Wednesday, 11 August 2021

வேட்டுவரின் கொற்றவை வழிபாடு

 

                            வேட்டுவரின் கொற்றவை வழிபாடு

    ஆரம்பத்தில் வெட்சி போரின் (ஆநிரை கவர்தல் ,ஆநிரை மீட்டல் ) வெற்றி கடவுளாக வேட்டுவ குடியினர் வழிபட்டார்கள் .
கொற்றவை நிலையும் அ திணை புறனே - பொருள். புறத்:4/2
தமிழகத்தை ஆண்ட அரச பரம்பரையினர் பெண்தெய்வத்தையே குல தெய்வமாக(கொற்றவை ) வணங்கி வந்தனர்.
தஞ்சை மற்றும் வல்லம் பகுதிகளை பல்லவர்களிடம் இருந்து கைப்பற்றிய பிறகு விஜயாலய சோழன் தஞ்சையில் நிசும்பசூதினியை(கொற்றவை ) பிரதிஷ்டை செய்தான். இதை பற்றி திருவாலான்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் அறியமுடிகிறது. அந்த செப்பேட்டில் உள்ள வாசகங்கள் என்னவென்றால்
“தஞ்சாபுரீம் சௌத சுதாங்காராகாம
ஐக்ராஹ ரந்தும் ரவி வம்ச தீப:
தத:பிரதிஷ்டாப்ய நிசும்ப சூதனீம்
சுராசுரை:அர்ச்சித பாத பங்கஜாம்
சது : சமுத்ராம்பர மேகலாம் புவம்
ரஹாஜ தேவோ தத்பராசதந”
சும்பன் நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற தேவியை தஞ்சை நகரில் பிரதிஷ்டை செய்தான். தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட பாதங்களுடைய அத்தேவியின் அருளால்,நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று கூறுகிறது திருவாலான்காட்டு செப்பேடு.
தஞ்சையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிசும்பசூதினி எட்டு கைகளை உடையவர். 8 கரங்களில் சூலம், வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம் தரித்துள்ளார். ஓர் இடது கரம் கீழ் இருக்கும் அசுரனை காட்டுகிறது, வலது கால் துண்டிக்க பட்ட ஒரு தலையின் மேல் ஊன்றியுள்ளது.சும்பன், நிசும்பன் ஆகோயோரை வதைக்கும் காட்சியில் உள்ளார்.
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன் - மது 12/64,65
கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இ - மது 12/87
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் - மது 12/127
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து
நிறம் படு குருதி புறம்படின் அல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ
கேடு இல ஆக பெரும நின் புகழே பதி:79/12-19
வெல்லும் போரினைக் கொண்ட வேந்தர்களின் முரசுகளின் முகப்பைக் கிழித்து, அவருடைய
பட்டத்து யானை கதறக்கதற அதனுடைய கொம்புகளை அறுத்தெடுத்துச் செய்த
அச்சம் தரும் தன்மையையுடைய கட்டிலின் மேலிருந்து
தும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்வினில் ஓய்ந்திருக்க,
மார்பினைக் கிழித்து வரும் குருதி மேலே பட்டாலல்லது
பலியுணவை ஏற்றுக்கொள்ளாத அச்சம்தரும் இயல்பினையுடைய
கடவுளான கொற்றவை இருக்கும் அயிரை மலையைப் போல நிலைபெற்று
அழியாதது ஆகுக பெருமானே! உன் புகழ்!
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய
கொற்றம் எய்திய பெரியோர் மருக
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் பதி:88/11-15
இரத்தம் கலந்து குவிக்கப்பட்டிருக்கும் குன்று போன்ற சோற்றுக் குவியலுடன்
அச்சந்தரும் இயல்புடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் போற்றிப்பாடி,
முடியுடை வேந்தரும், குறுநில மன்னரும் பின்னால் நின்று பணிந்துகொள்ள,
வெற்றி எய்திய பெருமக்களின் வழிவந்தவனே!
அகன்ற பிடரிமயிரினை உடைய சிங்கம் போன்ற வீரம் பொருந்திய குருசிலே!
உரு கெழு மரபின் அயிரை பரவியும் பதி:90/19
அச்சந்தரும் மரபினையுடைய அயிரை மலையிலிருக்கும் கொற்றவையைப் போற்றித் துதித்தும்,
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும்
அயிரை நெடு வரை போல
தொலையாது ஆக நீ வாழும் நாளே பதி:70/25-27
மிகப் பெரிதான உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும்
அயிரை என்னும் நெடிய மலையைப் போல
குறையாது பெருகுவதாக நீ வாழும் நாள்கள்.
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந பதி:21/28-29
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
………………ஓங்கு புகழ்க்
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால் அகம்:345/3-4
ஓங்கு புகழ் காண் அமர் செல்வி - மிக்க புகழ் வாய்ந்த கொற்றவை, அருளிலின் - அருள் கூர்ந்து அளித்தலின்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி 50
வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில்
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை பொரு: 49-52
யானை உலாவரும் வழிகளை உடைய காட்டிடத்தே தங்கி,
இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி, 50
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,
காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு
‘பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு’ கலி:89/8
பெரிய காட்டிலிருக்கும் கொற்றவைக்குப் பேய் வந்து குறி சொன்னாற்போல
‘கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண் ‘பரிபாடல் : 11
சிலம்பின் வேட்டுவவரி வேட்டுவ குடியினரின் கொற்றவை வழிபாடு குறித்த தகவல்களின் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. வேட்டுவ குடியினரின் வீரத்தையும் ,வாழ்கை முறையும் ,போர் கடவுளான கொற்றவையை வழிபாடும் பாங்கை அற்புதமாக கூறுகிறார் இளங்கோ அடிகள் .
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் (சிலம்பு. வேட்டுவவரி, 54-66)
“பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள்”

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...