்
சுமார் நூற்றிருபது மரக்கலங்கள் பாய்விரித்தோடியதையும், அகஸ்டஸ்
பேரரசின் அரசவைக்குப் பாண்டி நாட்டுத் தூதுவர் இருவர் 
சென்றிருந்ததையும் ஸ்டிராபோ தெரிவிக்கின்றார். ‘எரித்திரியக் கடலின்
பெரிப்ளூஸ்’ என்னும் நூலின் ஆசிரியரும், பிளினியும் கி.பி. முதல்
நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். அடுத்த நூற்றாண்டில் விளங்கியவர் தாலமி
என்பார். தமிழகத்துத் துறைமுகப் பட்டினங்களைப்பற்றியும், 
மேலைநாடுகளுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல் வாணிகத்தைப் 
பற்றியும் இவ்வயல்நாட்டு ஆசிரியர்கள் தத்தம் நூல்களில் விரிவாய்
எடுத்துரைக்கின்றார்கள். இவர்கள் அளிக்கும் வரலாற்றுக் குறிப்புகளும், சங்க
இலக்கியத்தில் காணப்படும் யவனரைப்பற்றிய செய்திகளும் இயைந்து
காண்கின்றன வாதலால் பல சங்கப் பாடல்கள் கடல் வாணிகம்
செழித்தோங்கியிருந்த காலத்தில் பாடப்பட்டிருக்க வேண்டுமெனத் 
தெரிகின்றது. தமிழகத்தில் ஆங்காங்கு அகழ்வாராய்ச்சியின் மூலம்
கிடைத்துவரும் ரோமாபுரி நாணயங்களைக் கொண்டு ரோமரின் வாணிகத்
தொடர்பானது உன்னத நிலையை எட்டியிருந்த காலத்தைக் கணித்தறியலாம்.
தமிழகத்தில் மிகவும் அதிகமாகக் கிடைப்பவை, அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகிய
ரோமாபுரிப் பேரரசின் நாணயங்களேயாம். 

     அரிக்கமேட்டுப் புதைபொருள்களானவை தமிழகத்துக்கும் 
ரோமாபுரிக்கும் இடையிட்ட கடல் வாணிகத்தின் விரிவையும் வளத்தையும்
நமக்குப் பெரிதும் விளக்கிக் காட்டுகின்றன. புதுச்சேரிக்கு அண்மையில்
அமைந்துள்ள ஒரு மண் மேட்டுக்கு 

    11. புறம்-56.         12. பட்டினப்-185.
    13. சிலப்-5: 11-22    14. மணிமே. 9 : 108-9.

அரிக்கமேடு என்று பெயர். அது அரியாங்குப்பத்தாற்றை யணைந்தவாறு
அமைந்துள்ளது. இம்மேட்டை யகழ்ந்தெடுத்து வியக்கத்தக்க செய்திகளைப்
புதைபொருள் ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்விடத்தில் சோழ
நாட்டின் மிகவும் சிறப்பானதொரு துறைமுகம் அமைக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரியை யவனர்கள் அக்காலத்தில் பொதுகை என்று 
பெயரிட்டழைத்தனர். கிறித்து ஆண்டின் தொடக்க காலத்தில் பொதுகை
யவனர் ஈண்டி வாழ்ந்த மாபெரும் சேரியாகக் காட்சியளித்தது. சுட்ட
செங்கல்லால் கட்டப்பெற்ற பந்தர்கள் என்னும் கடல் வாணிகப்
பண்டசாலைகள், சாயத் தொட்டிகள், கண்ணாடி, பளிங்கு, பவழம், பொன்
ஆகியவற்றால் ஆக்கப் பெற்ற மணிவகைகள், பல உருவங்களில் கல்லிழைத்த
பதக்கங்கள் ஆகியவை அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. தமிழகத்து
நுண்கலிங்கங்கள் அயல்நாட்டுக்கு ஏற்றுமதியாகுமுன் இங்குத் தான்
வண்ணமூட்டப் பெற்றன. ரோமாபுரி யிலிருந்து பலவகையான 
மண்பாண்டங்கள் இறக்குமதியாயின. அத்தகைய பாண்டங்கள் இங்கும்
வனையப்பட்டன. அரிக்கமேட்டில் காணப்படும் மண்கல ஓடுகள் யாவும்
இத்தாலியில் அரிஸ்ஸோ என்ற நகரத்துக் குயவர்கள் வனைந்து தம் வாணிக
முத்திரைகளைப் பதித்து அனுப்புவித்த அரிட்டைன் என்ற பானை சட்டி
வகைகளின் ஓடுகளாம். யவனர் இரட்டைப் பிடிகொண்ட ஒரு வகை
மதுச்சாடிகளில் (Amphorae) உயர்வகைத் ‘தண்கமழ் தேறல்’களைக்
கொண்டுவந்து தமிழகத்தில் இறக்கினர்; அவற்றுக்கீடாகத் தமிழகத்து மிளகு,
இலவங்கம், கலிங்கம் முதலியவற்றை ஏற்றிக்கொண்டு சென்றனர். அத்தகைய
இரட்டைப்பிடி மதுச்சாடிகளின் சிதைவுகளும், கண்ணாடியாலான
மதுக்கிண்ணங்களும் அரிக்கமேட்டில் கிடைக்கின்றன. தமிழகத்தில்
அறுக்கப்பட்ட சங்கு வளையல்களும், பலவகையான அணிகலன்களும் இங்குக்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழர் நாகரிகத்தின் தொன்மையை விளக்கும் இப்
பொருள்கள் யாவும் தமிழர் தேடிக்கொண்டிருக்கும் சான்றுகளில் மிகவும்
சிறந்தவையும், பயனுள்ளவையு மாகும். ‘அரிட்டைன்’ சட்டி வகைகளும்,
இரட்டைப்பிடி மதுச்சாவடிகளும் ரோமாபுரியிலிருந்து கி.பி. 20-50 
ஆண்டுகளில் தமிழகத்தில் இறக்குமதியாகி யிருக்கக்கூடும் என்று டாக்டர்
மார்ட்டிமர் வீலர் என்னும் புதைபொருள் ஆய்வாளர் கருதுகின்றார்.15 இந்த
யவனச் சேரி கி.மு. முதல் நூற்றாண்டில் தோன்றியிருக்கவேண்டும்; கி.பி.
இரண்டாம் நூற்றாண்டில் கைவிடப் பட்டிருக்கவேண்டும். எப்படியாயினும் இச்
சேரி  கி.பி. இரண்டாம் நூற்றாண்டு இறுதிக்குள் பாழடைந்து போயிற்று. கிறித்தவ

அப்தத்தின் முதல் இரு நூற்றாண்டுகளில் அரிக்கமேட்டுக் கடல் வாணிகம்
மிகவும் உயர்ந்த நிலையில் செழிப்புற்று விளங்கியது. சங்கச் செய்யுள்கள் 
தரும் செய்திகளுக்கும், அகழ்வாராய்ச்சியில் வெளியாகியுள்ள
புறச்சான்றுகளுக்கும், அயல்நாட்டு நூலாசிரியரின் கூற்றுகளுக்கும் உடன்பாடு
காணப்படுவதால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சங்ககாலமானது
மிகச் சிறந்த முறையில் நிகழ்ந்து வந்தது என்பதில் ஐயமேதுமில்லை. எனவே,
இப்போதுள்ள ஆய்வு நிலையில், கடைச்சங்கம் கி.பி. முதல் மூன்று
நூற்றாண்டுகள் நிகழ்ந்து வந்தது என்று கொள்ளுவது சாலப் பொருத்தமாகும்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இடையில்
இடைச்சங்கம் இயங்கி வந்ததென்றும், அதற்கும் முன்பு கி.மு. நான்காம்
நூற்றாண்டுக்கும், இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் தலைச்சங்கம்
நடைபெற்று வந்தது என்றும் கொள்ளலாம். இம்மூன்று சங்கங்களும் நீண்ட
காலம் செயற்பட்டு வந்தன என்பதில் ஐயமில்லை. தலைச்சங்கம்
தோன்றுவதற்கு முன்பும் தமிழ் வளர்ந்து கொண்டிருந்தது. பாணர்கள்
ஊரூராகச் சுற்றிவந்து இசைப்பாடல்கள் பாடி வயிறு பிழைத்து வந்தனர். 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...