Saturday, 12 March 2016

குடும்ப அட்டைக்கு


                                                        குடும்ப அட்டைக்கு
 
 
குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ…

1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான

சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

2.வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள், பெற்றோரின் குடும்ப அட்டையைப் பெற முடியாத சூழலில், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டை எண்ணையும், திருமணப் பதிவு சான்றிதழ் மற்றும் இடது பக்கம் சொல்லி உள்ளவற்றில் ஏதேனும் ஓர் அடையாள அட்டையையும் கொடுத்து மனு தாக்கல் செய்யலாம்.

3.குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது மிகவும் பழுதடைந்திருந்தாலோ, வசிக்கும் ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் உரிய ஆவணங்களுடன் (பழைய குடும்ப அட்டையின் நகல்/எண் அல்லது பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகளுடன்) மனு தாக்கல் செய்தால், இரண்டு மாதங்களில் புதிய குடும்ப அட்டை கிடைக்கப் பெறலாம்.

4.புதிதாகப் பிறந்துள்ள குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து அதன் பிறப்புச் சான்றிதழை குடும்ப அட்டையுடன் இணைத்துக் கொடுத்தால் போதும்.

5.குடும்ப அட்டையில் இருந்து இறந்தவர் பெயரை நீக்கம் செய்ய, இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வாங்கியதும் மூன்று நாட்களுக்குள் குடும்ப அட்டையுடன் இணைத்து வட்டாட்சியர் அலுவலரிடம் கொடுத்து நீக்கம் செய்துகொள்ளலாம்.

6.குடும்ப அட்டைக்கான மனு விண்ணப்பிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு. மேலும் குடும்ப அட்டை பெற செலுத்த வேண்டிய தொகை, ரூபாய் 5 மட்டுமே. இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், http://www/consumer.tn.gov.in/contact.htm என்ற தளத்தில் புகார் அளிக்கலாம்.

7.குடும்ப அட்டை இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது. பச்சை வண்ண அட்டையில் ரேஷனில் வழங்கும் அனைத்துப் பொருட்களையும் பெற முடியும், வெள்ளை வண்ண அட்டையில் அரிசி தவிர்த்து பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்றவற்றை பெறலாம். அடையாளச் சான்றாக மட்டும் குடும்ப அட்டை இருந்தால் போதும் என்பவர்களுக்கும் வெள்ளை நிற அட்டையே வழங்கப்படுகிறது.

8.ரேஷனில் எந்தப் பொருளும் வேண்டாம், அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’வில் எடுக்கப்பட்ட 100 ரூபாய்க்கான டிடி-யுடன் பழைய குடும்ப அட்டையையும் ஒப்படைத்துவிட்டால்… ஒரு மாதத்தில் ‘என் கார்டு’ என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற அட்டை கிடைத்துவிடும்.

9.புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்த பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாக வந்து வீடு, சமையல் அறை போன்றவற்றை மேற்பார்வையிடுவார் (தனியாக சமைக்கிறீர்களா, சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறீர்களா போன்ற பரிசோதனைகள்). அப்படி வருபவர்களை அடையாள அட்டையைப் பார்த்து உறுதிசெய்த பிறகே அனுமதிக்கவும்.

10.முகவரி மாற்றத்துக்கு வீட்டு ரசீதுகளை (வாடகை வீடு என்றால் வீட்டு உரிமையாளரிடம் கேட்டுப் பெறலாம்) குடும்ப அட்டையுடன் இணைத்து புதிதாக குடியேறிய பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

11.குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும், இடைத்தரகர்கள் தவிர்த்து உரிய அலுவலர்களை நேரில் அணுகுவதே சிறந்தது.

12.‘இதுவரை என் குடும்பத்துக்கு குடும்ப அட்டையே இல்லை’ அல்லது ‘நான் பெற்றோர் இன்றி அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன்’ என்பது போன்ற காரணங்களுடன் இருப்பவர்கள், வெள்ளைத்தாளில் மனு எழுதி ஏரியாவின் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கவும். இரண்டு மாதங்களில் குடும்ப அட்டை கிடைக்கும்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...