Monday 9 February 2015

பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 03

                         பண்டைத் தமிழரின் வாழ்க்கை - 03

கல்வி 

     சங்ககாலத் தமிழர் கல்வியின் சிறப்பை நன்கு உணர்ந்திருந்தனர்.
கல்வியைப்பற்றிப் பேசும் அதிகாரங்கள் நான்கு திருக்குறளில்
சேர்க்கப்பட்டுள்ளன.192 குற்றமறக் கற்க வேண்டுமென்றும், கற்ற பின்பு தாம்
கற்ற வழியே நடக்கவேண்டும் என்றும், கல்வி கற்கக் கற்க அறிவு சுரந்து
கொண்டே போகும் என்றும், கல்வி கற்ற ஒருவனுக்கு உலகம் முழுவதும் தன்
சொந்த ஊராகவே தோன்றும் என்றும், கல்விச் செல்வம் ஒன்றே அழியாச்
செல்வமாம் என்றும், கல்லாதவன் மேனியழகு ஒரு பொம்மையின் அழகுக்கு
நிகராம் என்றும் கல்வியைவிடக் கேள்வியே மேம்பட்ட தென்றும், யார் யார்
என்ன சொன்னாலும், அதை ஆராய்ந்து அதனுள் காணக்கூடிய உண்மையை
ஓர்வதே நல்லறிவு என்றும் திருவள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

     கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட ஒரு சிலரின்
உரிமையாக இருந்ததில்லை. எக் குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும்,
வறியோரும், மன்னரும் எளிய குடிமக்களும் ஆகிய ஆண்களும் பெண்களும்
கல்வியைத் தேடிப் பெற்றனர். இளைஞர்கள் மணமான பிறகும் தங்கள்
மனைவியைப் பிரிந்து சென்றேனும் கல்வி கற்பதுண்டு. இளமையிலேயே
கல்விப் பயிற்சி தொடங்கிற்று என்பதனை ‘இளமையிற் கல்’ என மூதுரை
எடுத்துக்காட்டுகின்றது. அறிஞர் அமர்ந்திருந்த ஓரவையின் முன்னணியில்
அமர்த்தப்பெறும் வாய்ப்பைத் தம் மகனுக்கு ஒவ்வொரு தந்தையும் தேடிக்
கொடுக்க வேண்டு மென்பது தமிழர் கண்ட அறம்.193 ‘ஈன்று புறந்தருதல்
என்தலைக் கடனே, சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்று
பெண்கள் கருதினர்.194 ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால்
ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும், அவன்கண் படுமே.’195 ஆதலினால்
குல வேறுபாடு நோக்காமல் மக்கள் அனைவருமே கல்விப் பயிற்சியில்
ஈடுபட்டிருந்தனர். உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், ஆசிரியரிடம்
அடக்கமாகவும் அன்பாகவும் அமர்ந்து கல்வி கற்க வேண்டுமெனப் பாண்டிய
மன்னன் ஒருவன் கூறுகின்றான்.196 கல்விப் பயிற்சிக்கு வறுமை
நேர்ப்பகையாகும்.197 

     191. நற்றி. 113.
     192. குறள், 40-43 அதிகாரங்கள்.
     193. குறள். 67.
     194. புறம். 312.
     195. புறம். 183.
     196. புறம். 183.
     197. புறம்.266 : 13; பெரும்பாண், 22 (நச்சி);
         குறள். 1043; மணி.11 : 76-80

ஒவ்வோர் ஊரிலும் பள்ளிகள் நடைபெற்று வந்தனவா என்பதும்,
பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் பயின்றனர் என்பதும் தெரிந்து
கொள்ளுவதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஒவ்வோர் ஊரிலும் கல்வி
பயிற்றும் கணக்காயர் இருந்தனர். ‘கணக்காயர் இல்லாத ஊரும்...நன்மை
பயத்தல் இல’ என்று நூல்கள் கூறுகின்றன.198 கிடங்கில் குலபதி
நக்கண்ணனார் என்றொரு சங்கப் புலவர் இருந்தார். ஆயிரவருக்கு மேற்பட்ட
மாணவர்களை ஒன்று கூட்டி அவர்கட்கு அவர் கல்வி பயிற்றி வந்தார் என
அறிகின்றோம்.199 பதினாயிரம் மாணவர்கட்குக் கற்பித்தவர்கட்குத்தான்
‘குலபதி’என்னும் பட்டம் உரிமையாகும். கல்வி பயிற்றப்பட்ட இடம் ‘பள்ளி’
எனப்பட்டது. பெரும்பாலும் திண்ணைகளிலேயே பள்ளிகள் நடைபெற்று
வந்தன. மாணவர்கள் ஓலையின்மேல் எழுத்தாணி கொண்டு எழுதினர்.
கல்வியின் பயன் கடவுளையறிதலே என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது.200
மாணவர்கள் கல்வி பயிலும்போது இரந்துண்ணும் பழக்கம் அக் காலத்தில்
இருந்து வந்ததென அறிகின்றோம்.201 இரந்து உண்டு கல்வி பயிலுவது 
உயர்ந்த பண்பாடாகக் கருதப்பட்டது. கல்விப் பயிற்சியுடன் அறிவு 
வளர்ச்சியும் இணைந்து சென்றது. பல குலத்தைச் சார்ந்த புலவர்கள்
தமிழகமெங்கணும் உலவி வந்ததையும், மன்னருதவியுடன் மதுரையில் 
அவர்கள் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்து வந்ததையும் நோக்குங்கால் அப்
புலவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டும், கற்றும், அவற்றின்
பொருளையுணர்ந்தும், அவற்றால் பயன்பட்டும் வாழ்ந்து வந்த பொதுமக்கள்
நாடெங்கும் நிரம்பியிருந்தனர் என்று ஊகிக்கலாம். தமிழ் மன்னருடன் 
தமிழ்ப் புலவர்களும் மக்களின் பாராட்டையும் மதிப்பையும் பகிர்ந்து
கொண்டனர். 

     ஆசியர்களுக்குப் பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் மக்கள்
கல்வி பயின்றனர். எனினும் கபிலர், பரணர், திருவள்ளுவர், நக்கீரர் போன்ற
பெரும் புலவர் பலர் சங்ககாலத்தில் வாழ்ந்துவந்தனர். ஒருவருடைய
புலமையை அறிஞர்கள் எளிதில் ஒப்புக்கொள்ளுவதில்லை. அவருடைய
பாடல்களோ நூல்களோ தமிழ்ச் சங்கத்தார் முன்பு அரங்கேற்றம் பெற
வேண்டும். சங்கப் புலவர்கள் அப் புலவரைப் புலமை நிரம்பிய சான்றோன்
என ஒருங்கே ஒப்புக்கொள்ளவேண்டும். கூத்தும் இசையும் மன்னரின் முன்பு
அரங்கேற்றிவைக்கப்பெற்றன. பல துறைகளில் புலமை சான்ற பேரறிஞர்கள்
போலி ஆசிரியரை 

     198. திரிகடுகம். 10.
     199. குறுந். 252. 
     200. குறள். 2
     201 குறுந். 33.

அறைகூவி அழைத்து அவர்களுடன் சொற்போர் புரிந்து அவர்களைத்
தோல்வியுறச் செய்து நல்லறிவு புகட்டுவது அக்கால வழக்கமாகும்.202 

     மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைபாடினியம் ஆகிய இலக்கண
நூல்களையும் பயின்றனர்.203 ஏரம்பம் என்றொரு கணித நூல் 
பழந்தமிழகத்தில் வழங்கி வந்தது.204 அது இப்போது மறைந்து போயிற்று.
கணிதத்தில் மிக நுண்ணிய அளவையையும், மிகப் பெரிய அளவையையும்
கையாண்டு வந்தனர். மிக நுண்ணிய நீட்டலளவைக்குத் தேர்த்துகள் என்று
பெயர். இருண்ட அறையொன்றன் கூரையினின்றும் பாயும் ஞாயிற்றின்
கதிரொளியில் மிதந்தோடும் துகள் எட்டுக் கொண்டது ஒரு தேர்த்துகளாகும்.
மிகப் பெரிய எண் வெள்ளம் என்பது. மக்களுக்கு வானவியல் புலமையும்
இருந்தது. வானவியல் புலவர்கட்குக் கணிகள் என்று பெயர்.205 கோள்கள்,
அவற்றின் செலவுகள், நாண்மீன்கள், திங்களின் இயக்கம் ஆகியவற்றை
அவர்கள் அறிவர். நாண்மீன்களுக்கும் கோள்களுக்கும் திங்கள்கட்கும் தூய
தமிழ்ப் பெயர் வழங்கிவருவதனின்றும் பழந்தமிழரின் வானவியல் அறிவின்
விரிவை நன்கு உணரலாம்.206 ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்,
வெள்ளி, சனி, இராகு, கேது ஆகியவற்றைக் கோள்கள் எனக்
கூறுகின்றோம்.207 இக் காலத்து வானவியலார் ஞாயிற்றையும், திங்களையும்,
இராகு கேதுக்களையும் கோள்களின் பட்டியலினின்றும் நீக்கிவிடுவர். எஞ்சிய
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவ் வைந்தையும் பழந்தமிழர்
கோள்களின் கணக்கில் சேர்த்துக்கொண்டனர். நாம் வசிக்கும் இவ்வுலகமும்
ஒரு கோள்தான் என்னும் உண்மையை அவர்கள் அறிந்தனர் அல்லர்.
ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயரமைப்பைக் கண்டு வியவாமல் 
இருக்க முடியாது. தமிழரின் ஆண்டானது கதிரவனின் செலவைக் கணக்கிட்டு
அறுதியிடப்பட்டது. எனவே ஓராண்டில் பன்னிரண்டு திங்கள்கட்குமேலே 
இரா. ஆனால், சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு அமைந்த ஆண்டில்
பன்னிரண்டு திங்கள்கட்கு மேலும் வருவதுமுண்டு; மற்றும் ஒரே மாதம்
ஓராண்டில் இரட்டித்து வருவதுமுண்டு ; இக் குழப்பங்கள் தமிழரின் ஆண்டுக்
கணக்கில் வருவதில்லை. சூரியன் எந்த இராசியில் எத்தனை நாள்
நிற்கின்றதோ அத்தனை நாள் அந்த இராசி 

     202. பட்டினப். 169-71
     203. தொல். பொருள். 650 (நச்சி) 
     204. குறள். 392 (பரி. உரை)
     205. புறம். 229. 
     206. புறம். 20, 30; பதிற்றுப், 14:-4
     207. தேவாரம், 2 : 85 : 9

காட்டாகச் சித்திரை நாண்மீனில் நிலவு முழுமையடையும் திங்களுக்குச்
சித்திரை என்று பெயர். விசாகத்தில் சந்திரன் முழுமதியாகும் மாதத்துக்கு
வைகாசி என்று பெயர்.

     தமிழர் சோதிடக்கலையிலும் வல்லுநராகக் காணப்பட்டனர். கோள்கள்,
மீன்கள் ஆகியவற்றின் நிலைகளைக் கொண்டு வருங்கால நிகழ்ச்சிகளைக்
‘கணிகர்’ கணித்துக்கூறுவர்.
குலங்கள்

     தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த
தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர்,
உழவர், எயினர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர்,
குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர்,
பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார்,
வணிகர், வேடர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்
குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக் கலப்போ தடை
செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து
வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க
முடியாத ஓருறுப்பாகவே செயற்பட்டு வந்தது.

     பார்ப்பனர்கள் யாகம் செய்தார்கள். தம் மனைவியர் துணை புரிய
அவர்கள் அறவாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.208 ‘அந்தணர் என்போர்
அறவோர், மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்’ என்று
திருவள்ளுவர் அந்தணருக்கு அறம் வகுத்தார்.209 களவு வாழ்க்கையில்
தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் முற்றுப்பெறுவதற்குப் பார்ப்பார்
துணை நிற்பர். அவர்கள் அருள் நிறைந்த அறவாழ்க்கை வாழ்ந்து வந்ததால்
அரசனுக்கும் குடிமக்களுக்கும் அவர்கள்பால் நல்ல ஈடுபாடு இருந்து வந்தது.
மன்னர்கள் அயல்நாட்டின் மேல் போர் தொடுக்கும்போது முதலில்
பார்ப்பனரை ஊரை விட்டுப் போய்விடும்படி முன்னறிவிப்புச் செய்தல் போர்
அறமாக இருந்தது.210 கண்ணகியும் மதுரையின்மேல் தீயை ஏவும்போது
பார்ப்பனர்மீது செல்லவேண்டா என்று அத்தீயினுக்குக் கட்டளையிட்டாள்.211
பண்டைய தமிழகத்துப் பார்ப்பனர் தம்மைத் தமிழராகவே நினைந்து, தமிழ்
பயின்று,

     208. புறம். 166.
     209. குறள். 30.
     210. புறம். 9.
     211. சிலப். 21 : 53.

தமிழ்ச் சமுதாயத்தில் தாமும் இன்றியமையாத ஓர் உறுப்பாய் அமையுமாறு
நடந்துகொண்டனர் ; சமயக் கல்வி, தத்துவம் ஆகியவற்றில் வல்லுநராக
இருந்தனர். கபிலரைப் போன்ற பார்ப்பனப் புலவர்கள் சங்கப் புலவர்களாய்
விளங்கினர். பார்ப்பனருள் சிலர் மக்கள் வெறுப்புக்கு இலக்கான
வாழ்க்கையும் வாழ்ந்து வந்தனர் என அறிகின்றோம்.212

     பண்டைத் தமிழர் மக்கட்பேற்றைப் பெரிதும் பாராட்டினர். ‘அமிழ்தினும்
ஆற்ற இனிதே தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’213 என்றும், ‘குழலினிது
யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்’214 என்றும்
மக்கட்செல்வத்தைப் புகழ்ந்து பேசுகின்றார் திருவள்ளுவர். குழந்தைகளின்
குறுகுறு நடையையும், மயக்குறு தன்மையையும், குழலினும் யாழினும் இனிய
மழலைச் சொற்களையும்215 பாராட்டிய தமிழர் அவர்களை இளமையில் கல்வி
பயிற்றாமல் நடுத்தெருவில் விட்டிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
தம்மினும் தம் மக்கள் மேலானவர்கள், அறிவுடையவர்கள் என்று கேட்டு
இன்புற விரும்பியவர்கள் தமிழர்கள்.216 
மொழி

     தமிழ்மொழி சொல்வளம் நிரம்பியது; அவ் வளத்தை மேன்மேலும்
பெருக்கிக் கொள்ள வாய்ப்பையும் அளிப்பது; பேசுவதற்கு மென்மையானது,
இனிமையானது, ‘இடம்பமும், ஆரவாரமும், பிரயாசமும், பெருமறைப்பும்,
போதுபோக்கும் இல்லாதது. பயிலுதற்கும் அறிதற்கும் இலேசானது; பாடுதற்கும்
துதித்தற்கும் மிகவும் இனிமையுடையது.’217 தமிழ் எழுத்துகளின்
தோற்றத்தைப் பற்றியும் வளர்ச்சியைப் பற்றியும் ஆய்வாளரிடையே கருத்து
வேறுபாடு உண்டு. சங்ககாலத்தில் தமிழ் எழுத்துகளின் வடிவமும் ஒலியும்
எவ்வாறு இருந்தன? இந்நாள்வரை அவை மாறாமல் வழங்கி வருகின்றனவா?
அன்றி மாறுதல்கள் ஏற்றுக் கொண்டுள்ளனவா? தமிழராலேயே வளர்க்கப்
பெற்ற ஆதி எழுத்துகளிலிருந்து இன்றைய எழுத்துகள் ஒலி, வரி
வடிவங்களில் மாறிவந்தனவா? அன்றி அயல்மொழிகளின் எழுத்துகளை
ஏற்றுக்கொண்டு வளர்ந்தனவா? வெளிநாடுகளிலிருந்தோ, அன்றி
வடஇந்தியாவினின்றோ பிராமி எழுத்துத் தோன்றியதென்றும் அதனின்றும்
தமிழ் வட்டெழுத்துகள்

     212. கலித். 65.
     213. குறள், 64.
     214. குறள், 66.
     215. புறம். 188.
     216. குறள், 68.
     217. திருவருட்பா ஆறாந்திருமுறை,  சத்தியப் பெருவிண்ணப்பம், 2

தோன்றினவென்றும், அதனின்றும் இக்காலத் தமிழ் எழுத்துகள் பிறந்தன
என்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதி வருகின்றனர். இக் காலத் 
தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் தமிழ்நாட்டிலேயே வளர்ந்தவை என்றும்,
அவற்றுக்குப் பிராமி எழுத்துடனோ, கிரந்த எழுத்துடனோ எவ்விதமான
தொடர்பும் இல்லை என்றும் அறிஞர் சிலர் கருதுகின்றனர். இவ்விரு
சாராருக்குமிடையே இன்னும் ஒருமைப்பாடு தோன்றவில்லை. ஆனால், கி.மு.
இரண்டாம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் தென்னிந்தியாவில்
கிடைத்துள்ளன. எனவே, வட்டெழுத்துகள் பிராமியினின்றும் தோன்றியனவோ
என ஐயுற வேண்டியுள்ளது. இப்போது உள்ள நிலையில் உறுதியான முடிவு
மேற்கொள்ளுவதற்கில்லை. பழங் கல்வெட்டுகள் அனைத்தும்
அழிந்துபோய்விட்டன. போரில் உயிர் துறந்த வீரர்களுக்காக நட்ட கற்கள் 
அக் காலத்தில் பல இருந்தன.218 அவற்றில் ஒன்றேனும் இப்போது
காணப்படவில்லை. அவற்றைப் போலவே வரலாற்றுச் சிறப்புடைய ஏனைய
கல்வெட்டுகளும் அழிந்து மறைந்து போயிருக்கக்கூடும். ஒரு குறிப்பிட்ட
காலத்தில் காணப்படும் தமிழ் இலக்கிய நடைக்கும், கல்வெட்டு உரைகளின்
தமிழ் நடைக்கும் ஆழ்ந்த வேறுபாடு காணப்படுகின்றது. கல்வெட்டுக்கெனவே
ஒரு தமிழ் எழுத்து வடிவைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். ஆகவே,
கல்வெட்டு நடையையும் எழுத்து வடிவத்தையும் வைத்துக்கொண்டு பண்டைய
தமிழ் எழுத்தின் வரலாற்றை அறுதியிடுவது நற்பயன் ஏதும் அளிப்பதாகத்
தெரியவில்லை. 

     தமிழ்மொழிக்குச் சொல்வளம் உண்டு. ஒரு பொருளைக் குறிக்க அதன்
தன்மைக்கேற்பப் பல சொற்கள் படைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக
‘இலை’ என்னும் ஒரு பொருளைக் குறிப்பிட ‘தாள்’ (நெற்பயிர் இலைகள்),
‘தோகை’ (கருப்பஞ்செடி இலைகள்), ‘ஓலை’ (தென்னை, பனைமர இலைகள்),
‘மடல்’ (தாழை இலை) என்று வெவ்வேறு சொற்கள் உண்டு. பொதுவாகச் சில
இலைகளைக் குறிப்பிடும்போது ‘தழை’ என்னும் சொல்லைப்
பயன்படுத்துகின்றோம். நிலத்துக்குத் ‘தழை’ எருப் போட்டதாகக்
கூறுகின்றோம். மரத்திலோ செடியிலோ தோன்றும்போது பூவை ‘அரும்பு’
என்றும், மலர்ந்து வருங்கால் அதைப் ‘போது’ என்றும், விரிந்த நிலையில்
‘மலர்’ என்றும் அழைக்கின்றோம். மலராத பூவை ‘அரும்பு, மொட்டு, முகை,
மொக்கு’ எனக் கூறுகின்றோம். 

     218. மலைபடு. 394-396 ; அகம். 131

பூவினின்றும் காய்ப்புத் தொடங்கும்போது ‘பிஞ்சு’ என்றும், முதிர்ந்த
பிஞ்சைக் ‘காய்’ என்றும், பழுக்கும் பருவத்துக் காயைச் செங்காய் என்றும்,
முற்றிலும் பழுத்த காயைப் ‘பழம்’ அல்லது ‘கனி’ என்றும் குறிப்பிடுகின்றோம்.
பிஞ்சு வகைகளில் ‘குரும்பை’, ‘வடு’, ‘மூசு’, கச்சல்’ என்று செடிகளுக்கு
ஏற்பப் பெயர்களும் வேறுபடுகின்றன. ‘சொல்லுதல்’ என்னும் வினையைக்
குறிக்க ஏறக்குறைய நாற்பது சொற்கள் தமிழில் வழங்கி வருவதைக் காணலாம்.
ஒருவன் மற்றொருவனிடம் ஒரு பொருளைக் கேட்கும்போது, தாழ்ந்தவன் ‘ஈ’
என்றும், ஒத்த நிலையில் இருப்பவன் ‘தா’ என்றும், உயர்ந்தவன் ‘கொடு’
என்றும் சொல்லவேண்டும் என்பது தமிழ் மரபாகும். இன்ன சொல்லை
இன்னவாறு பொருள்கொண்டு பயன்படுத்த வேண்டும் என்ற மரபுகளுக்குத்
தொல்காப்பியத்தில் தனி இயல் சேர்க்கப்பட்டுள்ளது.

     தமிழ் நெடுங்கணக்கில் சிறப்பாகக் காணப்படுபவை ‘ஃ’ என்னும் ஆய்த
எழுத்தும், ‘ழ்’ என்னும் மெய்யெழுத்துமாம். ஆய்த எழுத்தைக் கொண்டு
வல்லெழுத்துகளின் ஒலியை மெலிவிக்கலாம். ஆகையால் தமிழ்
நெடுங்கணக்கில் இதைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகத் தொல்காப்பியர்
ஒதுக்கிவைத்துள்ளார். 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...