Tuesday, 14 July 2015

‘300’ (ஆண்டுகளுக்கு முந்தைய) பருத்தி வீரர்கள்



‘300’ (ஆண்டுகளுக்கு முந்தைய) பருத்தி வீரர்கள்:



உங்களில் பெரும்பாலனவர்கள் ‘300 பருத்தி வீரர்கள்’ என்ற ஆங்கில படத்தை பார்த்திருப்பீர்கள்,அதில் வெறும் 300 வீரர்கள் கொண்ட ‘ஸ்பார்ட்டா’ நாட்டின் வீரர்கள் பலலட்சம் வீரர்களை கொண்ட பாரசீக படைகளை தலை தாழாமல் எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வீழ்வார்கள்.அந்த படத்தை,அவர்களின் வீரத்தை சிலாகித்து விசிலடித்து பார்த்த நமக்கு உண்மையில் நாம் யார் என்பது தெரியாது.

நம் வரலாறு,1805யில் தூக்கிலிடப்பட்ட ‘பழஸிராஜா’ முதல் விடுதலை போராட்ட வீரர் என்கிறது,1857-யில் நடந்த ‘சிப்பாய்க் கலகம்’ இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என்று வர்ணிக்கிறது.1840களில் போராடிய ஜான்சிராணியை முதல் விடுதலைப்போராளி என்கிறது.அவர்களின் வீரம் மறுப்பதற்கு இல்லை,ஆனால் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் சுத்த தமிழ் வீரனை இந்நாளில் நினைவு கூறாவிட்டால் மிச்சம் வாழும் மத்த தமிழர்களும் மொத்தமாய் அழிந்து போவோம்.

செப்டம்பர் 1ஆம் தேதி 1715ஆம் ஆண்டில் திருநெல்வேலி ‘நெற்கட்டும் செவ்வல்’ பாளையத்தில் பிறந்தவர் ‘பூலித்தேவன்’.இவர் ஒரு முறை புலியுடன் போரிட்டு வென்றதால் இப்பெயர் பெற்றார்,மாதம் மும்மாரி பொழிந்து ஆறு போகம் விளைந்ததால் அந்த ஊர் ‘நெற்கட்டும் செவ்வல்’ எனப்பட்டது என்பது போன்ற சுய புராணங்களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு இவரிடம் இருக்கும் சில மறுக்க முடியாத நன்நெறிகளை ஆராய்ந்தால் தமிழனின் மரபு மெய்சிலிர்க்க வைக்கும்.

1)தாய்மொழித் தாகம்:

அந்நாட்களில் பெரும்பாலான செப்பேடுகளில் வடமொழி சொற்கள் இடம்பெற்று இருந்தன,ஆனால் பூலித்தேவன் காலத்து செப்பேடுகளில் தூய தமிழ் சொற்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

2)தொழில்வளம் மிக்க ஆட்சி:

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்,ஆனால் இன்று விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் அரசாங்கம் தான் நடந்து கொண்டு இருக்கிறது.ஆனால் இதை பூலித்தேவன் அன்றே உணர்ந்திருந்தார்.உக்கிரமான போரின் போதும் அவர் விவசாயிகளை போரில் ஈடுபடுத்துவதில்லை,போரை போலவே விவாசயமும் நாட்டின் வாழ்வாதார பிரச்சனை என்று நம்பினார்.குளங்களை வெட்டுவது அதில் மீன்பிடித்தல் மூலம் வரும் வருவாயை கொண்டு மேலும் ஒரு குளம் வெட்டுவது என திட்டமிட்டு செம்மையான ஆட்சி நடத்தினார்.

3)சுய ராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை:

விடுதலைப்போரில் பாலகங்காதர திலகர் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்றார்.இதை 1700களிலே பூலித்தேவன் முழங்கினார்,வரி கட்ட மறுத்தார்.இதனால் ஆற்காடு நவாப்பின் எதிர்ப்பினை சம்பாதித்தார்.கோவம் கொண்ட ஆற்காடு நவாப் நெற்கட்டும் செவ்வலை தாக்கினார்,அதில் பூலித்தேவன் வெற்றி பெற்றார்.

4)ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுசேர வேண்டும்:

ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு போர்க்களத்தில் ஒன்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தைப் இந்தியாவில் முதன் முதலாக ஏற்படுத்தியவரே பூலித்தேவன் தான்.ஆற்காடு நவாப்பின் படையில் வந்த மூன்று இஸ்லாமிய தளபதிகள் முடேமியா எனும் முகம்மது மியானச், மியானோ எனும் முகம்மது பார்க்கி, நபிகான் கட்டாக் ஆகிய மூன்று தளகர்த்தர்கள் மன்னர் பூலித்தேவர் முகத்தைக்கண்டு அவரால் கவரப்பட்டு அவரது படையில் சேர்ந்து வீரப்போர் புரிந்தார்கள். 12 மாதம் கழித்து 1756 மார்ச் 21 இல் திருநெல்வேலியில் மீண்டும் போர் நடத்தி வெள்ளையரை தோற்கடித்தார்,அவ்வாறு இணைந்த நவாப்பின் தளபதிகளுக்கு பள்ளிவாசல் கட்டித் தந்தார் என்பது அவரின் சமயப் பொறையை காட்டுகிறது.

5)எதிரியை பார்க்காமல் இலக்கை பார்த்தல்:

பின் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் துணையை நாடினார்,அடுத்து புலித் தேவருக்கு எதிராக பெரும்படையுடன் போர் புரிய வந்தவன் ‘கான்சாகிப்’ இவன் யார் எனில் ஹைதர் அலியை தோற்கடித்தவன்.பின்னாளில் ஆங்கிலேயர்கள் கான்சாகிப்பை தூக்கிலிட்டனர்,அப்போது இருமுறை தூக்கிலிட்டு சாகவில்லை,இறுதியில் மூன்றாவது முறை காலில் இரும்புக்குண்டை கட்டி தூக்கிலிட்டு கொன்றனர்.அத்தகைய கான்சாகிப்பையும் அவனது பெரும்படையையும் கண்டு அஞ்சாமல் போரிட்டு அவனை வெற்றிகண்டார்.

6)தன்னலமில்லா தலைமை:

பூலித்தேவனின் படையில் வெண்ணிகாலடி,ஒண்டிவீரன் உளவாளி ஆகியோரின் வீரத்தை நம்மால் புறக்கணித்துவிட முடியாது,பூலித்தேவனின் மனைவி மக்கள் எதிரிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர்,அப்பொழுதும் அவர் கலங்கவில்லை,ஆனால் எதிரிகளுடன் வீரத்துடன் போரிட்டு வீழ்ந்த தன் தளபதி ஒண்டிவீரனை மடியில் கிடத்தி கதறி அழுதார் என்று வரலாறு சொல்கிறது.அவர் சாதி சமயம் கடந்து மக்கள் மீது அன்பு கொண்டார்,அவர்களும் அவர் மீது அத்துனை அன்பாக இருந்தனர்.இந்த மாண்பு இன்று மேதகு.பிரபாகரன் வரை தொடர்கிறது

7)எதிரிகள் போற்றும் வீரம்:

இறுதியில் ஆங்கிலேயரின் பெரும்படையுடன் போர்,அது ஒரு நாட்டையே பிடிக்கும் அளவான நவீன ஆயுதங்கள் உடைய படை,பூலித் தேவர் திப்பு சுல்தான் உதவியை நாடினார் அது கிடைக்காமல் போனது,தானே மோத முடிவெடுத்தார்,அந்த போரைப்பற்றி தன் புத்தகத்தில் குறிப்பிடும் ஒரு ஆங்கிலத் தளபதி,”அந்த போரில் பூலித்தேவன் படையினர் 18 அடி வேல்கம்புகளை அசாத்தியமாக பயன்படுத்தினார்கள்,அவரது வீரர்கள் தங்கள் மார்பினை வைத்து அவர்கள் கோட்டை இடியாமல் காத்தனர்,அதில் வெற்றிபெற மிகவும் சிரமப்பட்டோம்” என்கிறார்.

இறுதியில் போரில் பூலித்தேவர் படை தோற்றபின் கடைசியாக அவரைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோதுதான் சங்கரன்கோவில் ஆலயத்துக்குள் நான் வழிபட்டு வருகிறேன் என்று உள்ளே போனார்.அதற்குப்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அருட்பெருஞ்சோதி மறைந்ததைப்போல சங்கரன்கோவில் கோவிலுக்குள் போனவர் திரும்பவில்லை.நேதாஜியின் மரணத்தைப்போல பூலித்தேவரின் மறைவும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

இன்று பூலித்தேவரின் பிறந்தநாள்,நாம் அவரை கொண்டாட கூட வேண்டாம்,குறைந்தபட்சம் நம் பிள்ளைகளுக்கு நமது வீர மரபுகளை சொல்லி வளர்ப்போம்,உங்கள் குழந்தைகள் 300 பருத்திவீரர்கள் படம் பார்க்கும் முன் இந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய பருத்தி வீரர்களை சொல்லி கொடுங்கள்.அடுத்த தலைமுறையை சாதி சமயமற்ற வீரத்தமிழ் படையாக கட்டமைப்போம்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...