சங்க இலக்கியம் - 02
சொல் தமிழ் இலக்கியத்தில் ‘விளையாட்டு’ என்னும் பொருளில் வழங்கி
வந்துள்ளது. எனவே, இதற்கு இராசி என்று பொருள் கொள்ளல்
பொருத்தமாகாது.
சங்க இலக்கியத்துக்கு முற்பட்டது தொல்காப்பியம் என்பதற்கு மேலும்
சில சான்றுகளைக் காட்டலாம். சங்கப் பாட்டுகளில் இடம் பெற்றுள்ள சமயக்
குறிப்புகள் பல தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. ‘மாயோன், சேயோன்,
வருணன், வேந்தன் என்னும் நானிலத் தெய்வங்களுடன் கொற்றவை என்ற
பெண் தெய்வத்தையும் தமிழர் வழிபட்டனரெனத் தொல்காப்பியர்
கூறுகின்றார்’.33 ஆனால், கடைச் சங்ககாலத்தில் ‘காரியுண்டிக்கடவுள்’
என்றும், ‘மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன்’ என்றும், ‘முக்கண்ணான்’
என்றும் கடவுளை உருவத் திருமேனியில் வழிபட்டு வந்ததைக் காண்கிறோம்.
திருமால் வழிபாட்டில் ‘செங்கட்காரி’ (வாசுதேவன்), ‘கருங்கண் வெள்ளை’
(சங்கருடணன்), ‘பொன்கண் பச்சை’ (பிரத்தியும்நன்), ‘பைங்கண்மால்’
(அநிருத்தன்) என்னும் பெயர்கள் பரிபாடலில் வழங்குகின்றன. கடைச்சங்க
காலத்தில் சிவன் வழிபாடும் பலதேவன் வழிபாடும்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவர்களுடன் திருமாலையும் முருகனையும்
தமிழர் அப்போது வழிபடலாயினர். காமன் வழிபாடும் சிறப்புற்று விளங்கிற்று.
ஆனால், தொல்காப்பியத்தில் காமனைப்பற்றிய குறிப்பே காணப்படவில்லை.
மற்றும், அகத்திணையைப்பற்றிய செய்யுள்கள் யாவும் பரிபாடல்,
கலிப்பா ஆகிய பாவினங்களில் அமைய வேண்டுமெனத் தொல்காப்பியர்
விதித்துள்ளார். ஆனால், கடைச்சங்க காலத்தில் அகப்பொருளை
அகவற்பாவில் பாடியுள்ளனர். கருத்துப்பெருக்கம், மக்களின் வாழ்க்கைவகை
ஏற்றம், அவர்களுடைய பண்பாடு, நாகரிகம் முதலியவற்றின் வளர்ச்சி
ஆகியவற்றுக்கு ஏற்றவாறு மொழி வளர்ச்சியும் ஓங்கிவரும். அந் நிலையில்
இலக்கணப் படைப்புகள் இலக்கண விதிகளையும் கடந்து செல்ல
வேண்டியிருக்கும். இக் காரணத்தால் வளர்ந்து வந்த தமிழிலக்கியமானது
தொல்காப்பியம் வேய்ந்த இலக்கண நெறியினின்றும் ஆங்காங்கு
வழுவலாயிற்று. இவ் வழுவல்களுக்கும் இலக்கண அமைதி கண்டு புது
விதிகளை நிறுவிக் கொடுத்தனர் பிற்கால இலக்கண ஆசிரியர்கள்.
தொல்காப்பியர் இடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவராயின் இடைச்சங்க
காலம் எஃது என்னும் கேள்வி எழுகின்றது. தொல்காப்பியர்
33. தொல்.பொருள், புறத்திணை. 4
கி.மு. 4ஆம் நூற்றாண்டிலோ அன்றி அதற்கும் முன்னிட்டோ
வாழ்ந்திருந்தவர் என்னும் கருத்து ஆய்வாளரிடையே நிகழ்ந்து வருகின்றது.
தொல்காப்பியத்தின் பழமையைக் கணக்கிடுவதற்குத் தொன்றுதொட்டு
வழங்கிவரும் கடல்கோள் செய்திகள், சிங்களநாட்டு வரலாறுகள் ஆகியவை
பொருந்துமாறு பயன்படுவதில்லை. இறையனார் அகப்பொருள்,
முல்லைக்கலி,34 சிலப்பதிகாரம் ஆகியவற்றில் இரு கடல்கோள்களைப்பற்றி
அறிந்து கொள்கின்றோம். முதல் கடல்கோள் தென்மதுரையை விழுங்கிற்று.
இரண்டாம் கடல்கோளில் கபாடபுரம் முழுகிப் போயிற்று. ஆனால்
‘தீபவமிசம்’, ‘மகாவமிசம்’, ‘இராசாவளி’ என்னும் சிங்களத்து வரலாறுகள்
மூன்று கடல்கோள்களைக் குறிப்பிடுகின்றன. முதல் கடல்கோள் கி.மு. 378-ல்
நிகழ்ந்ததாம், அதைத் தொடர்ந்து இலங்கைத் தீவு தென்னிந்தியாவினின்றும்
பிரிந்துவிட்டதாம். இரண்டாம் கடல்கோள் கி.மு. 504-ல் நிகழ்ந்து இலங்கைத்
தீவின் பெரும்பகுதியையும் தண்ணீரில் மூழ்கடித்து விட்டதாம். பிறகு கி.மு.
305-ல் ஏற்பட்ட மூன்றாம் கடல்கோளினால் இலங்கைக்கு ஊறு ஒன்றும்
நிகழவில்லையாம். இந்த மூன்றாம் கடல்கோளே கபாடபுரத்தையும், இரண்டாம்
சங்கத்தையும் அழித்ததென்றும் தொல்காப்பியம் கி.மு. 306-க்கு முன்பு
தோன்றியிருக்க வேண்டுமென்றும் டாக்டர் மா. இராசமாணிக்கனார்
கூறுவார்.35 சிங்கள வரலாறுகள் நம்பத்தக்கனவா என்பது ஒருபுறம் கிடக்க,
அவை குறிப்பிடும் மூன்றாம் கடல்கோள்தானா இரண்டாம் சங்கத்தை
முடிவுக்குக் கொண்டு வந்தது என்று ஐயுற வேண்டியுள்ளது. அதன் பின்னரும்
கடல்கோள் ஒன்று நேர்ந்திருக்கலாகாதா? கடல்கோள்களைப் பற்றிய
பழங்கதைகள் பல தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்றையே
இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எடுத்துக் கூறியிருக்கக் கூடும்.
பழங்கதைகளுக்கும் செவிவழி வரலாறுகட்கும் காலங்கணிப்பது எளிதன்று.
பாணினி தம் நூலில் தென்னிந்தியாவைப்பற்றிக் கூறும்போது
கலிங்கத்துக்குத் தெற்கில் இருந்த நாடுகளைப்பற்றி எந்தச் செய்தியையும்
அளிக்கவில்லை என்றும், ஆனால், கி.மு.நான்காம் நூற்றாண்டில்
வாழ்ந்தவரான காத்தியாயனர் சோழரைப் பற்றியும் பாண்டியரைப் பற்றியும்
தம் நூலில் குறிப்புகள் தருகின்றார் என்றும் ஏற்கெனவே கண்டோம்.
தமிழ்நாட்டில் ஆரியரின்
34. முல்லைக் கலி 4.
35. தமிழ் இலக்கிய இலக்கணக் கால ஆராய்ச்சி. (1957) பக். 9. டாக்டர்
இராசமாணிக்கனார்.
குடியேற்றம் கி.மு. 6-4நூற்றாண்டுகளில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது
திண்ணம். எனவே, அடுத்த மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளில்
தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கலாம். பார்ப்பனரின் கடமைகளைப்பற்றி
அந்நூலில் விதி வகுக்கப்பட்டுள்ளது. பார்ப்பனரின் குடியேற்றம் விரிவாக
நடைபெற்ற சில காலத்துக்குப் பிறகே அவர்களுக்கென விதிகள் வகுக்க
வேண்டிய தேவை ஏற்படும். ஆகையால், தொல்காப்பியரைக் கி.மு. 6-4
நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் என்று கொள்ளுவதற்கில்லை.
வடமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளுவது எவ்வாறு
என்பதற்குத் தொல்காப்பியர் விதி ஒன்று வகுத்துள்ளார்.36 ஒரு நாட்டில்
நுழைந்து இடம்பெறும் புதிய ஒரு மொழியானது அந்நாட்டில் ஏற்கெனவே
வழக்கத்திலிருக்கும் ஒரு மொழியுடன் ஒருங்கிணைந்து கலந்து வழங்கத்
தொடங்குவதற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகளாவது
செல்லவேண்டும். அத்தகைய நிலையிற்றான் அயல்மொழிச் சொற்களை
ஏற்றுக் கொள்ளும் ஒரு நாட்டு மொழிக்குச் சில நடைமுறை விதிகள் வகுக்க
வேண்டியிருக்கும். ஆகவே, தொல்காப்பியம் கி.மு. 2 அல்லது 1ஆம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கொள்ளுவது பொருத்தமாகும்.
தொல்காப்பியத்தின் காலத்தைக் கி.மு. 1000 முதல் கி.பி. 10ஆம்
நூற்றாண்டுவரையில் ஆய்வாளர்கள் அறுதியிடுகின்றனர். அது கடைச்
சங்கத்துக்கு முற்பட்டதெனச் சிலரும், பிற்பட்டதெனச் சிலரும் கூறுவர்.
எவ்வாறாயினும், தொல்காப்பியம் கடைச்சங்கத்துக்குச் சற்று முற்பட்டது என்று
கொள்ளுவதற்குத் திட்டமான சான்றுகள் உள்ளன.
அடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பை ஆய்வோம்.
இதில் அடங்கியுள்ள நூல்களாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை
நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது,
ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது,
திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறு பஞ்ச
மூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை ஆகியவை. முன்பு ஒரு
காலத்தில் பண்டைத் தமிழ் நூல்கள் மேற்கணக்கு எனவும், கீழ்க்கணக்கு
எனவும் இருவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன என்று பன்னிருபாட்டியல்
மூலம் அறிகின்றோம்.
36. தொல். சொல். எச்சவியல் 5
மேற்கணக்கின் இயல்பு ‘ஐம்பது முதலா, ஐந்நூறு ஈறா, ஐவகைப் பாவும்
பொருள்நெறி மரபின் தொகுக்கப்படுவது மேற்கணக்காகும்’ என்றும்,
கீழ்க்கணக்கின் இயல்பு ‘அடிநிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதி அறம்,
பொருள், இன்பம் அடுக்கி, அவ்வகைத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்’
என்றும் கூறும் சில மேற்கோள்களைப் பன்னிருபாட்டியல் எடுத்துக்
காட்டுகின்றது. எனவே, இந்நூல் தோன்றுவதற்கு முன்பே இத்தகைய
பாகுபாடானது தமிழகத்தில் காணப்பட்டது என்பது தெளிவாகின்றது.
ஆகையால், இப்பாகுபாடு செய்யுள்களின் அடி எண்களைக்குறித்ததே தவிர
நூலின் பெருமை குறித்ததன்று. கீழ்க்கணக்கு நூல்கள் ஒவ்வொன்றிலும்
ஆறடிக்கு மேல் ஏறாத செய்யுள்களே காணப்படும்; அச்செய்யுள்கள்
வெண்பாக்களாக இருக்கும் ; ஒழுக்கத்தைப் பற்றியே பேசும். மேற்கணக்கு
நூல்களோ அகவல் அல்லது கலிப்பா அல்லது பரிபாடல் என்னும் செய்யுள்
இலக்கணத்தில் அமைந்திருக்கும்.
கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டும் ‘சங்கம் மருவிய நூல்களாம்’
என்று அறிஞர்கள் வழிவழிக் கூறிவருகின்றனர். கீழ்க்கணக்கு நூல்கள்
இயற்றியவர்களைப் ‘பிற்சான்றோர்’ என்று பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
இதை நோக்கின் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கத் தொகை நூல்களுக்கெல்லாம்
காலத்தால் பிற்பட்டவையாம் எனத் தெளிவாகின்றது. சங்க காலத்துடன்
தொடர்பு கொண்டவை இந் நூல்கள் என்று ஊகிக்கலாம். சங்கம்
மறைந்துவரும் காலத்திலோ, அது முற்றிலும் இறுதியாக மறைந்துவிட்டதன்
பிறகோ இந்நூல்கள் தோன்றியிருக்க வேண்டும்.
கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துக்கும் காலவரை யிடுதலில் பல
இடையூறுகள் உள்ளன. சில ஆய்வாளர்கள் இவற்றைக் கி.பி. 7 முதல் 9ஆம்
நூற்றாண்டு வரையிலான காலத்துக்குள் ஒடுக்குவர். நாலடியாரில் முத்தரைய
மன்னர் இருவரைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது.37 அதில் இவர்கள்
‘பெரு முத்தரையர்’ என்று பாராட்டப் பெறுகின்றனர். இச்சான்று ஒன்றை
மட்டுங் கொண்டு நாலடியார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு
தோன்றியிருக்க முடியாது என்று சிலர் கருதுவர். ‘முத்தரையரைப்பற்றிய
செய்திகள் கி.பி. எட்டாம் நூற்றாண்டில்தான் முதலில் கல்வெட்டுகளில்
காணப்படுகின்றன. ஆகவே,
37. நாலடி. 200. 296.
38. தமிழ் இலக்கிய வரலாறு, (கி.பி. 250-600) சதாசிவபண்டாரத்தார்
அன்னோரைப் புகழ்ந்துரைக்கும் நாலடியாரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில்
இயற்றப்பெற்ற நூலாதல் வேண்டும் என்பது ஒருதலை’ என்று
சதாசிவபண்டாரத்தார் கருதுகின்றார்.38 இவ்விரு முத்தரையரும் தனித்தனி
மன்னர்களல்லர்-ஒருவனே எனவும், அவனும் பெரும்பிடுகு முத்தரையன்
என்ற பெயரில் வரலாற்றில் வரும் மன்னனே யாவன் எனவும் ஒரு கருத்து
ஆய்வாளரிடையே நிலவுகின்றது. இப்பெரும்பிடுகு முத்தரையனின் பெயர்
செந்தலைக் கல்வெட்டில் காணப்படுகின்றது.39 இவன் கி.பி. 7ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்தவனான முதலாம் பரமேசுவர பல்லவனின் உடன்
காலத்தவனாவன். இக்கல்வெட்டுக் கூறுவதெல்லாம் ஒரு மன்னனைப் பற்றிய
செய்திதானே யொழிய அவனுடைய பரம்பரையைப் பற்றியதன்று. இதை
மட்டுங்கொண்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் நாட்டில்
முத்தரையர் என்ற ஒரு பரம்பரையே வாழ்ந்து வரவில்லை என்னும் ஒரு
முடிவுக்கு வரமுடியாது. தமிழ் நாட்டின் வரலாற்றில் கி.பி. 7ஆம்
நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை ஆராய்வதற்குத் துணைபுரியக்கூடிய
கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்க வில்லை என்பது இங்குக் கருதத்தக்கது.
எனவே, கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பும் முத்தரையர் வாழ்ந்து
வந்திருக்கலாமாகையால் அவர்களுள் யாரையேனும் நாலடியார்ச் செய்யுள்கள்
பாராட்டியிருக்கக் கூடும்.
சங்ககால மன்னரின் ஆட்சியையடுத்துக் களப்பிரர் என்னும்
ஓரினத்தவர் தமிழகத்தின்மேல் படையெடுத்துவந்து, நாடெங்கும் கொலையும்,
கொள்ளையும், குழப்பமும் விளைவித்தனர். தமிழர் வாழ்வு சீரழிந்து
போயிற்று. சேர, சோழ, பாண்டியரின் கோல் ஓய்ந்தது. களப்பிரர் என்னும்
கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த சிலர் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு
பெரும்பொருள் ஈட்டி முத்தரையர் என்னும் பெயரில் நாடாளத் தொடங்கினர்
போலும். எனவே, முத்தரையர்கள் தமிழ்நாட்டில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில்
தோன்றியவர்கள் என்று கொள்ளமுடியாது. களப்பிரர் படையெடுப்பு 4, 5ஆம்
நூற்றாண்டுகளில் நேரிட்டது. ஆகவே, நாலடியாரில் குறிப்பிடப்படும்
பெருமுத்தரையர்கள் இவ்விரு நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதில்
ஐயமில்லை. இச் சான்றைக்கொண்டு நாலடியார் கி.பி. 4 முதல் 7ஆம்
நூற்றாண்டுக் கால அளவில் இயற்றப்பட்டதொரு நூலாகக் கொள்ளத்தகும்.
அண்மையில் பேராசிரியர் பி.ஜி.எல். ஸ்வாமி, களப்பிரர் கங்கரேயென்றும், அவர் வெகு சிறு காலமே தமிழகத்தில் ஆண்டனரெனவும் கருதுகிறார்.
இவற்றை ஒப்புக்கொள்வதற்கில்லை.
கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கிய நடைக்கும், சங்க நூல்களின் இலக்கிய
நடைக்குமிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந் நூல்களின் நடை
தெளிவாகவும், தேவாரப் பாடல்களின் இனிய நடை போலவும்
அமைந்துள்ளது. சங்க இலக்கிய நடையோ சுருக்கமானது ; இக் காலத்தில்
எளிதில் பொருள் விளக்கங் காணமுடியாதது. கீழ்க்கணக்கு நூல்கள்
அனைத்தும் ஒழுக்க நடைமுறைகளை வகுத்துக்காட்டுகின்றன. சமண சமயம்
ஒழுக்கத்தையே உயிரினும் மேலாக ஓம்பி வந்தது. சமண ஒழுக்கம் ஆரிய
ஒழுக்கத்தோடு முரண்பட்டதாகும். சமண சமயம் மிக உச்சநிலையில் விளங்கிய
காலம் கி.பி. 3முதல் 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரையில் என்று
கொள்ளலாம். எனவே, இக் கால வரம்புக்குள் பதினெண் கீழ்க்கணக்கு
நூல்கள், ஒரு சில தவிர்த்து, ஏனைய தோன்றியிருக்க வேண்டும். அடுத்து
7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதற்கொண்டு சைவ நாயன்மார்களும்
வைணவ ஆழ்வார்களும் தோன்றிக் கடவுளிடத்தில் அன்பு நெறியைப்
போற்றி வளர்த்து வரலானார்கள். சமணமும் வேத நெறியும் பௌத்தத்துக்குக்
கடும் எதிர்ப்பை மேற்கொள்ள லாயின. அவ்வெதிர்ப்பை ஆற்றாது பௌத்தம்
தமிழகத்தினின்றும் மறைந்தே போயிற்று. இறுதியில் சமணமும் வைதிக
நெறியை எதிர்த்துப் போரிட மாட்டாமல், ஆற்றல் குன்றி அடங்கிவந்தது.
வாய்ப்பும் ஆக்கமுங் குன்றும் காலையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப்
போன்ற உயர்ந்த நீதி நூல்களும் இலக்கியப் படைப்புகளும் தோன்றுவது
எளிதன்று. ஆகவே, இந் நூல்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள்
இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ளுவது மிகையாகாது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொன்று வாழ்க்கை நெறியை
விளக்குகின்றன; ஐந்து திணையொழுக்கத்தை ஓதுகின்றன; ஒன்று
காலத்தைப்பற்றியது ; எஞ்சிய ஒன்று இடத்தைப்பற்றியது. வாழ்க்கை நெறியை
வகுத்துக் காட்டும் திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்திலும்
சிறந்ததாகப் பாராட்டப்பட்டு வந்துள்ளது. களவழி நாற்பதும் முதுமொழிக்
காஞ்சியும் கடைச்சங்கப் படைப்புகளாகக் கருத இடமுண்டு. களவழி நாற்பது
என்பது ஒரு புறத்திணை நூல் ; போரைப் பாடுவது. சேரன் கணைக்கால்
இரும்பொறையைச் சோழன் செங்கணான் போரில் வென்று சிறை செய்தான்.
புலவர் பொய்கையார் அச் சேரன் அவையை அணி செய்து அமர்ந்திருந்தவர்.
அவர் இந் நூலைப் பாடிச் சோழனை மகிழ்வித்துச் சேரனுக்கு விடுதலை
பெற்றுக்கொடுத்தார். இச் செய்தியைச் சுவைபடக் கூறுவதுதான் களவழி
நாற்பது என்பது. இதன் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள பதிகம் ஒன்று இதைப்
பொய்கையார் இயற்றினார் எனக் கூறுகின்றது. பொய்கையார் பாடிய இரண்டு
பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.40 இப் பாடல்கள் சேரமான்
கோக்கோதை மார்பன்மீது பாடப்பெற்றவை. களவழி பாடிய பொய்கையாரும்,
இப் புறப்பாட்டுகள் பாடிய பொய்கையாரும் ஒருவரே என்றும், அவர்
கடைச்சங்க காலத்தவர் என்றும் அறிஞர் சிலர் கருதுகின்றனர்.
பொய்கையாரின் பாடலுக்குப் பரிசிலாகச் சேர மன்னன் விடுதலை
செய்யப்பட்டான் என்ற செய்தியைப் பதிகம் தெரிவிக்கின்றது. ஆனால் இப்
போரைப்பற்றிக் கூறும் புறப்பாடல் ஒன்று இச் செய்திக்கு முரணாக மற்றொரு
குறிப்பைத் தருகின்றது. இப் பாடலை இயற்றியவன் சேரமான் கணைக்கால்
இரும்பொறையேதான். போர்க்களத்தில் தோல்வியுற்றுக் குடவாயிற்
கோட்டத்தில் சிறை செய்யப் பட்டிருந்த அம் மன்னன் நாவறண்டு தண்ணீர்
கேட்டான். தண்ணீர் காலந்தாழ்த்துக் கொடுக்கப்பட்டது. மானம் மேலீட்டால்
அத் தண்ணீரைக் குடிக்க மறுத்து உயிர் நீத்தான். உயிர்விடு முன்பு அவன்
மறச்சுவை ததும்பும் இப் புறப்பாட்டைப் பாடினான். தஞ்சை விசயாலய
சோழன் மேல் பெற்ற வெற்றியைப் பாடுவது களவழி நாற்பது என்று
குலோத்துங்கச் சோழன் உலாவின் பழைய உரையாசிரியர் ஒருவர்
கூறுகின்றார். இவர் கருத்து உண்மையாயின் களவழி நாற்பது கி.பி. 850ஆம்
ஆண்டளவில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். எனவே, இவர் கூற்று நம்பத்
தகுந்ததன்று. களவழிப் பதிகமும் புறநானூற்றுப் பாடலும் அளிக்கும்
செய்திகளே உண்மையெனத் தோன்றுகின்றன.
களவழி கூறும் வரலாற்றினைக் கலிங்கத்துப் பரணியும்41
மூவருலாவும்42 உறுதி செய்கின்றன. சேரமானின் இறுதி என்னவாயிற்று என்று
திட்டமாக அறிந்துகொள்ள முடியவில்லை. களவழிப் பதிகம் எழுதியவரும்,
புறநானூற்றுப் பாடல்களின் அடிக் குறிப்பு எழுதியவரும் வெவ்வேறு
காலத்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்கள் ஒருவரோடொருவர் முரண்பட்டுப்
பொய்ச்
40. புறம். 48, 49
41. கலிங். 195.
42. மூவருலா. விக்கி-14. செய்திகளைப் புனைந்து எழுதி வைக்கத் தேவையே இல்லை. களவழிப்
பதிகம் தரும் செய்தி பொய்யாக இருந்திருக்குமாயின் பிற்பட்டு எழுந்த
நூல்களான கலிங்கத்துப் பரணியிலும், மூவருலாவிலும் அது சேர்ந்திருக்காது.
கடைச்சங்கப் புலவர் பொய்கையார் எனபார் ஒருவர் இருந்தார் என்பது
மறுக்க முடியாதது. அவர் புறப்பாடல் இரண்டும்43 நற்றிணைச் செய்யுள்44
ஒன்றும் யாத்துள்ளார். கடைச்சங்க காலத்தில் செங்கணான் என்ற
சோழ மன்னன் ஒருவன் வாழ்ந்திருந்ததும் உண்மையே. அன்பில்
செப்பேடுகளில்45 குறிப்பிடப்படும் நல்லடி என்பவன் அவன் மகன் ஆவான்.
அவனைப்பற்றிய செய்தி ஒன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றில்46
கிடைக்கின்றது. சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை என்பவனே
புறநானூற்றுக் கோக்கோதை மார்பனாக இருக்கலாம் என்பதில் ஐயமின்று.
எனவே, இச் சான்றுகளைக் கொண்டு களவழி நாற்பது கி.பி. மூன்றாம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.
முதுமொழிக் காஞ்சியை இயற்றியவர் கூடலூர் கிழார் ஆவார்.
இவருடைய பாட்டு ஒன்று47 புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. கோச்
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்ததற்கு இவர்
உளம் வருந்திப் பாடிய பாடல் அது. இவருடைய பாடல்கள் மூன்று
குறுந்தொகையிலும் இடம் பெற்றுள்ளன.48 அச் சேரமன்னன் இப் புலவரின்
நெருங்கிய நண்பனாக இருந்தவன். அவனுடைய விருப்பத்தின் மேல் இவர்
ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுத்துக் கொடுத்தார். இவர் கடைச்சங்க
காலத்தவர் என்று இவருடைய புறப்பாடலானும், ஐங்குறுநூற்றுத் தொகுப்பைக்
கொண்டும் அறியலாம்.
களவு ஒழுக்கத்தைப் பாடும் ஆறு நூல்களான ஐந்திணையைம்பது, கார்
நாற்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை,
திணைமாலை நூற்றைம்பது ஆகியவை கி.பி. 4, 5ஆம் நூற்றாண்டுகளில்
தோன்றியவை. அறவொழுக்கத்தைக்
43. புறம். 48. 44.
44. நற்றி. 18.
45. எபி. இந்தி. xv. 5;
46. அகம். 356.
47. புறம். 229.
48. குறுந். 166, 167, 214
கூறும் ஏனைய நூல்கள் கி.பி. 5, 7ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டிருக்க
வேண்டும். மக்கள் தம் வாழ்க்கையில் சிறப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியது
ஒழுக்கமேயாம் என்று இந் நூல்கள் வலியுறுத்துவதாலும், இவற்றின்
ஆசிரியர்கள் பெரும்பாலார் சமணர்களாக இருப்பதாலும், சமண சமயம் உச்ச
நிலையை எய்தியிருந்தபோது, அதாவது சைவ வைணவ பக்தி இயக்கம்
தோன்றும் முன்னர், இவை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பது ஒருதலை.
இவை கூறும் அறம் எச் சமயத்து மக்களுக்கும் பொதுவானதாகும். பொதுமறை
வகுப்பது அக் காலத்து இலக்கியச் சிறப்புகளுள் ஒன்றாகும். இவ்வொழுக்க
நூல்கள் யாவும் இனிய, எளிய நடையில், சுருக்கமான சொற்கட்டுடன்
வெண்பாச் செய்யுள்களால் ஆக்கப்பட்டுள்ளன.
பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பில் திருக்குறள் தலைப்பிடம்
பெறுகின்றது. பழமையான இலக்கியத்தில் இது ‘முப்பால்’ என்றே குறிப்பிடப்
படுகின்றது. திருக்குறள் தோன்றிய காலத்தைப் பற்றி மிக ஆழ்ந்த கருத்து
வேறுபாடுகள் உண்டு. அதனுடைய ஆசிரியரான திருவள்ளுவருக்குப் பிற்கால
இலக்கியங்களில் பல பெயர்கள் வழங்குகின்றன. ஆனால், அவருடைய
வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய உண்மை ஏதும் புலப்படவில்லை.
திருவள்ளுவர் கடைச்சங்க காலத்தவர் என்றும், கி.பி. 1-3
நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவர் என்றும் சிலர் கூறுவர். திருக்குறளில்
மயிற் பீலிகளைப்பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது.49 திருவள்ளுவர் காலத்தில்
மயிற்பீலிகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு போயினர் என்று தெரிகிறது.
சங்ககால மக்கள் பருத்தியையும் பட்டையும் உடுத்தினர். அதற்காக அவர்கள்
பருத்தியை வேண்டுமாயின் வண்டிகளில் ஏற்றிச் சென்றிருக்கக் கூடும்.
ஆனால், வண்டிகளில் ஏற்றிப் போகுமளவுக்கு மயிற்பீலிக்குத் தேவை என்ன
இருக்கின்றது? பண்டைய கிரேக்க, ரோம நாடுகளுடனும், மேலே ஆசிய
நாடுகளுடனும், தமிழகம் விரிவானதொரு கடல் வாணிகம் செய்து வந்த
காலத்தில் மயில் தோகை இங்கிருந்து பெருமளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு
வந்தது. எனவே, ஏற்றுமதிக்கெனவே மயில் தோகைகளைக் கட்டுகளாகக் கட்டி
வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் துறைமுகப் பட்டினங்கட்குச்
சென்றிருப்பர். அதை நேரில் கண்டவராகிய திருவள்ளுவர் மயில்தோகை
வண்டியைத் தம் குறளில் உவமை காட்டியிருப்பார். ஆதலால்
அவர் சங்ககாலத்துக்கும் முந்தியதொரு காலத்தில் வாழ்ந்தவராவார் என்று
சில ஆய்வாளர்
49. குறள் 475.
மொழிவர். கடைச் சங்கத்தாரின் பார்வைக்கு வந்த இறுதியான நூல்
திருக்குறள் என்றும், அவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர் என்றும்,
பிறகு அதை ஏற்றுக் கொண்டனர் என்றும், கடைச் சங்கம் கலைவதற்கு இந்
நிகழ்ச்சியும் ஒரு காரணம் ஆகுமென்றும் கூறும் ஒரு புராண வரலாறும்
உண்டு. இதைக் கொண்டு திருவள்ளுவர் காலத்தைக் கி.பி. மூன்றாம்
நூற்றாண்டு என்று சிலர் அறுதியிடுகின்றனர்.
வடமொழி நூல்களான கௌடிலியம், காமந்தகம், வாத்சயாயனம்
ஆகியவை கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுந்தவை. இவற்றினின்றும் பல
கருத்துகளைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொண்டு அவற்றைத் தம் நூலில்
சேர்த்திருக்கின்றார் என்றும், அதனால் திருவள்ளுவர் கி.பி. ஏழாம்
நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கருதுபவர் உளர். கௌடிலியரின்
அர்த்தசாத்திரத்துக்கும் திருக்குறளுக்குமிடையே கருத்து ஒற்றுமைகள் பல
காணப்படுவது உண்மையே. ஆனால், மனு, காமந்தகர், வாத்சயாயனர்
ஆகியவர்கட்கும் திருவள்ளுவருக்குமிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகளும்
உண்டு.
திருக்குறளானது இல்லறத்தையும், மகளிரின் கற்புத்திறத்தையும்
சிறப்பித்துப் பேசுகின்றது. இப் பண்புகள் மனுதர்மத்துக்குப் புறம்பாகும்.
வாத்சயாயனரின் காமசூத்திரத்துக்கும் திருவள்ளுவரின் காமத்துப்பாலுக்கும்
எவ்விதமான தொடர்பும் இல்லை. பண்டைய தமிழகத்தின் திணை ஒழுக்க
மரபு அடிப்படையில் காதலன்-காதலி, கணவன்-மனைவி ஆகியவரின்
வாழ்க்கை நெறியைத் திருவள்ளுவர் வகுத்திருக்கின்றார். ஒத்த தலைவனும்
தலைவியும் ஒருவரை யொருவர் நேராகக் காணலும், அவர்களை ஊழானது
கூட்டுவிக்க, இருவரும் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொள்ளுவதும், பிறகு
அவர்கள் திருமணம் செய்துகொள்ளுவதும், இடையில் ஏதோ ஒரு
காரணத்தை முன்னிட்டு அவர்களுக்குள் சிறிது காலம் பிரிவு ஏற்படுவதும்,
மனைவி கணவன்பால் ஊடுவதும், கணவன் ஊடலைத் தீர்த்து வைப்பதும்,
பிறகு அவர்கள் கூடுவதும் தமிழரின் வாழ்க்கை முறையெனச் சங்க
இலக்கியங்கள் கூறுகின்றன. அத்தகைய வாழ்க்கையை விளக்கியே
திருவள்ளுவர் காமத்துப்பால் இயற்றியுள்ளார். ஆனால் வாத்சயாயனரோ
ஆடவரும் பெண்டிரும் ஒருவரோடொருவர் கலந்து சிற்றின்பம்துய்க்கும்
வகைகளையும், அச் சிற்றின்பத்தைத் தூண்டிவிடக்கூடிய இலக்கண
முறைகளையும் வகுக்கின்றார். சங்க நூல்கள் பல அகப்பொருளைக் கூறுவன.
சங்கப் புலவர்களுக்குச் சிற்றின்ப நுகர்ச்சியைக் கூறுவது ஒரு கலையாக இருந்து வந்தது. அவர்கள் அனைவருமே வாத்சயாயனரிடம் காம
நூல் பயின்றவர்கள் என்று கூறுவது எள்ளற் கிடமாகும். எனவே, பண்டைய
தமிழ் முறையிலேயே திருவள்ளுவரும் காமத்துப்பாலைப் பாடினார் என்பதில்
ஐயமில்லை. புலன் நுகர்ச்சியும் காதல் வாழ்வும் உலகமக்கள் அனைவருக்குமே
பொதுவாகலின் வாத்சயாயனரிடம் அவற்றை அறிந்து கொள்ளவேண்டிய
தேவை திருவள்ளுவருக்கு ஏற்பட்டிராது.
போருக்குச் செல்லுவதும், பகைவர் கோட்டைகளை முற்றுகை
யிட்டழிப்பதும், பகைக்கு அஞ்சி அரண்கள் கட்டிக் கொண்டு வாழ்வதும்,
பகைவரின் முற்றுகைகளை எதிர்த்து முறியடிப்பதும் உலக நாடுகள்
ஒவ்வொன்றும் இயல்பாகவே மேற்கொண்டிருந்த தற்காப்பு முறைகளாகும்.
இவற்றை ஒரு நாடு பிறிதொரு நாட்டினரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்க
வேண்டும் என்று கருத முடியாது. எனவே, திருவள்ளுவருக்கும்
கௌடிலியருக்கு மிடையே புறத்திணை ஒழுக்கத்தைக் கூறும் வகையில்
ஏதேனும் ஒற்றுமைக் கூறுபாடுகள் காணப்படுமாயின் அவை நேர்வாட்டாக
ஏற்பட்டனவே அன்றித் திருவள்ளுவர் கௌடிலியரிடமிருந்து இக்
கருத்துகளை ஏற்றுக்கொண்டார் என்று திட்டமாய்க் கூற இயலாது.
திருக்குறளில் வடசொற் கலப்பு உளதென்றும், அதனால் அந்நூல்
காலத்தால் சாலவும் பிற்பட்ட தெனவும் சிலர் கருதுவர். ஆரியரின்
குடியேற்றம் விரிவடைந்து வந்ததனாலேயே தமிழில் வடசொற் கலப்புப்
பெருகியிருக்கவேண்டும் என்ற நெருக்கடியில்லை. அறிஞர்கள் எதைப்பற்றி
எழுதுகின்றார்கள் என்பதையும் நோக்க வேண்டும். அவர்கள் எழுதும்
பொருளுக்கு ஏற்றவாறு அயல் மொழிச் சொற்களின் கலப்புக் கூடியும்
குன்றியும் காணப்படுவது இயல்பே. ஆகவே, வடசொற் கலப்பைக் கொண்டு
திருக்குறளின் காலம் சாலவும் பிற்பட்டதெனக் கூறுவதில் எவ்வகையினும்
பொருத்தமேயில்லை. தமிழகத்தில் கி.பி. 1-2ஆம் நூற்றாண்டுகளிலேயே
ஆரியச் சொற்கள் பல தமிழில் இடம் பெற்றுவிட்டன. சங்கப் புலவர்களுள்
சிலர் பார்ப்பனக் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பது இங்கு நோக்கத் தக்கது.
சங்க நூல்களில் காணப்படும் கருத்துகளுக்கும் திருவள்ளுவரின்
கருத்துகளுக்கும் சிற்சில இடங்களில் நெருங்கிய உடன்பாடு காணப்படுகின்றது.
அவற்றுள் சில பின்வருமாறு : 1. ‘நாடாது நட்டலில் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.’ - குறள் 791
‘. . . . . . . . பெரியோர்
நாடி நட்பி னல்லது
நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே.’ - நற்றிணை 32
2. ‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.’ - குறள் 580
‘...முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்.’ - நற்றிணை 355
3. ‘பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நாட்டார் செயின்.’ - குறள் 805
‘பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன்று உடையேன் கொல்லோ.’
- குறுந்தொகை 230
4. ‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.’ - குறள் 60
‘கடவுள் கற்பொடு குடிக்குவிளக் காகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
...நன்ன ராட்டி.’ - அகம் 18
5. ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.’ - குறள் 110
‘நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ.’ - புறம் 34
6. ‘வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.’ - குறள் 85
‘விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்றாங்கு.’
- குறிஞ்சிப் பாட்டு 206-207
மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளிலிருந்து திருக்குறளுக்கும்
சங்க இலக்கியங்களுக்குமிடையே பொதுவாகக் காணப் பெறும் கருத்து ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம். இங்குச் சங்க
இலக்கியக் கருத்துகள் முந்தியனவா, அன்றிக் குறள் கருத்துகள் முந்தியனவா
என்னும் கேள்வி எழுகின்றது. சங்கப் பாட்டுகளில் பல அரிய அறிவுரைகளும்
அறவுரைகளும் பொதிந்து கிடக்கின்றன என்பதும், அறநெறிகளை விளக்கிக்
காட்டவே அப் பாட்டுகளில் பல இயற்றப்பட்டன என்பதும் அனைவரும்
அறிந்த உண்மை. எனவே, அக் கருத்துகளைத் திருவள்ளுவர் தம் நூலிலும்
எடுத்துக் கூறினார் என்பதில் இழுக்கு ஏதும் இல்லை. ஆனால், மிகச் சிறந்த
உலக அறிஞர்களுள் ஒருவரெனப் பாராட்டப் பெறும் திருவள்ளுவருக்கே பல
உயர்ந்த கருத்துகள் தோன்ற, அவற்றை அவர் குறட்பாக்களில் பொதிந்து
வைத்தார் என்பதிலும் பேருண்மை உண்டு. கடைச் சங்ககாலத்திலேயே
திருக்குறளிலிருந்து பல அரிய கருத்துகளைப் புலவர்கள் எடுத்தாளத்
தொடங்கிவிட்டனர். மேலே எடுத்துக் காட்டியுள்ள 34ஆம் புறப்பாட்டில்
அதன் ஆசிரியர், ‘என அறம்பாடிற்றே’ என்று கூறுகின்றார். அறம் என்னும்
சொல் திருக்குறளையே குறிக்கும்.
திருவள்ளுவருக்குப் ‘பொய்யில் புலவன்’ என்றொரு சிறப்புப் பெயர்
வழங்கி வருகின்றது. திருக்குறளிலிருந்து மேற்கோள்கள் எடுத்து ஆள்வதோ,
குறள் கருத்துகளை அப்படியே தம் நூலில் விரவிப் பாடுவதோ சங்கப்
புலவர்கள் மேற்கொண்டிருந்த வழக்கமாகக் காணப்படுகின்றது. எனவே,
கடைச்சங்க காலத்தின் தொடக்கத்திலேயே திருவள்ளுவர் அழியாப் புகழ்
பெற்றுவிட்ட தம்நூலை இயற்றியிருக்க வேண்டுமென்பது அறியக்
கிடக்கின்றது. அப்பெரியார் கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க
வேண்டுமெனத் தோன்றுகின்றது.
மணிமேகலையும் சிலப்பதிகாரமும் தோன்றிய காலத்தை அடுத்து
நோக்குவோம். சங்கம் மருவிய இவ்விரு காப்பியங்களும் தமிழ்மொழியில்
மிகச் சிறந்த இலக்கியங்களாக விளங்க வருகின்றன. சிலப்பதிகாரத்துக்கு உரை
கண்ட அடியார்க்கு நல்லார் அந் நூல் உரைப்பாயிரத்தின் உரையில், ‘அவர்
(சாத்தனார்) மணிமேகலைப் பெயரால் அவள் துறவே துறவாக அறனும் வீடும்
பயப்ப ஒரு காப்பியம் செய்து அமைத்தனம் எனக் கேட்டு, இளங்கோவடிகள்
விரும்பி இவ்விரண்டனையும் ஒரு காப்பியமாக்கி...’ என்று எழுதுகின்றார்.
சிலப்பதிகாரத்துக்கு முன்பே மணிமேகலை இயற்றப்பட்டு விட்டதென இதனால்
அறிகின்றோம். ஆனால், இவ்விரு காப்பியங்கட்கும் இடையிட்ட காலம்
மிகவும் குறுகியதாகவே இருக்கவேண்டும். எனினும், இவ் விரு நூல்களும் ஒரே வரலாற்றின் இரு பகுதிகளாக அமைந்துள்ளன.
மணிமேகலையின் பதிகத்தில் ஆசிரியரின் பெயர் ‘கூலவாணிகன்
சாத்தன்’ என அறிவிக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தின் உரைப் பாயிரத்தில்
இவர் ‘தண்டமிழ்ச் சாத்தன்’ என்றும், ‘மதுரைக் கூலவாணிகன் சாத்தன்’
என்றும் குறிப்பிடப்படுகின்றார். இளங்கோவடிகளைக் கூலவாணிகன்
சாத்தனார் சிலப்பதிகாரத்தை இயற்றும்படி வேண்டினார் என்று இக்
காப்பியத்தின் உரைப்பாயிரம் கூறுகின்றது.
கண்ணகியின் வஞ்சினத்தால் பாண்டி நாடு பல இன்னல்களுக்கு
உட்படலாயிற்று என்றும், பாண்டியன் சாந்தி செய்ய மழைத் தொழில் என்றும்
மாறாதாயிற்றென்றும், அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான்
கண்ணகிக்குத் தானும் பாடி விழாக்கோள் பன்முறை எடுத்தான் என்றும்
இளங்கோவடிகளின் உரைபெறு கட்டுரை அறிவிக்கிறது. இலங்கையின்
வரலாற்றுக்கோவையான மகாவமிசத்தின்படி கயவாகு என்றொரு மன்னன்
கி.பி. 171-196 ஆண்டுகளில் இலங்கையை ஆண்டு வந்தான் என்னும்
செய்தியை அறிகின்றோம். செங்குட்டுவனும் கயவாகுவும் உடன்காலத்தவர்
என்பதையும், கண்ணகியின் வாணாளுக்குப் பின்னர் நடைபெற்ற விழாக்களில்
கயவாகுவும் கலந்துகொண்டான் என்பதையும் மறுப்போரும் உளர்.
பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துக்குப் பாட்டுடைத் தலைவன் சேரன்
செங்குட்டுவன், சிங்களத்து மன்னன் கயவாகுவைப் பற்றியோ, கண்ணகிக்குச்
செங்குட்டுவன் எடுப்பித்த தெய்வப் படிமத்தைப் பற்றியோ, அவன் அதைப்
படைக்க வடநாட்டினின்றும் கல் கொண்டு வந்ததைப் பற்றியோ அந் நூலில்
குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை.50 செங்குட்டுவன் கற்கொணர்ந்து
கண்ணகிக்குப் படிவம் அமைத்ததைக் கூறும் மணிமேகலை கயவாகுவைப்
பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை.51 இவ்வைந்தாம் பத்தைப் பாடிய பரணரும்
இந் நூலிலேயோ, தாம் பாடிய ஏனைய பாடல்களிலேயோ கண்ணகிக்குச்
சிலை எடுத்ததைப் பற்றியோ, கயவாகுவைப் பற்றியோ ஒரு குறிப்பும்
கொடுக்கவில்லை. இதற்குத் தக்க காரணம் இன்னதெனப் புலப்படவில்லை.
சிலர் காட்டுங் காரணங்களும் பொருத்தமானவையாகத் தோன்றவில்லை.
50. சிலப்பதிகாரத்துக் காண்க.
51. மணிமே. 26. 85இவ் வைந்தாம் பத்தைப் பரணர் பாடவில்லை யெனவும் இதன் பாட்டுடைத்
தலைவனான கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் கண்ணகிக்குச் சிலை
எடுப்பித்த சேரன் செங்குட்டுவனும் ஒருவரல்லர் ; இரு வேறு வேந்தர்கள்
என்றும் சிலர் கூறுவர்.52 இதற்குப் போதிய சான்றுகள் அளிக்கப்படவில்லை.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் என்பதையும் அவர்
சேரன் செங்குட்டுவனின் இளவல் என்பதையும் அந் நூற் பதிகமே
தெரிவிக்கின்றது. இக்காப்பியத்தின் வரந்தரு காதையில் இளங்கோவடிகள்
‘வேள்விச் சாலையில் வேந்தன் போந்தபின் யானுஞ் சென்றேன்’53 என்று
கூறுகின்றார். எனவே, இம் மாபெருங் காப்பியத்தின் ஆசிரியர் இன்னார்
எனத் தேடி இடர்ப்படவேண்டியதில்லை. ஆகவே, சிலப்பதிகாரக் கதை
வரலாற்றுச் சான்றுடையது என்பதில் ஐயமேதுமின்று. சேர நாட்டில் பகவதி
என்னும் பெயரில் கண்ணகி வழிபாடு நடைபெற்று வருகின்றது. ‘ஒற்றை
முலைச்சி’ யம்மனுக்காக்கிய கோயிலும் அங்கு ஒன்று உண்டு. கயவாகு என்ற
சிங்கள மன்னன் இலங்கையில் பத்தினி வழிபாட்டைத் தொடங்கிவைத்தான்.
இலங்கை மக்களும் ஆடி மாதந்தோறும் பத்தினி விழா எடுத்து வந்தனர்.
இன்றும் இவ்விழா நடைபெற்று வருகின்றது. அவ்விழாவில் பத்தினிக் கல்
ஒன்றைத் திருவீதிஉலா எடுப்பித்தல் வழக்கமாகவும்உ ள்ளது. அவ்விழாவுக்கு
அந் நாட்டில் ‘பெரிஹரா’ என்று பெயர் வழங்குகின்றது. பெரிஹரா என்றால்
‘பிராகாரம்’ (சுற்றி வருதல்) என்று பொருள்.54 இலங்கையின் வடக்கிலும்,
கிழக்கிலும் பல இடங்களில் கண்ணகி கோயில்கள் எழுப்பப்பட்டிருந்தன.
இன்றும் சில இடங்களில் கண்ணகி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது. சென்ற நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் சமணப்
பெண் தெய்வமான கண்ணகியைத் தமிழர் வணங்கலாகாதெனத் தடுத்துப் பல
கண்ணகி கோயில்களை இராசராசேசுவரி கோயில்களாக மாற்றி
அமைப்பித்தார் எனக் கூறுவர்.
சிலப்பதிகாரத்தில் உலக இயல்புக்குப் புறம்பான தெய்விக நிகழ்ச்சிகள்
பல சேர்ந்துள்ளன. கடவுளர் வானத்தில் பறப்பது, மக்கள் உருமாறுவது,
கற்புடைய பெண்ணைத் தீயும் தீண்ட
52. பதிற்றுப் பத்துச் சொற்பொழிவுகள் (கழகம்)
ஐந்தாம் பத்து. அ.ச. ஞானசம்பந்தன்
53. சிலப். 30. 170. 171.
54. கே. கே. பிள்ளை - தென்னிந்தியாவும் இலங்கையும் பக். 176
அஞ்சுதல், கடவுளர் உலகுக்கு வந்து மக்களுடன் நேருக்கு நேர்
உரையாடுவது, கவுந்தியடிகளின் கோபத்தினால் இரு தூர்த்தர்கள்
நரிகளாகியது, கண்ணகியின் சினத்தினால் மதுரை மாநகர் தீக்கிரையானது,
கண்ணகியும் கோவலனும் வானுலகேறியது முதலிய பல செய்திகள்
நம்பத்தகாத நிகழ்ச்சிகளாக உள்ளன. எனினும், அவற்றைக் கொண்டு
கண்ணகியின் வரலாற்றையே முற்றிலும் ஒரு புனைகதை என்று
தள்ளிவிடக்கூடாது.
இளங்கோவடிகள் இயற்றிய கண்ணகியின் கதை இலக்கியத்துக்குப்
புதியதொன்றன்று எனவும், ஏற்கெனவே தமிழ் இலக்கியத்தில் உள்ள
செய்திகள் சிலவற்றைக் கொண்டு இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப்
பாடினார் என்றும் சிலர் கூறுவர். நற்றிணைப் பாட்டு55 ஒன்றில், ‘ஏதிலாளன்
கவலை கவற்ற ஒருமுலையறுத்த திருமா வுண்ணி’ என்னும் குறிப்பு ஒன்று
உள்ளது. இத் ‘திருமா வுண்ணி’ என்னும் பெயர் கண்ணகியைச் சுட்டுகின்றது
என்று கருதுவர். கூர்ந்து நோக்கின் இத் திருமாவுண்ணியைப் பற்றிய
செய்திக்கும், கண்ணகி வரலாற்றுக்கும் இடையே உற்ற முரண்பாடு நன்கு
விளங்கும். திருமாவுண்ணியைப் பற்றிக் ‘கேட்டோ ரனையா ராயினும்,
வேட்டோரல்லது பிறரின் னாரே’ (அஃதாவது, கேட்டார்களாயினும்
அவளிடத்து அன்பு வைத்தவர் மட்டும் வருந்துவரேயன்றிப் பிறர் வருந்தார்)
என்று அந்நற்றிணைப் பாடல் கூறுகின்றது. ஏதிலாளன் செயலாலே
கவலையுற்ற திருமாவுண்ணி என்பாள் ஒரு பரத்தையாதல் வேண்டும். தான்
காதலித்த தலைவன் தன்னைக் கைவிட்ட காரணத்தினால் வெகுண்டு அவள்
தன் இரு முலைகளில் ஒன்றை அறுத்துக் கொண்டனள். அச் செயல் கேட்ட
அனைவரும் அவளிடத்து இரக்கங் கொண்டனர் ; ஆனால், அவள்
செய்கைக்கு அவர்கள் வருந்தவில்லை. அவளிடத்தில் அன்புடையவர்கள்
மட்டுமே வருத்தமுற்றனர். இப்பாடல் பரத்தை ஒருத்தி பாணற்காயினும்,
விறலிக்காயினும் தன் இன்னலைச் சொல்லுவது போன்று அமைத்த
அகத்துறைப் பாடலாகும். எனவே, இத் திருமாவுண்ணியின் கதையே
சிலப்பதிகாரம் என்னும் மாபெருங் காப்பியமாக மலர்ந்தது என்று கருதுவது
பொருத்தமற்றதாகும். தன்னைக் கைவிட்ட கணவன் மேல் வெகுண்ட
பெண்கள் தன் முலையொன்றை அறுத்துக் கொள்ளும் வழக்கம் தமிழகத்தில்
அந்நாளில் உண்டுபோலும். கண்ணகியைப்பற்றிய வரையில் அவளிடத்து
அன்பு வைத்தவர்கள் என்றும், அன்பு வையாதவர்கள் என்றும் வேறுபாடுகள்
55. நற்றி. 216
வகுக்கும் மரபு இலக்கியத்தில் காணப்படவில்லை யாகையால் கண்ணகி வேறு,
திருமாவுண்ணி வேறு என்று கொள்ளவேண்டும். ஒரு முலையைத் திருகி
எறிந்த பெண்களின் கதைகள் பௌத்த சாசனங்களிலும் இடம் பெற்றுள்ளன.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களும் கி.பி. 8ஆம்
நூற்றாண்டிலோ, அதற்குப் பிந்தியோ கற்பனை செய்யப்பட்ட
இலக்கியப்புரட்டுகள் என்றும், இக் காப்பியங்கள் கூறும் வரலாறுகள் நிகழ்ந்த
காலத்திலேயே தாமும் வாழ்ந்திருந்ததாகக் கூறும் பெயரில்லாப் பொய்யர்
எவரோ இவற்றைப் புனைந்து விட்டனர் என்றும் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
கருதுகின்றார்.56 தமிழ்நாட்டில், கோவலன் கதை பாமர மக்களிடையே வேறு
விதமாகவும் வழங்கி வருகின்றதாகையால் சிலப்பதிகாரக் கதையை நம்பத்தகாத
வெறும் புரட்டு என்பார் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும்,
இவர்களுடைய கருத்துகளை ஆழ்ந்து ஆய்பவர்கட்கு அவற்றின் பயனின்மை
நன்கு புலப்படும். கண்ணகி வரலாற்றுடன் தொடர்புகொண்ட பெரிஹராவிழா
இலங்கையில் பல காலமாக நடைபெற்று வருவதும், கண்ணகி வழிபாட்டைக்
கயவாகுவுடன் இராசாவளி தொடர்புறுத்துவதும் கண்ணகியினுடைய படிவம்
என்று நம்பக்கூடிய வெண்கலச் சிலை ஒன்று இலங்கையில்
கண்டெடுக்கப்பட்டதும் சிலப்பதிகாரத்தின் அடிப்படை வரலாற்றுக் கூறுகளை
மெய்ப்பிக்கின்றன.
வடநாட்டில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற பௌத்த நூலாசிரியரான
புத்தகோசரும், பாலி மொழியில் பல நூல்களை இயற்றியுள்ள புத்த தத்தரும்
உடன்காலத்தவர்கள் ஆவார்கள். இருவரும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர்கள். ‘அபிதம்மாவதாரம்’ என்னும் பெயருள்ள தம் நூலில் புத்த
தத்தர் தம் காலத்தில் வளமலிந்து ஓங்கி நின்ற காவிரிப்பூம்பட்டினத்தைப்
பற்றிய செய்திகள் சிலவும் தந்துள்ளார். களப குலத்து மன்னனான
அச்சுதவிக்கந்தன் என்பவன் ஆட்சியில்தான் ‘விநய விநிச்சயம்’ என்னும் தம்
நூலை எழுதி முடித்ததாக அவர் அந் நூலின் முடிவுரையில் குறித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான்
களப்பிரரும், அச்சுதவிக்கந்தனும் தலைகாட்டுகின்றனர். காவிரிப்
பூம்பட்டினமானது
56. ஹீராஸ் மெமோரியல் செலக்சர்ஸ்-கே.ஏ.நீ.சாஸ்திரி, பக். 55, 56.
அவர்கள் காலமாகிய கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மிகவும் செழிப்புற்று
விளங்கியிருக்கவேண்டுமென்பதில் ஐயமில்லை.

No comments:
Post a Comment