விடுதலைப்புலிகள் ~ உலக அழிவு ~ மாயன்கள்
கடந்த வாரம் அலுவலகத்தில் ஒரு நீண்ட மீட்டிங்கின் முடிவில் பேச்சு நம்ம ஊர்ப்பக்கம் திரும்பியது.பிரான்ஸில் இருக்கும் எங்கள் நிறுவனக் கிளையிலிருந்து வந்திருந்த பெண் நான் தமிழ் என்றவுடன் புலியா என்றார் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது...
இது நான் தமிழ் என்று சொல்லும்போது வரும் முதல் கேள்வி... பெரும்பாலும் ஓரளவு உலக வரலாறு மற்றும் பூகோளம் தெரிந்தவர்களிடம் இருந்து மட்டுமே....இவர்கள் மைனாரிட்டி தான்... பெரும்பாலானோர்க்கு நம்மினத்தின் இருத்தல் குறித்த எந்த புரிதலும் இல்லை...அந்தப் பெரும்பாலானோர் அறிந்தததெல்லாம் இந்தியா...யானை...குரங்கு... பாம்பு... ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...காந்தி...ஏகப்பட்ட பிச்சைக்காரர்கள்...இப்போது படித்த பெண்களென்றால் யோகா...
மறுபடி புலிகளுக்கே போவோம்...ராஜீவ் கொலை வழக்கோ... இல்லை முள்ளிவாய்க்கால் நீதி கேட்டு நடக்கும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களோ... நல்லதோ கெட்டதோ தமிழனும் புலிகளும் ஒன்று என்ற கருத்து... இஸ்லாமியரும் தீவிரவாதியும் ஒன்று என்ற புரிதலோடு போட்டி போடுகிறது மேற்கத்திய நாடுகளில்...
புலியா என்றதை அசை போட்ட போது மனதில் உடன் வந்தவர் மாயன்மார் தான்...உலகம் 2012 இல் அழியும் என்று மாயன்மார் கணித்ததாய் பொழுது போகாத பலர் புரளியை கிளப்பி விடத்தொடங்கினர்...உண்மையில் மாயன்மார் அப்பாவிகள்... அவர்களது காலண்டரின் புதிய சுற்று தொடங்குவதை காது மூக்கு கண் வைத்து பொழுது போகாத பலர் திரிக்கத்தொடங்கினர்...கடந்த ஆண்டில் வந்த 2012 படமும் இதற்கு தூபம் போட்டது...
உலகம் அழியும் என்று வந்த புரளி நம்மில் இருந்த பேராளியை தட்டி எழுப்ப டிசம்பரில் மாயன்மார் காலண்டர் சுற்றை கொண்டாடும் சிச்சன் இட்சாவை நோக்கி பயணித்தோம்... நம்மைப்போல் ஏகப்பட்டவர் அங்கே... உலக அழிவு குறித்த எந்த கவலையும் இல்லாது... Y2K போது ஒரு வார சாப்பாடு சேமித்து வைத்த ரகம் தான் எனது... இருந்தும் மாயன் மார் மீது அத்தனை நம்பிக்கை...
இதை கடந்த வருடமே எழுதி இருக்க வேண்டியது... இப்போது புலியா என்ற கேள்வி எழுதவைத்துவிட்டது... காரணம் ஆறு மில்லியன் மாயன்மார் இருந்தாலும் அவர்கள் மீது வாரி இறைக்கப்பட்ட சேற்றை துடைக்க இங்கே யாருமில்லை...மாயன்மார் உலக அழிவை கணித்தார்கள் என்று புரளி கிளப்பிய யாருமே இன்று அவர்கள் கணிக்கவில்லை...அது பொய்க்கவில்லை.. அது வெறும் காலண்டர் சுழற்சி மாற்றம் தான் என்று இன்று வரை பதியவில்லை...மாயன் மார் அப்பாவிகள்...சொந்த நாட்டிலே அகதிகள் போல் வாழ்பவர்கள்...மெக்ஸிகோவில் இவர்கள் வசிக்கும் பகுதி உலகிலேயே வெகு குறைவாக குற்றம் நடக்கும் இடம்...வெகு சிலரே ஆங்கிலம் படித்தவர்கள்... தானுண்டு தன வேலை உண்டு என்று வாழ்பவர்...
இனி மாயன் மார் என்றால் உலக அழிவை தவறாய் கணித்தவர் என்ற அவப்பெயர் மட்டுமே பெரும்பாலும் இந்த அவசர உலகின் சரித்திரத்தில் நிற்கும்... இல்லை அது பொழுது போகாத பலர் கிளப்பிய புரளி மட்டுமே...மாயன் காலண்டரின் புதிய சுழற்சி மட்டுமே அது என்று புலி என்றதும் உடனே தமிழில் பதியத்தோன்றியது..
No comments:
Post a Comment