Showing posts with label வங்கி (நிர்வாக) மோசடி. Show all posts
Showing posts with label வங்கி (நிர்வாக) மோசடி. Show all posts

Wednesday, 4 February 2015

ICICI அராஜகங்கள்

ICICI அராஜகங்கள்

யாதய்யா ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆந்திர பிரதேச அரசின் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறையின் (`டி’ பிரிவு) எலெக்ட்ரீஷியன். ரூபாய் 15,000 அற்பக் கடனுக்காக உயிரைப் பறிகொடுத்து விட்டார். இல்லையில்லை, அந்தக் கடனைத் திருப்பித் தரவில்லை என்பதற்காக ஐசிஐசிஐ வங்கியின் `வசூல் ராஜாக்கள்’ அவர் உயிரை பலி வாங்கி விட்டனர்.


இந்த மே மாதம் 22ம் தேதியன்று எலைட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஆசாமிகள் யாதய்யாவைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அவர் வேலைக்குப் போய்விட்டதை அறிந்து, அவரது புகைப்படத்தை வாங்கிக் கொண்டு நண்பகல் நேரத்தில் அலுவலகத்தில் அவரைக் கண்டுபிடித்துத் தமது அலுவலகத்திற்கு ‘தூக்கி’ வந்து விட்டனர்.


15,000 ரூபாய் கடனுக்காகத் தாம் மிரட்டப்படுவதாக மனைவி சுனந்தாவை தொலைபேசியில் அழைத்துச் சொல்லி, எப்படியாவது ‘பணத்தைத் திரட்டு’ என்று புலம்பி இருக்கிறார் யாதய்யா. அவர் அதற்காக அலைந்து கொண்டிருக்கும்போது 2 மணி போல மைத்ரி மருத்துவமனையில் இருந்து ‘யாதய்யா இறந்துவிட்ட’ செய்தி வருகிறது சுனந்தாவிற்கு. அந்த பேதைப் பெண் என்ன துடிதுடித்திருப்பாள் பாருங்கள்.


ஐசிஐசிஐ ஏஜெண்டுகள் தமது கணவனைக் கொன்று விட்டனர் என்று அவர் புகார் கொடுத்ததன் அடிப்படையில், பஞ்சகட்டா காவல் நிலைய ஆய்வாளர் ஜி. நரசய்யா, எலைட் நிறுவனத்தின் பங்குதாரர் ராஜாவையும் அவனுடன் சென்ற இன்னும் 3 பேரையும் கைது செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், குற்றத்தை ஐசிஐசிஐ வங்கி மூடி மறைக்கப் பார்க்கிறது. யாதய்யா பணத்தைச் செலுத்த எலைட் அலுவலகம் வந்ததாகவும், திடீரென்று ‘வலிப்பு’ வந்து கீழே விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டுவிட்டதாகவும், மருத்துவமனைக்கு விரைவாக அவரை அழைத்துச் சென்றும் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஜோடிக்கின்றனர் ஐசிஐசிஐ வங்கியும் ‘எலைட்’ வசூல் கும்பலும்.

ஐசிஐசிஐ நிர்வாகத்தின் ‘டார்ச்சர்’ கதை புதியதல்ல. இணையதளத்திற்குள் சென்றால் இவர்கள் செய்யும் ‘ராவடி வேலை’ வெட்ட வெளிச்சமாகும்.இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் தினசரிகளில் பெயரே சொல்லாமல் ஒரு ‘தனியார் வங்கி’ என்றுதான் இத்தகைய செய்திகள்- இந்தச் செய்தி உள்பட-வருகின்றன. செல்வாக்கு உள்ளவர்களைக் காப்பாற்றும் பத்திரிகை தர்மம் போலும்!

புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஆட்டோ, உருட்டுக்கட்டை சகிதம் வசூல் ஏஜெண்டுகளை நியமிப்பது பலமுறை வெளியாகி கடும் கண்டனத்திற்கு ஆளாகியும் அவர்கள் திருந்துவதாக இல்லை.



உச்சநீதிமன்றத்தில் 06.02.07 அன்று நீதியரசர்கள் ஏ. ஆர். லட்சுமணன், அல்த்மஸ் கபீர் இருவரடங்கிய ‘பெஞ்ச்’, இப்படியான குண்டர் முறை கடன் வசூல் முறைகளைக் கடுமையாக எச்சரித்து முடிவிற்குக் கொண்டுவர பணித்தது. உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் இந்த வழக்கில் ஐசிஐசிஐ வங்கி உயர் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கும் பதிவாகியுள்ளது என்று BEFI-TN பொதுச் செயலாளர் அ. ரெங்கராஜன் குறிப்பிடுகிறார்.


28/6/07 அன்று அவர் விடுத்துள்ள பத்திரிகை குறிப்பில், யாதய்யா கொல்லப்பட்டிருக்கும் ஹைதரபாத் நகரில் மட்டுமே இந்த வங்கிக்கு எதிராக 160 புகார்கள் பதிவாகி உள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. ‘ஏஜெண்டுகள் செய்வதற்குத் தாம் பொறுப்பில்லை’ என்று இவர்கள் கை கழுவுவதை விட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கும் ரெங்கராஜன், கோடி கோடியாய் வங்கிக் கடன் ஏய்க்கும் பெரும்புள்ளிகள் சட்டத்தின் பிடிக்குள் சிக்காமல் இருப்பதும், சொற்பத் தொகைக்காக கீழ்மட்ட மனிதர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்படுவதும் அராஜகமானது என கொதிக்கிறார்.


யாதய்யா கொலையுண்ட செய்தி அறிந்து அடுத்த நாளே பெங்களூரில் ஐசிஐசிஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கும் `கிரெடிட் கார்டு வைத்திருப்போர் சங்க’ பொதுச் செயலாளர் சி.வி. கிதப்பா இந்த வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து' செய்ய வேண்டுமென்று கோரியுள்ளார். சங்கத்தின் ஹைதராபாத் கிளையின் தலைவர் பிவிஎஸ்பி சவுத்ரியும் கண்டித்திருக்கிறார். ஆந்திரபிரதேச மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பி. சுபாஷன் ரெட்டி பத்திரிகை செய்திகளை வைத்தே விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.


வங்கித்துறை சீர்திருத்தம் பற்றி புளகாங்கிதம் அடைந்து புல்லரிப்போர்க்கு இதெல்லாம் பொருட்டாகத் தெரிவதில்லை. கடுமையான நடவடிக்கையை ஜனநாயக சக்திகளே போராடி உறுதி செய்யமுடியும். யாதய்யாவின் மரணம் இன்னொரு செய்தியாகிப் போய்விடக்கூடாது.

பிரபல வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு...???!!!

பிரபல வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு...???!!!

நாணயம் விகடன் ஆகஸ்ட் 31 இதழில் வெளிவந்த செய்தி:



சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அவர் பணிபுரியும் நிறுவனத்தில் அனைத்து பணியாளர்களுக்கும் பிரபல வங்கி ஒன்றில் கணக்கு தொடங்கி அதன் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டதால் எந்த நேரத்திலும் வங்கியில் பணம் எடுக்க முடியும்.

வாசகரின் தங்கைக்கு காலேஜ் பீஸ் கட்டணம் கட்டுவதற்காக 2,000 ரூபாயை எடுத்து கொடுத்தனுப்பியுள்ளனர். அந்த தொகையில் ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி ஏற்க மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். வேறு 500 ரூபாயை கொடுத்துவிட்டு வங்கிக்கிளையில் போய் புகார் செய்யப்போனார், வாசகர். “இந்த நோட்டு எங்க ஏடிஎம்-மில் எடுத்த நோட்டுங்கறதுக்கு என்ன ஆதாரம்?” என்று கேட்டுள்ளனர் வங்கி அதிகாரிகள். கோபத்தில் அந்த கள்ள நோட்டை கிழித்து எறிந்துவிட்டு நாணயம் விகடன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார், வாசகர்.

நாணயம் விகடன் செய்தியாளர் உடனே அந்த வங்கிக்கிளைக்கு சென்று விசாரித்தபோது, “இந்த விஷயத்துக்கெல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது சார். அதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் வங்கியின் ஏடிஎம்-மில் கள்ள நோட்டு வர வாய்ப்பில்லை என்பதுதான் எங்கள் பதில்” என்று வங்கி அதிகாரிகள் முடித்துக் கொண்டனர்.

நாணயம் விகடனின் விசாரணையில், சார்பதிவாளர் அலுவலக வட்டாரம் ஒன்றின் அருகே உள்ள வங்கி ஏடிஎம்-மிலும் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழங்குவதாக தெரிய வந்துள்ளது.

நாணயம் விகடன் செய்தியாளர், இந்த விசாரணையின்போது இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் துணை பொது மேலாளர் சுசித்ரா சவுத்ரியையும் சந்தித்திருக்கிறார்.வங்கி ஏடிஎம்-களில் கள்ள நோட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர் உறுதியாக மறுக்கவில்லை. மேலும், “வங்கி ஏடிஎம்-களில் கள்ளநோட்டு கிடைத்து, அதை வங்கி மறுத்தால் போலிஸில் புகார் கொடுக்கலாம். நேரடியாக ரிசர்வ் வங்கியிலும் புகார் கொடுக்கலாம். தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று சுசித்ரா சவுத்ரி கூறியுள்ளார்.

மற்றொரு நண்பர் ஒருவர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல ஐந்தெழுத்து வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். 1500 ரூபாயை எடுக்க அவர் முயற்சி செய்தபோது வெறும் 500 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. ஆனால் கணக்கில் 1500 ரூபாய் குறைந்து விட்டது. டெலிபாங்கிங் மூலமாகவும், நேரிலும் சென்று புகார் செய்தும் பலனேதும் இல்லை. காவல்துறையில் புகார் செய்ய முயற்சித்தால் அவ்வளவு பெரிய வங்கி 1000 ரூபாயை திருடுமா? கம்ப்யூட்டர் பொய் சொல்லுமா? என்று கேள்வி கேட்டு நண்பரை கிண்டல் செய்து அனுப்பி விட்டனர்.

இது போன்ற பிரசினைகளில் நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ சிக்கியிருக்கக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டால் ரிசர்வ் வங்கியை அணுகி இந்த பிரசினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி மேற்கொள்ள முடியும்.

மோசடிகளின் முழு உருவமாக மாறிவரும் தனியார் வங்கிகள்.

மோசடிகளின் முழு உருவமாக மாறிவரும் தனியார் வங்கிகள்.

வங்கியின் பணம் பெறுவதற்கு கட்டணம் வசூலிப்பார்களா? இந்தியாவில் பெருகி வரும் தனியார் வங்கிகளின் கேஷ் கவுன்டர்களில் பணம் செலுத்தினால் அதை பெற்றுக்கொள்ள கட்டணம் வசூலிக்கிறார்கள்.

ஆமாம். கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பில் தொகையை பணமாக செலுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தத் தொகையை செக்காக செலுத்த வசதி வைத்துள்ளார்களாம்; எனவே கவுண்டரில் பணமாக செலுத்தினால் கட்டணம் வசூலிப்பார்களாம். செக்காக செலுத்தினால் என்ன ஆகும்? உங்கள் கடனை கட்டுவதற்கு கடைசி நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக செக்கை கலெக்ஷன் பாக்ஸில் போட வேண்டுமாம். அப்படியென்றால் கடைசி நாள் என்பதற்கு என்ன அர்த்தம்? சரி. செக்காக செலுத்தலாம் என்றால் அதற்கு ரசீது கிடையாது. எனவே நீங்கள் செக் கொடுத்ததற்கு அத்தாட்சி கிடையாது. எனவே அவர்கள் சவுகரியப்பட்டபோது (தாமதமாக) அந்த செக்கை கலெக்ஷனுக்கு அனுப்புவார்கள்.

பிறகு தாமதக்கட்டணம் என்ற பெயரில் சில நூறு ரூபாய்களை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பார்கள். ஆக மக்களிடம் கொள்ளை அடிப்பது ஒன்றே லட்சியம். ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள், அவர்களிடமிருந்து எத்தனை கோடி ரூபாய்கள் இவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்று எண்ணிப்பாருங்கள்.

இவ்வாறு மக்கள் மீது சுமத்தப்படும் கொடுஞ்சுமையால் மக்கள் கடன் தவணை கட்டத்தவறும் போது நடக்கும் அராஜகங்கள் அனைவருக்கும் தெரியும்.

இதற்கான தீர்வுதான் என்ன? இந்த தீர்வை அடைவதில் உங்கள் பங்கு என்ன?

அவுட்சோர்சிங் - (வங்கி) நிர்வாகங்களின் துருப்புச் சீட்டு

அவுட்சோர்சிங் - (வங்கி) நிர்வாகங்களின் துருப்புச் சீட்டு

பிரிட்டனில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக உள்ள விதவைக்கு வங்கிப் பணி முக்கியமா, மலேசியாவிலோ, இந்தோனேசியாவிலோ குடும்பத்தில் வருமானத்தை ஈட்ட சக்தி உள்ள ஒரே நபரான இளம் பெண்ணுக்கு அந்தப் பணி முக்கியமா? இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது இத்தாலியில் நடந்த ‘ஒர்க்ஷாப்’ பில். ‘அவுட்சோர்சிங்’ கிற்குள் இத்தனை விஷயமிருக்கிறது. இந்தியர்கள் ஏன் வேறு நாட்டுத் தொழிலாளர்கள் பணிகளைத் தாம் செய்ய முன்வரவேண்டும் என்று மேற்கத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டனர்.


-பி. இந்திரா, துணைத் தலைவர், சிஐடியு - தமிழ்நாடு
(இத்தாலி பயண அனுபவக் குறிப்புகளிலிருந்து)


வளர்ந்துவிட்ட தொழில் யுகத்தில் லாபத்தைப் பெருக்கக் கையாளப்படும் வழிமுறைகளில் OUTSOURCING என்பது தற்சமயம் உலகெங்கிலும் பிரதானமாக வியாபித்துள்ளது. ஒரு நிறுவனம் அதனுடைய சில பணிகளையும் தானே மேற்கொள்ளாமல் அதை வெளி அமைப்புகள், நிறுவனங்கள் மூலம் முடித்துக் கொள்வதுதான் OUTSOURCING என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்பை உறிஞ்சி தங்களுடைய லாப வேட்டையை பெருக்குவதற்குப் பயன்படுத்துகிறது.


உதாரணத்திற்கு அமெரிக்காவில் கால் சென்டர்களில் பணிபுரிவோருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 525/- கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே பணிக்கு இந்தியாவில் ரூ. 45/- கொடுத்தால் போதுமானது. வேலை வாய்ப்பு என்ற எலும்புத்துண்டை வீசிவிட்டு எத்தகைய உழைப்பு சுரண்டல் அமோகமாக அரங்கேறுகிறது பாருங்கள்.


இதில் மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளேயே போட்டி வேறு, இந்திய வங்கித்துறையை சுபளீகரம் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் அந்நிய நிதி நிறுவனங்களின் வசதிக்காக மத்தியிலுள்ள அரசு சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரால் பல சீரழிவு வேலைகளில் இறங்கியது.

ஆனால் ஏதோ நல்ல காலமாகத் தொடர்ந்து வந்த அரசுகளுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாததாலும் இடது சாரிகளின் பலத்த எதிர்ப்பினாலும் தான் நினைத்த வேகத்தில் காரியங்களை நேரடியாக நகர்த்த முடியாமல் தவிக்கிறது. அதனால் கொல்லைப் புற வழியாக இந்திய பொதுத்துறை வங்கிகளின், தனித்துவத்தைத் தகர்க்கும் முகமாக பல வேலைகளில் ஒன்றாகத்தான் OUTSOURCINGஐ நுழைக்க முற்படுகிறது.


ஏற்கனவே பல வங்கிகள் தங்களது பல்வேறு துறை வேலைகளை-உதாரணத்திற்கு காசோலை பட்டுவாடா, தானியங்கி பராமரிப்பு- பணம் வைப்பது உட்பட, CREDIT CARD வசதியை தனியாக ஒரு நிறுவனம் மூலம் செய்வது போன்ற பல பணிகளை-தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. சில வங்கிகளில், பணி நியமனம் இல்லாத நிலையில், கிராமப்புற கிளைகளில் சொற்ப தொகுப்பூதியத்தில் வேலையில்லா இளைஞர்களை வங்கிப் பணியில் ஈடுபடுத்துவது நடக்கிறது. இவர்களுக்கு எந்த வித பணிப் பயன்களோ, பணிப் பாதுகாப்போ கிடையாது. மேலும் தற்சமயம் கிராமப்புற கிளைகள் வரை கணினி மயமாக்கப்பட்ட பிறகு இவர்கள் பல சமயங்களில் நிரந்தர ஊழியர்களின் கணினி ரகசிய குறியீட்டில் (PASSWORD) வேலை செய்வது என்பது சாதாரண நிகழ்வு. இதனால் ஏற்படும் அபாயத்தை ஊழியர்கள் உணராமல் இது நடந்து கொண்டிருக்கிறது.




இன்னும் கொடுமை, சில கிராமிய வங்கிகளில் வேலை பளு தாங்காமல் ஊழியர்களே தங்களுடைய சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வெளியாட்களுக்குக் கொடுத்து சில பணிகளை முடித்துக் கொள்ளும் அவல நிலையும் உள்ளது.




வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிற சூழலில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் செல்லும் போது அந்த இடத்தை நிரப்ப சொற்ப தொகுப்பூதியத்திற்கு அவர்களை தொழிலாளர்களுக்கெதிராக திருப்பவும் வசதியாக உள்ளது.


1980 களில் கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்தின் போது கரூரில் உள்ளூர் இளைஞர்களைத் திரட்டிக் ‘கொடுக்கிற சம்பளத்திற்கு வேலை செய்யத் தயார்' என்று கோஷமிட வைத்து ஊழியர்களை மிரட்டும் சதிமுயற்சி நடந்தது. 2003 ஜூலை 2 அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் போது ரூ. 4000 சம்பளத்திற்குப் புதிய ஆட்களை பணியில் நியமித்தது மாநில அரசு. சமுதாயத்தில் வேலையில்லாதவர்களை வேலையில் உள்ளவர்களுக்கெதிராக அணி திரட்டுவதற்கு OUTSOURSING என்கிற ஆயுதம் நிர்வாகங்களுக்கு உள்ள துருப்புச்சீட்டு.


வங்கிகளின் தொழில் நுட்ப மேம்பாட்டின் ஒரு அங்கமாக CBS என அழைக்கப்படும் CORE BANKING SOLUTIONS தற்போதைய வடிவம். இதற்குண்டான மென்பொருளை பல வங்கிகள் ரூ.500 கோடி, 600 கோடி கொடுத்து பல மென்பொருள் நிறுவனங்களிடமிருந்து பெறுகிறது. (வங்கித்துறையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டும் ஊழியர்களை வைத்தே மென்பொருளை உருவாக்கி வெகு சிறப்பாக இயங்குகிற நிலையில், மற்ற வங்கிகளில் சாத்தியமில்லையா என்கிற கேள்வி எழுவது இயற்கையே. ஆக இந்த கோடிகள் எந்த விழலுக்கு இறைக்கின்ற நீராகப் போகின்றது என்பது புரியாத புதிர்) இருப்பினும் ஊழியர்களின் அனுபவமோ கசப்பாகவும் சோகமாகவும் உள்ளது. இதை பயன்படுத்தும் வங்கித்துறையில் OUT SOURCING ஐ துரிதப்படுத்தும் அரசின் கொள்கையை நிறைவேற்றுமுகமாக வங்கிகளின் வங்கியாக உள்ள ரிசர்வ் வங்கி பல துறைகளை தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டது. பல கேந்திரமான துறைகள் மூடப்பட்டுவிட்டன.


இது இந்திய நாட்டிற்கும் இந்திய பொருளாதாரத்திற்கும் ஊறு விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் இந்திய வங்கித்துறையை மட்டுமின்றி இந்திய பொருளாதாரத்தையே மறைமுகமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் சக்திகளின் ஏற்பாடேயாகும்.

இதன் தொடர்ச்சியில்தான் ரிசர்வ் வங்கி 2006 ஜனவரியில் அனைத்து வங்கிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில் வங்கிகள் BUSINESS FACILITATOR மற்றும் BUSINESS CORRESSPONDENTகளை நியமித்து கொள்ளலாம் என்றும், யார் யாரை எப்படி நியமித்துக் கொள்ளலாம். அவர்களின் பங்கு பாத்திரம் என்ன என்றெல்லாம் பற்றி தெளிவாகக் கூறியுள்ளது.

அதற்கு ஈடாக அந்த வங்கிகள் ஒரு நியாயமான கமிஷன் மற்றும் கட்டணம் கொடுக்கவும் கூறியுள்ளது.

அத்தகைய நிறுவனங்கள் ஏறக்குறைய அனைத்து வங்கிப் பணிகளையும் கையாளுவதற்கு வழி வகை செய்கிறது. அதாவது ஒரு இணையான வங்கி நிர்வாகமே எந்தவித பொறுப்புமின்றி நடத்தப்படுவதற்கு உதவி செய்கிறது. ஆனால் இந்த ஏற்பாட்டின் மூலம் வாடிக்கையாளரின் முகத்தையே பார்த்திராத வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை இந்த நிறுவனங்களின் செயல்களுக்கு பொறுப்பாக்குகிறது.


இதன் நோக்கம் மிகவும் தெளிவு. இந்த நிர்ப்பந்தங்களின் மூலம் நிரந்தர ஊழியர்களைப் பணியை விட்டு விரட்டுவதற்கான ஏற்பாடுதான். வங்கி ஊழியர்கள் முறையாக அணி சேர்ந்துள்ளதும் அதன் பால் அவர்களின் கூட்டு பேர உரிமையும் ஆட்சியாளர்களுக்குக் பெரும் தடைகளாக உள்ளன. அதை சிதைப்பதற்கான ஒரு வழியாகவும் இது இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

ரிசர்வ் வங்கியின் இந்தத் தாக்கத்தின் தொடர்ச்சியாக பாரத ஸ்டேட் வங்கி இத்தகைய ஏஜென்சிகளை நியமிப்பதற்கு ஒரு வழிமுறையைத் தொகுத்து சுற்றுக்கு விட்டுள்ளது. ஆகவே இந்த நோய் விரைவில் மற்ற வங்கிகளையும் பிடித்து வங்கித்துறையை ஒரு குழப்பத்தில் தள்ளி ஒட்டுமொத்த வங்கித்துறையையே சீர்குலைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் பலமாக உள்ளன.


இதைத்தான் அந்நிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும், எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் வங்கி ஊழியர்களின் நிலைமையும் ஒட்டுமொத்த வங்கித்துறையின் எதிர் காலமும் பெரும் கேள்விக்குறியாக மாறும் என்பது திண்ணம். ஆகவே வங்கி ஊழியர்களின் மற்ற கோரிக்கைகளைக் காட்டிலும் அவுட்சோர்சிங் எதிர்ப்பு எந்த வடிவிலும் வங்கித்துறையில் நுழைய அனுமதி மறுப்பது, அதற்கான இயக்கங்களை கட்டுவது என்பது வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் முன்னால் உள்ள ஆகபெரும் கடமையும் சவாலுமாகும்.

கிரெடிட் கார்ட் அராஜகம்

கிரெடிட் கார்ட் அராஜகம் - சிக்கியது SBI-GE கூட்டணி

சென்னை, ஆக.21-
சென்னை கிரெடிட் கார்டு ஏஜென்சி ஊழியர் கைது செய்யப்பட்டார். போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் பள்ளி ஆசிரியை ஒருவரை மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு விவகாரங்களை "ஜி.ஈ. கண்ட்ரிவைடு" என்ற ஏஜென்சி நிறுவனம் கவனித்து வருகிறது. கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தாதவர்களிடம் பணம் வசூல் செய்து கொடுப்பது இந்த நிறுவனத்தின் வேலையாகும். இந்த நிறுவனம் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ளது.
நேற்று இந்த நிறுவனத்திலிருந்து டெலிபோனில் பேசி பல்லாவரத்தை சேர்ந்த ஆசிரியை அமீனா கார்த்தி என்பவரை மிரட்டியுள்ளனர். அமீனா கார்த்தி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரூ.15 ஆயிரத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை வசூலிப்பதற்காக சென்னை வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் பேசுவதாக போனில் பேசி மிரட்டியுள்ளார். இதுபற்றி அமீனா கார்த்தி வடக்கு கடற்கரை போலிசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார். துணை கமிஷனர் சூடேஸ்வரன், உதவி கமிஷனர் ராஜகோபாலன் (பொறுப்பு) ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்ட்ர் செல்வமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இன்ஸ்பெக்டர் பெயரில் மிரட்டியதாக "ஜி.ஈ. கன்ட்ரிவைடு" ஏஜென்சியின் ஊழியர் கவுதம் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 மிரட்டல் ஊழியர்களை போலிசார் தேடி வருகிறார்கள். பணத்தை வசூல் செய்வதற்காக போலிஸ் இன்ஸ்பெக்டர் பெயரை தவறாக பயன்படுத்தியதாக இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
***
சிக்கியது யானையின் வாலில் உள்ள சிறு மயிர்தான். கிரெடிட் கார்டு வணிகம் முழுமையாகவே இது போன்ற மோசடி மற்றும் மிரட்டல் முறையிலேயே நடைபெறுகிறது.
பொதுமக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே இதுபோன்ற சமூக அநீதிகளை கட்டுப்படுத்தும்.

வங்கிக்கடன் வசூலிப்பில் அத்துமீறல்

வங்கிக்கடன் வசூலிப்பில் அத்துமீறல்

வங்கிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சட்டதிட்டங்கள் மட்டுமல்லாமல், காலம்காலமாக மதிக்கப்படும் மரபுகளும் உள்ளன.


இதனை BANKING LAW AND PRACTICE என்பார்கள். ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது தேவையான வரைமுறைகளை வகுத்துக் கொடுப்பதோடு, பல்வேறு வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் கடன் வசூப்புக்கு குண்டர்களைப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டு வங்கிகள் மீது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த அவலம் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனியார் வங்கிகளில் தொடங்கியது.

ஆனால், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் இந்த வசூல் கலாசாரம் தொற்றுநோய் போல் வேகமாகப் பரவி வருகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணை தவறினால், வீட்டுக்கதவைத் தட்டுவதற்கு "தனியாள்கள்" நியமிக்கும் போக்கு வங்கிகளுக்கு அழகல்ல.

இந்தக் கடன் வசூலிப்பு ஏஜெண்ட்களின் அராஜகத்தால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்துள்ளன. எப்படியாவது கடனை வசூலித்துக் கொடுக்க வேண்டியது இந்த ஏஜெண்ட்களின் வேலை. இவர்களால் ஏற்படும் துன்பத்தையும், அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பலர்.

பல தனியார் வங்கிகளுக்கு எதிராக, பல் வேறு மாநில நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் நிலைமை மாறவில்லை.

கவலைக்குரிய இந்த நிலை எப்படி ஏற்பட்டது? கடந்த காலங்களில், வங்கிக்கடன் வழங்குவதற்கு சில வரைமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டன. பெரும்பாலும் தேவை அடிப்படையிலும் ஏதேனும் ஒருவகை செக்யூரிட்டியின்' பேரிலும்தான் வங்கிகள் தனிநபர் கடன்கள் வழங்கி வந்தன. கடன் கோருபவர்களுக்கு, அக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆதாரம் மற்றும் வருமானம் உள்ளதா என்பதைப் பரிசீலித்த பின்னரே வங்கிகளில் கடன் தருவார்கள்.

ஆனல் 1990களின் தொடக்கத்தில் அறிமுகமான பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் அதே காலகட்டத்தில் தோன்றிய, அதீத நுகர்வோர் கலாசாரத்தின் விளைவாக, வங்கிகள் அதிலும் குறிப்பாக புதிய தலைமுறை தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் போக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. புதிதாக உருவான நுகர்வோர் கலாசாரத்தை லாபம் ஈட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக வங்கிகள் கருதின.

இதன் பயனாக, வாகனக் கடன், தனிநபர் கடன், நுகர்பொருள் வாங்குவதற் காக கடன் மற்றும் கடன் அட்டைகள் என விதவிதமான கடன்களை வங்கிகள் தாராளமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கின.

முன்பு, கடன் விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிப்பதை கடமையாகக் கருதிய வங்கிகள் இப்போது அப்படிச் செய்வதில்லை. மாறாக,"கடன் வாங்கலியோ, கடன்!'' என்று கூவிக் கூவிக் கடன் கொடுக்கத் தொடங்கின. தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்தன.

இந்நிலையில், வங்கிகளுக்குத் தேவையெல்லாம் கையெழுத்திட்ட, பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் மட்டுமே! காரணம், மேலே குறிப்பிட்ட வசூல் முறையை நம்பித்தான் கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாக இந்தத் தனியார் வங்கிகள் வழங்கி வருகின்றன.

இப்படி, லாப நோக்கினால் உந்தப்பட்ட வங்கிகள், கடன் வழங்குவதில் காட்டிய அதீத ஆர்வம், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஏற்பட்ட அலட்சியப்போக்கு ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், கடன் தொகையை வசூலிப்பதற்கு வெளியாட்களை நியமித்தன. தாங்களே மேற்கொள்ள வேண்டிய பணியை, வங்கிக்குத் தொடர்பில்லாத ஆட்களை அல்லது நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தன.

அவர்கள் முறைகேடான வழிமுறைகளை கையாளுவதால் வங்கிக்கு அவப்பெயர் ஏற்படுமே என்ற கவலை ஏனோ ஏற்பட வில்லை.
நீதிமன்றங்களை அணுகினால் காலதாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஆனால், இதைக் காரணம் காட்டி, வங்கிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அனுமதிக்காது.

நல்லவேளையாக, இதுவரை அமைதி காத்துவந்த பாரத ரிசர்வ் வங்கி, இப்போது தன் மவுனத்தைக் கலைத்துள்ளது. கடந்தமாத இறுதியில், "நிதி மற்றும் கடன்கொள்கை''யை அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.
ரெட்டி, "வங்கிகள் தங்கள் கடன்தொகையை வசூலிப்பதற்கு, ஏஜெண்ட்களை நியமித்து, வன்முறையைப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'' என்று எச்சரித் துள்ளார்.

காலம் கடந்து வந்திருந்தாலும், இந்த அறிவிப்பு ஆறுதல் அளிக்கக்கூடியது. இது தொடர்பான விரிவான வழிமுறைகள் அடங்கிய வரைவு சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இதற்கான தொடர் நடவடிக் கையை தாமதமின்றி மேற்கொண்டு, வங்கிகளின் இத்தகாத செயலை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் என்று நிச்சயமாக நம்பலாம்.


இதற்கிடையே உச்ச நீதிமன்றம் ஒரு யோச னையைத் தெரிவித்துள்ளது.வசூல் ஏஜெண்ட்களின் அராஜகம் மற்றும் அத்துமீறிய செயல்களுக்கு அவர்களை நியமித்த வங்கிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற வகையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அது. உச்ச நீதிமன்றத்தின் யோசனை செயல்படுத்தப்படுமேயானால், வங்கிகள் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

ரிசர்வ் வங்கி கவர்னரின் எச்சரிக்கையை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி தனது கடன் தொகையை வசூல் செய்வதற்காக, 3,000 மார்க்கெட்டிங் மற்றும் சிறப்பு வசூல் அதிகாரிகளை வங்கி அலுவலர்களாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அலுவலர்கள் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மென்மையான முறையில் கடன்தொகையை வசூலிக்க முற்படுவார்கள் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இதர வங்கிகளும் இந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இத்தருணத்தில், மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள், கடன் தொகையைத் தவணை முறையில், அசல் மற்றும் வட்டியைத் திருப்பிச் செலுத்துகிறார்கள்.

வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி அமைப்புகள், வட்டிவீதத்தையும் கடனுக்கு மாதம்தோறும் கட்ட வேண்டிய தவணைத் தொகையையும் தங்கள் போக்கில் மாற்றுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதில் வெளிப்படையான நடைமுறை இல்லாததால், வாடிக்கையாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதுதவிர, வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவதற்கு முன்பே கடன் தொகையை முழுவதுமாக வட்டியுடன் திருப்பிச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் விரும்பினால், அதற்கென ஒரு தனிக்கட்டணத்தை வங்கிகள் வசூக்கின்றன. ஆக, தவணையை கட்ட தாமதம் ஏற்பட்டாலும் தண்டனை; முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தினாலும் தண்டனையா? இப்படி கூடுதல் கட்டணம் வசூப்பது நியாயமாகாது. இது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். இதுவும் விரைந்து அமல் படுத்தப்பட வேண்டும்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் தேவையான வங்கிச் சேவை அளிக்கவும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பட வேண்டிய வங்கிகள், வணிக ரீதியிலும் செயல்படுவது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், தனியார் லேவாதேவிக்காரர்களைப்போல் வங்கிகள் செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 




-எஸ். கோபாலகிருஷ்ணன்




(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்)

சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை!

சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை!

கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையை பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்.

இந்த அமைப்பின் முக்கிய பணி கடன்பெறும் நுகர்வோரின் நேர்மையை அளவிட்டு அதை புள்ளிவிவரமாக வழங்குவதே. இதன்மூலம் ஆபத்து குறைந்த கடன்களை வழங்கமுடியும் என்று வங்கிகள் கருதுகின்றன. அதாவது வாங்கிய கடனை திரும்ப கட்டும் பழக்கம் உடைய நல்ல வாடிக்கையாளர்களை பெறுவதே இந்த அமைப்பின் நோக்கம்.

அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகின்றன. எனவே வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்கள் இந்த பட்டியலில் சிக்குவது உறுதி. இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.

இது உலகத்தின் பல பகுதிகளிலும் பின்பற்றப்படும் ஒரு நடைமுறைதான். அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது.

நல்ல திட்டம்தானா?
ஒரு வெளிப்படையான பார்வையில் இந்த திட்டம் மிகவும் நல்ல திட்டமாக தோன்றும். ஆனால் இந்தியாவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்த திட்டத்தின் நோக்கத்தை சிதைப்பவையாக உள்ளன.

கடன் தகவல் மையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த 1972ம் ஆண்டு முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், 2000ம் ஆண்டில்தான் சிபில் அமைப்பு முழு வடிவத்திற்கு வந்தது. இந்த சிபில் நிறுவனத்தை முறைப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்றத்தில் 2004ம் ஆண்டில் விவாதம் நடந்தது.
வாடிக்கையாளர்களின் நலன்களைப்புறக்கணித்து, வங்கிகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் சட்டமான, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
அந்த விவாதத்தில் மிகச்சில உறுப்பினர்களே கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டதாக தெரியவில்லை.

இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் முன்பாகவே துவங்கப்பட்ட சிபில்(www.cibil.com) நிறுவனத்தில் இன்றைய நிலையில்,
டிரான்ஸ்யூனியன் இன்டர்நேஷனல் இன்க், டன் & பிராட்ஸ்ட்ரீட் தகவல் சேவை என்ற நிறுவனங்களின் தொழில் நுட்ப பங்கேற்புடன், ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பாங்க், ஐசிஐசிஐ(ICICI), ஹெச்டிஎஃப்சி(HDFC), ஹெச்எஸ்பிசி(HSBC), சிட்டி பாங்க், ஜிஈ(GE) போன்ற தனியார்/வெளிநாட்டு நிறுவனங்களும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.

நடைமுறை என்ன?
சிபில் அமைப்பில் உள்ள அனைத்து வங்கி மற்றும் வங்கியல்லாத நிதிநிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை இந்த தகவல் கிடங்கில் சேமிக்கின்றன. ஒரு வாடிக்கையாளர் எந்த ஒரு வங்கியிலோ அல்லது நிதிநிறுவனத்திலோ கடன் வாங்கிவிட்டு உரிய முறையில் திரும்ப செலுத்தாவிட்டால் அந்த விபரமும் சிபில் அமைப்பில் உறுப்பினராக உள்ள வங்கிகளுக்கு வழங்கப்படும்.

கடன் கொடுக்கும் வங்கிகள் வாடிக்கையாளரிடம் பெறும் அனைத்து தகவல்களும், பெயர், பிறந்த தேதி, அடையாளத்திற்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை – பாஸ்போர்ட் – ஓட்டுனர் உரிமம் – ரேஷன் கார்ட் – பான் கார்டு போன்றவற்றின் எண்களும் இந்த தகவல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது. பின் இந்த வாடிக்கையாளரின் நம்பகத்தன்மையும் ஒரு புள்ளிவிவரமாக பதிவு செய்யப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் ஏதோ ஒரு நிறுவனத்தில் கடன் பெற்று திரும்ப செலுத்தாவிட்டால் அவரது பெயர், மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் வைக்கப்படுகிறது.

எந்த ஒரு நபருக்கும் புதிதாக கடன் வழங்கும் நிறுவனம், கடனுக்கான விண்ணப்பத்தை பெற்றவுடன் அந்த உத்தேச வாடிக்கையாளர் குறித்த தகவலை சிபில் அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வாடிக்கையாளர் வேறு ஏதேனும் நிறுவனத்தில் கடன் வாங்கி திரும்ப செலுத்தியிராவிட்டால் அவரது பெயர் மோசமான வாடிக்கையாளர் பட்டியலில் இருப்பது தெரியவரும். பிறகு அவர் வங்கிக்கடன் என்பதையே மறந்து விட வேண்டியதுதான்.

நியாயம்தானே! இதிலென்ன தவறு? என்ற கேள்வி எழலாம்.

விசாரணை இன்றியே தண்டனை!
வங்கிகள் நியாயமாக கொள்ளும் நிலையில்தான் இந்த நடவடிக்கையும் நியாயமாக அமையும். ஆனால் இந்தியாவில் இயங்கும் எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நியாயமாக நடப்பது இல்லை. ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை இவை பொருட்படுத்துவதே இல்லை.

குறிப்பாக, கடன் பெறும் வாடிக்கையாளரின் திரும்ப செலுத்தும் தன்மையை சோதித்தல், கணக்குகளை வெளிப்படையாக பராமரித்தல், வாடிக்கையாளரின் புகார்களை விசாரிக்க தனி அமைப்பை நிறுவுதல் ஆகிய முக்கிய கோட்பாடுகளை இதுவரை எந்த தனியார்/வெளிநாட்டு வங்கியும் நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.

இந்த நிலையில் வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் ஏற்படும் பிணக்குகளை விசாரிக்கவே ஆள் இல்லாத நிலையில் விசாரணை இன்றியே வாடிக்கையாளர் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுகிறார். அவரது தரப்பு விளக்கத்தை கேட்க யாரும் இல்லாத நிலையில் வழக்கின் தரப்பினரில் ஒருவரான வங்கியே நீதிபதியாகி தீர்ப்பும் வழங்கி தண்டித்து விடுகிறது.

வழக்கு தரப்பினரே நீதிபதியாகி, மற்றொரு தரப்பினரை விசாரிக்காமலே தீர்ப்பு அளிப்பது என்பது இயற்கை நீதிக்கு எதிரானது.

ஆனால் இந்த சட்ட விரோத செயலை, சட்டம் படித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் முதல் அனைத்து அரசு தலைவர்களும் ஆசிர்வதித்து அனுமதிக்கின்றனர்.

ஏட்டு சுரைக்காய்கள்!
அதேபோல, கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குபடுத்தும்) சட்டம், 2005 (The Credit Information Companies (Regulation) Act, 2005) கீழும் ஒரு வாடிக்கையாளர், அவரது கடன் நம்பகத்தகவலை(Credit Worthiness) அவர் கடன்கோரும் வங்கிமூலம் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த வங்கியிலும் இதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. சிபில் ஒரு தனியார் அமைப்பு என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அங்கே செல்லுபடியாகாது.

எனவே வங்கிகள் என்ன அநியாய வட்டி மற்றும் கட்டணங்கள் விதித்தாலும், எதிர் கேள்வி கேட்காமல் கட்டும் வாடிக்கையாளர் நல்ல வாடிக்கையாளராகவும், கேள்வி கேட்பவர்கள் மோசமான வாடிக்கையாளராகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

ஒரு வாடிக்கையாளரைப்பற்றி தவறான தகவல் கொடுத்தால், பாதிக்கப்படும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க செய்யும் விதத்திலும், கடன் தகவல் மையங்கள் தவறிழைத்தது உறுதியானால் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மேற்கூறிய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களின் கடன் நம்பகத்தகவலை வங்கிகள் தவிர வேறு யாரும் பெற முடியாத நிலையில் இந்த சட்டம் வெறும் ஏட்டு சுரைக்காய்தான். சமையலுக்கு உதவாது.
கிரெடிட் கார்டு வணிக நெறிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக்கூட கண்காணிக்காத ரிசர்வ் வங்கி, சிபில் அமைப்பை கட்டுப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கையே.

நுகர்வோர் பாதுகாப்பு கருத்தியல் நிறைந்த வளர்ந்த நாடுகளில் கடன் தகவல் மையங்கள் சிறந்த முறையில் பணியாற்றலாம். ஆனால் நுகர்வோரின் நலனில் மயிரளவுகூட அக்கறை செலுத்தாத வணிக நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் கோலோச்சும் இந்தியாவில், நுகர்வோர் விழிப்புணர்வு மிகக்குறைந்த அளவே உள்ள இந்தியாவில் - சிபில் போன்ற கடன் தகவல் மையங்கள் மக்களை சுரண்டும் அமைப்புகளாகவே விளங்குகின்றன.

என்ன செய்யப் போகிறோம்?
மூளையை மழுங்கடிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கவர்ச்சி அரசியல், பரபரப்பூட்டும் ஊடகங்கள் இவற்றின் ஆதிக்கத்தை தகர்த்து, உணர்வு பூர்வமான அணுகுமுறையை விடுத்து; அறிவுபூர்வமான விமர்சன அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த சமூக அநீதிகளை – அவலங்களை மாற்றும் வழியாகும்

இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளை கட்டுப்படு்த்தும் அதிகாரம் எனக்கு இல்லை – ப. சிதம்பரம் (மறைமுக) ஒப்புதல்

வங்கிகளின் கடன் வசூல் போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திடீர் கரிசனம் காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் கடன்வசூல் செய்யும்போது சட்டப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சில தினங்களுக்கு முன் அவ்வங்கி உபதேசம் செய்துள்ளது.நன்றி: தினமலர் 30-11-07

இந்த உபதேசம் ஊடகங்களிலும் மிக உரத்து விவாதிக்கப்பட்டது. எனினும் இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2006 நவம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கை “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்”(http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Mode=0&Id=3148), இந்த விவகாரம் குறித்து மிகவிரிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதேபோல “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை”(http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/78385.pdf) யும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பட்டயமாக உள்ளது.

ஆனால் இந்த விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியை மட்டும் ஏனோ இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் மேற்கூறப்பட்ட விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களையே மற்றுமொரு வடிவில் வழங்கியுள்ளது. “வங்கிகளின் கடன்வசூல் முகவர்கள் – வரைவு விதிமுறைகள்” (http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Id=3961&Mode=0) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில்,
1. கடன் வசூல் நடவடிக்கைகளில் உரிய கவனம்,
2. வசூல் முகவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் இருந்து மட்டுமே பேசவேண்டும்,
3. கடன் வசூல் நடைமுறையில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க உரிய அமைப்பு ஏற்படுத்த வேண்டும்,
4. கடன் வசூல் முகவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வரைவு விதிமுறைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை டிசம்பர் மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “வங்கிப்பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வது மற்றும் இடர் மேலாண்மை குறித்த விதிமுறைகள்” மற்றும் “வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” ஆகியவற்றை முறைப்படி செயல்படுத்தி இருந்தாலே கிரெடிட் கார்டு செயல்பாடுகளில் பல பிரசினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறது இந்திய ரிசர்வ் வங்கி.பத்திரிகைகளும் இதை புரிந்து கொள்ளாமல் கிரெடிட் கார்டு பிரசினைக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது போல பம்மாத்து செய்கின்றன.
இந்நிலையில் கடந்த 03-12-07 அன்று நாடாளுமன்றத்தில் பேமென்ட் செட்டில்மென்ட் சிஸ்டம் பில் 2007 குறித்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், கடன் வசூல் அராஜகத்தில் தனியார் வங்கிகளே பெருமளவில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி: தினத்தந்தி 04-12-07
மேலும் அரசுடைமை வங்கிகள் இத்தகைய நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த வங்கியின் மேலாளர் அடுத்த நாளே வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றும் வீரவசனம் பேசியுள்ளார். எனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் வங்கிகள், நிதி அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பது உறுதியாகிறது.
மாபெரும் பொருளாதார மேதையான சிதம்பரத்தின் பேச்சு நமக்கு சில கேள்விகளை எழுப்புகிறது.

1. தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? இல்லையா?

2.ஆம் எனில் இந்த வங்கிகளை கட்டு்ப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லையெனில் ரிசர்வ் வங்கி என்ற ஒரு அமைப்பு எதற்காக?

3. இந்திய ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய நிதி அமைச்சகத்திற்கு உள்ளதா? இல்லையா?

4. ஆம் எனில் இந்திய வங்கி நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய நிதிஅமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சகம் என்ற அமைப்பு எதற்காக?

5. மத்திய நிதி அமைச்சகத்தையும், இந்திய ரிசர்வ் வங்கியையும், இந்தியாவில் வணிகம் செய்யும் தனியார் வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறதா?

6. ஆம் எனில் மேற்கண்ட விவகாரங்களுக்காக மத்திய நிதி அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? இல்லை எனில் மத்திய நிதி அமைச்சர் என்ற பதவி யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறது?

ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? உஷார்! உஷார்!!

பல்வேறு வங்கிகளும், தற்போது வாடிக்கையாளர்களுக்கு நேரடி சேவை வழங்குவதை தவிர்த்து வருகின்றன. HDFC உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடனை பணமாக திரும்ப செலுத்தினால், அவற்றை ஏற்க தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர். இணைய வழியிலோ, செக் மூலமாகவோ பணத்தை செலுத்த வேண்டுமாம்.

செக் மூலம் செலுத்தினால் அதற்கு ரசீது பெறும் வசதி பல இடங்களில் இருப்பதில்லை. இதைப்பயன்படுத்தி வங்கிகள், வேண்டுமென்றே தாமதமாக செக்கை கலெக்சனுக்கு அனுப்பி வாடிக்கையாளர்களிடம் தாமத கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் பெருகி வருகின்றன.

இதேபோல இணையவழி வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் PHISING அல்லது SPOOF என்ற பெயரிலான போலி இணையதளம் மூலமான மோசடிகள் பெருகி வருகின்றன. இத்தகைய போலி இணையதளங்களில் இருந்து குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளருக்கு மட்டும் மின்னஞ்சல் வருகிறதாக கூறப்படுகிறது.

அவற்றில் கீழ்க்கண்ட ஏதோ ஒரு வாக்கியமும் இடம்பெறுகிறது.

# Alerts !!! Upgrade And Secure Your Online Account Immediately.

# Urgent Security Warning

# ICICI Online Banking Account Security Upgrade



மிகவும் அவசரமாக பதில் அளிக்கவேண்டும் என்று கூறும் இந்த மெயிலில் உள்ள இணைப்பு வேறொரு போலி இணையதளத்திற்கு இட்டுச்செல்லும். அங்கு வாடிக்கையாளரின் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண், Login ID, Password போன்றவற்றை கேட்பார்கள்.


மேலே கேட்கப்பட்ட விவரங்களை கொடுத்துவிட்டால் உங்கள் கதி அதோ கதிதான். உங்கள் கணக்கில் உள்ள அனைத்து தொகையும் களவாடப்படும்.



சரி. பொய்யான இணையதளத்தை கண்டுபிடிப்பது எப்படி?



இணையதளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள டூல்பாரில் ஒரு பூட்டு சின்னம் இருக்கும். பெரும்பாலான போலி இணையதளங்களில் இந்த பூட்டு சின்னம் இருக்காது.
.

அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது இணையதளத்தின பாதுகாப்பு. வலைதளத்தினை பற்றி. [ secured website ]. சாதாரணமாக அனைத்து இணையதளங்களும் "http" என்று தொடங்கும். ஆனால் வங்கி போன்ற பாதுகாப்பான இணையதளங்களில் லாக் இன் செய்யும்போது அது, "https"என்று மாறிவிடும். (s=secured)


ஆனால் போலி இணையதளங்களில் லாக் இன் செய்தாலும் அது "http"என்று மட்டுமே இருக்கும். மேலும் இணையதளத்தின் கீழ்புறமுள்ள டூல்பாரில் பூட்டு சின்னமும் இருக்காது.

போலி இணையதளங்களை கண்டுபிடிக்க இவை தற்போதைய வழிமுறைகளே. இவற்றையும் மீறி போலி இணையதளங்கள் உருவாகலாம். இத்தகைய மோசடிகளிலிருந்து தப்பிக்க சந்தேகப்படும்படியான மின்னஞ்சல்களை குப்பைத்தொட்டி(Recycle bin)க்கு அனுப்புவதை சரியான வழியாகும். தேவை என்றால் நமது வங்கியின் இணையதளத்திற்கும் நாமாகவே சென்று லாக் இன் செய்யவேண்டும். மெயிலோடு வரும் இணைப்புகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
.
இத்தகைய போலி வங்கி இணையதளங்களை இணைக்கும் மெயில்கள், குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வருகின்றன. மற்றவர்களுக்கு வருவதில்லை. அப்படியானால் வங்கி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் எப்படி மோசடிப்பேர்வழிகளுக்கு கிடைத்தது என்று யோசிப்பது மிக முக்கியமான அம்சமாகும்.

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...