கொசுவை விரட்ட எளிய வழி
மூர்த்தி சிறியதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்பதற்கேற்ப, தம்மாத்தூண்டு கொசு, மனித உயிரையே பறிக்கும் ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. ஸ்பிரே, சுருள், கிரீம், கொசுவலை என எல்லாவற்றுக்கும் பெப்பே’ காட்டித் தப்பிக்கிற கொசுக்களை வீட்டின் பின்புறம் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் நொச்சி, பூண்டு, புதினா, கிராம்பு, துளசி, சாமந்தி போன்ற செடிகளும், வேம்பு, யூகலிப்டஸ் போன்ற மரங்களும்
விரட்டும் என்றால் நம்புவீர்களா? புதுச்சேரி இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் அறிவியல் துறை பேராசிரியர் பிரசன்னா சொல்கிற தகவல்களைக் கேளுங்கள்!
கொசுக்களை விரட்டும் தன்மை உடைய தாவரங்களை அவை வளரும் உயரத்தின் அடிப்படையில், Herb,Shrub,Tree என 3 பிரிவுகளாக வகைப்படுத்தலாம். மேலே கூறப்பட்ட செடிகள் மற்றும் மரங்களில் இருந்து ஒருவகையான வாசனைத் திரவியம் (Aromatic Substance) வெளிப்படும். இதன் காரணமாக, இந்த செடி மற்றும் மரங்களில் கொசுக்கள் அமர்வது கிடையாது. இதன் சுற்றுப்புறங்களிலும் கொசுக்களால் இருக்க முடியாது.கொசுக்களை விரட்ட உதவும் செடிகள் மற்றும் மரங்கள் பெரும்பாலும் திறந்தவெளியில் காணப்படுவதால், அவற்றில் இருந்து உருவாகும் வாசனைத் திரவ அளவு போதுமானதாக இருக்காது. எனவே, செடிகள் அடர்த்தியாக பல இடங்களிலும் படர்ந்து அதிகமாக காணப்பட்டால்தான், கொசுக்களை விரட்டும் தன்மை அதிகமாக காணப்படும்.பொதுவாக ஈரம் காணப்படுகிற தாவரங்களை நாடி ஏராளமான கொசுக்கள் வரும். ஆனால், கிராம்பு, நொச்சி, பூண்டு, புதினா, வேம்பு போன்றவற்றில் ஈரப்பதம் காணப்பட்டாலும், குறைந்த அளவு கொசுக்களே வரும். அதுவும் முட்டை இடுவதற்காக மட்டுமே வரும். கொசு வகைகளில் பெண் கொசுக்கள் மட்டும்தான் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களிடம் இருந்து ரத்தம் அருந்தும் வழக்கம் கொண்டுள்ளன. ஆண் கொசுக்களுக்கு ரத்தம் குடிக்கும் பழக்கம் இல்லை. அதற்குப் பதிலாக, இவை தாவரங்களில் உட்கார்ந்தவாறு அவற்றில் உள்ள நீர்ச்சத்துகளை உறிஞ்சி வாழும்.நோயைப் பரப்பும் கொசுக்களில், அனாபிலஸ் (Anopheles), கியூலஸ்(Culex), ஏடிஸ் (Aedes) ஆகிய 3 வகை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.இவற்றை விரட்ட, சோற்றுக் கற்றாழை, புதினா, வேம்பு, பூண்டு, யூகலிப்டஸ் போன்றவற்றின் காய்ந்த இலை, வேர் முதலானவற்றை பயன்படுத்தி புகை போடலாம். ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாமல், இந்த தாவரங்களின் சருகு, வேர், பட்டை ஆகியவற்றைச் சேர்த்து இயற்கையான கொசுவர்த்தி செய்யலாம். இதன்மூலம் நுரையீரல் தொடர்பான நோய்களைத் தவிர்க்கலாம்!
No comments:
Post a Comment