Wednesday 10 February 2016

மனித உடலின் மகத்துவம்

                                          மனித உடலின் மகத்துவம்


  சுவாச மண்டலம்
==================
“காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா” என்பதிலிருந்து காயம் என்ற இந்த உடல் நிலைப்புத் தன்மை கொண்டதாக இருக்க மூச்சு என்ற காற்றடைத்த பையாக இருந்தால் மட்டுமே இது மெய் எனப்படும். அதை விடுத்து மூச்சு என்ற காற்று இல்லாத இந்த உடம்பினை பொய் என சித்தர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, நம் உடம்பில் சுவாசம் ஒழுங்காக, சீராக, முறையாக இருக்கும் பொழுதுதான் மனிதன் மனிதனாக இருக்கிறான். உடம்புக்குள்ளே சீவன் என்கிற சிவம் இருக்கும் வரைதான் நாம் சிவமாக இருக்க முடியும். அந்த சீவன் என்ற சிவம் இல்லாத பொழுது நாம் சவமாக மாறி விடுகிறோம்.
பிராணசக்தி என்பது பஞ்சபூதங்களில் ஒன்றான காற்று. இந்தக் காற்றை ஒழுங்காக முறையாக இயக்கப்பழகுவது என்பது சுவாச மண்டலத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு விசயமாக இருக்கும்.
தினசரி அதிகாலை 4.30 மணியளவில் துயில் எழக்கூடிய பழக்கம் இருக்கிறது என்றால் பல்லாயிரக்கணக்கான நோய்களை நாம் ஓட ஓட விரட்ட முடியும். தூக்கம் என்பதே ஒரு வியாதி. தூங்காமல் தூங்கி சுகம்பெறும் நாள் எந்நாளோ என்று சித்தர்கள் கூறுவார்கள். ஒரு சராசரி மனிதனுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால் ஒரு சித்தனுக்கு ஐந்து நிமிடம் போதும் அல்லது பத்து நிமிடம் போதும். அவர்கள் தமது உடம்பை புதுப்பிப்பதற்கு ஏற்ற உடல்வாகு, உடல் கூறு மாறியிருக்கும்.
அதிகாலை தூக்கத்தைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. படைப்பாற்றல் அதிகமாகக்கூடிய தன்மை அதிகாலையில் இருக்கும். அதிகாலையில் பார்த்தோம் என்றால் நல்ல சுவாசம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். நீங்கள் பிராணாயாமம் செய்ய வேண்டாம், மூச்சு பயிற்சி செய்ய வேண்டாம். அதிகாலையில் எழுந்து அதிகாலைக்காற்றை நன்றாக ஆழ்ந்து உள்மூச்சு வாங்கி சுவாசம் செய்கிற பொழுது நம்முடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், சீராகும், நுரையீரல் பலமாகும்.
எவரொருவர் 4.30 மணிக்கு எழுந்து 6.00 மணிவரையிலும் சுவாச அப்பியாசங்களை மேற்கொள்கிறாரோ அவருடைய சுவாச மண்டலம் ஒழுங்காகும், முறையாகும், சீராகும், சுவாசப்பை நல்ல வலுவாகும்.
நம் முன்னோர்கள் நாடிசுத்தி பண்ணுவது, பிராணாயாமம் பண்ணுவது, பஸ்திரிகா பண்ணுவது, கபாலபதி பண்ணுவது போன்ற சுவாசப் பயிற்சிகளை ஏன் மேற்கொண்டார்கள் என்றால் சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவதற்காகத்தான்.
சுவாசம்;-
*************
சுவாசித்தலே அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத பணியாக மிக முக்கியமான பணியாக கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையில் ஓய்வின்றி தொடர்ச்சியாக காற்றுப்பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. காற்றிலுள்ள பிராணவாயுவை எடுத்து உடல் உறுப்புகளுக்கு தருவதும், உறுப்புகள் உயிர்க்காற்றினை எடுத்துக்கொண்டு அசுத்த காற்றினை அதாவது கரியமில வாயுவினை வெளியேற்றுவதும் சுவாசம் என்கிறோம். இவ்வாறு காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகின்ற வேலையை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். உள் சுவாசம், வெளி சுவாசம் எனப்படும்.
உள் சுவாசம்;-
*******************
உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ள செல்களனைத்தும் உயிர்வாழ, செயல்பட, இரத்தத்தில் இருந்து ஆக்ஸிஜன் என்னும் பிராணவாயுவை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடு என்னும் கரியமில வாயுவை இரத்தத்திற்கே அனுப்பி விடுவது உள் சுவாசம் எனப்படுகிறது.
வெளி சுவாசம்;-
***********************
நாம் மூக்கினால் சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரலில் உள்ள இரத்தம் எடுத்துக்கொண்டு அதிலுள்ள கரியமில வாயுவை வெளியேற்றுவது ஆகும். இந்த வெளி சுவாசத்திற்கு மூக்கு, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், மூச்சுக்கிளைகள், போன்ற உறுப்புகள் உதவி செய்கின்றன. இவையே காற்று பாதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
எல்லா காற்றுப்பாதைகளுமே சிலியா எபிதிலியம் என்னும் சளிப்படலத்தால் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதன் சுரப்பிகள் எப்போதும் சளியை சுரந்து கொண்டு இருக்கின்றன. அதனால் வெளிக்காற்றில் கலந்து வரும் தூசிகள் மற்றும் நுண் கிருமிகள் இந்த சளியில் ஒட்டிக்கொண்டு உடனடியாக அகற்றப்படுகின்றன.
நாம் ஒரு முறை சுவாசத்திற்கு ஏறத்தாழ 500 கன சென்டி மீட்டர் காற்றை உள்ளிழுத்து வெளி விடுகிறோம். இதையே முயற்சி செய்தால் 1500கன சென்டி மீட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிட முடியும்.
நாம் ஒரு நாளைக்கு சுமார் 13,638 லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம். ஒரு வாரத்திற்கு 95,466 லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம். ஒரு வருடத்திற்கு 53 லட்சம் லிட்டர் காற்றை சுவாசிக்கிறோம். எழுபது ஆண்டு ஆயுட்காலம் என்றால் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
நாம் ஒருமுறை சுவாசிக்கும் காற்றில் பிராணவாயுவை நான்கு சதவீதம் மட்டுமே பெற்றுக்கொண்டு மீதி பதினாறு சதவீத பிராணவாயுவை வெளியேற்றுகிறோம்.
சுவாச மண்டல உறுப்புகள்
*************************************
மேல் சுவாச மண்டல உறுப்புகள் -
நாசி (மூக்கு), தொண்டை, குரல் வளை, சைனஸ்கள்.
கீழ் சுவாச மண்டல உறுப்புகள் -
சுவாசக் குழல் (Trachea), பிராங்கைல் குழல்கள் (Bronchial tubes), நுரையீரல்கள்.
சாதாரண சுவாச கோளாறுகள்
******************************************
• மேல் சுவாச மண்டல தொற்றுக்கள் (Infections) (ஜலதோஷம் முதலியன)
• மூக்கு, பிராங்கைல் ஒவ்வாமை (அலர்ஜி - Allergy)
• சைனுசைடீஸ்
• பிராங்கைடீஸ் / ஆஸ்துமா
• இந்த கோளாறுகளை அறிவிக்கும் சில அறிகுறிகள்
• இருமல்
• மூச்சுத்திணறல்
• மார்வலி
• கோழையில் ரத்தம்
மூலிகை வைத்தியம்
******************************
சுவாச சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிறப்பாக நாம் சொல்லவேண்டுமென்றால் தூதுவளை, துளசி, ஆடாதொடா, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை இந்த மூலிகைகள் அனைத்துமே நுரையீரல் கோளாறுகளை முழுமையாகப் போக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
சில வீடுகளில் தூதுவளையை துவையலாக நாம் அரைப்பது உண்டு. தூதுவளையை முள் நீக்கி லேசாக நெய் சேர்த்து வதக்கி அதைத் துவையலாக அரைத்து சாப்பிடும்பொழுது சளி, இருமல், கபம், தலைவலி, தலைபாரம் போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் தீரக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு.
தமிழில் ஒரு பழமொழி உண்டு
“தூதுளை மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் கலங்கம் இல்லை”.
மார்புதான் இந்த சுவாச மண்டலத்தின் மூலஸ்தானம். ஆக நுரையீரலை வலுப்படுத்தக்கூடிய தன்மை தூதுவளைக்கு உண்டு. இந்தத் தூதுவளையை விடாமல் தொடர்ந்து சாப்பிட்டு வரக்கூடிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் நுரையீரல் சார்ந்த, சுவாசம் சார்ந்த, மூச்சு சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும் என்று இந்தப் பழமொழியில் கூறியிருப்பார்கள்.
அதேபோல் மாதுளை சாப்பிடுபவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள், குடல் சார்ந்த பிரச்சனைகள், மலச்சிக்கல், சீதபேதி இவையனைத்தும் சரியாகும் என்பது அந்தப் பழமொழியின் உட்கருத்து.
ஆக தூதுவளை, துளசி, ஆடாதொடா இம்மூன்றையும் சமஅளவு கலந்து வைத்துக்கொண்டு அதைத் தேனில் காலை மற்றும் இரவு என்று இரண்டுவேளையும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது சுவாசமண்டலம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும்.
துளசி இலைகள், இஞ்சி, இரண்டு (அ) மூன்று கருமிளகு - இவற்றை தண்ணீரிலிட்டு கஷாயமாக்கி குடிக்கலாம். ஜுரம், இருமல், ஜலதோஷம் இவற்றுக்கு இந்த கஷாயம் நிவாரணமளிக்கும்.
கற்பூரவல்லி இலைகளை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து எடுத்துக் கொண்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இருமலும் குறையும். பல ஒவ்வாமைகளை தடுக்கும்.
வெங்காயத்திலிருந்து எடுத்த சாறுடன் வெல்லம் கலந்து குடிக்க இருமல் நிற்கும். வெங்காயத்திற்கு பதில் பூண்டையும் உபயோகப்படுத்தலாம்.
யூகலிப்டஸ் எண்ணெய் (அ) கிராம்புத் தைலம் இவற்றை நீரிலிட்டு நீரை நன்றாகக் காய்ச்சி ஆவி பிடிக்கவும். சுவாச அடைப்புகள் நீங்கும்.
தேன் சேர்த்த இஞ்சி டீ, இருமலுக்கும், மூக்கடைப்புக்கும் நல்ல பலன் தரும்.
இரவில் படுக்கும் முன் மஞ்சள், இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து காய்ச்சிய பாலை குடிக்கவும். இதனால் இருமலும், மூக்கு சம்மந்தப்பட்ட அலர்ஜிகள் குறையும்.
பொதுவான உணவு நியமங்கள்
*******************************************
பல சுவாசக் கோளாறுகளுக்கு சுகாதாரமற்ற உணவுகள், ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள் காரணமாகின்றன. மாசுபடிந்த சுற்றுப்புற சூழலின் தூசிகள், குளிர்காலம், அஸ்பஸ்டோஸ் போன்றவை, புகை முதலியன சுவாசக் கோளாறுகளை தூண்டும்.
சில குறிப்புகள்
*********************
இரவு உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். அதே போல ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
ஜலதோஷத்தின் போது உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் தவிர்க்கவும். நெல்லிக்காய், பூண்டு, மஞ்சள் பொடி உபயோகங்கள் நல்லது. வெங்காய சூப் நிவாரணம் தரும்.
இருமலுக்கும் அதைச் சார்ந்த சுவாச கோளாறுகளுக்கு கோதுமை, பயத்தம் பருப்பு, பழைய அரிசி, பார்லி, ஆட்டுப்பால், பசும்பால், நெய், காய்கறி சூப், உலர்திராட்சை, நெல்லி முதலியனவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
*********************************
கத்தரிக்காய், பாகற்காய், கடுகு, வில்வப்பழம், குளிர்ந்த உணவுகள்.
================சைனுசைட்டீஸ் (Sinusitis)=================
மூக்கைச் சுற்றியுள்ள 'சைனஸ்கள்' (வெற்றிட எலும்புக் குழிகள்) பிரதேசங்களில் ஏற்படும் தொற்று (Infections) சைனுசைட்டீஸ் எனப்படும். நாட்பட்ட, நீடித்த ஜலதோஷம் சைனுசைட்டீசை உண்டாக்கலாம்.
இதற்கு ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த உணவுகள், வருத்த உணவுகளை தவிர்க்கவும்.
தண்ணீர் நிறைய குடிக்கவும். துளசி, இஞ்சி, புதினா, இலவங்கம் கலந்த வெந்நீரை குடிக்கவும். பழங்கள், காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழம், தக்காளி, குடைமிளகாய், கத்தரிக்காய் இவற்றை தவிர்க்கவும். பசிவரும் நேரத்தில் நேரத்தில் உண்ணவும்.
ஒரு கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு நாம் குடி புகுவது போல, எலும்பு, நரம்பு, ரத்தம், தசை இவற்றால் வேயப் பட்ட’வீட்டில்’ தான் சிவனாகிய சீவன் வாயுவாகக் குடி புகுவான்.
உடலில், பிராணன் முறையாகச் சுழன்று வந்தால் மட்டுமே உயிர் நிலைப்படும். பிராணன் அற்ற உடலில் உயிர் இருப்பதிலை. பிராணக் குறைபாட்டுக்கு சுவாச மண்டலக் குறைகளே காரணமாகும்.
இதுவரை, உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்தி கட்டிடத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகப் பார்த்தோம்.
அடுத்து, முழுமையாகக் கட்டப்பட்ட கட்டிடத்துக்குள் தேவையான வசதிகளைச் செய்துகொண்டு வசிப்பது போல், நாம் நலமோடு இருப்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அடுத்த நான்கு மண்டலங்களின் செயல் பாடுகளை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
அவைகள்
------------------
1. ஜீரண (Digestive) மண்டலம்
2. கழிவு (Excretory) மண்டலம்
3. நாளமில்லா சுரப்பி (Endocrine) மண்டலம்
4. இனப்பெருக்க (Reproductive) மண்டலம்
மனித உடல் – ஒரு மாயாசால இயந்திரம்
மனித உடல் – நடமாடும் இறைவனின் கோவில்
மனித உடல் - ஆத்மாவுக்கான ரதம்
மனித உடலின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் நம் நுண்ணறிவு கொண்டு தீவிரமாகச் சிந்தித்தால் நாம் அதிசயத்து மலைத்துப்போய்விடுவோம். மனித உடலை, இறைவன் குடியிருக்கும் கோயிலாக சித்தர்கள் கருதினர்.
‘நட்ட கல்லைத் தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுர்றிவந்து முணுமுணென்று சொல்லு
மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ’
-சிவவாக்கியர்
உடலை ஆலயம் என்று சித்தர்கள் சொன்னதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.
சுவையாகச் செய்யப்பட்ட உணவின் சுவையைப் பாத்திரம் அறியாததுபோல், உளிகொண்டு கல்லில் செதுக்கிய சிலையில் கடவுளைக் காண இயலாது.
உண்மையான கடவுளாகிய ’நாதன்’ உனக்குள், உன் உடலில் மூச்சாக இருக்கிறார். எனவே, இறைவன் உறைந்துள்ள உன் உடலை நீ பேணிப் பாதுகாத்து வா என்பதே சித்தர்களின் கட்டளை.
எலும்பு, நரம்பு, ரத்தம், தசை இவற்றால் கட்டப்பட்ட உடம்பு என்ற ஆலயத்தில், ‘ஜீவன்’ என்னும் வாயுவால் உடலை இறைவன் இயக்கிக்கொண்டிருக்கிறான். எனவே, மனிதனின் தேகம் நிலைத்து நீண்ட நாட்கள் வாழ சுவாச மண்டலத்தினை பேணி காப்போம், பெருமையுடன் நீண்ட ஆயுள் வாழ்வோம்.
தொடரும்.............
சித்தர்களின் குரல்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...