Monday, 9 February 2015

தமிழக வரலாறு - 02

                                  தமிழக வரலாறு - 02

தமிழகத்துக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

     கல்வெட்டுகள் தமிழகத்தில் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
முதல் காணப்படுகின்றன. பிராமிக் கல்வெட்டுகள் என்று கருதப்பட்டுவந்த
இவற்றைச் சுமார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரையுள்ள காலத்தைச்
சார்ந்தவையெனக் கருதலாம். இவை பெரும்பாலும், தென் ஆர்க்காடு,
திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், கேரள
நாட்டின் மேற்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாகத்
திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, சித்தன்னவாசல், புகலூர், சிங்கவரம்
(ஸ்ரீநாதர்குன்று) ஆகிய ஊர்களில் இவற்றை இன்றும் காணலாம். இவை தவிர,
பெயர் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும்
அரிக்கமேட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

     அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து யாது என்பது பற்றிக் கருத்து
வேற்றுமைகள் உள. அதை அசோக எழுத்து அல்லது ஒருதர மாறுபட்ட
பிராமி என்று முன்னாள் ஆராய்ச்சியாளர் பலரும் கருதினர். ஆனால்,
தற்போதைய கருத்து வேறுபட்டுள்ளது. அது பிராமி எழுத்தன்று என்றும்
தாமிளி அல்லது திராவிடி என்ற லிபி எனவும் ஒரு சிலர் கருதுகின்றனர்.
இவற்றில் கையாண்டிருக்கும் மொழி பழைய தமிழேயாகும்.

     பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னும் பற்பல கோயில்களில்
கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரம்,
மகேந்திரவாடி, பல்லாவரம், மேலச்சேரி, மண்டகப்பட்டு, தாளவானூர்,
திருச்சிராப்பள்ளி, வல்லம் ஆகியவற்றிலுள்ள கோயில்களில் கல்வெட்டுகள்
காணப்படுகின்றன. இவற்றில் கையாளப்பட்ட லிபி பல்லவ கிரந்தம்
எனப்படுவது ; அதனைப் பிராமியைச் சார்ந்த ஒருவகை லிபியெனக்
கருதலாம். இந்த லிபியில் சில மாற்றங்களடைந்த பல்லவ கிரந்த லிபியும்,
நாகரி எழுத்துகளும் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் ஆண்ட இராசசிம்மனின்
கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

     தமிழ்நாட்டில் செப்புப் பட்டயங்கள் சில தோன்றியுள்ளன. அவற்றுள்
இருமொழிகளில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் மிகப் பல. இரண்டாம்
சிம்மவர்மனின் (சுமார் கி.பி. 550) ஆறாம் ஆட்சி ஆண்டில் அளிக்கப்பட்ட
பள்ளன்கோயில் செப்புப் பட்டயங்கள் முதன்முதலாக வடமொழியும் தமிழும்
கலந்தவை. அவற்றைத் தொடர்ந்து பற்பல செப்புப் பட்டயங்கள்
தோன்றலாயின. அவை கூரம், புல்லூர், பட்டத்தாள் மங்கலம், தண்டந்
தோட்டம், காசக்குடி, பாகூர், வேலூர்ப்பாளையம் ஆகிய இடங்களில்
கிடைத்தவை. இவை ஏறத்தாழ கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை
எனலாம். இக்காலம் முதல், பாண்டிய சோழ சாசனங்களில் வட்டெழுத்துகள்
பயன்படுத்தப் பட்டுள்ளன. 

     சோழப் பரேரசு காலத்தில் தோன்றிய செப்பேட்டுச் சாசனங்கள் மிகப்
பெரியவை. அவற்றுள் கூறப்படும் மெய்க்கீர்த்திகள் மிக விரிவானவை.
இக்காலச் செப்பேடுகளில் மாபெரும் செப்பேடு திருவாலங்காட்டுச்
செப்பேடேயாகும். 
     செப்பேடுகள் பொதுவாக வாழ்த்துப் பாடல்களுடன் (மங்கள
சுலோகங்களுடன்) தொடங்கின. அதைத் தொடர்ந்து, கொடையளித்தவரின்
மெய்க்கீர்த்தி, அவரது பண்டைய அரச பரம்பரையின் வரலாறு ஆகியவை
இடம்பெற்றன. அதற்குப் பின் நன்னொடையின் முழு விவரமும், நன்கொடை
பெறுபவரின் முழுப் பெயரும், வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்தன.
அவ்வறத்தினை அழித்தார் அடையும் இன்னல்களைக் கூறும் சாப
வாசகங்களும் இடம்பெற்றன. 

     கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாட்டின் வரலாற்றிற்குப் பேருதவி
அளிக்கும் அடிப்படை ஆதாரங்கள் எனலாம். மக்களிடமிருந்து அரசாங்கம்
பெற்ற வரிகள், கோயில் அலுவலாளர்களின் தனித்தனி வேலைகள், 
கோயிலைச் சார்ந்த நகைகள், சொத்துகள் முதலியவற்றின் விவரங்கள்
காணப்படுகின்றன. கல்வெட்டுகள் தூண்களிலும், சுவர்களிலும், 
கல்தளங்களிலும், தனிப் பாறைகளிலும் காணப்படுகின்றன. இசை பற்றிய ஒரு
சிறந்த கட்டுரை முழுவதும் புதுக்கோட்டையிலுள்ள குடுமியான் மலைப்பாறை
ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் வியப்புக்குரியது. சில
கல்வெட்டுகள் நினைவுச் சின்னங்களாக அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில்
ஏறக்குறைய 25,000 கல்வெட்டுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில
கல்வெட்டுகள் மன்னர்களின் செயல்களையும் கைங்கரியங்களையும் மிகைபடக்
கூறியுள்ளன. 

     களப்பிரர் காலம் முடிந்து பல்லவர்களின் ஆட்சி தொடங்கின
பிற்காலத்தைப்பற்றிப் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கத் தொடங்குகின்றன.
வரலாற்றுத் தொடரும் ஒழுங்காக இடையீடின்றிச் செல்லுகின்றது. பல்லவர்
காலத்திய கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், குகைக்கோயில்கள், 
கற்றளிகள், ஏரிகள்,தமிழ் இலக்கியப் படைப்புகள், தேவாரப் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தப் பாடல்கள், சிற்பங்கள், சுவரோவியங்கள், பண்ணிசைக் குறிப்புகள்
ஆகியவை அக்காலத்தைப் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ள
உதவுகின்றன. ஹியூன்சாங் என்ற சீனப் பயணியின் பயணக் குறிப்புகளில் 
(கி.பி. 641-2) பல்லவர் காலத்தைப் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. 

     பாண்டிய சோழப் பேரரசுக் காலம் : இக்காலத்திய தமிழகத்து 
வரலாற்றை ஆராய்ந்து கோவைப்பட எழுதுவதற்கு எண்ணற்ற கல்வெட்டுகள்,
செப்பேட்டுப் பட்டயங்கள், நடுகற்கள், தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள்,
கோயிற் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்,
சீனம், அரேபிய நாட்டு மொழி நூல்கள் சிலவற்றுள் காணப்படும் குறிப்புகள்
நமக்குத் துணைபுரிகின்றன. செப்பேட்டுப் பட்டயங்களில் லீடன் பட்டயங்கள்,
திருவாலங்காட்டுப் பட்டயங்கள், கரந்தைப் பட்டயங்கள், சாரளாப் 
பட்டயங்கள் சிறப்பானவை. கல்வெட்டுகள் அளிக்கும் செய்திகளின் வரலாற்று
மதிப்பை அளவிட முடியாது. தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளும்,
திருமுக்கூடல், உத்திரமேரூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் 
காணப்படும் கல்வெட்டுகளும், மன்னர்கள், மக்கள் ஆகியவர்களின்
வாழ்க்கையைத் தெற்றென எடுத்துக்காட்டுகின்றன. சோழ மன்னர்களின்
வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் சிங்களத்திலும்,
சாவகத்திலும், சுமத்திராவிலும், பர்மாவிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
சீனத்தில் சுவான்சௌ என்னும் ஊரில் ஒரு கோயிலில் கசேந்திர மோட்சம்,
உரலில் பிணிக்கப்பட்ட கண்ணன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. 

     வரலாற்றுத் தொடர்புடைய தமிழ் இலக்கியங்களுள் கலிங்கத்துப் பரணி,
மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கன் கோவை, பெரிய
புராணம், வைணவ மரபையொட்டிய குருபரம்பரை, சீரங்கம் கோயிலொழுகு,
மதுரைத் தல வரலாறு, கேரளோற்பத்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஆனால், இவையனைத்தும் நம்பக்கூடியனவென்றோ வரலாற்றுக்குப் பயன்
உடையவை என்றோ கருத முடியாது. அவற்றுள் காணப்படும் சிற்சில
கருத்துகள் வரலாற்றுப் பயன் உடையவையாம். 

     சீனக் கடலோரத்திலும் பாரசீக வளைகுடாவிலும் தமிழக வணிகரின்
குடியிருப்புகள் அமைந்திருக்கவேண்டும் என அறிகின்றோம்.சீனத்துக்கு அனுப்பப்பட்ட சோழரின் தூதுகளைப் பற்றிய குறிப்புகள் சீன
நாட்டின் ‘சாங்’ வரலாறுகளில் கிடைக்கின்றன. இவை முதலாம் இராசராசன்,
முதலாம் குலோத்துங்கன் ஆகிய மன்னரின் காலத்தவை. சீனப் பயணியான
சா-ஜூ-குவா (கி.பி. 1225) இச் செய்திகளை மெய்ப்பித்துள்ளார். அராபிய
எழுத்தாளரான இபுனே ஹாக்கால், ஈஸ்டாக்கி என்பவர்கள் தமிழகம் அரபு
நாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்புகளைத் தம் நூல்களில்
எடுத்துக் கூறியுள்ளனர். சிங்களத்து வரலாற்று நூலான மகாவமிசத்திலும்
தமிழகத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. வெனிஸ் பயணி மார்க்கோ
போலோ (சுமார் கி.பி. 1293) தென்னிந்தியாவைப் பற்றித் தரும் செய்திகள்
வியக்கத்தக்கனவாம். 

     சோழர் காலத்தில் பொன் நாணயங்களும் இதர நாணயங்களும்
வெளியிடப்பட்டன. உத்தம சோழன், இரண்டாம் ஆதித்தன், முதலாம்
இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன் முதலிய சோழ மன்னரின் 
நாணயங்கள் பல கிடைத்துள்ளன. சோழர் காலத்திய கல்வெட்டுகளில் பல
நாணயங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் பல
இப்போது கிடைக்கவில்லை. 

     சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் புகழ் பெற்ற கோயில்கள்
பல எழுப்பப்பட்டன ; பல கோயில்கள் விரிவாக்கப்பட்டன. இசையும்
நாட்டியக் கலையும் மிக உயர்நிலையை எட்டிப்பிடித்திருந்தன. ஓவியம், 
சிற்பம் ஆகிய கலைகள் அப்போது அடைந்திருந்த சீரும் சிறப்பும் என்றுமே
எய்தியிருந்தனவல்ல என்று திட்டமாகக் கூறலாம். குறிப்பாகச் சோழர்
காலத்துக் கோயில்களின் அமைப்பு, படிவங்களின் சிறப்புகள் முதலியவற்றைப்
பற்றியும் நன்கு அறிய முடிகின்றது. 

     மத்திய காலம் : விசயநகரப் பேரரசின் எழுச்சியும் முடிவும், மதுரைப்
பாண்டியரின் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர் ஆட்சியின் தோற்றமும் முடிவும்
மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின்றன. இக்காலத்திய அரசியல், சமய
நிலை, சமூக நிலை, கலை வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் 
நமக்குப் பல துறைகளில் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள்,
நாணயங்கள், இலக்கியங்கள், கிறித்தவப் பாதிரிமாரின் அறிக்கைகள், 
கடிதங்கள், கங்காதேவியின் ‘மதுரா விசயம்’, கொங்கு தேச இராசாக்களின்
சரித்திரம், இபின் பத்துதா (1304-78) என்ற
முஸ்லிம் பயணியின் பயணக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம்
கிடைக்கக்கூடிய செய்திகளைக் கொண்டு கோவையான வரலாற்றை
எழுதக்கூடும்.

     பிற்காலம் : கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து
வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதியைப் பிற்காலம் என்று
குறிப்பிடுகின்றோம். இந்தியாவுடன் வாணிகம் செய்யவந்த ஐரோப்பியக்
கம்பெனிகளின் ஆவணங்கள், பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்களின்
ஆவணங்கள், ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு, சிலரின் வாழ்க்கை
வரலாறுகள் முதலியவை வரலாற்றுக் களஞ்சியங்களாக உதவுகின்றன.
இவையேயன்றி, ராபர்ட் ஆர்மி (Orme) எழுதிவைத்த ‘இராணுவ
நடவடிக்கைகள்’ என்னும் நூலும், மக்கன்ஸியின் கையேட்டுப் படிகளும்
19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியல், சமுதாய நிலைகளை அறிந்து
கொள்வதற்குப் பயன்படுகின்றன. இவ் வெளிநாட்டு அறிஞர்கள் செவிவழிக்
கேட்டவற்றை ஒட்டி எழுதியுள்ளவை யாவற்றையும் நம்ப முடியாது.

     பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் மாவட்டங்கள்
ஒவ்வொன்றுக்கும் குறிப்புச் சுவடிகள் (Gazetteers) வெளியிடப்பட்டன.
இங்கிலாந்திலுள்ள அரசு ஆவணக்களரியிலும், சென்னையிலுள்ள அரசு
ஆவணக்களரியிலும் (Record Office) உள்ள பல கையேட்டுச் சுவடிகள்
அண்மைக்காலத்தின் வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படுமாறு சேமித்து
வைக்கப் பட்டுள்ளன. பாரத நாடு விடுதலை பெற்ற பின் அரசாங்க
ஆவணங்கள் மிகப் பயன்படுகின்றன.

     இருபதாம் நூற்றாண்டு நடந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது
அதன் வரலாறு நூல்களிலும், செய்தித்தாள்களிலும் எழுதப்பட்டு வருகின்றன.
தந்தியும், தொலைபேசியும், புகைப்படம் எடுக்கும் கருவிகளும், வானொலியும்,
தமிழக வரலாறு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே அவற்றைப் பதிவு
செய்துவைக்கத் துணைபுரிந்து வருகின்றன. 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...