Thursday, 9 July 2015

"விலை' நிலங்களாகும் விளை நிலங்கள்!

                "விலை' நிலங்களாகும் விளை நிலங்கள்!

தமிழகத்தின் விளைநிலங்களில் சுமார் 60 சதம் வரை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும் மாறியிருக்கும் நிலையில் உணவு உற்பத்திக்கான வாய்ப்புகள் தொடர்ந்து தவிர்க்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வருகின்றன. 

இதுகுறித்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பொது மேடைகளிலும், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அதற்கான பலன் என்னவோ பூஜ்யம்தான்.

5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாயிகள் இன்று விவசாயமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் தோன்றிய பிறகே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே விளைநிலங்கள் துண்டாடப்பட்டன. 

இதைத்தொடர்ந்து, இவற்றைச் சுற்றிலும் தொடங்கப்பட்ட வணிக வளாகங்கள், அவற்றையொட்டித் தோன்றிய குடியிருப்புகள் என விளைநிலங்கள் அனைத்தும் அரசின் பொருளாதாரக் கொள்கையையொட்டியே "விலை' நிலங்களாகின. 

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மட்டுமே மாறவில்லை. அரசு அலுவலகங்களாக, அரசு கல்விக்கூடங்களாக, தனியார் கல்வி நிறுவனங்களாக, தொழிற்சாலைகளாக, தங்குமிடங்களாக எனப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி நிற்கின்றன.

இந்தியாவின் மூலாதாரத் தொழிலான உழவுத் தொழிலை அழித்து, மற்ற தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு வளர்ந்து வரும் தொழில்களால் நம் நாட்டு வளங்கள் அயல்நாட்டு நிறுவனங்களால் அதிகாரப்பூர்வமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாய நிலங்கள் "விலை' நிலங்களாக மாற்றப்படுவதைத் தடுக்க பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகளைத் தொடங்கும்பட்சத்தில் மானாவாரி விவசாயத்துக்கும் பயன்படாத நிலங்களை தேர்ந்தெடுத்துத் தொடங்க வேண்டும். 

இப்போது பெருநகரங்களில் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலை சிறு நகரங்கள், வட்டத் தலைநகர் (பேரூராட்சி) போன்ற பகுதிகளிலும் வளர வேண்டும்.

இதன்மூலம், தனி வீடுகளுக்காக நிலங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் முன் பலமுறை ஆராய்ந்து, 100 சதவீதப் பயன்பாடு இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். 

ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி கட்டடங்களை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பல மாடிக் கட்டடங்களைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அரசு நிலங்கள் எதிர்காலத் தேவைக்காகப் பாதுகாக்கப்படுவதோடு, புதிய நிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் குறையும். 

அரசு, தனியார் கட்டடங்களின் மீதுள்ள வழக்குகளால் இன்றும் பல கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் பயனற்றுக் கிடக்கின்றன. எனவே, 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, அதுபோன்ற கட்டடங்களையோ அல்லது அந்த இடத்தையோ பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு, தனியார் கல்வி நிறுவனங்களை அமைக்க அவற்றின் தன்மைக்கு ஏற்ப விலைக்கு வாங்கும் நிலத்தின் அளவை அரசு நிர்ணயிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான நிலத்தை வாங்குவதன் மூலம் நடைபெறும் ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும். 

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம்.இந்த நிலையிலும், நம் நாட்டின் மக்கள்தொகை மிக விரைவாக உயர்ந்து வருகிறது. 

இதே நிலை நீடித்தால் 2050-வது ஆண்டில் சீனாவையும் விஞ்சி முதலிடத்துக்கு வந்துவிடுவோம் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2-வது இடத்தில் இருக்கும்போதே, விவசாய நிலங்களில் 50 சதம் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும் மாறிவிட்ட சூழ்நிலையில், மக்கள்தொகையில் முதலிடத்துக்கு வந்துவிட்டால் நிலைமை என்ன என்பதை இப்போதே யோசிக்க வேண்டும்.

இந்த நிலையில், சீனா இப்போது பின்பற்றி வரும் அதே திட்டத்தை நாமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதுதான் ஒரு குடும்பம் ஒரு வாரிசு திட்டம்.இந்தத் திட்டம் சீனாவில் மக்கள்தொகை வளர்ச்சியைப் பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது. 

இந்தத் திட்டம் நம்மிடம் ஏற்கெனவே இருந்தாலும் தீவிரமாகச் செயல்படுத்தப் படவில்லை. இப்போது அதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 

மேலும், ஒரு குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் அவர்களுக்காக இரு வீட்டுமனைகளுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதே.

இதன்மூலம் உபரியாக உள்ள வீட்டுமனைகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால், சிறிது காலத்துக்கு விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது தடுக்கப்படும்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...