கிரெடிட் கார்டு
இன்று கிரெடிட் கார்டு என்பது அந்தஸ்தின் அடையாளமாகிவிட்டது. தேவையிருக்கிறதோ, தேவையில்லையோ பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்த விரும்புகிறார்கள்.
உங்களுக்கும் அந்த ஆசையிருந்தால் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போதும் பின்வரும் 6 புத்திசாலித்தனமான விஷயங்களைக் கவனத்தில் வையுங்கள்...
1. 'பில்லிங் சைக்கிள்'
ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஒரு 'பில்லிங் சைக்கிள்' உள்ளது. நீங்கள் எப்போதும் உங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிடுவீர்கள் என்றால், 'பில்லிங்' சுழற்சியின் ஆரம்பத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு ஓர் இலவச 'கிரெடிட்' காலத்தை அனுபவிக்கலாம்.
2. குறைந்தபட்சத் தொகை
நீங்கள் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிடுவது, மீதமுள்ள தொகையை கடனாகக் கருதி அதற்கு வட்டி விதியுங்கள் என்று வங்கிக்குத் தெரிவிப்பதாக அமையும். கிரெடிட் கார்டு மீதான கடன்களுக்கான வட்டி விகிதம் பொதுவாக அதிகம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
3. உஷாராக வேண்டிய நேரம்
கிரெடிட் கார்டு உரிமையாளர் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தாவிட்டால், அதுகுறித்து அவருக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப்படும். கார்டு வழங்கல் விதிகளின்படி, அவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவராகக் கருதப்படுவார். அப்போது அவர் உஷாராகிக்கொள்ள வேண்டும்.
4. பணம் எடுக்கும்போது...
கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பணம் எடுப்பதெல்லாம், அவ்வாறு எடுத்த நாளில் இருந்து கடனாகக் கருதப்படும். அம்மாதிரியான கடன்களுக்கு எந்த `இலவச கிரெடிட் காலமும்' இல்லை என்பது உங்கள் நினைவிருக்கட்டும்.
5. தனிநபர் கடனாக மாற்றலாம்
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அதுபோன்ற நிலையில், உங்கள் நிலுவையை ஓரளவு குறைந்த வட்டியில் தனிநபர் கடனாக மாற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட வங்கி முன்வரலாம். நீங்கள் அதை வழக்கமான கடனைப் போல பல்வேறு தவணைகளில் செலுத்தி முடிக்கலாம். உங்களுக்கு அந்த முறை சரியாக வரும் என்று தோன்றினால் உடனே வங்கி நிர்வாகிகளிடம் பேசுங்கள்.
6. கிரெடிட் அளவு
கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் அதிகமாகச் செலவழிப்பது போலத் தோன்றினால் உங்கள் கார்டின் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி கார்டு நிறுவனத்திடம் நீங்கள் கேட்கலாம்.
கிரெடிட் கார்டு குறித்து அலர்ஜி அடையத் தேவையில்லை. புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் பயன்படுத்தினால் அது தக்க சமயத்தில் உதவும் ஒரு சிறந்த பொருளாதாரத் துணைவன் என்கிறார்கள் நிபுணர்கள். என்ன சரிதானே ?
No comments:
Post a Comment