Thursday, 10 March 2016

தவணை முறையில் வீடு வாங்குவோா் கவனத்திற்கு


 தவணை முறையில் வீடு வாங்குவோா் கவனத்திற்கு

பணத்தை சேமித்து வைத்து சொத்து வாங்குவது என்பது பலராலும் முடியாத காரியமாகவே இருக்கிறது. அந்த அளவிற்கு சொத்தின் மதிப்பு லட்சங்களில் இருந்து கோடியை கடந்து கொண்டிருக்கிறது. அதனால் சொத்து வாங்க நினைப்பவர்கள் வங்கி கடனை நாடுகிறார்கள். சில காலம் கழித்து சொத்து வாங்க நினைப்பவர்களின் முதல் தேர்வாக வீட்டுமனை அமைகிறது. முதலில் வீட்டுமனை வாங்கி விட்டால் பின்னர் அதில் வீடு கட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணம் அதற்கு காரணமாக இருக்கிறது. சிலர் முதலீடு நோக்கத்திலும் வீட்டுமனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி வீட்டுமனை வாங்குவதாக இருந்தாலும் அதன் விலையும் லட்சத்தின் மதிப்பில் தான் இருக்கிறது. அதனால் மொத்த தொகையையும் செலுத்தி வீட்டுமனை வாங்குவதும் பலரால் இயலாத விஷயமாகவே இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு தவணை முறையில் வீட்டுமனை விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. தவணை முறையில் வீட்டுமனை வாங்குவதாக இருந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபற்றி பார்ப்போம்.
* முதலீடு நோக்கத்திற்காகவோ அல்லது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டோ வீட்டுமனை வாங்குவதாக இருந்தால் அந்த இடத்தை சூழ்ந்திருக்கும் பகுதிகளின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? குறிப்பிட்ட சில ஆண்டு இடைவெளியில் வளர்ச்சி எப்படி இருக்கும்? விரைவில் வளர்ச்சி அடையுமா? என்பதை நேரடியாக சென்று கவனிக்க வேண்டும்.
* முதலில் இடத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து விட வேண்டும். வில்லங்க சான்று, பட்டா, இதர ரசீதுகள் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். தாய் பத்திரத்தை கண்டிப்பாக பார்வையிட வேண்டும். வீட்டுமனை பிரிவில் இடம் வாங்குவதாக இருந்தால் அந்த மனை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்பதால் வாங்கும் அனைவருக்கும் தாய் பத்திரம் கொடுப்பது என்பது முடியாது. எனினும் நகல் பத்திரத்தை வாங்கி விட வேண்டும்.
* வாங்கும் மனைக்கு அங்கீகாரம் பெறப்பட்டு இருக்கிறதா? தாய் பத்திரத்தில் ஏதும் வில்லங்கம் இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த சொத்து உரிமை கொண்டாடும் அனைவருடைய சம்மதத்தின் அடிப்படையில் தான் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* தவணை முறையில் மனை வாங்கும்போது அதற்கான ஒப்பந்தத்தை 20 ரூபாய் முத்திரத்தாளில் பதிவு செய்துவிட வேண்டும்.
* ஒப்பந்தத்தில் வாங்கும் வீட்டுமனை விலை எவ்வளவு? மாதத் தவணை செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு? அதனை எத்தனை மாதங்கள் செலுத்த வேண்டும்? போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். மனை எண், மனையின் பரப்பளவு எவ்வளவு? என்பதையும் குறிப்பிட வேண்டும்.
* வீட்டுமனை இதற்கு முன்பு விவசாய நிலமாக இருந்திருந்தால் அதில் கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டு இருக்கிறதா? என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
* வீட்டுமனையை விற்பனை செய்பவர் அந்த இடத்தின் உரிமையாளரா? அல்லது விற்பனை செய்வதற்கான ‘பவர் ஆப் அட்டர்னி’ அதிகாரம் பெற்று இருக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பவர் பெற்று இருந்தால் அது எந்தவகையான பவர் அதிகாரத்தை சார்ந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பவர் இடையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா என்பதை பவர் அதிகாரம் கொடுத்தவரை சந்தித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
* மாத தவணை தொகையை வங்கி கணக்கு வரையோலை மூலம் செலுத்துவது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் மாதம் மாதம் செலுத்தும் தொகைக்கு ரசீது வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
* மாத தவணை தொகையை நேரடியாக சென்று செலுத்த வேண்டும். வேறு யாரிடமும் கொடுத்து செலுத்துவதாக இருந்தால் பணம் செலுத்தப்பட்டு விட்டதா? என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு உறுதி செய்து விட வேண்டும்.
* சில மாதங்கள் கழித்து மொத்தமாகப் பணம் செலுத்துவதாக இருந்தாலும் ரொக்கமாக கொடுக்கக்கூடாது. வங்கி காசோலை அல்லது வரைவோலை மூலமாகவே செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* மாத தவணை தொகை செலுத்தி முடியும் தருவாயில் அந்த இடத்தின் விலை கூடியிருந்தால் அதிகப் பணம் செலுத்தக் கட்டாயப்படுத்தலாம். அதனால் தொடக்கத்திலேயே இதுசம்பந்தமான விவரங்களை ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடுவது பிரச்சினையை தவிர்க்க உதவும்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...