பால் பவுடர் முதல் முகப் பவுடர் வரை... பெற்றோர் உஷார்!
அரசியல், ஐ.பி.எல். சந்தடிகளில் கண்டுகொள்ளப்படாமல் போன செய்தி அது. ஆனால், பேரதிர்ச்சி உண்டாக்கிய செய்தி. குழந்தைகளுக்கான முகப்பூச்சு பவுடரில் புற்றுநோயை உருவாக்கும் 'எத்திலீன் ஆக்ஸைடு’ என்கிற நச்சுப்பொருள் அளவுக்கு அதிகமாகக் கலந்திருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால், பிரபல நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் மும்பை - முகுந்த் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்துசெய்துள்ளது உணவு மற்றும் மருந்து நிர்வாகம். பிறந்த சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் என்றாலே மனதில் மின்னுவது அந்தப் பெயர்தான்.
அந்த அளவு நம்பிக்கைகொண்டிருந்த அந்த நிறுவனத்தின் பொருளே குழந்தைகள் உபயோகத்துக்கானது அல்ல என்றால், வேறு எதைத்தான் நம்புவது?
''குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், தடுப்பு ஊசிகளின் சந்தை அரசியலைப் புரிந்துகொண்டால் யாரை நம்ப வேண்டும் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்!'' என்கிறார் நக்கீரன். குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி ஆபத்து தொடங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகங்கள் எழுதிவரும் சூழலியல் எழுத்தாளரான நக்கீரன் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் பகீர் ரகம்...
''உலகில் சுமார் ஏழு லட்சம் பொருட்கள், வேதியியல் கலவைகள்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான புதுப்புது வேதியியல் கலவைப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. அந்த ஏழு லட்சம் வேதியியல் கலப்புப் பொருட்களில் சுமார் 1,700 பொருட்களுக்கு மட்டுமே, சர்வதேசப் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது, எதிர்மறையான எந்தவிதப் பின்விளைவும் இருக்காது என்றும், அந்தப் பொருள் எந்த வேதியியல் கூட்டுக் கலவை யில் தயாரிக்கப்பட்டது போன்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் பொருளின் உறை மீது அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், இந்த 1,700 பொருட்களில் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளில்தான் சந்தைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சர்வதேசப் பாதுகாப்பு விவரங்கள் அளிக்கப்படாத, அனுமதி அல்லாத சுமார் 50 ஆயிரம் வகை வேதியியல் கலப்பு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அனைத்துவிதமான தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி பின்விளைவுகளைச் சோதிக்க வேண்டும் என்றால், அதற்கு 80 ஆண்டுகளாகும். ஒரு வேதியியல் கலப்புப் பொருளை நிலம், நெருப்பு, காற்று, தண்ணீர், மனிதன், விலங்குகள், காடுகள் உள்ளிட்ட சகல விஷயங்களின் மீதும் பிரயோகித்து, சோதித்து முடிவுகளை அறிவிக்க, மூன்று ஆண்டுகள் தேவை. ஐந்து லட்சம் டாலர் செலவு பிடிக்கும் நடைமுறை. அதனால்தான் பெரும்பான்மையான பொருட்கள் மேற்கண்ட சோதனைகளைத் தவிர்த்து சந்தைக்குள் ஊடுருவிவிட்டன. சொல்லப்போனால், அந்த அனுமதி அல்லாத பொருட்களின் சோதனைச் சுண்டெலிகளே... மூன்றாம் உலக நாட்டு மக்கள்தான்!
2008-ல் சீனாவில் நியூலாந்தைச் சேர்ந்த சன்லு குழுமத்தின் பால் பவுடரை உட்கொண்ட 53,000 குழந்தை கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 80 சதவிகிதக் குழந்தைகள் இரண்டு வயதுக்கு உட்பட்டவர்கள். சில குழந்தைகள் இறந்தன. ஆய்வில், குறிப்பிட்ட பால் பவுடரில் 'மெலமைன்’ என்கிற நச்சு வேதியியல் பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. (கவனிக்க... வேதியியல் பொருள் கலப்பு இல்லாமல் பால் பவுடர் மட்டுமல்ல; எந்த baked food-ம் தயாரிக்க இயலாது. வேதியியல் பொருள் கலப்பே ஆபத்தானது. அது அளவுக்கு அதிகமாகும்போது, அதி ஆபத்தாகிறது!) சீன அரசு அந்த நிறுவனத்தை விரட்டி அடித்ததோடு, அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மேயரைப் பதவி நீக்கம் செய்தது. ஆனால், இந்தியாவில் அந்த நிறுவனத்துடன் கைகோத்துதான் இன்னொரு பிரபல பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் இப்போது செயல்பட்டுவருகிறது.
'குழந்தைகளுக்கான பால் பவுடரில்கூடவா நச்சுப் பொருட்கள் இருக்கும்?’ என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆனால், குழந்தைகளுக்கான பொருட்கள் என்பது பெருநிறுவனங்களுக்குத் 'தங்க முட்டையிடும் வாத்து’. அந்தச் சந்தையின் பின்னிருக் கும் நுண் அரசியல் ஆபத்தானது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அரசியல் ஆட்டம் தொடங்கியது. அன்றைய கால கட்டத்தில் யுனிசெஃப் அமைப்பு, 'மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் இல்லாமல் பெரும் சதவிகிதக் குழந்தைகள் இறக்கிறார்கள்’ என்ற ரீதியில் நீண்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அறிக்கையின் சாராம்சம், ஒருவேளை அக்கறையும் உண்மையும் நிறைந்ததாகக்கூட இருக்கலாம்.
ஆனால், அது பன்னாட்டுப் பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒரு சிக்னல் கொடுப்பதாக அமைந்தது. தங்கள் செல்வாக்கு மூலமாகத் தாய்ப்பாலுக்கு நிகரானது புட்டிப்பால் என்று அரசு இயந்திரங்கள் மூலமாகவே பிரசாரம் செய்யவைத்தன அந்த நிறுவனங்கள். இந்தியாவிலும் அது நடந்தது. ஏழைகளுக்கு இப்படியான பிரசாரம் என்றால், நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களுக்கு வேறு வகையான உத்தி... 'தாய்ப்பால் கொடுத்தால் மார்பழகு மறைந்துவிடும்’ என்று விளம்பரங்களில் மிரட்டினார்கள்.
அரசாங்கமே பிரசாரம் செய்யவும் செயற்கைப் பால் பவுடரை நம்பி விழுந்தார்கள் மக்கள். ஒரு தலைமுறையே தாய்ப்பாலைத் தவிர்த்தது. ஆனால், அதன் பிறகுதான் நாடு முழுக்கக் குழந்தைகளுக்கான நோய்கள் அதிகரித்தன. விதவிதமான நோய்களால் கொத்துக்கொத்தாகக் குழந்தைகள் இறந்தார்கள். விழித்துக்கொண்ட மத்திய சுகாதாரத் துறையும் ஐ.நா-வின் உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, 'தாய்ப்பாலே மகத்தானது. தாய்ப்பாலில்தான் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது. ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்’ என்று இப்போது அறிவிக்கின்றன. ஆனால், அதற்குள் மிக ஆழமாகக் காலூன்றிவிட்டன பால் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள். இன்றும் வட இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. காரணம், தாய்ப்பாலுக்கு எதிரான பிரசாரத்தின் வீரியம்.
பால் பவுடர் மட்டுமல்ல; குழந்தைகளுக்கான ஷாம்பு, சோப்பு தொடங்கி அழகுசாதனப் பொருட்கள் வரை நச்சுக்களால் நிரம்பி இருக்கின்றன. குழந்தைகளுக்கான ஷாம்புவில் சோடியம் லாரல் சல்பேட் மற்றும் சோடியம் ஈத்தேல் சல்பேட் என்கிற வேதியியல் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. 'நாங்கள் தயாரிப்பது மூலிகை ஷாம்பு தான். அது குழந்தைகளின் கேசத்துக்கு மிகவும் நல்லது’ என்று நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. ஆனால், சோடியம் லாரல் சல்பேட் இல்லாத மூலிகை ஷாம்பு, இந்தியாவில் மிகமிக அரிது.
'பேபி ஆயில் போட்டு, குழந்தைகளுக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். குழந்தையின் சருமம் பளபளவென மின்னும்’ என்று விளம்பரம் செய்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். குழந்தைகளுக்கான எண்ணெயில் பிசுபிசுப்பை அகற்றி, அடர்ந்த எண்ணெயில் இருந்து வடிகட்டிய, லேசாக்கப்பட்ட எண்ணெயை எடுக்க ஹெக்சேன் (Hexane) என்கிற வேதியியல் பொருள் பயன்படுத்தப்படுகிறது. தவிர, எண்ணைய் கெடாமல் இருக்கவும் சில ஆர்கானிக் உப்புகளைச் சேர்க்கிறார்கள். தொடர்ந்து இந்த எண்ணெயை உபயோகப்படுத்தும்போது, அது குழந்தையின் மெல்லிய சருமத்தில் ஊடுருவி, தோல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு என்று பிரத்யேக நகப்பூச்சுகள் சந்தையில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி ஆய்வு செய்தபோது, அதில் தோல் புற்றுநோய்க் காரணிகளான 'காரீயம்’ அளவுக்கு அதிகமாகக் கலந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நகப்பூச்சைப் பயன்படுத்தும்போது, நகத்தின் வழியாக ரத்தத்தில் அந்த நச்சு கலக்கும் வாய்ப்புகள் அதிகம். தவிர, வினிகர் கலந்த அமிலத்தன்மை வாய்ந்த ஜங்க் ஃபுட் வகை உணவுகளை, குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கிறோம். அந்தத் தன்மை உள்ள உணவைச் சாப்பிடும்போது நகப்பூச்சில் இருக்கும் 'காரீயம்’ உணவில் எளிதாகக் கரைந்துவிடும். இதன் காரணமாக உணவுக் குழாய் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.
முன்பெல்லாம் விசேஷ நாட்களில் மட்டும்தான் குழந்தைகளுக்கு மேக்கப் போடுவார்கள். ஆனால், இன்றைக்கு மேல்தட்டுக் குடும்பங்களில் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே மேக்கப் இல்லாமல் அனுப்புவதே இல்லை. கண் இமையின் மீது பூசப்படும் அழகூட்டியில் PolyCyclic Hydro Carbon எனப்படும் புற்றுநோயை உண்டாக்கவல்ல வேதிப்பொருள் இருக்கிறது. சருமம் மற்றும் உதட்டுச் சிவப்புக்குப் போடப்படும் சாயங்களில் Hydroqui-none மற்றும் Phthalates ஆகிய மார்புப் புற்றுநோய்க் காரணிகள் இருக்கின்றன. தவிர, இவை ஹார்மோன்களையும் பாதிக்கச்செய்து, பெண் குழந்தைகளை விரைவில் பூப்படையச்செய்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் இந்தப் பொருட்களுக்குத் தடை உண்டு. ஆனால், இந்தியாவில் மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து, நச்சு நிறுவனங்களை வரவேற்கிறது அரசு. மேற்கண்ட பொருட்கள் நம் குழந்தைகளை மட்டும் கொல்வது இல்லை; தாயையும் சேர்த்தே கொல்கின்றன. ஆம், பூமிதானே நம் அனைவருக்கும் தாய். ஷாம்பு, சோப்பு, முகப்பூச்சு, சருமப் பூச்சுகள், உதட்டுச் சாயங்கள், பேபி ஆயில் இவையெல்லாம் குளிக்கும்போது, நீரில் வழிந்து, நிலத்தில் கரைந்து, மண்ணை மலடு ஆக்குகிறதே!
சரி, இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன? தாய்ப்பால் புகட்டுங்கள். சீயக்காய், அரப்பு, செம்பருத்தி, பெருநெல்லி போன்றவற்றைவிடச் சிறந்த ஷாம்பு உலகில் எங்கு இருக்கிறது? நம் பருப்பு வகைகளை யும் பழ வகைகளையும்விடவா அழகூட்டிகள் இயற்கையான அழகை நமக்கு அளிக்கும்? செக்கு எண்ணெய் என்று தேங்காய் எண்ணெயும் நல்லெண்ணெயும் இருக்க, பேபி ஆயில் நமக்கு எதற்கு? என்ன... செக்கு எண்ணெய் சீக்கிரம் கெட்டுவிடும்... வாடை அடிக்கும். வாரம் ஒருமுறை வாங்கிப் பயன்படுத்துங்கள்!'' என்கிறார் நக்கீரன்.
வினை விதைத்தால், எதை அறுப்போம் என்று உங்களுக்குப் புரிகிறதா
No comments:
Post a Comment