தீதும் நன்றும்
விவசாயி
விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான். தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது.
விதை முளைப்பது, வளர்வது, பூப்பது, காய்ப்பது, கனிவது யாவுமே விவசாயிக்கு நித்திய ஆச்சர்யம். வள்ளலார் சொல்லும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனும்கூற்றுவிவசாய மனதுடன் தொடர்புகொண்ட ஆன்மிக நிலை. விவசாயி எனும்போது, அதில் தமிழ், கன்னட, தெலுங்கு, மராத்திய, வங்காள, ஒரிய என மனநிலைகளில் பேதங்கள் இல்லை. நெல், கரும்பு, வாழை, தெங்கு, மரவள்ளி, சோளம், கோதுமை, கனிகள், காய்கள், கிழங்குகள், பயிறுகள், சிறு தானியங்கள் என எதைப் பயிர் செய்தாலும் அது விவசாயம்தானே!
பயிர் அவனுக்கு உயிர் எனும்போது, அது தாய், தெய்வம், தோழன், காதல் மனையாட்டி, பிள்ளை என சகலத்தையும் அடக்கித்தான். உழைப்பே அவனுக்கு தெய்வம். உழைப்புக்கான பயனை மட்டும் அவன் எடுத்துக்கொள்கிறான்.
சிறுவனாக இருந்தபோது அப்பாவுடன் வயலுக்குப் போவேன். எமக்கு நெல் விவசாயம். ஒரு அறுவடையின்போது, அறுத்துக் கட்டும் வயலில், வழக்கத்துக்கு அதிகமாக நெல்மணிகள் உதிர்ந்திருந்தன. சடையாரி எனும் நெல்லினம். சற்று அதிகமாகவே உதிரும். அப்பாவிடம் கேட்டேன், ”வயலில் உதிர்ந்துபோகும் நெல் அனைத்தும் நமக்கு நட்டம்தானே!”அப்பா சொன்னார், ”அப்படி இல்லலே மக்கா! இந்த மண்ணு நமக்குச் சொந்தமில்லே. இந்த வெயிலு, காத்து, மழை எதுக்கும் நாம துட்டு தாறதில்லே. இந்த உலகத்திலே நம்மளைப்போல காக்கா, குருவி, தவளை, நண்டு, நத்தை, விட்டிலு, தட்டான், பூச்சிகள்னு நெறைய சீவிச்சிருக்கு. இந்த வெளைச்சல்லே அதுகளுக்கும் பங்கு குடுக்கணும். நாம பாடுபட்டதுக்கு உண்டானதை நாம எடுத்துக்கிடலாம். அதுக்கு மேல ஆசைப்படக் கூடாது, கேட்டிடயா?” கதிர் பழுத்து, செஞ்சாலி தலை சாய்த்து, வயல் சேற்றில் ஒட்டிக்கிடக்கும் கதிர் மணிகளைக் களத்துக்குக் கொணர்ந்து, சூடடித்து, முதற்பொலி, இரண்டாம் பொலி தூற்றி, சண்டு சாவி போக்கி, கூம்பாரமாகக் குவிந்து கிடக்கும்போது, வயல்காரன் உட்கார்ந்து பொலியில்கிடக்கும் உறுப்பாங்கட்டிகளைப் பொறுக்கிக்கொண்டு இருப்பான். உறுப்பாங்கட்டி என்பது, மண் புழுக்கள் வெளியேற்றிய சேற்று உருண்டைகள். நெற்கதிரில் ஒட்டிக்கொண்டு களத்துக்கும் வந்துவிடுவது. நெல் அளக்கும்போது, அந்த மண் உருண்டைகள் சேர்ந்துவிடலாகாது என்பதுதான் விவசாயிகள் கரிசனை.
ஆனால், வியாபாரி என்பவனோ, இயந்திரங்கள்வைத்து, உளுந்தின் தரத்தில் மண் உருண்டைகள் தயாரித்து, கலப்படம் செய்பவன். பப்பாளி விதைகளை நல்ல மிளகிலும் புளியங்கொட்டைத் தோலைக் காபிப் பொடியிலும் முனைந்து கலப்பவன். பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படுபவனாக இருந்தால், குழந்தைகள் உணவிலும் நோய்க்கான மருந்துப் பொருட்களிலும் கலப்படம் செய்யத்துணிய மாட்டான் அல்லவா?
விவசாயி என்பவன் வியாபாரி அல்ல. நீங்கள் உழவர் சந்தைக்கு வழக்கமாகப் போகிறவர் என்றால், சந்தையில் உட்கார்ந்து விற்பனை செய்பவரைப் பார்த்தால் தெரிந்துபோகும், அவர் உழவரா… வியாபாரியா என்பது. விவசாயி, பக்காப்படிக்கு முக்காப் படி அளக்க மாட்டார். சொத்தைக் கத்தரிக்காயோ, உடைந்த தக்காளியோ கண்ணில்பட்டால் அவரே எடுத்து மாற்றுவார். வியாபாரி எனில் கண்டும் காணாமல் நிறுத்துப்போடுவார்.
பண்டு காய்கறித் தோட்டங்களில் விவசாயக் குடும்பம் காய் பறிக்கும். வெண்டைக்காய் நீளக் காம்பு இல்லாமல் பறித்துப் போடுவர். இன்று முக்கால் பயிரிலேயே வியாபாரிகள் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கூலிக்கு ஆள்விட்டுப் பறிக்கிறார்கள். அவர்கள் பறிக்கும் வெண்டைக்காய் நீளக் காம்புடன் இருக்கும். அது போல் கேரட், முள்ளங்கி, பீட்ரூட் யாவும் இரண்டு அங்குலத் தழையுடன் இருக்கும். பூக்கோசு நிறையத் தழைகளுடன் இருக்கும். காரணம், எடை ஏற்றம்தான். இது வியாபாரிக்குக் கண்ணுக்குத் தெரியாத வருமானம். நாஞ்சில் மொழியில் சொன்னால், ‘பொத்து வரத்து!’
மேலும், விவசாயியிடம் வாங்கும் ஒரு கிலோ எடை உள்ள பொருளைத் துல்லியமாக வெளியே எடை போட்டால், 50 கிராம் அதிகமாக இருக்கும். வியாபாரியிடம் வாங்கிய பொருளை எடை போட்டால் கிலோவுக்கு 100 கிராம் மாயமாகிப் போகும். அரசாங்கம் முத்திரை, எடைக்கல், தராசு எனச் சட்டங்கள் வைத்திருக்கின்றன. சோதிக்க அதிகாரிகளும் உண்டு. கள்ளன் பெரிசா, காப்பவன் பெரிசா என்பது ஒரு வழக்கு. கள்ளன் கையில் சாவி கொடுப்பது என்பது இன்னொரு வழக்கு.
விவசாயியின் தர்மத்துக்கும் வியாபாரியின் தர்மத்துக்கும் உள்ள வேறுபாடு இது. ஆனால், தர்மவான்கள் படும்பாடுகளைத்தான் உலக இதிகாசங்களில் காண்கிறோமே!
கவியரங்கங்கள்தோறும் முழங்கினார்கள் விவசாயிகளைப் பார்த்து, ‘நீங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால், நாங்கள் சோற்றில் கை வைக்க முடியாது’ என்று. அதில் மயங்கி, உழவர் மெய்யெலாம் சேறாக வயலில் குப்புற வீழ்ந்துகிடக்கலாம். ‘வண்டல் கிண்டி உழுவோன், வரிவில் ஏந்தி நிற்கும் பண்டை விஜயன் போல இந்தப் பாரில் அற்புதப் பொருளாம்’ என்கிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நிலைமை தலைகீழாகவும் எதிர்மறையாகவும் இருக்கிறதே! நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சந்தையில் வெங்காயம் கிலோ 20 ரூபாய் என்றால், விவசாயிக்கு 8 ரூபாய்தான் கிடைக்கும். எந்த விவசாயப் பொருளிலும், விவசாயிக்கும் வாங்குபவனுக்கும் இடையில் மூன்று அல்லது நான்கு பேர் உண்டு, வெவ்வேறு மட்டங்களில் தரகர்கள் எனும் பெயரில். அவர்கள் நுங்கு குடிக்கிறார்கள்; விவசாயி நுங்குக் கூந்தல் நக்குகிறான்.
அதாவது, விவசாயியின் பயன் போய்ச் சேர்வது வேறு ஓர் இடத்தில். துய்ப்பவனுக்கும் அதனால் பலன் இல்லை. வீட்டில் தாய்மார் வெகு வியப்புடன் கேட்பார்கள், ”ஒரு தேங்கா பத்து ரூபாயா?” என. இன்று ஒரு தோப்பில் தேங்காய் வெட்டினால், அதன் காசு தோப்புக்காரனுக்குப் போய்ச் சேருவது 60 நாட்கள் சென்று, அடுத்த வெட்டுக்கு. அதாவது, வியாபாரிக்கு மூலதனம் இல்லாத லாபம். விவசாயிக்கு லாபம் தராத மூலதனம். தேங்காய்க்கு அவனுக்குக் கிடைக்கும் விலை, சந்தையில் விற்கும் விலையில் பாதிகூட இருக்காது. தென்னங்கன்று வாங்கி வந்து, நட்டு, வளர்த்து, நோய்க்குப் பார்த்து, பேய்க்குப் பார்த்து, மண் வெட்டிக் கொடுத்து, களை போக்கி, உரமிட்டு… சொல்வார்கள் – ‘பூட்டு பூட்டா இருக்கு, பெண்டாட்டியைக் கள்ளன் கொண்டுபோனான்’ என்று. அது போல் இருக்கிறது விவசாயி வாழ்க்கை.
விளைந்த நெல் அறுவடையாகி வீடு வந்து சேர நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். அறுக்கு முன் பெருமழை பெய்தால், வைக்கோல்கூடக் கிடைக்காது. வாழைத்தண்டுக் குலை வெட்டு முன் கொடுங்காற்று வீசி இரண்டாக முறிந்துபோனால், உழைப்பு போச்சு. விவசாயிக்கு என்ன பாதுகாப்பு? நகரத்து மனிதனுக்குத் தினமும் ஏழெட்டு இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தொலைபேசியில் தொடர்புகொள்கின்றன. விவசாயியிடம் எவரும் இருக்கிறாயா… செத்தாயா என்றுகூடக் கேட்பதில்லை. பஞ்ச காலங்களில் அவன் பம்மிப் பம்மி நடமாடுகிறான்.
சிறு, குறு விவசாயிகளுக்கு எனப் பயிர் பாதுகாப்புத் திட்டங்கள் ஏதும் உண்டா நமது நாட்டில்? கரும்பின், நெல்லின், கோதுமையின், பாலின் விலைகளைக் கை மீறிப் போகாமல் அரசாங்கம் கவனித்துக்கொள்கிறது. விலைவாசி ஏறிப்போனால் சப்சிடி கொடுத்தோ அல்லது இறக்குமதி செய்தோ சரிக்கட்டிக்கொள்வார்கள். ஆனால், அது இந்திய விவசாயியின் வயிற்றில் அடிப்பதாகச் சமயத்தில் மாறிவிடுகிறது.
அரசு ஊழியர்களுக்கு சம்பளக் கமிஷன்கள் உண்டு. தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுகள், பஞ்சப் படிகள், ஊக்க போனஸ் உண்டு. ஆனால், உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறவன் நாளரு வற்றலும் பொழுதொரு தளர்ச்சியுமாகத் தேய்ந்துகொண்டு இருக்கிறான். அரிசி, கோதுமை, சர்க்கரை, பால் என அரசு நிர்ணயித்திருக்கும் விலை, நிறுவனவயப்பட்ட ஊழியர்கள், தொழிலாளர்களைப் பாதுகாப்பதாகவும் விவசாயிகளின் முதுகெலும்பை முறிப்பதாகவும் இருக்கிறது. அரசியல்வாதிகளின் விவசாய ஆதரவுப் பேச்சு என்பதெல்லாம் புழுங்கிய நெல்லை முளைக்கவைக்கும் ஏமாற்றாக இருக்கிறது.
ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 1935-ல் 15 ரூபாய். 1959-ல் 60 ரூபாய். 1992-ல் 3 ஆயிரம் ரூபாய். 2009-ல் 10 ஆயிரத்து 500 ரூபாய். இந்த விகிதத்தில் 1935-ல் குவிண்டாலுக்கு 5 ரூபாயாக இருந்த நெல், இன்று என்ன விலையாக இருக்க வேண்டும்? மூன்றுக்கு ஒன்று எனும் விகிதத்தில், நெல்லும் பொன்னும் எனில், இன்று நெல் விலை குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 500 என விற்க வேண்டும். ஆனால், அறுவடைக் காலமான தை மாதத்தில், நாஞ்சில் நாட்டில் இன்று நெல் விலை குவிண்டாலுக்கு 965 ரூபாய்.
மக்கள் தொகைப் பெருக்கத்தினால், தேவை பொன்னுக்கு மட்டுமின்றி நெல்லுக்கும்தான் அதிகரிக்கிறது. சிலர் கேட்பார்கள், பொன்னைத் தின்ன முடியுமா என்று. அது போல் வெறும் மண்ணையும் தின்ன முடியாது என்பது நமக்கு அர்த்தமாவதில்லை.
தினமும் 24 மணி நேரமும் பிரதான தொலைக்காட்சி அலைவரிசைகளில் பொன்னின் விலை வரி வரியாக ஓடுகிறது. எவனாவது நெல்லின், கோதுமையின் விலை பற்றிச் சொல்கிறானா?
விவசாயிகளை இந்தியத் தாய் மண்ணின் முதுகெலும்பு எனப் பீத்துகிறார்கள். ஆனால், அந்த முதுகெலும்பு முறிந்தும், தண்டுவட வளையங்கள் கழண்டும், கூன் விழுந்தும் கிடக்கிறது என்பதை எவரும் கண்டுகொள்வதில்லை.
ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்று அரசாங்கங்கள் கோஷம் போட்டதும் இந்த நாட்டில்தான். ஜவான் எனில் ராணுவ வீரன்… கிஸான் எனில் உழவன்.
ஆனால், 1997 முதல் 2007 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் நம் நாட்டில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 18,300 பேர்.
இவர்களில் யாரும் காதல் தோல்வியாலோ, கிரிக்கெட் தோல்வியாலோ, அபிமான சினிமா நடிகை திருமணம் செய்துகொண்டதாலோ, வயிற்று வலியாலோ சாகவில்லை. கடன் தொல்லையால், வட்டி கொடுக்க முடியாமல், பயிர்களின் நட்டங்களினால் தற்கொலை செய்துகொண்டவர்கள். போர்களில் இறக்கிறவர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகமானது. இதை அற்புதம் என்பீர்களா, திருவருள் என்பீர்களா?
ஓர் இந்திய விவசாயி, துன்பம் தாளாமல் தனது குறியை அறுத்து ரத்தத்தை சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்த செய்தியை உங்களால் நம்ப இயலுமா?
உலகமயமாதல் என்கிறார்கள். உலகம் ஒரே கிராமம் என்கிறார்கள். தகவல் தொலைத்தொடர்பு, விஞ்ஞான வளர்ச்சி என்கிறார்கள். சந்திரனுக்கு விண்கலன்கள் ஏவப்பட்டாயிற்று. ஏவுகணைகள் கண்டம் விட்டுக் கண்டம் பாய்வன. தயார் நிலையில் உள்ளன. அணுகுண்டு ஆயத்த நிலையில் சாவு சுமந்து ஓய்வுகொள்கின்றன. ஆனால், சபிக்கப்பட்ட உழவர் இனத்துக் கண்ணீர் மஞ்சளுக்குப் பாய்ந்து இஞ்சிக்கும் பாய்ந்துகொண்டு இருக்கும்.
அரசாங்கம் எத்தனை புனுகு, சவ்வாது, சந்தனம் பூசினாலும், பிற வாசனைத் திரவியங்களைக் கொட்டி நிரப்பினாலும் இந்தத் துயரத்தின்… அவமானத்தின் நாற்றம் மாய்த்துப்போகுமா?
இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமாக விவசாயி படும் பாட்டைப் பரணியாக, கலம்பகமாக, அந்தாதியாகப் பாட இயலுமா எவராலும்? யாருக்காக நடக்கின்றன இங்கு அரசாங்கங்கள்?
விவசாயத்தை வாழ்நெறியாகக்கொண்ட வாக்காளப் பெருமக்கள் நல்ல மழை பெய்யாதா, நாட்டு வளம் பெருகாதா என ஏங்கிய காலம் போய், இன்று எம்.எல்.ஏ சாவாரா, இடைத் தேர்தல் வாராதா என ஏங்கும் காலம் வந்துகொண்டு இருக்கிறது போலும்!
No comments:
Post a Comment