Sunday, 9 August 2015

கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி..

                  கற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி..


மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை.

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று.

குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும்.

குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.

மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு.

Tamil - Kuppaimeni

English - Indian acalypha

Telugu - Kuppi-Chettu

Malayalam - Kuppa-meni

Sanskrit - Arittamajarie

Botanical name - Acalypha indica

இதன் இலை, வேர், சமூலம், (முழுச் செடியும்) மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது.

தந்தமூ லப்பிணிதீத் தந்திருபுண் சர்வவிடம்
உந்துகுன்மம் வாதம் உதிரமூ - லந்தினவு
சூலஞ்சு வாசம் தொட்ர்பீ சங்கபம்போம்
ஞாலங்கொள் மேனியத னால்

தேரையர் குணபாடம்

பொருள் - குப்பைமேனி இலையால், பல்நோய், தீச்சுட்டப் புண், பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, வளிநோய், மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, மூக்குநீர் பாய்தல், கோழை போன்றவை தீரும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

சொறி, சிரங்கு நீங்க

குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.

இலைமேனி யியறிவிளக் கெண்ணெயின்மெய்
யிலயட்டியிலை மேனியை யா

அகத்தியர் குணவாகடம்

பொருள் - குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி ஒருமண்டலம் கற்ப முறைப்படி உண்டு வந்தால் வாய்வுப்பிடிப்பு நீங்கும். சரும நோய்கள் அகலும். சுவாச நோய்கள் நீங்கும். குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் படுக்கைப் புண் மீது கட்டி வந்தால் புண் விரைவாக ஆறிவிடும்.

குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி முதலியவை குணமாகும்.

மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.

குப்பைமேனி சமூலத்தை எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் 8 விதமான பவுத்திர நோய் தீரும் என தேரையர் காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் வெளியேறும்.

குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...