Thursday, 9 July 2015

பசுமைப் புரட்சியின் கதை

பசுமைப் புரட்சியின் கதை: எதில் பற்றாக்குறை? யாருக்குப் பற்றாக்குறை?

‘1960களின் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி எப்போது குறிப்பிட்டாலும், அது ‘உணவு உற்பத்தியில் பற்றாக் குறை’ என்றே பரவலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் உணவு உற்பத்தி படிப்படியாக அதிகமானது; இந்த உணவு, விவசாயிகள் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட கிராமப் புறத் தொழிலாளர்களல்லாத, உணவுச் சந்தையை நம்பியிருந்த மற்றவர்களைச் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. 1957இல் வெளிவந்த உணவு தானிய விசாரணைக் குழு அறிக்கை (Foodgrains Enquiry Committee Report) இதை நன்றாக விளக்கியிருக்கிறது. “. . . திட்டங்கள் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு அதன் விளைவாக உற்பத்தியும் அதிகரித்தது. ஆனால் சந்தையில் விளைபொருள்களின் இருப்பை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க இந்த விளைச்சல் உதவவில்லை” ஆக, உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமல்ல நம் அரசாங்கத்தின் பிரச்சினை. உற்பத்தியை நகர்ப்புறச் சந்தைக்கு எவ்வாறு கொண்டுசெல்வது என்பதுதான் அதன் மிகப் பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, விவசாயியை உணவுச் சந்தையுடன் இணையச் செய்ய வேண்டும் என்பதுதான். அதற்கான ஒரு சின்ன யோசனை இதோ! விவசாயி (இடுபொருட்களுக்காக) கடன் வாங்கி விவசாயம் செய்தால், அவர் தன் கடனை உடனடியாக அடைப்பதற்காக, தானே தக்கவைத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொண்டு, ஒரு பெரும் பங்கைச் சந்தைக்கு விட்டுக் கொடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தலாமே!!
ராக்கஃபெல்லர், ஃபோர்டு ஃபவுண்டேஷன்கள் நம் அரசாங்கத்தின் முன்வைத்த தீர்வு, ‘ஏற்கனவே நல்ல வளமான நிலங்களில் இந்தப் பசுமைப் புரட்சி திட்டத்தைப் புகுத்தினால், மிகையாக வரும் விளைச்சல் தானாகவே நகர்ப்புறங்களை வந்தடையும்’ என்பதுதான். இப்படித்தான், இந்தப் பரிசோதனைக்கு பஞ்சாப் -ஹரியானா பகுதிகள் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தியாவில் பசுமைப் புரட்சி, ஏதோ ஓராண்டில் செயற்படுத்தப்பட்டு முடிக்கப்பட்ட ஒரு திட்டமல்ல. அது 1967இல் தொடங்கி 1978வரை பல திட்டங்கள் மற்றும் முயற்சிகளின் தொகுப்பாகும்.
கோதுமையில் “பசுமைப் புரட்சி”
மெக்ஸிகோவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனின் சர்வதேச கோதுமை மற்றும் மக்காச்சோளம் ஆராய்ச்சி மையத்திலிருந்து (CIMMYT) இறக்குமதியான 18,000 டன் லெர்மா ரோஜோ 64-கி, மற்றும் சொனோரா - 64 ஆகிய ரகங்களை 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு கோதுமையில் பசுமைப் புரட்சியைத் தொடக்கிவைத்தது இந்திய அரசு. ஆனால் இந்த ரகங்கள் ஆழ்ந்த சிகப்பு நிறமாக இருந்தமையால் அவற்றை இந்தியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பிறகு நிறம் மாற்றி புதிய ரகங்களை வெளியிட்டனர். இந்த விதைகளை ஏற்கனவே மண் வளமும் நீர் வளமும் அதிகமாக உள்ள பஞ்சாப் - ஹரியானா மாநிலங்களில் பரவலாகப் பயிர்செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே இந்திய அரசாங்கத்தின் திட்டம். குட்டை ரகக் கோதுமை விதைகளை நிலத்தில் விதைத்து, தேவையானபோதெல்லாம் நீர் கிடைக்குமாறு நீர்ப்பாசனத்தை அதிகரித்து, இரசாயன உரங்களை அள்ளிக் கொட்டி, பயிர்களுக்கு ஏற்பட்ட பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை ஒழிக்க இரசாயனங்களைத் தெளித்து, பெரிய அளவுகளில் உழுது அறுவடைசெய்ய இயந்திரங்களை உபயோகித்து, “நிலம் பாருங்கள் அள்ளிக் கொடுக்கிறது!” என்று பசுமைப் புரட்சியில் தங்கள் “வெற்றியை”க் கொண்டாடினர்.
பஞ்சாபில் மட்டும் 1965-66இல் 33.89 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி, 1985-86க்குள் 172.21 லட்சம் டன்னாக உயர்ந்தது. ஹரியானாவில் அதே சமயத்தில், 19.85 லட்சம் டன்னிலிருந்து, 81.47 லட்சம் டன்னாக உயர்ந்தது. பசுமைப் புரட்சியின் அனுகூலங்களை நன்றாக அனுபவித்த பெரிய விவசாயிகளின் உற்பத்தி சந்தைக்கு வந்தது!
பஞ்சாப் - ஹரியானாவில் நிகழ்ந்த கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு ‘பக்ரா நங்கல்’ அணை ஒரு முக்கியக் காரணமென்பதும் பரவலாக நம்பப்படும் ஒரு கருத்து. ஆனால் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், பக்ரா நங்கல் அணை 1954ஆம் ஆண்டே செயற்பாட்டுக்கு வந்துவிட்டது. 1963-64ஆம் ஆண்டில், ஏற்கனவே (அதன் அதிகபட்சக் கொள்திறனான) 24.8 லட்சம் ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் அளித்துவந்தது. ஆனால் 1972வரை நாம் உணவு இறக்குமதி செய்துகொண்டுதான் இருந்தோம். பக்ராநங்கல் அணை, நீர்ப்பாசன வசதியை ஏற்கனவே அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு சில இடங்களிலிருந்து வேறு சில இடங்களுக்கு மாற்றிவிடுவதை மட்டுமே செய்தது என்றும், கோதுமைப் புரட்சி நிகழ முக்கியமாக, ஆழ்குழாய்க் கிணறுகளே காரணம் என்றும் ஆராய்ச்சிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றன!
நெல்லில் “பசுமைப் புரட்சி”
சி. சுப்பிரமணியனின் சுயசரிதையில், அவருடைய திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த அந்த மூத்த விஞ்ஞானிகளுள் முக்கியமானவர் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான டாக்டர் ரிச்சாரியா அவர்கள். ஒருவேளை இரசாயன உரங்களையே உபயோகித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்தால்கூட, நமது நாட்டு ரகங்களிலேயே குட்டையான, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட, குறுகியகால அறுவடை ரகங்களையே உபயோகிக்கலாம் என்று தன் ஆராய்ச்சியின் மூலம் காட்டினார். தலைசிறந்த நெல் விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவைக் கொண்டு தான் சேகரித்த 17,000 நாட்டு நெல் ரகங்களைக் கொண்டு, அற்புதமான ‘மேம்படுத்தப்பட்ட ரகங்களை’ அவர் உருவாக்கிக்கொண்டிருந்தார். நம் நாட்டில், ஏன் உலகிலேயே நெல் ஆராய்ச்சியில் இத்தனை முக்கியமான பங்கு வகித்த டாக்டர் ரிச்சாரியாவின் பெயர்கூட, சி. எஸ்ஸின் சுயசரிதையில் இடம்பெறவில்லை.
ஹெக்டேருக்கு 3.7 டன்னுக்கு மேல் விளைச்சலைக் கொடுக்கும் ரகங்களைத்தான் ‘உயர் விளைச்சல் ரகங்கள்’ (High Yielding Varieties / HYVs) என்று இந்திய அரசாங்கம் நிர்ணயம் செய்திருந்தது. ரிச்சாரியா சேகரித்த 17,000 ரகங்களில் 9சதவிகிதம் இத்தகைய விளைச்சலைக் கொடுத்தன; 8சதவிகிதம் குறுகிய கால அறுவடைப் பயிர்கள். 237 வாசனை ரகங்கள் இருந்தன. விவசாயிகளுக்கு அதிக விலை பெற்றுத் தரும் பல உயர்ந்த (superior) ரகங்களும் உயர் விளைச்சல் ரகங்களாக உருவாக்கப் பட்டிருந்தன. சில முக்கியமான ரகங்களின் பட்டியல் இதோ!
* பஸ்தரைச் சேர்ந்த Gadur Sela (Bd:810) எனும் ரகம், ஹெக்டேருக்கு 9.8 டன், TD2 (Bd:45) 6.1 டன், Balkoni (Bd:504) 5 டன், JS5 (Bd:49) 4.8 டன், CR 1014 (Mrignain) 4.8 டன், Pallavi (Bd:193) 4.2 டன் விளைச்சலைக் கொடுத்தன.
* Badal Phool (Bd:21), Dhour (Bd:23), (Bd:49) மற்றும் Ram Karouni (Bd:1353) ஆகியன குட்டை ரகங்கள்.
* Dokra Dekri எனும் ரகம், உலகிலேயே மிக நீளமான அரிசி ரகம்.
* (பால்)கோவா அரிசி உலர்ந்த பாலைப் போன்ற சுவையைக்கொண்டது.
இத்தனை அற்புதமான நெல் ரகங்கள் நம் நாட்டிலேயே இருக்கும்போது, உருவாகியிருக்கும்போது வெளிநாடுகளிலிருந்து, கோடிக்கணக்கில் பணம் செல வழித்து, பெரிய அளவில் சோதனை செய்து பார்க்காத அந்நிய ரகங்களை இறக்குமதி செய்வதற்கு அவசியமே இல்லை என்று ரிச்சாரியா கூறிக்கொண்டிருந்தார். (தாய்வான், ஜப்பான் போன்ற) அன்னிய நாடுகளிலிருந்து டன் கணக்கில் விதைகளை வாங்கி நம் நாட்டின் மண்ணில் விதைத்தால், அதுவரை நாம் கண்டறியாத பூச்சிகளையும் நோய்களையும் கூடவே கொண்டு வந்து விடும் விபரீதத்தில் முடியும் என்று எச்சரித்தார். ஆனால் ஒரு சில அன்னிய ரகங்களை மட்டும் உபயோகித்து, தீவிரமாகக் கண் காணித்து எச்சரிக்கையுடன், நீண்ட நாட்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய ரகங்களை உருவாக்குவதில் ரிச்சாரியாவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. அத்தகைய ஆராய்ச்சியில் அவரே ஈடுபட்டும் இருந்தார்.
‘சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம்’ (IRRI) 1960இல் பிலிப்பீன்ஸ், மனிலாவில் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷனால் நிறுவப்பட்டது. இந்த ஐ. ஆர். ஆர். ஐயின் அமெரிக்க இயக்குநரான ராபர்ட் சாண்ட்லர் அவர் தனது சுயசரிதையில் “அப்போது நான் ஒரு நெல் செடியை நேரில் கண்டதுகூட இல்லை!” என்று ஒப்புக்கொண்டுள்ளார். ‘நெல் பயிர் செய்வதில் அனுபவமே இல்லாத, நெல் ரகங்களின் germplasm ஒன்றும் கையில் இல்லாத நாடான அமெரிக்காவுக்கு, ஐ. ஆர். ஆர். ஐ. நிறுவுவதில் அப்படி என்ன அக்கறை?’ என்கிற கேள்விக்கான விடையை (ஆசிய அரசியல்-பொருளா தாரத்தைத் தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனும் நோக்கம்) முன்பே ஆழமாகப் பார்த்துவிட்டுத்தான் இந்தக் கட்டுரைக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைவுகூரவும். ராக்க ஃபெல்லர் ஃபவுண்டேஷன் முதலில் இந்திய அரசாங்கத்தை அணுகி, தரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தைத் (CRRI) தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டது. அப்போது சி. ஆர். ஆர். ஐயின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த டாக்டர் ரிச்சாரியா “நெல் ஆராய்ச்சியைத் தனியார் நிறுவனத்தின் கட்டுப் பாட்டுக்குக் கொடுப்பது, விஞ்ஞானிகளின் சுதந்திரத்தை இழப்பதற்கு வழிவகுக்கும். ஆகையால், இந்த அமைப்பு ஒரு சுதந்திர ஆராய்ச்சி மையமாகவே செயல்பட வேண்டும்!” என்று அரசாங்கத்திடம் தன் கருத்தைத் தெரிவித்தார். அப்போதிருந்த அரசாங்கம், ரிச்சாரியாவின் வார்த்தைக்கு மரியாதை அளித்து, ராக்கஃபெல்லர்களுக்குக் கைவிரித்துவிட்டது. அதற்குப் பிறகுதான் மனிலாவில் அதன் தொடக்கம்.
ஐ. ஆர். ஆர். ஐச் சந்தைப்படுத்திய ஐ. ஆர்-8 நெல் ரகம் டன் கணக்கில் இந்தியாவிற்குக் கப்பலில் வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட ரிச்சாரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நேர்ந்த சந்திப்பொன்றில் சி. எஸ். “அதெல்லாம் எனக்குத் தெரியாது! ராக்கஃபெல்லர் நிறுவனத்தினர் நமக்கு அனுப்பிவிட்டார்கள்; அதை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்!” என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டார். இதற்குப் பிறகும் தனது முடிவை மாற்றிக்கொள்ளாத, தங்கள் வளர்ச்சிப் பாதையில் குறுக்கே நிற்கும் ரிச்சாரியாவைப் பணியிலிருந்து நீக்கினால்தான் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாக சாண்ட்லர் சி. எஸ்ஸை நிர்ப்பந்தித்தார். அவருடைய நிர்ப்பந்தத்துக்கு இணங்க பணி இறக்கம் செய்யப்பட்டார் ரிச்சாரியா. அடுத்த மூன்றாண்டுகள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடியதன் விளைவாக, அவர் குடும்பத்தில் நிம்மதி குலைந்தது; குழந்தைகளின் கல்வியும் மனைவியின் உடல் நலமும் கெட்டன. முடிவில் 1970இல் நீதிமன்றம் ரிச்சாரியாவுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து, சிஸிஸிமியில் மறுபடியும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவளித்தது. ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார் ரிச்சாரியா. பின்னர் மத்தியப் பிரதேச அரசாங்கம் நெல் ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவுமாறு அவரைக் கேட்டுக்கொண்டது. மனம் தளராத ரிச்சாரியா ராய்பூரில் பிரம்மிப்பூட்டும் ‘மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தை’ ஆறே ஆண்டுகளில் உருவாக்கினார். இவருடைய உதவியாளர்கள் இரண்டு வேளாண் பட்டதாரிகளும், ஆறு கிராமப் பணியாளர்களும் மட்டுமே! இந்நிலையத்தின் ஓராண்டு பட்ஜெட் ரூ. 20,000 மட்டுமே!
ஐ. ஆர். ஆர். ஐயிடம் நெல் ஆராய்ச்சியில் அனுபவமோ தரமான நெல் ரகங்களின் மூலப்பொருளோ (germplasm) இல்லாத காரணத்தால் வரிச் சலுகையையும் டாலர் சம்பளத்தையும் வேறு பல பலன்களையும் காட்டித் திறமை வாய்ந்த விஞ்ஞானிகளைக் கவர்ந்திழுத்தது; பணத்தைக்கொண்டு மூலப்பொருள்களை வாங்க முயன்றது. இப்படித்தான், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளைத் தன் கீழ் கொண்ட பதவியிலிருந்து, 200 விஞ்ஞானிகளை மட்டும் கொண்ட ஐ. ஆர். ஆர். ஐயில் இயக்குநராகச் சேர்ந்தார் எம்.எஸ். சுவாமிநாதன். உண்மையில் இது ஒரு ‘பணி இறக்கம்’ என்றே பலராலும் கருதப்படுகின்றது.
இதற்கிடையே, ரிச்சாரியா எச்சரித்ததுபோலவே ஐ. ஆர்.-8, ஐ. ஆர்.20, ஐ. ஆர்.-26 என்று ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் இறக்குமதியாகிய ஐ. ஆர். நெல் ரகங்கள் எல்லாம் பூச்சி, நோய் தாக்கி நாடெங்கிலும் பெருத்த (30-100%) சேதங்களைச் சந்தித்தன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்ட ஐ. ஆர். ஆர். ஐ., இந்தியாவில் ரிச்சாரியா சேகரித்து வைத்திருந்த ரகங்களின் - “ஒன்றுக்கும் உதவாத இந்திய நெல் ரகங்கள்” என்று சமீபகாலம்வரை அது கேவலமாகப் பேசிய அதே ரகங்களின் - பூச்சி எதிர்ப்புத் தன்மையைத் தேடி இங்கே வந்தது. இந்தத் தேடுதலுக்காக இங்கே வந்த அமெரிக்கர்கள், அப்போது ஐ. சி. ஏ. ஆரில் பெரிய பதவியிலிருந்த எம். எஸ். சுவாமிநாதனின் உதவி கொண்டு இந்தியாவில் (சி. ஆர். ஆர். ஐ. உள்பட) பல இடங்களிலிருந்தும் நெல் ரகங்களைச் சேகரித்தார்கள். பிறகு ரிச்சாரியாவிடம் வந்து அவர் மத்தியப் பிரதேசத்தில் சேகரித்து வைத்திருந்த தரமான விதைகளைக் கொடுக்குமாறு கேட்டனர். அதற்குப் பதிலாக அவர்கள் தர முன்வந்த ரகங்கள் அனைத்தும் பூச்சி மற்றும் நோயால் எளிதில் பாதிப்படையும் தன்மை கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகத் தான் சேகரித்த விதைகளைத் தற்காலிகமாகத் தர மறுத்த ரிச்சாரியாவை ஒன்றுமில்லாமல் செய்யும் நோக்கத்தோடு, அவர் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த மத்தியப் பிரதேச நெல் ஆராய்ச்சி அமைப்பை ஒரேயடியாக மூடவைத்துவிட்டது ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன். அதோடு மட்டுமல்லாமல், அவருடைய அறையிலிருந்த ஆராய்ச்சிப் பொருள்கள், அறிவியல்ரீதியான தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றிக்கொண்டது. இந்திய அதிகார வர்க்கத்தில் இந்த ஃபவுண்டேஷனுக்கு இருந்த செல்வாக்கு அப்படிப்பட்டது.
இவ்வாறாக இந்திய நெல் ஆராய்ச்சி நிலையங்களில் நடந்து கொண்டிருந்த உயர்ந்த ஆராய்ச்சிகள் முடக்கப்பட்டன; நிறுத்தப்பட்டன. முழுக்க முழுக்க ஐ. ஆர். ஆர். ஐ. அறிமுகப்படுத்திய நெல் ரகங்களைக் கொண்டே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படத் தொடங்கின. கோதுமையைப் போலவே, அதிக அளவுகளில் இடுபொருட்களைக் கொண்டு ஐ. ஆர். ரகங்களின் விளைச்சலும் அதிகரிக்கப்பட்டுச் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டது.
வேளாண் ஆராய்ச்சியில் பொய்கள், ஊழல்கள், மோசடிகள்
சிகப்பு நிற சொனோரா-64 ரகத்தை ஒருவிதக் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி ஷர்பதி சொனோரா என்கிற புதிய ரகத்தை உருவாக்க முன்வந்தார் எம். எஸ். சுவாமிநாதன். இந்த புதிய ரகத்தில் லைசின் எனும் முக்கியமான அமைனோ அமிலத்தின் சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக மாக்சசே விருதையும் பெற்றார். ஆனால் பிறகு போர்லாக் பணிபுரிந்த சி. ஐ. எம். எம். ஒய். டி. நிறுவனமே சொனோராவிற்கும் ஷர்பதி சொனோராவிற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்தது. இது தனது ஆய்வுக்கூட உதவியாளர் செய்த தவறு என்று கூறிச் சமாளிக்க முனைந்தார் எம். எஸ். எஸ்.
மேலும், பசுமைப் புரட்சியை வெளியிட்ட ஐ. ஏ. ஆர். ஐயில் ‘உயர் விளைச்சல் ரகம்’ என்று கூறி ‘பைசாகி மூங்க்’ என்னும் ஒரு ரகப் பருப்பு வகையை வெளியிட்டது. அது அமோக விளைச்சலைத் தரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பயிரிட்ட எங்குமே சொல்லப்பட்ட விளைச்சலில் பாதியைக்கூடத் தாண்டவில்லை! மற்றொரு மக்காச்சோள ரகம், பாலில் உள்ள அளவுக்குச் சத்து நிறைந்தது என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் ஒரு பொய்யென்று நிரூபணம் ஆனது.
அதே சமயம், மிகுந்த சர்ச்சைக்குரிய வேறொரு செய்தி வெளிவந்தது. அது, மே 1972இல் டாக்டர் வினோத் ஷா என்னும் வேளாண் விஞ்ஞானி தற்கொலை செய்துகொண்ட செய்தி. மனம் உடைந்துபோன, அவமானத்துக்குள்ளாகிய சில வேளாண் விஞ்ஞானிகளின் தற்கொலைச் செய்திகள் ஏற்கனவே வெளி வந்திருந்தாலும், டாக்டர் ஷாவின் தற்கொலை ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்குக் காரணம், அவர் ஒரு வாலிபர் என்பதும், அவர் தற்கொலைக்கு முன்பு எம். எஸ். சுவாமிநாதனுக்கு எனக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதிவிட்டுச் சென்றதுமாகும். “உங்கள் சிந்தனா முறைக்குப் பொருந்துகிற விதத்தில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான பல புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன . . . சொந்தமான கருத்துகளும் ஆக்கபூர்வமான, அறிவியல்ரீதியான விமர்சனம் கொண்டவர்கள் பலியிடப்படுகிறார்கள்” என்று அதில் அவர் எழுதியிருந்தார். நாடாளுமன்றத்தில் டாக்டர் ஷாவின் தற்கொலை பெரிய புயலைக் கிளப்பிவிட, அரசாங்கம் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான டாக்டர் பி. பி. கஜேந்திர கட்கர் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. விசாரணையின் முடிவில், அது எம். எஸ்ஸுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது. “ஐ. ஏ. ஆர். ஐயின் (Indian Agricultural Research Institute / IARI) இளநிலை விஞ்ஞானிகள் பலர் தங்கள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை வெளியிடத் தங்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று - சரியாகவோ தவறாகவோ - கருதுகிறார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துவராத காரணத்தாலோ அல்லது அறிவியல் ஆதாரமற்ற புள்ளிவிவரத்தை மேலிடத்திற்குத் தருவதற்குப் பதிலீடாக ஏதேனும் நன்மைகளும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதாலோ தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட முடியாத நிலை இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்” என்று அந்தக் குழு எச்சரித்தது.
1974இல், த நியூ சயன்டிஸ்ட் என்னும் புகழ்பெற்ற விஞ்ஞானப் பத்திரிகை, எம். எஸ்ஸின் லைசின் பொய்யை அம்பலப்படுத்தியது. எம். எஸ்ஸைக் கேள்வி கேட்ட டாக்டர் ஒய். பி. குப்தாவின் மாணவர்கள் அனைவரும் அவரிடமிருந்து காரணமே இல்லாமல் பிரிக்கப்பட்டனர்; அவருக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் குப்தா “நியாயமற்ற விதத்தில் நடத்தப்பட்டார்” என்றும், அவருடைய மேலதிகாரி நெறியற்ற முறையில் நடந்துகொண்டார் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுவாமிநாதன் தலைமை வகித்த நிறுவனத்தின் கல்விப்புலக் குழுவை (academic council) “தடித்தனம் கொண்ட, இதயமற்ற, அதிர்ச்சிகரமான” என்றெல்லாம் விமர்சித்தது.
“அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வீரிய விதைகள் நீங்கள் சொல்வது போலவே நம்முடைய பாரம்பரிய விதைகளைவிடத் தாழ்வானதாகவே இருந்திருந்தால், எப்படி விவசாயிகளால் ஏற்கப்பட்டு கோடிக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டன? நம் விவசாயி என்ன அத்தனை முட்டாளா?” என்ற கேள்வி எழலாம். உலக வங்கியும் யு. எஸ். எய்ட் அமைப்பும் புதிய விதைகளை (அதோடு மற்ற இடுபொருட்களையும்) விவசாயிகள் மத்தியில் பரப்புவதற்காக, ஃபோர்டு மற்றும் ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன்களுடன் கைகோத்துக்கொண்டு நிறைய கடனை வாரி வழங்கின. ராக்கஃபெல்லர் ஃபவுண்டேஷன் மற்றும் யு. எஸ். எய்டின் உதவியுடன் 1963இல் தேசிய விதைக் கழகம் (National Seed Corporation) நிறுவப்பட்டது. உலக வங்கியின் 13 மில்லியன் டாலர் உதவிகொண்டு 1969இல் டெராய் விதைக் கழகம் (Terai Seed Corporation) நிறுவப்பட்டது. 1971இல் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் மெக்நமாரா, விவசாய ஆராய்ச்சிக்கான சர்வதேச ஆலோசனைக் குழு (Consultative Group on International Agricultural Research- CGIAR) என்னும் அமைப்பை நிறுவினார். இதன் முக்கியப் பணி, உலகெங்கும் வளர்ந்துவரும் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பது. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் (1966-71) வேளாண்மைக்கான அன்னியச் செலாவணி 1,114 கோடியாக வளர்ந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்ட முழு நிதியைவிட ஆறு மடங்கு அதிகம்.
புதிய விதைகளைப் பரப்புவதற்காக 1976இல் தேசிய விதைத் திட்டம் (National Seed Project) I-இன் மூலம் 25 மில்லியன் டாலரையும், 1978இல் திட்டம் II-இன் மூலம் 16 மில்லியன் டாலரையும் உலக வங்கி கொடுத்தது. இவை போதாதென்று 1990-91இல் இதே திட்டத்தின் மூன்றாம் நிலையில் 150 மில்லியன் டாலர் கடன் அளிக்கப்பட்டது. “விதைகளுக்கான தொடர்ச்சியான கிராக்கி எதிர்பார்த்த அளவு விரிவடையாததால் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்தத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் பயிர்கள் விஷயத்தில், குறிப்பாக, நெல், கோதுமை போன்றவற்றில், விவசாயிகள் தங்களிடமே தக்க வைத்துக்கொள்ளும் விதைகள், விவசாயிகளுக்குள் பண்டமாற்று செய்துகொள்ளும் விதைகள் ஆகியவையே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. அதிக விளைச்சல் ரகங்களில் சில, மரபு சார்ந்த ரகங்களைக் காட்டிலும் வீரியம் குறைந்தவையாக இருந்ததால் விவசாயிகளிடத்தில் அவை அதிக வரவேற்புப் பெறவில்லை” என்று தேசிய விதைத் திட்டம்-3இன் ஆவணமே அழகாக விளக்கியுள்ளது.யாருடைய உதவியுமில்லாமல், தாங்களாகவே உருவாக்கிய நல்ல தரமான விதைகளை விவசாயிகள் கைமாற்றம் செய்துகொள்கிறார்கள் என்பது விவசாயியின்மீது உண்மையான அக்கறையுள்ள யாவருக்கும் ஒரு நல்ல சேதிதானே! ஆனால் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவப் போகிறோம் என்று பச்சைப் போர்வை போர்த்திக்கொண்டு இறங்கிய “பசுமைப் புரட்சி”யாளர்களுக்கு இதைவிட மோசமான சேதி இருக்க முடியாது! ஏனெனில் அவர்களுக்கு உண்மையில் தேவையாக இருந்த பண லாபம், ‘விதைக் கைமாற்றத்தால்’ எப்படி ஏற்படும்? அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மலட்டு விதைகளை விவசாயிகள் அதிகப் பணம் கொடுத்து வாங்கினால்தானே இது சாத்தியமாகும்! இத்தனை வேலைகளையும் திட்டமிட்டு, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, மாபெரும் விதைச் சந்தையை உருவாக்குவதற்காகத்தான் இந்த 150 மில்லியன் டாலர் கடனுதவி!
இத்தனை வன்முறைக்குப் பிறகும், அவையெல்லாம் அம்பலப்படுத்தப்பட்ட பிறகும் பசுமைப் புரட்சியின் “வெற்றிக்கொடி” பாமர மக்கள் மத்தியில் மேலோங்கிப் பறந்தது! 50 ஆண்டுகள் ஆகியும், “பசுமைப் புரட்சி”யின் பொய்யான சாகசக் கதைகள் எல்லாப் பக்கமும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் என்ன? நம் விவசாயத்தை மீட்க என்ன வழி?

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...