Thursday, 9 July 2015

மேற்குலகின் குப்பைக்கூடையாகும் இந்தியா..!

மேற்குலகின் குப்பைக்கூடையாகும் இந்தியா..!

இந்தியர்கள் வீட்டை சுத்தமாக வைத்திருப்பார்கள்: ஆனால் வீட்டின் குப்பைகளை தெருவில் கொட்டிவிடுவார்கள் என்று நகைச்சுவையாக சொல்வதுண்டு. வீட்டில் உருவாகும் குப்பைகள் பெரும்பாலும் எந்த ஆபத்தும் இல்லாதவை. ஆனால் ஆபத்து நிறைந்த குப்பைகளும்கூட, தெருவில் கொட்டப்படுகிறது என்பது கவலைக்குரிய செய்தி.
குறிப்பாக தொழிற்சாலைகளில் உருவாகும் குப்பைகளில் பெரும்பாலானவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த குப்பைகளை கையாள்வோர் மட்டுமன்றி, அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவைகளையும் மாசுபடுத்தும் இயல்புடையவை. உதாரணமாக சாயப்பட்டறைகளையும், தோல் தொழிற்சாலைகளையும் கூறலாம். இங்கு உருவாகும் கழிவுகள் உரியமுறையில் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும்போது நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் பெருமளவில் பாதித்து பேரழிவுகளை ஏற்படுத்துகிறது.
மக்கள் நலன் காக்கும் மருத்துவமனைகளிலும் பல்வேறு குப்பைகள் உருவாகின்றன. மருந்துப்பொருட்கள், சிகிச்சைப்பொருட்கள், மனித உடலின் பாகங்கள் உள்ளிட்ட பலபொருட்களும் கழிவாக மாறும்போது பெரும் நச்சுத்தன்மையை உருவாக்குகின்றன. எனவே இந்த கழிவுகளை அவற்றின் நச்சுத்தன்மையை அகற்றிவிட்டே வெளியேற்ற வேண்டும் என்று சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகளும், பிரபல மருத்துவமனைகள் உட்பட தனியார் மருத்துவமனைகளும் இந்த சட்டத்தை எந்த அளவு மதிக்கின்றன என்பது கேள்விக்குறியே.
இதுபோன்ற நச்சுப்பொருட்கள் கேரள மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்டு கோவை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கேட்பாரற்ற நிலங்களில் கொட்டப்படுவதாக வரும் செய்திகளை படித்திருக்கலாம். நம் வீடுகளில் உள்ள கழிவறைக்கழிவுகள் எங்கு செல்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த கழிவுகளும்கூட அருகாமைப்பகுதியில் உள்ள கேட்பாரற்ற நிலங்களில்தான் கொட்டப்படுகிறது.
இந்தக்குப்பை விவகாரம் ஒரு சர்வதேச பிரசினையாகும். இதற்காக ஐ.நா.சபை சார்பில் மாநாடுகள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அது விருப்ப உடன்படிக்கை என்ற பெயரில் சட்டமாகவும் உள்ளது. ஆனால் இந்த விருப்ப உடன்படிக்கை என்பது கட்டாயமானது அல்ல. நாடுகள் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த சட்டத்தை அந்த நாடுகள் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியும். எனவே எந்த சர்வதேச சட்டத்தையும் மதிக்கும் வழக்கம் இல்லாத அமெரிக்கா முதல், அமெரிக்கப்பாதையில் நடைபோட விழையும் இந்தியாவரை பல்வேறு நாடுகள் இந்த விருப்ப உடன்பாட்டை புறக்கணித்துள்ளன. அப்படியே ஏற்பளிப்பு செய்தாலும், முழுமையாக அமல் படுத்துவதில்லை. இதன் விளைவுகள் இந்திய மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.
அமெரிக்காவின் 9/11 கழிவுகள் இந்தியாவில்..!
அமெரிக்கா மிகவும் பாதுகாப்பான நாடு என்ற மாயையை விலக்கிய 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அந்நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் இந்தியாவையும் பலவிதங்களில் பாதித்தது. அதில் முக்கியமானது தாக்கி சிதைக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்துள்ள ட்வின் டவரின் நச்சு நிறைந்த கழிவுகள் இந்தியாவிற்குத்தான் வந்தன.
பிரோஸ்னா, ஷென் குவான் ஹை மற்றும் பின்டோஸ் என்ற பெயருடைய மூன்று கப்பல்களில் இரும்புக்கழிவுகள் இந்தியாவிற்குள் வந்தன. அவற்றில் பிரோஸ்னா கப்பலில் மட்டும் சுமார் 30 ஆயிரம் டன் எடையுள்ள இரும்புக்கழிவுகள் வந்ததாக தெரிகிறது. இந்த இரும்புக் கழிவுகளுடன் நச்சுத்தன்மை வாய்ந்த அஸ்பெஸ்டாஸ், காட்மியம், பாதரசம், டையாக்ஸின்கள், பாலி குளோரினேடட் பைபினைல்ஸ் ஆகிய பொருட்கள் இருந்துள்ளன.
இந்த பிரசினை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் குரல் எழுப்பினர். அப்போது துறைமுக அதிகாரிகள் கூறிய பதில்: இரும்பை இறக்குமதி செய்வது சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையே! அதில் நச்சுக் கழிவுகள் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் நிரூபித்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும்!!
மின்னணுக் கழிவுகள்!
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பிரசினைகளுள் முதன்மையானது: மின்னணுக் கழிவு மேலாண்மை. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் ஆகிய அனைத்தும் பயன்படுத்தியபின் குப்பையாகி விடுகிறது. ஆனால் இந்த குப்பைகள்தான் மிக அதிக அளவில் நச்சுத்தன்மையுடன் இருக்கின்றன.
இந்த மின்னணு சாதனங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தும் அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளும், மின்னணுக் கழிவுகளை சட்டவிரோதமாக குவித்து வைக்க இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏழை ஆசிய நாடுகளையே குறிவைக்கின்றன.
ஏழை ஆசிய நாடுகளின் குழந்தைகளுக்கு கணிப்பொறியை அறிமுகப்படுத்துவது போன்ற “தர்ம காரிய”ங்களுக்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை கொடையாக அளிப்பது என்ற பெயரில் இந்த குப்பைகள் இந்தியாவிற்கு அனுப்பப் படுகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை அப்படியே குப்பையில் போடமுடியாது. அவற்றில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கியபிறகே அவற்றை குப்பையில் போட முடியும். அவ்வாறு நச்சுப்பொருட்களை நீக்குவதற்கு ஆகும் செலவில் பத்தில் ஒருபங்கு செலவில் அந்த குப்பைகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யமுடிகிறது.
இந்த மின்னணுக் குப்பைகள் இந்தியாவில் உள்ள சில தொழிலதிபர்களால் டன் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்கப்படுகிறது. ஒரு டன் மின்னணுக் குப்பையில் சுமார் 10 கிராம் தங்கம், 30-40 கிலோ செம்பு, மேலும் அலுமினியம், வெள்ளி, சில நேரம் பிளாட்டினம் கூட கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் இந்திய தொழிலதிபர் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடிகிறது. ஆனால் இந்தப் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழிலாளர்களுக்கு அந்த மின்னணுக்குப்பைகளில் உள்ள நச்சுப்பொருட்களால் புற்றுநோய், காச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிக்கும். அதனால் என்ன? அவர்கள் படிப்பறிவற்ற, கேட்பாரற்ற தொழிலாளர்கள்தானே??
இவ்வாறு இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் மின்னணுக் கழிவுகள் வருகின்றன. இதில் இந்திய தொழிலதிபருக்கு எத்தனை கோடி லாபம்? அதில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கு எவ்வளவு? என்றுதான் பார்க்கவேண்டும். இந்தியா ஒளிர வேண்டும் அல்லவா!
நகராட்சி குப்பைகள்!
மேற்கூறப்பட்ட இரும்பு, மின்னணு போன்றவை தவிர்த்த குப்பைகளும் இந்தியாவிற்குள் வந்தவண்ணம் உள்ளன. புகழ்பெற்ற ஐடிசி போன்ற நிறுவனங்கள் இந்த கழிவுகளை பல்வேறு பெயர்களில் எடுத்து வருகின்றன. அவற்றில் முக்கியமானவே நகராட்சி குப்பைகள்.இந்த குப்பைகளில் எதுவும் இருக்கும். அண்மையில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏராளமான குப்பைகள் இவ்வாறு வந்து இறங்கி இருப்பதாக செய்திகளை படித்திருக்கக்கூடும். லேடக்ஸ் எனப்படும் ரப்பர் தொழிற்சாலைக்கழிவுகள் என்ற பெயரில் வந்த கழிவுகளில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட நச்சுப்பொருட்கள் கலந்த மருத்துவக்கையுறைகள், பயன்படுத்தப்பட்ட ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் இருந்ததாக தெரிகிறது.
அணுக்கதிர்வீச்சு கழிவுகள்!
மேலை கூறப்பட்ட கழிவுகளைப்போல எளிதில் அடையாளம் காண முடியாதவை அணுக்கதிரியக்க கழிவுகள். ஏனெனில் அணுக்கதிரியக்கத்திற்கு நிறமோ, மணமோ கிடையாது. எனவே மெத்தப்படித்தவர்கள்கூட அணுக்கதிரியக்கத்தை அதற்கான உபகரணங்கள் இல்லாமல் கண்டுணர முடியாது. மேற்கூறப்பட்ட கழிவுகளுக்குள், குறிப்பாக உலோகக்கழிவுகளுக்குள் அணுக்கதிரியக்க கழிவுகள் ஊடுவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் என்ன?
ரஷ்யாவின் செர்னோபில்லில் அணுஉலை வெடித்து விபத்து ஏற்பட்டபோது உருவான அணுக்கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்தியாவிற்குள் வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தபோது இந்திய அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டதா
?அல்லது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உணவுப்பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சந்தேகம் எழுப்பப்பட்டதாக மக்கள்தான் கவலைப் பட்டார்களா?
இதற்கிடையில் மரபணு மாற்று உணவுப்பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அறிவியலை மதமாக வழிபடும் சிலர், அறிவியலின் பெயரால் விஷத்தையே கொடுத்தாலும் அமுதமாக நினைத்து அருந்த வேண்டும் என்று கூறுகின்றனர். மரபணு மாற்று உணவுப்பொருட்களால் நுகர்வோருக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் மக்களிடமோ இது குறித்து தேவையான விவாதங்கள் எழவில்லை.
நமக்குதான் பேசுவதற்கு அரசியல், சினிமா என்று எத்தனை முக்கிய விவகாரங்கள் இருக்கின்றன. இப்போது மக்களின் அறிவை மேம்படுத்துவதாகக்கூறி வழங்கப்பட்ட இலவச வண்ணத்தொலைக்காட்சி வேறு வந்துவிட்டது. அதில் "மானாட, மயிலாட" பார்த்துக்கொண்டிருந்தால் போதுமானது.
பாதாள சாக்கடைக்குள் சிக்கி சுகாதாரத் தொழிலாளர்கள் உயிரிழக்கும் செய்திகள் நமக்கு புதியவை அல்ல. ஆனால் இதுபோன்ற பிரசினைகள் நமது வீட்டுக்கதவை தட்டும்வரை நாம் கவலைப்படாமல் இருக்கப் பழகிவிட்டோம்.
இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளை இந்தியாவிற்குள் அனுமதித்து இந்தியர்களின் உயிருக்கு உலை வைக்கும் இந்த வணிகம் குறித்து படித்தவர்கள் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஏனென்றால் இதுபோன்ற தொழில்கள் ஈடுபடுபவர்கள் கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கிய தலித், சிறுபான்மை மக்களும் பெண்களும்தான். மீறி யாராவது கேள்வி எழுப்பினால், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழலாம். இந்தியாவின் இறையாண்மையை ஏலம் விடும் உரிமை அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உள்ளது.
நாம் என்னதான் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கும் நச்சு வளையம் வேகமாக சுருங்கி வருகிறது. நமது கழுத்தை அந்த வளையம் சுருக்குவதற்கு அதிக நாட்கள் இல்லை.
என்ன செய்யப்போகிறோம்?

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...