Sunday, 11 January 2015

பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு...சட்டத்தில் ஒரு தெளிவு .

பூர்வீக சொத்தில் மகளுக்கும் சமபங்கு:2005-ல் வந்த புதிய சட்டத் திருத்தம்:இதுவரை குழப்பமாகவே இருந்துவந்த சட்டத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டுள்ளது.


சொத்துக்களில் 2 வகைகள்;

1)தனிச் சொத்து. (தானே கிரயம் வாங்கியது போன்றவை).

2)பூர்வீகச் சொத்து (அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா சொத்துக்கள்).

தனிசொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரிசமமான உரிமை உண்டு என 1956ல் வந்த இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்தில், பூர்வீக சொத்துக்களில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் இவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும், மகள், பேத்திகளுக்கு உரிமை கிடையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இதை ஒருவாறு சரிசெய்து, 1989-ல் தமிழ்நாடு அரசு தனியே ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதன்படி, இந்த சட்டம் வந்த நாளான 1989-வரை திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை மட்டும் கூட்டுகுடும்ப உறுப்பினராக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பூர்வீக சொத்தில் மகனைப்போலவே மகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்ற மகளுக்கு, தந்தையின் பூர்வீக சொத்தில் பங்கு கிடையாது என்றும் சட்டத் திருத்தம் வந்தது.


பின்னர், மத்திய அரசு, 2005 ல் இந்தியா முழுமைக்கும் உள்ள அந்த 1956ம்வருட இந்து வாரிசு உரிமைசட்டத்தை திருத்தி, அதன்படி மகள்கள் திருமணம் ஆகி இருந்தாலும், ஆகாமல் இருந்தாலும் எல்லோருமே கூட்டுக்குடும்ப உறுப்பினர்கள்தான் என்றும் எனவே மகனைப் போலவே, மகளுக்கும் பூர்வீக சொத்தில் சரிசம பங்கு உண்டு என்றும் புதிய சட்டத்தை இயற்றியது.


இந்த 2005 புதிய மத்திய திருத்தச் சட்டத்தின்படி கீழ்கண்ட புதிய விளக்கம் உள்ளது.இந்த திருத்தல் சட்டம் 9.9.2005 முதல் அமலுக்கு வந்தது.அதற்குபின் எல்லா மகள்களும், மகன்களைப் போலவே  பூர்வீக சொத்தில் சரிசமமான சொத்துரிமை பெறலாம்.மகள்கள் பிறந்தவுடனேயே, மகன்களைப்போலவே, பூர்வீக சொத்தில் பங்கு ஏற்கனவே வந்துவிட்டது என்றும், எனவே அவர்கள் திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டுக்குச் சென்றிருந்தாலும், திருமணம் ஆகாமல் பிறந்த வீட்டில் இருந்தாலும், இந்த உரிமை உண்டு.

ஆனால், 20.12.2004 க்கு முன், அவர்களின் பூர்வீகச் சொத்தை பழைய சட்டப்படி பாகப்பிரிவினை செய்து பிரித்துக் கொண்டிருந்தால், அல்லது வெளிநபர்களுக்கு விற்று விட்டிருந்தால் அவ்வாறு பத்திரம் எழுதிப் பதிவு செய்து கொண்ட சொத்தில் மகள்கள் பங்கு கேட்கமுடியாது.20.12.2004 வரை பூர்வீக சொத்தானது அந்த குடும்பத்தில் இருந்தால், அந்த சொத்தில் மகள் சரிசம பங்கு கோரலாம்.பொதுவாக ஒரு சட்டமானது, அது அமலுக்கு வந்த தேதியிலிருந்துதான் உரிமைகள் வரும், (Prospective). ஆனால் இந்த சட்டம் (Retrospective) அதாவது, மகள் பிறந்த தேதியிலிருந்தே அவருக்கு உரிமை கொடுத்துவிட்டது.

அதுதான் இந்த சட்டத் திருத்ததின் சிறப்பம்சம் என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டுகளும் தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...