Monday 9 February 2015

தமிழக வரலாறு - 06

                                   தமிழக வரலாறு - 06

3. வரலாற்றுக் காலத்துக்கு
                    முந்திய தமிழகம்

     உலகில் முதன்முதல் மக்களினம் தோன்றியது தென்னிந்தியா விற்றான்
 என்று சில புவியியல், மானிடவியல் வல்லுநர் கருதுகின்றனர். இவர்களுடைய
கருத்துக்குச் சார்பாகப் போதிய சான்றுகள் இன்னும் கிடைத்தில. எனினும்,
இந்தியத் துணைக் கண்டத்தைப் பற்றியவரையில் தென்னிந்தியாவிற்றான்
முதன் முதல் மக்களினம் தோன்றிற்று என்பதில் ஐயமேதுமில்லை.

     பலகோடி யாண்டுகட்கு முன்னர் உண்டான மிகப் பழைய கற்பாறைப்
படிவுகள் தென்னிந்தியாவிற்றான் காணப்படுகின்றன. இப் பகுதியில் காடுகளும்
மலைகளும் செறிந்து கிடக்கின்றன. எனவே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே இங்கும் மக்கள் தோன்றி வாழ்வதற்கு நல்வாய்ப்புகள் உண்டு.
தொலை தூரம் தேடியலையாமலேயே அவர்கள் இங்குத் தமக்கு வேண்டிய
உணவைப் பெறலாம். இக் காடுகளில் காய்களும், கனிகளும், கொட்டைகளும்,
கிழங்குகளும் கிடைத்தன. ஆதிமனிதன் ஆங்காங்குக் கிடைத்த உணவுப்
பண்டங்களைப் பொறுக்கித் தின்று வயிறு பிழைத்தான். பிறகுதான் அவன்
வேட்டையாடக் கற்றுக்கொண்டான். எனவே, மனிதன் வேட்டையாடிப்
பிழைக்கக் கற்றுக்கொண்ட ஒரு காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் ஆதி
மனிதன் தென்னிந்தியாவில் தோன்றி வாழ்க்கையை நடத்திவந்தான் என்று
கொள்ளலாம்.

     விந்தியமலைத் தொடருக்கு வடக்கே பரந்து கிடக்கும் கங்கையாற்று
வெளியும், இமயமலைத் தொடரும் முன்னொரு காலத்தில் கடலுக்குள் மூழ்கிக்
கிடந்தன. இமயமலைத் தொடரில் ஆங்காங்குக் கடல்வாழ் உயிர்களின்
எலும்புகள் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும். வட இந்தியா
கடலுக்குள் மூழ்கிக் கிடந்த அக் காலத்தில் தென்னிந்தியாவானது காடும்
மலையும் செறிந்து, மக்களினமும் ஏனைய உயிர் வகைகளும் வாழ்வதற்கு
ஏற்ற இடமாக விளங்கிற்று என்பதனை இதனால் அறிகின்றோம்.
கங்கைவெளியும் இமயமும் கடலினின்றும்
மேலெறியப் பெற்ற புவியியல் நிகழ்ச்சி இற்றைக்கு ஐந்து கோடி யாண்டுகட்கு

முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும் என்று புவியியலார் கருதுவர். 

     தென்னிந்தியாவுக்குத் தெற்கில் அமைந்திருந்த லெமூரியாவிற்றான்
முதன்முதல் மக்களினம் தோன்றிற்று எனவும், அவ்வினமே தமிழ்நாட்டின்
ஆதிகுடிகள் எனவும் லெமூரியக் கொள்கையினர் கருதுவர். லெமூரியக்
கண்டத்தில் வாழ்ந்து வந்த மக்களின் வழிவந்தவர்கள் இப்போது
தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்து
வருகின்றார்கள். இவர்களிடம் இனவொற்றுமை, மக்கள் உடல்கூறு ஒற்றுமை,
மொழி அமைப்பு ஒற்றுமை ஆகியவை பல காணப்படுகின்றன. நியூஜிலாந்தில்
வாழும் ஆதிகுடிகளான மேவோரி மக்களும், இத் தீவைச் சுற்றிலும் சிதறுண்டு
கிடக்கும் சிறுசிறு தீவுகளில் வாழும் மக்களும் பேசும் மொழிகளுக்கும்
தமிழுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இஃதன்றி, தென்னிந்திய மக்களுள் சில
குலத்தினரும் மரபினரும் போற்றும் வழிபாட்டுச் சின்னங்களையும் 
அவர்களுள் கள்ளர்கள் என்பார் எய்யும் ‘பூமராங்’ என்னும் மீண்டுவரும்
வேட்டைக் கத்தியையும் இந்தோனேசீயாவிலும் பாலினீசியாவிலும் வாழும்
ஆதிகுடிகளிடம் காணலாம். மேலும் போர்னியா தீவின் ஆதி குடிமக்களான
டையாக்குகளும், ஆனைமலையின் பழங்குடிகளான காடர்களும் மரமேறும்
முறை ஒரேவிதமாக உள்ளது. இக் காடர்களும், தென்னிந்திய ஆதிகுடிகளுள்
மற்றோர் இனத்தவரான மலை வேடர்களும் தம் முன் பற்களைத் துணித்துக்
கொள்ளும் வழக்கம் ஒன்று உண்டு. மலேசிய நாட்டினரான ஜு குன்களும் இப்
பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். மற்றும் தென்னாப்பிரிக்க வாசிகளான
நீக்குரோவர்களின் சாயை தென்னிந்திய ஆதிகுடிகள் சிலரிடம்
தோற்றமளிக்கின்றது. பண்டைக் காலத்தில் இந் நீக்கிரோவர்களுக்கும்,
தென்னிந்தியருக்கும், தென்கிழக்கு ஆசியத் தீவினருக்குமிடையே தொடர்ந்த 
போக்குவரத்தும் இனக்கலப்பும் ஏற்பட்டிருக்கவேண்டும். லெமூரியாக் கண்டம்
இருந்ததற்கும், அக்கண்டத்தில் வாழ்ந்த ஆதி மக்கள் வழி வந்தவர்களே
தமிழர்கள் என்பதற்கும் மேலே கொடுத்த சான்றுகள் ஆதரவாகக்
காட்டப்படுகின்றன. எனினும், தமிழ் மக்கள் லெமூரிய ஆதிகுடிகளின் 
நேர்வழி வந்தவர்தாமா என்ற ஐயப்பாடு நிகழாமல் இல்லை. இங்கு நாம்
கருத்திற் கொள்ள வேண்டிய தொன்றுண்டு. ஐந்துகோடி யாண்டுகளுக்கு
முன்பு, அதாவது, கங்கைவெளி யுயர்ந்து லெமூரியா மூழ்கிப் போம் போது
உலகின்மேல் எங்கும் மனித இனமே தோன்றவில்லை.அது தோன்றியதே சில நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான். எனவே, 
ஐந்து கோடி யாண்டுகட்கு முன்பு லெமூரியர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதும்,
அவர்களே தமிழர்கட்கு முன்னோர்களாவார்கள் என்பதும் எவ்வாறு
பொருந்தும்? 

     தமிழர் தமிழகத்திலேயே பிறந்த ஆதிகுடிகள் என்பது லெமூரியக்
கொள்கையினரின் முடிவு. இவர்கள் மேலும் ஒன்று கூறுவர். தமிழ் மக்களில்
சிலர் நாட்டைவிட்டு வெளியேறிப் படர்ந்து சென்று மத்தியதரைக்கடற்
பகுதியில் குடியேறிப் பின்பு பல பழம் நாகரிகங்களை வளர்த்தனர் என்றும்
இவர்கள் கூறுகின்றனர். இக் கொள்கைக்குப் பேராதரவு கொடுத்தவர்
பேராசிரியர் பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆவார். 

     தமிழர்கள் தமிழகத்தின் ஆதிகுடிகள் என்ற கொள்கைக்கு விஞ்ஞான
முறையிலான சான்றுகள் மிகுதியாக இன்னும் கிடைத்தில. பழங் கற்காலத்
தமிழன் எந்த மனித இனத்தைச் சார்ந்தவன் என்று ஊகித்தறிவதற்குச் 
சான்றாக அக் காலத்திய மனித எலும்புக்கூடு ஒன்றும் இதுவரையில்
கிடைக்கவில்லை. புதைபொருள் ஆராய்ச்சித் துறையில் மேற்கொள்ளப்
பட்டுள்ள முயற்சிகளின் மூலம் தக்காணத்தில் வடுநகரிலும், ஜாவாவிலும்,
ஆப்பிரிக்காவிலும், மனித வடிவிலுள்ள எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. 

     வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களுடைய இன வேறுபாடுகள்,
நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி ஆராயும் போது சிறப்பாக நாம்
மூன்று துறைகளில் கருத்தூன்ற வேண்டும்.

    1, தமிழரின் உடல் தோற்றம். 

    2. புதைபொருள் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தும் பாண்ட வகைகள்,
      கருவிகள் ஆகியவற்றின் அமைப்பு. இத் துறைகளில் நம் கருத்தைச்
      செலுத்தி ஆதி தமிழரின் வரலாற்றுக் கூறுபாடுகளை நாம் ஆராய
      வேண்டும். 

    3, அவர்களுடைய மொழியும், மொழிப் பிரிவுகளும். 

     வரலாற்றுக்கு முற்பட்ட கால ஆராய்ச்சியில் மக்கள் இன வரலாற்றை
மூன்று பிரிவுகளாக வகுத்து அவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தொகுத்தல்
மரபு. பழங்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற் புதைவு காலம் என்பன
அவை.இக் காலங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் இன்ன இன்ன இனக்
கலப்புடையவர்கள் என்று அறுதியிடுவது எளிதன்று. கொச்சியைச் சேர்ந்த
காடர்களும் புலையர்களும், திருவிதாங்கூரைச் சேர்ந்த 
மலைப்பண்டாரங்களும், வயநாட்டுப் பணியர்களும், ஆந்திநாட்டுச்
செஞ்சுக்களும், பழங்கற்கால மக்களின் வழிவந்தவர்கள் என்று இனவியலார்
(Ethnologists) சிலர் கருதுகின்றனர். பழங்கற் காலத்தவர்களைப் போலவே
அம் மக்கள் அனைவரும் உணவைப் பொறுக்கிச் சேமித்து உண்கின்றனர்.
பயிரிடவோ, வேட்டையாடவோ அவர்கள் இன்னும் பயிலவில்லை; அந்த
அளவுக்கு அவர்களுடைய அறிவும், நாகரிகமும் வளரவில்லை; காடர், 
புலையர் ஆகிய இனத்து மக்களில் நீக்கிரோவரின் இரத்தக்கலப்பைக்
காணக்கூடும். நீக்கிரோவர்களைப் போலவே இவர்களும் குள்ளர்கள் ;
அவர்களைப் போலவே இவர்கட்கும் தலைமயிர் சுருட்டையாக உள்ளது.
சென்னைக்கு அண்மையில் கிடைத்துள்ள பழங் கற்காலக் கருவிகள்
தென்னாப்பிரிக்காவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நீக்கிரோ இனக்
கூறுபாடுகள் தென்னிந்தியாவில் காணப்படுவதன் காரணத்தை ஒருவாறு
ஊகித்தறியலாம். ஆதிகாலத்தில் தென்னிந்திய மக்களுக்கும் தென்னாப்பிரிக்க
நீக்கிரோவர்களுக்குமிடையில் வாணிகத்தொடர்பு இருந்திருக்கக்கூடும். புயலில்
சிக்கியோ, கரைதட்டியோ சிதையுண்ட கப்பல்களிலிருந்தும் உயிர் தப்பிய
நீக்கிரோவர்கள் தென்னிந்தியாவில் கரையேறி நாட்டில் ஆங்காங்குக்
குடியேறியிருக்கலாம். அன்றி, ஆப்பிரிக்க நீக்கிரோவர்கள் பெருமளவில்
இடம்பெயர்ந்து வந்து தென்னிந்தியாவில் குடியேற்றங்களை 
அமைத்திருக்கலாம். இவை வெற்று ஊகங்களேயன்றி இவற்றுக்குச் சான்றுகள்
கிடையா. ஆனால், லெமூரியாக் கண்டத்தைச் சார்ந்தவர்தாம் தமிழர் என்னும்
கருத்து மிகப் பொருத்தமாய் உள்ளது. 

     புதிய கற்காலத்தில் கோலேரியர் என்ற இனத்தவர் இந்தியாவுக்குள்
நுழைந்து பல பிரிவுகளாகப் பிரிந்து ஆங்காங்குக் குடியேறினர் என்றும்,
அவர்களுள் ஒரு பிரிவினர் ஒரிஸ்ஸாவிலும் ஆனைமலையிலும் குடியேறினர்
என்றும் கூறுவர். இவர்கள் படு முரடர்கள் என்பர்; இவர்கள் வழிவந்தவர்கள்
இன்றும் ஆனைமலையிலும் காணப்படுகின்றார்கள் ; ஒரிஸ்ஸா மலைகளில்
இப்போது தழையாடை புனைந்து வாழும் ஆதி குடிகளும் 
இவ்வினத்தவர்களே. கோலேரியர்களிடம் ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின் இனக்
கலப்புக் காணப்படுகின்றது. கோலேரியர் முண்டா என்ற ஒரு மொழியைப்
பேசினர். கோலேரியர்கள் இந்தியாவுக்குள் எப்போது நுழைந்தார்கள், எப்படிநுழைந்தார்கள் என்று விளங்கவில்லை. ஆசாம் மாநிலத்தில் வாழும் 
காசிகளின் உடற்கூறுகளும் மலையாள மக்களின் உடற்கூறுகளும் சில
வகைகளில் ஒத்துள்ளன. காசிகளின் உடற்கூறுகளைப்போலவே கோலேரியரின்
உடற்கூறுகளும் காணப்படுகின்றன. ஆசாமில் கிடைத்துள்ள பெருங்கற்
புதைவுகளின் அமைப்பும் தென்னிந்தியப் பெருங்கற் புதைவுகளின் அமைப்பும்
ஒரே விதமாக உள்ளன. கோலேரியர்கள் இந்தியாவின் வடகிழக்குப்
பகுதியினின்றும் இடம்பெயர்ந்து தென்மேற்காகப் படர்ந்தனர் போலும். அன்றி
அவர்கள் மலையாள மக்களுடன் பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தனர்
என்றும் கொள்ளலாம். மத்தியப் பிரதேசம், வங்காளம் ஆகிய இடங்களில்
வாழும் ஆதிகுடிகள் பேசும் மொழிகள் சிலவற்றில் திராவிட மொழிகளின்
கூறுபாடுகள் கலந்துள்ளன என்பதில் ஐயமில்லை. எனவே, முன்னொரு
காலத்தில் கங்கைக்கரைகளிலும் திராவிட இனத்து மக்கள் பரவி வாழ்ந்து
வந்தனர் என்று கொள்ளுவதற்கு இடமுண்டு.

     கோலேரியர் நாடோடிகள் அல்லர்; வேட்டையாடியே பிழைத்தவர்களும்
அல்லர். அவர்கள் கைதேர்ந்த உழவர்கள். ஆங்காங்கு குடியேற்றங்கள்
அமைத்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் விலங்குகளைக் கடவுளாக
வணங்கினர்; தென்புலத்தாரை வழிபட்டனர்; உயிர்நீத்தவர்கட்கும் பேய்கட்கும்
பூதங்கட்கும் உயிர்ப்பலி கொடுத்தனர். இறந்த பிறகும் உயிர்கட்கு வாழ்வு
உண்டு என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் தென்புலத்தாரை வழிபட்ட
காரணத்தைக் கொண்டு ஓரளவு ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தவர்கள்
என்று துணியலாம். அவர்கள் மேற்கொண்டுள்ள பழக்கவழக்கங்கள் பல
திராவிட மக்களின் வாழ்க்கை முறைகளிலும் அவர்கள் வழியே பிற்காலத்திய
இந்து சமூகத்திலும் இடம் பெற்றுள்ளன. ஆனைமுகத்து விநாயகக் கடவுளும்,
குரங்கு வடிவங் கொண்ட அனுமனும் ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின் விலங்கு
வழிப்பாட்டினின்றும் உருவானவர்கள் என்று சிலர் கருதுவர். இக் கருத்தை
மெய்பிக்கப் போதுமான சான்றுகள் இல. ஏனெனில், இக் கடவுளரின் வழிபாடு
இந்தியாவிற்றான் காணப்படுகிறதேயன்றி ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின்
வாழ்க்கையில் காணப்படவில்லை. கிடைத்தவற்றிலிருந்து இவர்கள்
முற்காலத்தில் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம். 

     புதிய கற்காலம் நிகழ்ந்தபோதே தமிழகத்துடன் தொடர்பு கொண்ட
மற்றுமோர் இனத்தினர் திராவிடர்கள். இவர்கள் 
தமிழகத்திலேயே பிறந்து வளர்ந்த ஆதிகுடிகள் என்று சிலர் கருதுகின்றனர்.
திராவிடர்கள் தமிழகத்தினின்றும் பரவிச் சென்று மத்திய தரைக் கடல்
நாடுகளில் குடியேறினர் என்பது இவ் வாய்வாளரின் கொள்கையாகும். வேறு
சிலர் இவர்கள் யாவரும் லெமூரியாவைச் சார்ந்தவர் என்பர். பண்டைய
காலத்திய மத்தியதரைக் கடற்பகுதி மக்களுக்கும் திராவிடருக்குமிடையே பல
ஒற்றுமைகள் காணப்படுகின்றன. திராவிடர்கள் மத்தியதரைக் கடல்
வாழ்க்கையைக் கைவிட்டு வெளியேறி, இமயமலையின் வடமேற்குக்
கணவாய்களின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று சிலர் கருதுவர்.
இக் கருத்தை நிலைநாட்டப் பல சான்றுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.
பலூசி ஸ்தானத்தில் வழங்கும் பிராஹு வி மொழிக்கும், திராவிட 
மொழிக்கட்கும் உள்ள இனவொற்றுமைகள் அச் சான்றுகளில் சிறந்தவையாம்.
ஆசியாமைனரைச் சேர்ந்த லிசியர்களும் மத்திய தரைக்கடல் இனத்தைச்
சேர்ந்தவர்கள். இவர்கள் ‘த்ரிம்ளை’ (Trimmlai) எனவும் அழைக்கப்பட்டதாக
இவர்களுடைய கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இச் சொல்லின் ஒலி
‘திரமிளம்’, ‘தமிழ்’ என்னும் சொற்களின் ஒலியுடன் ஓரளவு இணக்கமுற்றதாகக்
காணப்படுகின்றது. மேலும், பண்டைய சுமேரியர்களுக்கும்
தமிழர்களுக்குமிடையிலேயும் சில ஒற்றுமைகள் உண்டு. கடவுள் வழிபாட்டிலும்,
கோயில் அமைப்பிலும் இவர்களுடைய பழக்க வழக்கங்கள் இயைந்துள்ளன.
மிட்டன்னிகள், எலாமைட்டுகள், காசைட்டுகள் போன்ற பண்டைய மேற்காசிய
மக்களுடைய மொழிகளுக்கும் தமிழுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பைக்
காணலாம். ஈரானின் பழங்குடி மக்களான கஸ்பியர்களின் தலையும்,
திராவிடர்களின் தலையும் வட்டவடிவமாக உள்ளன. இச் சான்றுகளைக்
கொண்டு மத்திய தரைக் கடல் மக்கள் சிலர் ஈரான் வழியாக வெளியேறி,
இந்தியாவின் வடமேற்குப் புறத்தில் நுழைந்து வந்து தென்னிந்தியாவில்
குடியேறினர் என்று ஊகிக்க இடமுண்டு. 

     இந்தியாவின் வடகிழக்கில் வாழ்ந்து வந்த ஆதிகுடிகளான காசிகளின்
பெருங்கற் புதைவுகளுக்கும் தென்னிந்தியப் பெருங்கற் புதைவுகளுக்குமிடையே
வேறுபாடுகள் உண்டு. காசிகளின் புதைகுழிகள் புதிய கற்காலத்தைச்
சார்ந்தவை. ஆனால் தென்னிந்தியப் புதைவுகள் இரும்புக் காலத்தியவை. 
வடிவ அமைப்பிலும், கட்டடக் கூறுபாடுகளிலும் இவ்விரு புதைவுகளும்
வேறுபடுகின்றன. ஆனால், மத்திய தரைக்கடல் மக்கள் அமைத்துக்
கொண்டிருந்த புதைகுழிகளுக்கும் தென்னிந்தியக் குழிகளுக்குமிடையே பல
இயையுகள் உண்டு. இங்கிலாந்து, போச்சுக்கல்,ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், கருங்கடலின் கீழ்க்கரை நாடுகள்,
வடஆப்பிரிக்கா, காக்கேசிய நாடுகள், பாலஸ்தீனம், ஈரான் ஆகிய இடங்களில்
கிடைக்கும் பெருங்கற் புதைகுழிகள் அடுத்துத் தென்னிந்தியாவிற்குள்
காணப்படுகின்றன. உலகில் வேறெங்குமே அவற்றைக் காணமுடியாது. இக்
காரணத்தைக் கொண்டு மத்திய தரைக்கடல் மக்கள் தென்னிந்தியாவுக்குக்
குடிபெயர்ந்து வந்தவர்கள் என்று ஊகிக்கலாம். மேக்ரான், பலூசிஸ்தானம்,
சிந்து ஆகிய தரைப் பகுதிகளைக் கடந்தும், கடல் வழியாகவும்
தென்னிந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் திராவிட இனத்தினர் என்று சில
ஆய்வாளர் கருதுகின்றனர். மேற்காசிய மக்களுக்கும் திராவிடருக்குமிடையே
காணப்படும் பழக்கவழக்கங்களிலும் ஈரான், மெசப்பொடோமியா ஆகிய நாட்டு
ஊர்ப் பெயர்களிலும் திராவிடரின் ஊர்ப் பெயர்களிலும் பல ஒற்றுமைகள்
அமைந்திருப்பது இதற்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது. மக்கள்
பெருவாரியாகக் குடிபெயரும்போது அவர்களுடைய நாகரிகமும், பண்பாடும்,
பழக்கவழக்கங்களும் அவர்களுடனே படர்வது இயைபு. இரு வேறு 
இனத்தினர் தமக்குள் வாணிகத் தொடர்பு கொண்டிருக்குங் காலத்தில்
அவர்களுடைய நாகரிகங்களும் பண்பாடுகளும் ஓரளவு ஒன்று கலப்பதுண்டு.
ஆனால், அவை ஒரே விதமாக உருமாறிவிட முடியாது. வரலாற்றுக்கு 
முற்பட்ட மிகப் பழங்காலத்தில், இக் காலத்தில் இருப்பதைப் போன்று
விரிவான, விரைவான போக்குவரத்துத் தொடர்புகள் கிடையா. இருவேறு
மக்களினம் தத்தம் பண்பாடுகள் ஒன்று கலந்து உருமாறும் அளவுக்கு 
வாணிகத் தொடர்பை நீடித்து வந்தனர் என்று கொள்ளுவது பொருத்தமாகாது;
எனவே மத்தியதரைக் கடல் மக்கள் தென்னிந்தியாவுடன் வாணிகத்
தொடர்பைக் கொண்டார்களோ அல்லரோ, பெருந்தொகையினர்
தென்னிந்தியாவுக்குக் குடிபெயர்ந்து வந்து ஆங்காங்கு வாழலானார்கள் என்ற
கருத்து இயைபுடையதாகத் தோன்றுகின்றது. இவை தவிர 
லெமூரியாவிலிருந்தே இக்கூட்டத்தினர் அனைவரும் தென்னிந்தியாவுக்கு 
வந்து, இங்கிருந்தே பின் சிலர் சென்றிருக்கலாம். 

     தென்னிந்தியாவில் திராவிடரின் குடியேற்றம் எப்போது நேர்ந்திருக்கக்
கூடும்? தமிழரின் நாகரிகம் என்றொரு தனித்த நாகரிகம் தோன்றி
வளர்ச்சியுற்றது எக்காலமாக இருக்கலாம்? இக் கேள்விகட்கு விடை காணும்
முயற்சியில் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடுக்கலாகாது. நேரில் கிடைத்துள்ள
அகச்சான்று புறச்சான்றுகளைக் கொண்டும், ஆய்வு விதிகளைக் கொண்டும்ஆய்வாளர்கள் உண்மை நாடவேண்டும். இத்தகைய மறுக்க முடியாத 
சான்றுகள் இன்று கிடைத்துள்ளவை மிகவும் குறைவு என்பதை நாம்
ஒப்புக்கொள்ளவேண்டும். அகழ்வாராய்ச்சி, இலக்கியம், மொழியமைப்பு
ஆகியவற்றின் மூலம் அறிய வேண்டிய செய்திகள் விரிந்துள்ளன.
ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு முதலிய இடங்களில் கிடைத்துள்ள
புதைபொருள்கள், அயல்நாட்டுப் பயணிகளின் பூகோளக் குறிப்புகள், சங்க
இலக்கியம் இவற்றைக் கொண்டு பண்டைய தமிழரின் வரலாற்றையும்
பண்பாடுகளையும் விரிவான முறையில் ஆய்ந்தறிய வாய்ப்புகள் உள்ளன. 

     மேற்காசியப் பகுதிகளில் கிடைத்துள்ள பெருங்கற் புதைவுகளின் காலம்
கி.மு. 2500-2000 என்று அறுதியிடப்பட்டுள்ளது. எனவே, லெமூரியாவிலிருந்து
முற்காலத்தில் சென்று இக் கால அளவில் அவ்விடங்களில் வாழ்ந்திருந்த
பண்டைய மக்கள், குடிபெயர்ந்து வந்து இந்தியாவுக்குள் புகுந்து
தென்னிந்தியாவுக்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கித் திராவிட இனத்தைத்
தோற்றுவித்தனர் என்று கொள்ளுவது வரலாற்றுக்கு உடன்பாடாகும். இக்
குடியேற்றம் கி. மு. 2500ஆம் ஆண்டளவிலேயே தொடங்கியிருக்க வேண்டும்.

     இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் மிகப் பெரியது
ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டதொன்றாகும். வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்துடன் தொடர்பு கொண்டுள்ள புதைபொருள்கள் இங்கு ஏராளமாகக்
கிடைத்துள்ளன. மனித எலும்புக் கூடுகள், உரல்கள், மெருகிட்ட
மட்பாண்டங்கள், இரும்பாலான சில கருவிகள், பொன்னாலும்
வெண்கலத்தாலும் செய்யப்பட்ட அணிகலன்கள், பொன் வாய்ப்பூட்டுகள், சிறு
வேல்கள் ஆகியவை அடங்கிய தாழிகள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளன.
இவற்றைப் போன்ற புதைபொருள்கள் சைப்ரஸ் தீவிலும், பாலஸ்தீனத்திலும்
காணப்படுகின்றன. ஆனால், அவ்விடங்களில் இரும்பாலான கருவிகள்
கிடைக்கவில்லை. ஆனால், ஆதிச்சநல்லூரில் இரும்புக் களைக்கொட்டுகளும்
சூலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக் காரணத்தைக் கொண்டு
ஆதிச்சநல்லூர் நாகரிகம் சற்றுப் பிற்பட்ட காலத்தைச் சார்ந்ததெனக்
கொள்ளவேண்டி உள்ளது. 

     பழங் கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல
கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்துக்கு அண்மையில்
கற்களினாலான கோடரிகள், உளிகள், சுறண்டிகள், கத்திகள் ஆகிய கருவிகள்
சில கிடைத்துள்ளன. இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன. கற்கருவிகளைச்
செம்மையாகச் செதுக்கி மெருகிட அக்கால மக்கள் பயின்றிலர் போலும்.
கற்கருவிகளையே யன்றி மரத்தாலான ஈட்டிகளையும், தண்டுகளையும் 
அவர்கள் கையாண்டனர் என்று ஊகிக்கவும் இடமுள்ளது. தமிழகத்தில்
வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இப் பழங்கற்காலக்
கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றைச் சமைப்பதில் கைத்திறனோ நுட்ப
அறிவோ பயன்பட்டதாகத் தெரியவில்லை. வேறு சில இடங்களில் ஈட்டிகள்,
தோண்டு கருவிகள், வெட்டுக் கருவிகள், சம்மட்டிகள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவையாவும் கற்களில் செதுக்கப்பட்டவை.
சென்னைக்கு அண்மையில் கொற்றலையாற்றுப் படுகையிலும் வடமதுரையிலும்
பழங்கற்காலக் கருவிகள் பல கிடைத்துள்ளன. கைக்கோடாரியைச்
செதுக்குவதில் பழங்கற்கால மக்களுக்கு ஏற்பட்டிருந்த பயிற்சித் திறன்
தென்னிந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் ஒரே விதமாகக்
காணப்படுகின்றது. இதைக்கொண்டு இவ்விரு நிலப் பகுதிகளுக்கிடையே
பழங்கற்காலத்தில் மக்கள் போக்குவரத்தும் குடியேற்றங்களும்
ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
காடுவெட்டி நிலந்திருத்திக் கொள்ளுவதற்கு ஏற்ற உறுதியான கருவிகள் 
செய்து கொள்ள அறியாதவர்களாய் அக்கால மக்கள், காடுகளையும்
மலைகளையும் ஒதுக்கிவிட்டுச் சமவெளிகளிலும் பீடபூமிகளிலுமே வாழ்ந்து
வந்தனர். தமிழகத்தின் தென்கோடியில், சிறப்பாக மதுரைக்குத் தெற்கில்,
பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கவில்லை. எனவே, அங்கு அக்காலத்தில்
மக்கள் வாழ்க்கை தொடங்கவில்லை என்று கருதலாம். ஏனெனில்,
அவ்விடங்களில் கற்கருவிகளைச் செதுக்குவதற்கு வேண்டிய ஒருவகைப்
பளிங்குக்கல் (Quartzite) காணப்படுவதில்லை. அன்றியும் மக்கள் 
வாழ்க்கைக்கு இடங்கொடாத அளவு அங்குக் காடுகள் அடர்ந்து
வளர்ந்திருக்கவேண்டும். பழங்கற்காலக் கருவிகள் தமிழ்நாட்டில் வட
ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகுதியாகக் கிடைக்கின்றன.
அங்கெல்லாம் பழங்கற்கால மக்கள் பரவி வாழ்ந்தனர் என்று அறியலாம். 

     பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்து 
வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இடம்விட்டு இடம் நகர்ந்து கொண்டே
இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் சமவெளிகளில் வாழ்ந்து வந்தனராயினும்,
சிற்சில சமயம் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி மலைக்குகைகளில் ஒடுங்கி
வாழ்ந்தது முண்டு.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...