Monday, 9 February 2015

முதலாம் நரசிம்மவர்மன் (சு. கி. பி. 630-668)


முதலாம் நரசிம்மவர்மன் (சு. கி. பி. 630-668) 

     மகேந்திரவர்மனுக்குப் பிறகு அவன் மகன் முதலாம் நரசிம்ம வர்மன்
அரியணையேறினான். போரிலும் புகழிலும், தன் தந்தையினும் நரசிம்மவர்மன்
மேம்பட்டு விளங்கினான். சளுக்கரின்மேல் அவன் பல வெற்றிகளைக்
கொண்டான். மணிமங்கலத்தில் ஒரு முறையும், வாதாபியில் இரு முறையும்
அவன் சளுக்க மன்னன் 
இரண்டாம் புலிகேசியின்மேல் போர்தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றான்.

இரண்டாம் வாதாபிப் போர் வரலாற்றுப் புகழ்பெற்றதாகும். அப்போரை 
நடத்தி வெற்றிவாகை சூடி வந்த படைத் தலைமையர் பரஞ்சோதியே. பிறகு
சிறுத்தொண்டநாயனராகத் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றார்.
நரசிம்மவர்மன் இரண்டாம் வாதாபிப் போரில் அந் நகரைக் கைப்பற்றிய 
பிறகு புலிகேசி நீண்ட நாள் உயிர் வாழவில்லை. அவன் காலமான பிறகு (கி.
பி. 642) சளுக்கர் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக அந் நாட்டின்
தென்பகுதிகள் பதின்மூன்று ஆண்டுகள் பல்லவரின் ஆட்சியில் இருந்து
வந்தன. அக் கால அளவில் மூன்று அரசர்கள் சளுக்க அரியணைமேல்
அமர்ந்து ஆட்சி புரிந்து வந்தனர் என விக்கிரமாதித்தன் கல்வெட்டுகள்
கூறகின்றன. அம் மூவரும் பல்லவனுக்கு அடிபணிந்திருந்தனர் போலும்.
இரண்டாம் புலிகேசியினிடம் ஹர்ஷவர்த்தனன் தோல்வியுற்றுத் தன்
வீரத்துக்குக் களங்கம் கற்பித்துக் கொண்டான். அதே புலிகேசியை வென்று
வாகை சூடி முதலாம் நரசிம்மவர்மன் தன் தந்தைக்கு ஏற்பட்ட இழுக்குக்குக்
கழுவாய் கண்டான்; ‘வாதாபிகொண்டான்’ என்னும் ஒரு விருதையும்
பெருமையுடன் புனைந்து கொண்டான். 

     முதலாம் நரசிம்மவர்மனிடம் மாபெரும் கடற்படை ஒன்று இருந்தது.
அதன் துணையைக்கொண்டு இருமுறை இலங்கையின்மேல் படை செலுத்திச்
சென்று வெற்றி கண்டான். அவன் தன் நண்பன் மானவர்மன் என்ற சிங்கள
மன்னனுக்கு இலங்கையின் அரசுரிமையை வழங்கினான். (கி. பி. 631) 

     இந் நரசிம்மவர்மன் சிவனிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவன்.
மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் படைத்துத் தமிழகத்து வரலாற்றில் அழியாத
புகழிடத்தைப் பெற்றுக்கொண்டான் இம்மன்னன். இவன் காலத்தில் சீன
யாத்திரிகன் யுவான்-சுவாங் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தான் (கி. பி. 640).
அவனுடைய குறிப்புகளிலிருந்து அவன் கண்ட தொண்டை மண்டலத்தைப்
பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன. காஞ்சிபுரம் ஆறு மைல் சுற்றளவு
இருந்தது. அக் காலத்துத் தமிழகத்து நகரங்களுள் இது மாபெரும் நகரமாகக்
காட்சி அளித்தது. அந் நகரில் நூறு பௌத்தப் பள்ளிகள் நடைபெற்று 
வந்தன. அங்குப் பதினாயிரம் பிக்குகள் தங்கி அறம் வளர்க்க வசதிகள்
அமைக்கப்பட்டிருந்தன. இப்பள்ளிகளில் பெரும்பாலன திகம்பரப் பிரிவைச்
சார்ந்தவை. தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பௌத்தத்துக்குச்
செல்வாக்குக் குன்றி வந்துவிட்டதெனினும் காஞ்சிபுரத்தில் அது சீரும் சிறப்புடன் வளர்ந்து வந்தது. நாலந்தாப் பல்கலைக் கழக ஆசிரியர்
தருமபாலர் என்பார் காஞ்சிபுரத்திலிருந்து பயின்று சென்றவர்தாம். அக்
காலத்தில் தொண்டை மண்டலத்து மக்கள் கல்வியறிவுக்கும் சமய 
வளர்ச்சிக்கும் அளித்திருந்த செல்வாக்கின் உயர்ச்சியை இதனால் நாம் நன்கு
அறிந்துகொள்ளுகின்றோம். 

     முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பின்னர் அவன் மகன் இரண்டாம்
மகேந்திரவர்மன் பல்லவ அரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன்
ஈராண்டுகளே அரசாண்டான் (சு. கி. பி. 668-670). அவன் வருணாசிரம
தருமத்தை நிலைநாட்டினான் எனவும், கடிகைகளை வளர்த்தான் எனவும்
கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவன் சளுக்க மன்னன்
விக்கிரமாதித்தனுடன் போரில் ஈடுபட்டிருந்தான் என்று அறிகின்றோம். 

     இரண்டாம் மகேந்திரனுக்குப் பின்பு அவனுடைய மகன் முதலாம்
பரமேசுவரவர்மன் (சு. கி. பி. 670-695) அரசாண்டான். சளுக்க மன்னன்
தொடர்ந்து பல்லவருக்குத் தொல்லை கொடுக்கலானான். சளுக்க மன்னன்
விக்கிரமாதித்தன் கைகளில் பரமேசுவரவர்மன் தோல்வியுற்றான் எனவும்,
பல்லவ குடும்பத்தையே சளுக்கர்கள் வேரறுத்துவிட்டனர் எனவும்
விக்கிரமாதித்தனுடைய கடவால் செப்பேடுகள் (கி.பி.674) தெரிவிக்கின்றன.
அவன் காவிரியின் தென்கரையில் உள்ள உறையூரிலிருந்து அவ்வேடுகளை
எழுதி வழங்கியதாகவும் அவற்றினின்றும் அறிகின்றோம். ஆனால்,
பல்லவருடைய சாசனக் குறிப்புகள் கடவால் செப்பேடுகள் கூறும் செய்திக்கு
முற்றிலும் முரணாகக் காணப்படுகின்றன. திருச்சிக்கு அண்மையில்
பெருவளநல்லூரில் பல இலட்சம் சேனையுடன் போராடிய 
விக்கிரமாதித்தனைப் பல்லவ மன்னன் வென்று, அச்சளுக்க மன்னன் சுற்றிய
கந்தையுடன் போர்க்களத்திலிருந்து ஓடச் செய்தான் என்று கூரம் 
செப்பேடுகள் கூறுகின்றன.4 

     பரமேசுவரவர்மன் சிறந்த சிவத்தொண்டன். காஞ்சிபுரத்துக்கு
அண்மையில் கூரம் என்ற இடத்தில் சிவன்கோயில் ஒன்று எழுப்பினான்;
மாமல்லபுரத்திலும் சில கோயில்கள் செதுக்குவித்தான்.  முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம்
நரசிம்மவர்மன் இராசசிம்மன் (ச. கி. பி. 695-722) மணிமுடி சூட்டிக்
கொண்டான். இவனுடைய கல்வெட்டுகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலேயே
பொறிக்கப்பட்டுள்ளன. இவன் ஏறக்குறைய இருநூற்றைம்பது விருதுகளைத் 
தன் பெயருடன் இணைத்துக் கொண்டான். அவற்றுள் சிறப்பானவை
இராசசிம்மன், சங்கரபத்தன், ஆகமப்பிரியன் என்பனவாம். பிராமணரின்
கடிகைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்து வந்தான். மேலும், பல
சிறப்புகளை இவனுடைய ஆட்சியில் காண்கின்றோம். சீன தேசத்துக்குத் தூது
ஒன்றை அனுப்பிப் படைத்துணை பெற்றுத் திபேத்தின்மேல் போர்
தொடுத்தான். இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனின் ஆட்சி சில தீவுகளிலும்
செலுத்தப்பட்டு வந்தது. அஃதுடன் கிழக்கிந்தியத் தீவு இராச்சியங்களுடன்
இவன் நட்புறவு வைத்திருந்தான். 

     இவ் விரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் காஞ்சிபுரத்தில் 
வாழ்ந்திருந்த தண்டி என்ற வடமொழிப் புலவர் தமிழில் அணியிலக்கணம்
ஒன்றை இயற்றியுள்ளார். அது அவர் பெயராலேயே ‘தண்டியலங்காரம்’ என்று
வழங்கி வருகின்றது. இப் பல்லவ மன்னன் பனைமலை, மாமல்லபுரம் ஆகிய
இடங்களிலும் கற்றளிகள் எழுப்பியுள்ளான். மாமல்லபுரம் நகரமே இவன்
காலத்தில் அமைக்கப்பட்டதுதான். அங்கு ஒரே பாறையில் குடையப்பட்டுள்ள
கோயில்களும் சிற்பங்களும் கடற்கரைக் கோயிலும் இவன் காலத்தில்
செதுக்கப்பட்டவையேயாம். இம்மன்னனுக்குப் பெரும் புகழையும்,
சைவசமயத்தில் என்றும் அழியாத இடத்தையும் பெற்றுக்கொடுத்தது
காஞ்சிபுரத்தில் இவன் எழுப்பிய கைலாசநாதர் கோயிலாகும். திருத்தொண்டத்
தொகையில் நாயன்மார்களுள் ஒருவராகச் சேர்க்கப்பட்டிருக்கும் பூசலார்
நாயனார் திருநின்றவூரில் சிவபெருமானுக்குத் தம் நெஞ்சிலேயே கோயில்
ஒன்றை எழுப்பிய காலத்தில் காஞ்சிபுரத்தில் கற்றளி ஒன்றை இம் மன்னன்
கட்டி, அதில் சிவபெருமானை எழுந்தருளிவித்தான் எனப் பெரியபுராணம்
கூறும். திருத்தொண்டத் தொகையில் கழற்சிங்க நாயனாராகச் 
சேர்க்கப்பட்டுள்ள மன்னன் இந் நரசிம்மவர்ம பல்லவன்தான். இவனுக்கு
அழகிற் சிறந்த மனைவியர் இருவர் இருந்தனர். ஒருத்தி நடனத்தில் மிகவும்
வல்லவள். அவள் பெயர் அரங்கப் பதாகை. 

     இரண்டாம் நரசிம்மவர்மனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம்
பரமேசுவரவர்மன் (கி.பி.722-730) பட்டமேற்றான். இவன் நீண்ட நாள் அரசாட்சியில் நீடித்திருக்கவில்லை. இவனுடைய ஆட்சியின்
இறுதியாண்டுகளில் சளுக்கர்கள் பல்லவரின்மேல் மீண்டும் படையெடுத்தனர்.
விளந்தை என்ற ஊரில் நடைபெற்ற போரில் இவனைச் சங்க மன்னன்
ஸ்ரீபுருஷன் என்பான் கொன்றான். பரமேசுவரன் இறந்த பிறகு நாட்டில்
அரசுரிமைக் குழப்பம் ஒன்று ஏற்பட்டது. அரசுரிமையை ஏற்று அரியணை ஏற
யாருமே முன்வரவில்லை. அவ்வமயம் பல்லவரின் இளைய பரம்பரையைச்
சேர்ந்த இரணியவர்மனிடம் மக்கள் முறையிட்டுக் கொண்டனர். 
அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி அவன் பன்னிரண்டு வயதே 
நிரம்பிய தன் மகன் பரமேசுவரனுக்கு முடி சூட்டுவிக்க ஒப்புக்கொண்டான். 
இச் சிறுவன் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் என்ற பெயரில் அரசுகட்டில்
ஏறினான் (கி. பி. 730-795). வைகுண்டப் பெருமாள் கோயில் கல்வெட்டு 
ஒன்று இச் செய்தியைத் தெரிவிக்கின்றது. 

     பல்லவ சளுக்க பாண்டியரின் கல்வெட்டுகளிலிருந்து நந்திவர்மனின்
ஆட்சியைப் பற்றிப் பல அரிய செய்திகளை அறிந்து கொள்ளுகின்றோம்.
அரிய வாய்ப்பு ஒன்று பழுத்துத் தன் மடியில் விழக்கண்ட சளுக்க மன்னன்
இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தின்மேல் படையெடுத்து வந்து 
(கி. பி. 740) அதை எளிதில் கைப்பற்றிக்கொண்டான். நந்திவர்மன் 
காஞ்சியைக் கைவிட்டுத் தோற்றோடிவிட்டான். விக்கிரமாதித்தன் நகரத்தையும்
கோயில்களையும் அழிக்கவில்லை. கோயில்களின் சிற்ப அழகுகளில் சொக்கி
அவற்றுக்குப் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான். முந்திய
தாக்குதலில் அவற்றினிடமிருந்து சளுக்கர்கள் கைப்பற்றிச் சென்றிருந்த
விலையுயர்ந்த அணிகலன்களை அவற்றுக்கே திருப்பி அளித்துவிட்டான்.
அஃதுடன் அமையாமல் தமிழகத்துக் கைதேர்ந்த சிற்பிகளைத் தன் 
நாட்டுக்குக் கூட்டிச் சென்று பட்டடக்கல் முதலிய இடங்களில் தமிழகத்துச்
சிற்ப அழகுகள் ததும்பும் வகையில் பல கோயில்களையும் எழுப்பினான். 

     இரண்டாம் நந்திவர்மன் ஓய்ந்திருக்கவில்லை. உதயசந்திரன் என்ற
திறன்மிக்க படைத்தலைவன் ஒருவன் துணைகொண்டு காஞ்சிபுரத்தையும்
பல்லவ அரசையும் மீட்டுக்கொண்டான். ரேவா என்ற இராஷ்டிரகூடப்
பெண்ணை அவன் மணந்து அவள் மூலம் தந்திவர்ம பல்லவனைப்
பெற்றெடுத்தான். 

     இரண்டாம் நந்திவர்மன் வைணவ சமயத்தைப் பின்பற்றியவன்.
காஞ்சியில் முக்தேசுவரர் கோயிலையும், வைகுண்டப் பெருமாள் கோயிலையும் இவன் எழுப்பினான். திருமங்கை யாழ்வார் இவன்
காலத்தில் வாழ்ந்தவர். நந்திவர்மன் அறுபத்தைந்து ஆண்டுகள் 
அரசாண்டான். இவனுடைய அறுபத்தொன்றாம் ஆண்டில் பொறித்துக்
கொடுக்கப்பட்ட பட்டத்தாள்மங்கலம் செப்பேடுகள் இவனுடைய தந்தையின்
பெயர் இரணியவர்மன் என்றும், இவன் இளமையிலேயே முடிசூட்டப் 
பெற்றான் என்றும் தெரிவிக்கின்றன. இவனுடைய 21-ஆம் ஆண்டில் வெட்டிக்
கொடுக்கப்பட்ட காசக்குடிச் செப்பேடுகள் இவன் சிம்ம விஷ்ணுவின் இளவல்
என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரமேசுவர போத்தராசாவின்
நாட்டையே ஆண்டு வந்தான் என்றும் தெரிவிக்கின்றன. 

     இரண்டாம் நந்திவர்மனின் உடன்காலத்தவனான கங்க மன்னன்
ஸ்ரீபுருஷகொங்கணி மகாதிராசா என்பவன் (கி.பி. 725-78) இரண்டாம்
விக்கிரமாதித்திய சளுக்கனுக்கு உடந்தையாகப் பல்லவ நாட்டின்மேல்
படையெடுத்து வந்தான் (கி.பி. 731). வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள
ஸ்ரீபுருஷமங்கலம் (இப்போது சீஷமங்கலம் என்று அழைக்கப்படுவது) இவன்
பெயரில் ஏற்பட்டதுதான். போரின் தொடக்கத்தில் கங்க மன்னன்
நந்திவர்மன்மேல் வெற்றிகண்டான்; பல்லவரின் கொற்றக் குடையையும்,
‘பெருமானபு’ என்ற விருதையும் பறித்துக்கொண்டான். ஆனால், போர்களின்
இறுதியில் முடிவான வெற்றி நந்திவர்மனுக்கே கிடைத்தது. ஆகவே, அவன்
கங்கர்கட்குச் சொந்தமான கங்கபாடி - 6000 என்ற நிலப்பகுதியைக் 
கைப்பற்றித் தன் போர்த்துணைவன் பாண மன்னனுக்குத் தன் நன்றிக்கு 
ஈடாக அதை வழங்கினான். 

     நந்திவர்மனுடைய படைத் தலைவனான உதயசந்திரன் விண்ணப்பம்
செய்துகொண்டதன் மேல் மன்னன் பாலாற்றங்கரையின்மேல் இருந்த ஒரு
கிராமத்தின் பெயர் குமாரமங்கல வெள்ளட்டூர் என்றிருந்ததை மாற்றி, அதற்கு
‘உதயசந்திர மங்கலம்’ என்று பெயரிட்டு, அங்கு அதர்மம் செய்தாரை 
ஒழித்து, அக் கிராமத்தை நூற்றெட்டுப் பிராமணருக்குத் தானம் செய்தான்
என்று உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன.5 பிராமணருக்குத் தானம்
செய்யப்பட்ட கிராமத்தில் ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்த பலருடைய
உரிமைகள் விலக்கப்பட்டன என்ற பொருள்பட இச்செப்பேடுகள் கூறுவதால்,
அக் குடிகளின் அதர்மம் எவ்வாறு கண்டறியப்பட்டது, எவ்வாறு  ஆய்ந்து முறை செய்யப்பட்டது. அக் குடிகளுக்கு வேறு நிலங்கள்
அளிக்கப்பட்டனவா, தம்மிடமிருந்து விலக்கப்பட்ட நிலங்கட்கு இழப்பீடு
அளிக்கப்பெற்றனரா என்ற ஐய வினாக்கட்கு விளக்கங் காண முடியவில்லை.
தானம் பெற்ற அந்தணர்கள் தமிழ் நாட்டினராகத் தோன்றவில்லை; வட
இந்தியாவினின்றும் வரவழைக்கப்பட்ட, அன்றித் தாமாக வந்து குடியேற
இடமின்றி உழன்றுகொண்டிருந்த பிராமணர்கள் அவர்கள் என்று
அவர்களுடைய பெயர்கள் எடுத்துக்காட்டுகின்றன. இச் செப்பேட்டுச்
சாசனத்தின்கீழ்ப் பயன்பெற்ற சில பிராமணரின் பெயர்கள் கௌண்டின்ய
கோத்திரம் பிரவசன சூத்திரம் ருத்ரசர்மன், கௌண்டின்ய கோத்திரம்
ஆபஸ்தம்ப சூத்திரம் மாதவசர்மன், காசியப கோத்திரம் ஆபஸ்தம்ப 
சூத்திரம் காளசர்மன், முத்கல கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரம் சன்னகாளி,
கௌசிக கோத்திரம் ஆபஸ்தம்ப சூத்திரம் கங்கபுரம், துரோண சிரேஷ்ட
புத்திரன் ரேவதி ஆகியவையாம். உதயேந்திரம் செப்பேடுகளில்
எழுதப்பட்டுள்ள மெய்க்கீர்த்திக் கவிதையை இயற்றியவன் மேதாவிகுலத்து
உதித்த பரமேசுவர கவி என்பவனாவான். 

     இரண்டாம் நந்திவர்மன் கால் சாய்ந்தது. அவனுக்குப்பின் அவன் மகன்
தந்திவர்மன் மணிமுடி சூட்டிக்கொண்டான் (கி.பி. 796-846). நந்திவர்மன் 
இறந்த பிறகு பல்லவ வரலாற்றில் ஒரு திருப்பம் காணப்படுகின்றது. வடக்கில்
இராஷ்டிரகூடரின் செல்வாக்கு உயர்ந்து வந்து கொண்டிருந்தது. பல்லவர்க்கு
அவர்களுடன் நல்லுறவு கிடையாது. தெற்கே விசயாலய சோழனின் பரம்பரை
தொடங்கிவிட்டது. பல்லவ அரசின் பண்டைய புகழ் ஒளி மங்கலாயிற்று.
உள்நாட்டுக் கலகங்களும், சூழ்ச்சிகளும் மலிந்தன. நாட்டில் அமைதி
குலைந்துவிட்டது. பல்லவ அரசு ஆட்டங் கொடுக்கலாயிற்று. தந்திவர்மன்
இராஷ்டிரகூடரின் பிடியிலிருந்து ஓரளவு தப்பினானாயினும், சோழர்களுடன்
போரிட்டுத் தன் வலிமையை இழக்கும் அளவுக்கு அவனுடைய ஆற்றல்
குன்றிவிட்டது. தந்திவர்மனின் மனைவி கதம்ப குலத்தவளான அக்களநிம்மடி
என்பவள் வயிற்றில் பிறந்தவன் மூன்றாம் நந்திவர்மன். தந்திவர்மனுக்குப் 
பிறகு இவனே அரியணை ஏறினான் (கி.பி. 846-69). 

     மூன்றாம் நந்திவர்ம பல்லவன் இராஷ்டிரகூட இளவரசி சங்கா
என்பவளை மணந்திருந்தான். இவள் வயிற்றில் பிறந்தவன்தான் அடுத்த 
பல்லவ மன்னனாக இருந்த நிருபதுங்கன் என்பவன். நந்திவர்மனின் மற்றொரு
மனைவியான கண்டன் மாறம்பாவை என்பாள் வயிற்றில் பிறந்தவன் 
அபராஜித விக்கிரமவர்மன். நந்திவர்மன் சிறந்த போர்த்திறம் படைத்தவன். நந்தி போத்தரசன், 
நந்தி விக்கிரமவர்மன், விசயநந்தி விக்கிரமவர்மன் என்று பல பெயர்கள்
இவனுக்கு உண்டு. நந்திக் கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப்
பாராட்டப்படுபவன் இவனே யாவான். தெள்ளாற்றில் மட்டுமன்றி, வெள்ளாறு,
கடம்பூர், வெறியலூர், தொண்டி, பழையாறு ஆகிய இடங்களில் தன்
பகைவரைப் பொருது வெற்றிகண்டான் இவன் என நந்திக் கலம்பகம்
கூறுகின்றது. கொங்கு நாடும், சோழ நாடும் இவனுக்குத் தோற்று
அடிபணிந்தனவாகையால் இவனுக்குக் ‘கொங்கன்’ என்றும் ‘சோணாடன்’
என்றும் விருதுகள் எய்தின. மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 862 ஆம்
ஆண்டளவில் இரண்டாம் வரகுண பாண்டியனுக்குத் துணையாக இலங்கை
மன்னன்மேல் போர் தொடுத்தான். இவனுக்குப் பக்கபலமாக நின்று 
அப்போரை நடத்திக் கொடுத்தவன் இளவரசன் நிருபதுங்கன் ஆவான்.
மூன்றாம் நந்திவர்மன் நந்திக் கலம்பகத்தில் அவனி நாராயணன் என்றும்,
ஆட்குலாம் கடற்படை அவனி நாரணன் என்றும், நுரை வெண்திரை
நாற்கடற்கு ஒரு நாயகன் என்றும் பாராட்டப் பெறுகின்றான். மல்லையிலும்
மயிலையிலும் துறைமுகங்கள் அமைந்திருந்தன. இப் பல்லவ மன்னன் கடல்
கடந்து சென்று அயல்நாடுகளுடன் தொடர்புகொண்டிருந்தான் என்பது
விளக்கமாகின்றது. 

     மூன்றாம் நந்திவர்மனையடுத்து அவன் மூத்த மகன் நிருபதுங்கன்
முடிசூட்டிக்கொண்டான். இவனுடன் பிறந்த தம்பியின் பெயர் கம்பவர்மன்
என்பது. இவனுடைய மாற்றாந்தாய் வயிற்றுப் பிறந்த அபராஜிதன்
நிருபதுங்கன்மேல் அரசுரிமைப் போர் தொடுத்து அவன்மேல் திருப்புறம்பயம்
என்ற இடத்தில் வெற்றி கண்டான் (சு. கி. பி. 895). இப் போரில் இவனுக்குக்
கங்கரும் சோழரும் துணை நின்றனர். இப் போர் முடிவுற்ற பிறகு இருபத்தாறு
ஆண்டுகள் வரையில் நிருபதுங்கனைப் பற்றிய செய்தியே கிடைக்கவில்லை.
அவன் தன் நாற்பத்தொன்பதாம் ஆட்சி யாண்டில் நாட்டிய கல்வெட்டு ஒன்று
திருத்தணிகைக்கு அண்மையிலுள்ள மடவளம் என்னும் ஊரில்
காணப்படுகின்றது. அபராஜிதனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் 
நிருபதுங்கன் தான் ஒதுங்கியிருந்த இடத்திலிருந்து மீண்டும் வெளிப்பட்டான்
என்று இதனால் அறிகின்றோம். அபராஜிதனின் ஆட்சி பதினெட்டு 
ஆண்டுகள் நீடித்தன (கி. பி. 895-913). அவனுடைய செல்வாக்குத்
தொண்டைமண்டலத்தின் தென்பகுதி வரையிற்றான் எட்டி இருந்தது.
தொண்டைமண்டலம் சோழரின் பிடியில் சிக்குண்டிருந்தது. இக் காலத்தில்
நாட்டப்பட்ட ஆதித்த சோழனின் கல்வெட்டுகள் தொண்டை மண்டலத்தில் பல இடங்களிலும்
காணப்படுகின்றன. வாணகோவரையர்கள் ஆதித்தனுக்குத் திறை செலுத்தி
வந்தனர் என்ற செய்தியைத் திருவொற்றியூர்க் கல்வெட்டுகள் இரண்டு
தெரிவிக்கின்றன. அபராஜிதனை ஆதித்த சோழன் போரில் கொன்றான் 
(கி. பி. 913) என்ற செய்தியை வீரராசேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு
ஒன்றினால் அறிகின்றோம். இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச்
செப்பேடுகளும் இப் போரைக் குறிப்பிடுகின்றன. 

     அபராஜிதன் தன் இறுதியாண்டுகளில் அடைந்த இன்னல்களைப்
பயன்படுத்திக்கொண்டு நிருபதுங்கன் தன் அரசியற் செல்வாக்கை
வளர்த்துக்கொண்டான். ஏற்கெனவே முதுமையினால் வாடிய அபராஜிதன்
நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கவில்லை. இம் மன்னனுக்குப் பிருதிவி
மாணிக்கம், வீரமகாதேவியார் என இரு மனைவியர் இருந்தனர். முன்னவள்
பேரால் பிருதிவி மாணிக்கம்படி என்றொரு முகத்தலளவை வழங்கி வந்தது.
உக்கல் என்ற ஊரில் எழுப்பப்பட்ட திருமால் கோயில் ஒன்று புவன மாணிக்க
விஷ்ணு கிரகம் என்று இவ்வரசியின் பேரால் விளங்குகின்றது.
வீரமகாதேவியார் இரணிய கருப்பம், துலாபாரம் என்ற சடங்குகளைச் செய்து
கொண்டு கோயிலுக்குத் துலாபாரம் பொன்னில் ஐம்பது கழஞ்சு எடுத்து
வழங்கினாள் என்று திருக்கோடிக்காக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. 

     நிருபதுங்கனுக்குப் பிறகு பட்டமேற்ற கம்பவர்மனைப் பற்றிப் 
போதுமான விளக்கம் கிடைக்கவில்லை. தன் உடன்பிறந்தாராகிய
நிருபதுங்கனுடனும், அபராஜிதனுடனும் இவன் சில காலம் இணைந்து ஆட்சிப்
பொறுப்புகளை ஏற்றிருந்தான் என்று ஊகிக்கலாம். பிறகு பல்லவ அரசானது
சிறுசிறு தலைவர்களின் கைக்கு மாறி இறுதியில் கி.பி. 949-ல் தன்னிலை
தடுமாறித் திறன் குன்றி மறைந்து போயிற்று. அவ் வாண்டிற்றான்
இராஷ்டிரகூட மன்னன் படையெடுத்து வந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக்
கொண்டான். 

     பல்லவர் காலத்திய பெருமை தமிழகத்து வரலாற்றில் சுடர்விட்டு
ஒளிர்கின்றது. தமிழரின் நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும் புறம்பானவர்களான
பல்லவர்கள் தமிழகத்துக்கு வந்த பிறகு நாளடைவில் தாமும் தமிழராகவே
மாறிவிட்டனர். ஆதியில் வடமொழியைத் தம் ஆட்சி மொழியாகக்
கொண்டிருந்தனரேனும், நாளடைவில் அவர்கள் தமிழையும் தம் ஆட்சி
மொழியாகக் கொண்டனர். அவர்கள் காலத்தில் பல வடமொழி நூல்கள் தோன்றின. வடமொழி நூலாசிரியர்கள் பலர் பல்லவராட்சியில்
மேம்பாடுற்றனர். பல்லவர்கள் தமிழையும் பேணி வளர்த்தனர். 
    

     தமிழகத்தில் ஆதியில் குடியேறிய பல்லவர்கள் காடு கொன்று
நாடாக்கினார்கள். பிறகு பல்லவர்கள் பரம்பரையை விளக்கம் செய்த
புகழ்பெற்ற வேந்தர்கள் மிகப் பெரிய ஏரிகளைக் கட்டியும், ஆற்றுக்கால்கள்
கோலியும் உழவுக்குப் பெரிதும் வளமூட்டி வந்தனர். காடுகளை வெட்டி
நாடாக்கினராகையால் பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற விருது ஒன்றும் உண்டு. சில ஊர்களின் பெயர்களில் அவ் விருது சேர்ந்திருப்பதை இன்றும்
காணலாம். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கார்வேட்டி நகரம் காடுவெட்டி நகரம்
என்பதன் மரூஉவேயாகுமெனத் தோன்றுகின்றது. சென்னைக்குப் பன்னிரண்டு
கல் தொலைவில் ‘காடுவெட்டி’ என்ற பெயருள்ள சிற்றூர் ஒன்றும் உண்டு.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...