Sunday, 8 February 2015

மொழியின் பயணம்!

மொழியின் பயணம்!

மொழியின் பயணம்!  

மொழி என்பது அறிவு கிடையாது. அது மனிதர்கள் அறிவால் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்கள் அறிவு, மொழி வழியாகச் சொல்லப்படுகிறது. அதோடு, அறிவைப் பெறுவதற்கு மொழி ஒரு காரணமாக இருக்கிறது.
மொழி வழியாக யாரும் சிந்திப்பதில்லை. தன் சிந்தனையில் தோன்றிய கருத்துகளை, கண்ட காட்சிகளை, கற்பனைப் புனைவுகளை மொழி வழியாகச் சொல்ல முடிகிறது. அதன் காரணமாகவே, மனிதர்களின் மகத்தான கண்டு பிடிப்புகளில் மொழி முதல் இடத்தில் இருக்கிறது.
மொழி மனிதர்களின் முதல் கண்டுபிடிப்பல்ல. பலவிதமான கருவிகளைக் கண்டுபிடித்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் பேசும் மொழியைக் கண்டு பிடித்துக் கொண்டார்கள். அது வெளியில் இருந்து - இன்னொரு பொருளில் இருந்து உருவாக்கப்படவில்லை. தன் உடம்பில் இருக்கும் வாய், மூக்கு, நாக்கால் எழுப்பப்படும் ஒலியில் இருந்து உருவாக்கப்பட்டது.
மொழி என்பது ஒலி. அதாவது சப்தம். மொழி திருத்தம் பெற்று ஐம்பதாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று சரித்திரம் பற்றி ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட எல்லா மொழிகளும் எப்போதும் நீடித்திருப்பதில்லை. புலம் பெயர்வு, போர், இயற்கை இடர்கள், அரசின் ஆணை - இவற்றால் பல மொழிகள் மறைந்து விடுகின்றன. பண்டைய காலத்தில் இருந்த எகிப்து, கிரேக்கம், யவனம், மாயன், சிந்துவெளி மக்கள் பேச்சு மொழிகள் எல்லாம் மறைந்துவிட்டன. ஆனால், எழுதப்பட்ட மொழிகள் படிக்கப்படுகின்றன.
ஏசுநாதர் பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியாவை ஆண்ட ஹம்முராபி என்ற மன்னன் அக்காட்டன் மொழியில் சட்டம், நீதி பற்றி 282 கல்வெட்டுகளில் பொறித்து வைத்திருக்கிறான். அசோகர் பாலி மொழியில், பிராமி எழுத்துகளில் பாறைகளில் எழுதி வைத்திருக்கிறார்.
தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பனைவோலைகளில் எழுதி வைத்திருத்த கவிதைகள் படிக்கக் கிடைக்கின்றன. மனித அறிவு, ஞானம் என்பது ஒரு மொழிக்குத்தான் சொந்தம் என்பதில்லை.
மக்கள் உள்ளக்கிடக்கையை, அன்பை, காதலை, இறை நேசத்தை, பரிவை சொல்லிக் கொண்டிருந்த மொழியை ஆட்சியாளர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஹம்முராபி போல குற்றம், தண்டனை என்றார்கள். மொழி பயங்கரமான ஆயுதமாகியது. போர் பிரகடனங்கள் செய்தார்கள். வரி வசூல் பண்ணினார்கள். எளிய மக்களின் அந்தரங்கப் புரிதல் சார்ந்திருந்த மொழி அதிகார ஆயுதமாக மாறியது.
600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மொகலாய ஆட்சி ஏற்பட்டதும் பாரசீகம் ஆட்சி மொழியானது. பெரும்பான்மையான மக்கள் அறியாத ஒரு மொழி ஆட்சி அதிகாரம் செலுத்தியது. ஆனால், மக்கள், கவிஞர்கள் தங்கள் தாய்மொழியில் பேசிக் கொண்டும் கவிதைகள் புனைந்து கொண்டும் இருந்தார்கள்.
500 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றார்கள். கிறிஸ்துவ பாதிரிகள் உடன் சென்றார்கள். தொழில் புரட்சி, அச்சு புத்தகங்கள், மொழி, அறிவு என்பவற்றை முன்னெடுத்துச் சென்றனர். பலவிதமான பனுவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் - என்று பல நாடுகளிலும் கிறிஸ்துவ சமயமும் ஆங்கில மொழியும் முதன்மை பெற்றன.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது. பாதிரிகள் சமய நோக்கத்தோடு இந்தியாவின் பல பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார்கள். அவற்றில் ஐரோப்பிய முறையைப் பின்பற்றி கணிதம், வாணிபம், தொழில் ஆங்கில மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தப் படிப்பில் இந்தியாவில் இருந்த சம்ஸ்கிருத, பாரசீக முறை சார்ந்த சமயக் கல்வி இல்லை. பொதுவான படிப்பு.
பாதிரியார் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் அரசு வேலைக்கு வந்தார்கள்; சம்பளம் வாங்கினார்கள்; புதிய வாழ்க்கை ஏற்பட்டது. அரசுக்கு ஏராளமான பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். உயர் அதிகாரம் கொண்ட வேலைகள் பார்க்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். சிறிய வேலைகளைப் பார்க்க இந்தியர்களைத் தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல மொழிகள் கொண்ட நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு எந்த மொழியைக் கற்றுக் கொடுப்பது? அரசு நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்ற பிரச்னை ஏற்பட்டது.
இந்திய சமூக சீர்திருத்தவாதியான ராம் மோகன்ராய் இந்தியர்களுக்கு சம்ஸ்கிருதம், அரபு, பாரசீகம் ஆகிய மொழிகளில் கல்வி கற்பிக்கக் கூடாது. ஆங்கில மொழி ஒன்றில்தான் கல்வி கொடுக்க வேண்டும். அதுவே அவர்களை நவீன மனிதர்களாக்கும் என்றார்.
1818-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆங்கிலவழி பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். கொல்கத்தா தலைநகரமாக இருந்தபடியால் பலரும் ஆங்கிலம் படித்தார்கள். பெரிய வேலைகளுக்குச் சென்றார்கள். அதைக்கண்டு இந்தியர்கள் ஆங்கிலம் படித்தால்தான் சர்வதேச மைய நீரோட்டத்தில் தன் மேதைமையை நிலைநாட்ட முடியும் என்று நம்பினார். அரசுக்கு நிறைய கோரிக்கைகள் அனுப்பி வைத்தார். அவர் உயிரோடு இருந்தவரையில் அவர் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறவில்லை.
கவர்னர் ஜெனரலாக பெண்டிங் இருந்த காலத்தில் கவனிப்பு பெற்றது. அவர் 1832-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும், சரித்திர ஆசிரியருமான தாமஸ் பாபிங்டன் மெக்காலேவிடம் இந்தியர்களுக்கு எந்த மொழியில் கல்வி கற்றுக் கொடுப்பது என்று பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்தியர்கள் தங்கள் பெருமைகள் மீது அவநம்பிக்கை கொள்ளவும், அடிமைகள் போல வேலை செய்யவும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மெக்காலே பரிந்துரைத்தார்.
1835-ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் ஏற்பட்டதும் ஆங்கிலமே உயர் கல்விக்கான மொழியாகியது. இந்திய சரித்திரத்தில் அடிமைத்தனத்தை படிப்பு வழியாகக் கொண்டுவர முயற்சித்தவர் என்றும், கொல்லும் மொழியைக் கொண்டு வந்தவர் என்றும் மெக்காலே விமர்சிக்கப்படுகிறார்.
மெக்காலே ஆசைக்கு விரோதமாகவே ஆங்கிலம் இந்தியாவில் செயல்பட்டது. இந்திய மக்கள் ஆங்கில மொழி அறிவால் தங்களை அறிந்து கொண்டார்கள். அடிமைத் தனத்தை ஒழிக்கத் தீவிரமாகச் செயல்பட்டார்கள். பல்வேறு மொழிகளால் பிரிந்திருந்த மக்களை ஆங்கில மொழியே ஒன்று சேர்த்தது. இந்திய மொழிகளை தன்போக்கில் வளர்த்தது.
ரவீந்திரநாத் தாகூர், சுப்பிரமணிய பாரதியார், அரவிந்தர், விவேகானந்தர் - எல்லோரும் ஆங்கில மொழி வழியாக உருவானவர்கள்தான். அவர்களுக்கு ஆங்கிலம் என்பது இந்தியர்களோடும் - சர்வதேச விற்பன்னர்களோடும் தொடர்பு கொள்வதற்கான மொழியாக இருந்தது. சர் சி.வி. ராமன் தன் ஆய்வுகளை ஆங்கிலத்தில் எழுதித்தான் நோபல் பரிசு பெற்றார். அமர்த்யா சென்னும் அதே பாணியில்தான் பயணித்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் ஜவாஹர்லால் நேரு. அவர் தாய்மொழி காஷ்மீரி. உத்தர பிரதேசத்தில் வாழ்ந்ததால் ஹிந்தி. ஆனால், அவர் படிப்பு மொழி ஆங்கிலம். ஒரு புத்தகம்கூட அவர் காஷ்மீரியிலோ, ஹிந்தியிலோ எழுதவில்லை.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தார். அவர் ஆரம்பப் படிப்பு மராத்தியில்தான் இருந்தது. பின்னர், அவர் ஆங்கிலம் படித்தார். அதுவே அவர் மொழியாகிவிட்டது.
தன் வாழ்க்கையின் நோக்கத்தையும், தன் மேதைமையையும் அதன் வழியாகவே புலப்படுத்தினார். அவர் மராத்தி மொழியில் அதிகம் எழுதவில்லை.
மகாத்மா காந்தி தாய் மொழி குஜராத்தி. பிரிட்டன் சென்று ஆங்கிலம் படித்து பாரிஸ்டராகி இருந்தார். தென்னாப்பிரிக்காவில் பதினைந்து ஆண்டுகள் நிற வெறி, இன வெறியை எதிர்த்துப் போராடியபோது தமிழ், உருது, இந்துஸ்தானி, ஆங்கிலம் படித்துக் கொண்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்கியபோது ஆங்கில மொழிக்கு எதிராக இருந்தார். சுதந்திர நாட்டில் அன்னிய மொழி ஆட்சி மொழியாக இருக்க முடியாது என்றார். ஹிந்துஸ்தானிதான் இந்திய ஆட்சி மொழி என்பதில் அதிகமான அக்கறை காட்டினார். ஆனால், அவர் கைமீறி ஹிந்தி ஆட்சி மொழியாகி விட்டது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் ஆங்கில மொழியை அடிமைத்தனத்தின் எச்சமாகவே கருதினார்கள்.
அவர்களின் நோக்கம் அன்னிய மொழியை நீக்கிவிட்டு தாய் மொழியில் படிப்பைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான். அதோடு, நிர்வாகம் தாய் மொழியில் நடைபெற வேண்டும் என்பதாகவும் இருந்தது.
22 மொழிகள் பிரதானமான பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் உள்ள இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி ஒன்றுதான் என்று அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பல மொழிகள் கொண்ட நாட்டில் ஒரு மொழிதான் ஆட்சி மொழி என்பதால், மாநில மொழிகள் இயல்பாகவே காலப் போக்கில் அழிந்துவிடும். உயர் கல்வி, ஆய்வுக்குப் பயன்படாத தேச மொழி மறைந்து போய்விடும்.
அறிவே மொழி இல்லை. தாய் மொழி, தேச மொழி, ஆட்சி மொழி, இறை மொழி என்பதற்காக ஒரு மொழி நீடித்து இருக்க முடியாது. வளமான வாழ்க்கையைத் தரும் மொழி, தன் மேதைமையை நிலைநாட்டப் பயன்படும் மொழிதான் வெல்லும் மொழியாக இருக்கும்.
அதனால்தான், உலகம் முழுவதிலும் ஆட்சி மொழிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில். ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஆட்சி மொழியை வெல்லும் மொழியாக ஆங்கிலம் வருகிறது.
ஆதிமனிதர்கள் ஒரு மொழியைப் பேசிக் கொண்டு நல்வாழ்க்கையைத் தேடி புலம் பெயர்ந்து சென்றார்கள். பெரும் கூட்டமாகச் சென்ற அவர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்தார்கள். அதனால், புதிய புதிய மொழிகள் தோன்றின.
அவர்களின் நீண்ட பயணம் திரும்புகிறது. ஆதியில் அவர்கள் பேசிய மொழி என்னவென்று பெயர் சொல்லத் தெரியவில்லை. ஆனால், தற்போது கற்கத் தலைப்பட்டிருக்கும் மொழி தெரிகிறது.
அது ஆங்கில மொழி

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...