Sunday, 8 February 2015

ரௌத்திரம் பழகு…


ரௌத்திரம் பழகு…

ரௌத்திரம் பழகு...
பாரதியின் படைப்புகளில் என்னை மிகவும் ஈர்த்தவைகளில் ஒன்று அவனது ”புதிய ஆத்திச்சூடி”.வாமனன் போல் இரண்டு வார்த்தைகளில் உலகளந்திருப்பான்.இரண்டு அடிகளில் குறள் சொன்ன வள்ளுவனே கூட கொஞ்சம் பொறாமை கொள்ள வேண்டி வரும் இவனது இந்த படைப்பை படிக்க நேர்ந்தால்.மிகப் பெரும் தத்துவங்களையும்,வாழ்வியல் நெறிமுறைகளையும் இரண்டே வார்த்தைகளில் அநாயசமாக சொல்லியிருப்பான்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு புது அர்த்தங்களை நமக்கு கற்பிக்கும் வல்லமை அந்த வார்த்தைகளுக்கு உண்டு.
உதாரணமாக……..
“ரௌத்திரம் பழகு”-மேலோட்டமாக பார்த்தால் அநீதிகளூக்கு எதிராக சினம் கொள் என சொல்வதாகவே புரியும்.ஆனால் அது சரியாக படவில்லை எனக்கு.ஏனென்றால் அவன் ’ரௌத்திரம் கொள்’ என சொல்லவில்லை மாறாக ரௌத்திரம் பழகு என்கிறான்.’பழகுதல்’ என்றால் தெரிந்துகொள்ளுதல், பக்குவப்படுதல்,தேர்ச்சிகொள்ளுதல் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியதாகும்.உளியின் வலி தாங்கும் கற்களே சிலையாவது போல் தன் ரௌத்திரத்தை தனக்குள் அடைகாக்க தெரிந்தவனே வாழ்வில் தான் கொண்ட இலக்கை சென்று அடைகிறான்.
ஏனென்றால் ரௌத்திரம் என்பது தீக்குச்சியின் முனையில் தோன்றும் நெருப்பை போன்றது.அதை காட்டுத் தீ போல் பரவவிட்டு அழிவையும் ஏற்படுத்தலாம் அதேநேரத்தில் அதை சரியாக அடைகாத்து சரியான வகையில் பயன்படுத்தினால் இரும்பையும் உருக்கலாம்.
இன்று நமது தேசத்தின் பிரச்சனையே இது தான்.இளைய தலைமுறையினர் ரௌத்திரம் கொள்கிறார்களே தவிர ரௌத்திரம் பழகவில்லை.
ரோட்டில் ஒருவன் தற்செயலாக தனது வாகனத்தின் மீது மோதி விட்டால் போதும்.உடனே தனக்கு தெரிந்த எல்லா வசைசொற்களையும் அவன் மீதும் அந்த இடத்திலே இல்லாத அவனது குடும்பத்தார் மீதும் பிரயோகம் செய்வார்கள் அப்படியும் ரௌத்திரம் தீரவில்லையா? அவனை இழுத்து போட்டு அடிக்கவும் கூட செய்யும் இந்த தலைமுறையினர் ஒரு போதும் தன்னையும்,தனது தேசத்தையும் சுரண்டும் அரசியல் விற்பன்னர்களுக்கு எதிராகவோ,கடமையை செய்ய கையூட்டு கேட்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவோ,கல்வியையும்,மருத்துவத்தையும் வியாபாரமாக்கி கொழுக்கும் பெரும் முதலாளிகளுக்கு எதிராகவோ,ஜாதி,மத வெறிபிடித்த சமூகவிரோதிகளுக்கு எதிராகவோ ரௌத்திரம் கொள்வதில்லை.
தனக்கு நேர்ந்த அவமானத்தில் விளைந்த தனது ரௌத்திரத்தை தனக்குள் அடைகாத்து நிறவெறிக்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்து அதில் வெற்றியும் பெற்ற ஒரு மாபெரும் தலைவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்த விரும்புகிறேன்……
தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருந்த அந்த இளைஞன் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தான் என்பதற்காக முதல் வகுப்பு பயணச்சீட்டு அவனிடம் இருந்த போதும் நிறவெறி பிடித்த வெள்ளை அதிகாரி ஒருவனால் வெளியில் தள்ளப்படுகிறான்.
தான் தள்ளப்பட்ட PIETERMARITZBURG என்னும் ரயில் நிலையத்திலே நிற்கும் போது அவன் மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றுகிறது ஒன்று அவமானம் தாங்காமல் தாய் நாடு திரும்புவது மற்றொன்று தன்னைப் போல் அங்கு நிறவெறிக்கு ஆளாகி அடிமைகளாக வாழும் மக்களுக்காக நிறவெறியை எதிர்த்து போராடுவது.
அவனது மனதில் இரண்டு எண்ணங்கள் தோன்றினாலும் அவனது மனம் தேர்வு செய்தது இரண்டாம் வழியை தான்.
அவன் அன்று தனது ரௌத்திரத்தை அடைகாத்து, தேசம் தாண்டியும் மத ரீதியில் பிளவுண்டு கூலிகளாகவும்,கொத்தடிமைகளை போலவும் வாழ்ந்து வந்த, தனது தேசத்தாருக்கு ரௌத்திரம் பழக்கினான்.அவனது ரௌத்திரம் அவர்களுக்கு அங்கு ஒரு விடியலை தந்தது.
அதை விடுத்து அவன் அன்று தன்னை ரயிலிருந்து தள்ளிய அதிகாரியை ரௌத்திரம் தாளாமல் திருப்பி தாக்கியிருப்பானேயானால் அவன் கைது செய்யப்பட்டிருப்பானே ஒழிய ஒருபோதும் அங்கு நிறவெறிக்கு தீர்வு பிறந்திருக்காது.
அன்று கோபம் கொண்டு நிறவெறியால் தள்ளிய அந்த வெள்ளை அதிகாரியின் பெயருக்கு சரித்திரத்தில் இடமில்லை.ஆனால் அன்று முதல் வகுப்பில் இடமில்லை என நிறவெறியோடு தூக்கியெரியப்பட்டபோதும் தனது ரௌத்திரத்தை அடைகாத்துக் கொண்டு மக்கள் எழுச்சிக்கு வித்திட்ட அன்றைய இளைஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியே சரித்திரமானார்.
ஆகவே தோழர்களே!
நாம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பினும் நமது ரௌத்திரத்தை நாம் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை என்றால் நமது நியாயம் கூட மற்றவர்களுக்கு அநியாயமாகவே படும்.ஆதலால் ரௌத்திரம் பழகுவோம்…

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...