Tuesday, 2 June 2015

குடிமகன்கள்

குடிமகன்கள்

விழுந்து கிடக்கும் "குடிமகன்கள்" கைவிடப்பட்ட குடிமகன்கள் !!!!

சாலையோரம் விழுந்து கிடக்கும் மனிதர்களை வெகு சுலபமாக குடிகாரனாக்கி விடுவதில் நமக்கு அப்படி ஒரு சுகம்.அது ஒரு மறைமுகமான எஸ்கேப்பிசம் என்று மனசுக்குள் தோன்றினாலும் அதைத்தான் தொன்று தொட்டு செய்து வருகிறோம்.

எனது பக்கத்து வீட்டில் உள்ளவர் வயது 60 இருக்கும்...தபால் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் .அந்த வயதிலும் மனைவியோடு மிக காதலாக வாழ்ந்து வந்தவர்.படிக்கட்டில் அமர்ந்து தன் மனைவிக்கு பேன் எடுத்து கொண்டே பேசி கொண்டிருப்பார்.

காலையில் தாமிரபரணிக்கு சென்று குளித்து விட்டு துணிகளை துவைத்து பொறுப்பாக வரக்கூடியவர் நேரம் கடந்தும் வரவில்லை. தேடி சென்ற போது அவர் சாலையோரம் விழுந்து கிடந்திருந்தார்.பசியினாலும்,LOW BPயினாலும் சாலையோரம் மயங்கி விழுந்தவரை யாரும் கவனிக்கவில்லை.கவனித்திருந்தாலும் காலையிலேயே குடிச்சிட்டு கிடக்குறத பாருன்னு சொல்லி கடந்து செல்வோமே தவிர உண்மை நிலையை அறிய கூட முயலப்போவதில்லை.அப்படியாக கைவிடப்பட்ட அவர் அதே இடத்தில் இறந்தும் போனார்.

சில வருடம் முன்பு எனது தந்தை தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இதே LOW BP காரணத்தால் மயங்கி விழுந்தார்.மதியம் விழுந்த அவரை அவ்வளவு பெரிய பேருந்து நிலையத்தில் யாரும் சீண்ட வில்லை.அனைவருக்கும் அவர் ஒரு குடிகாரன் குடிச்சிட்டு கிடக்குறான்.அவ்வளவுதான்.மாலை தானாக எழுந்து தன்னைத்தானே சுதாரித்து வீடு வந்து சேர்ந்தார்.

மேற்கண்ட இருவரும் தங்கள் வாழ்க்கையில் மதுவினை தொடாதவர்கள். ஒருநாளும் குடித்ததில்லை...ஆனால் அவர்கள் கைவிடப்பட்டனர்.ஒருவர் இறந்தும் போனார்.யார் காரணம்?குடிமகன்களா? குடிமக்களா?

மூதாட்டி ஒருவர் வெயிலில் மயங்கி விழ 108 ஊழியர்கள் அவருடன் யாரும் மருத்துவமனை வர தயாரில்லாத காரணத்தினால் அங்கேயே விட்டு சென்றனராக இணையத்தில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

எனவே நண்பர்களே,சாலையோரம் விழுந்து கிடக்கும் அனைவரும் குடித்து விட்டு விழ வேண்டுமென்று அவசியம் இல்லை.சற்று கூர்ந்து நோக்குங்கள் அவர் உங்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியராக கூட இருக்கலாம்...தெரிந்தவராக இல்லை என்றாலும் மனிதனாகதான் இருப்பார்.

குடித்துவிட்டு விழுந்தாலும் காப்பாற்ற கூடாது என்று இல்லை.மனித உயிர் அவரை பொருத்தவரை ஒன்றுமில்லாமல் போனாலும் அவர் பின் இருக்கும் குடும்பம் கருதியாவது உதவித்தான் ஆக வேண்டும்.குறைந்த பட்ச உதவியாக நீர் கொடுத்தோ அருகில் உள்ள காவல்துறையினர் கவனத்திற்கோ கொண்டு செல்லலாமே....ஆம்புலன்ஸ்க்கு தகவல் தரலாமே.

குடிப்பவர்கள் தங்கள் நிலை புரியாமல் விழுந்து கிடக்கும் அவலத்தால் சில அப்பாவிகளும் கைவிடப்படுகின்றனர்.இது போக சாலை விபத்துகளும் குடியினால் வெகுவாக நிகழ்கின்றன.தான் விழுவது இல்லாமால் எதிரே வருபவரையும் விழ வைப்பதில் குடியும் ஒரு காரணம்தானே.

குடிப்பவர்கள்,குடிக்காதவர்கள்.....மனிதனாக பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது.விசயமிது.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...