Sunday, 11 January 2015

உயில் பற்றிய 15 விளக்கங்கள் .உயில் அவசியமா....


உயில் எழுதவேண்டாம்.உயில் அவசியமா....

சொத்து இருப்பவர்தான் உயில் எழுதமுடியும்.
சொத்து இல்லாதவர்களுக்கு அதைப் பற்றிய கவலையே தேவையில்லை.

சொத்து இருப்பவர், அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் உயில் எழுதி வைப்பது, அவரின் வாரிசுகளுக்குள் சண்டையில்லாமல் இருக்க வழிவகுக்கும் என சட்டமும், அதைப்படித்த வக்கீல்களும், அனுபவமிக்க பெரியவர்களும் சொல்லி வருகிறார்கள்.ஆனால், எனக்கென்னவோ, அது சரி என்றுபடவில்லை. கட்டாயமாக உயில் எழுதிவைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் குடும்ப சூழ்நிலை, தேவை, இவைகளைப் பொறுத்து உயில் அவசியமா இல்லையா என்பதை அவரவரே முடிவு செய்ய வேண்டும்.
  1. சொத்து இருக்கிறது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  2. தனக்கு வயதாகிவிட்டது என்பதற்காகவே மட்டுமே உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  3. நாம் உயிருடன் இருக்கும்போதே, நம் சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தால், நம் பிள்ளைகள் மகிழ்வார்கள் அல்லது சண்டையிருக்காது என்பதற்காக மட்டுமே உயில் எழுதவைக்க வேண்டாம்.
  4. பிள்ளைகள், நம்மைக் கட்டாயப் படுத்துகிறார்கள் என்பதற்காக மட்டும் உயில் எழுத வேண்டாம்.
  5. நமது ஒத்த வயதுடைய நண்பர்கள் அதுபோல உயில் எழுதி வைத்துள்ளார்கள் என்பதற்காகவோ, அவரைப்போலவே நாமும் எழுதி வைத்து விடுவோம் என்பதற்காகவோ மட்டும் உயில் எழுத வேண்டாம்.
  6. நாம் இந்த உலகைவிட்டு சென்றபின், நமது பிள்ளைகள், 'உயிருடன் இருக்கும்போதே, இந்தப்பாவி சொத்தை பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம்' என்று நம்மை திட்டிவிடுவார்கள் என்பதற்காக பயந்து கொண்டு உயில் எழுதி வைக்க வேண்டும்.
  7. ஒரு மகனோ/ மகளோ நம்மை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வாஞ்சையால் உயில் எழுதி வைக்க வேண்டாம்.
  8. ஒரு மகனோ/ மகளோ நமது கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என்பதற்காக அவனுக்கு/அவளுக்கு மட்டும் சொத்து போய் சேரவே கூடாது என்பதற்காக மட்டும் ஒரு உயிலை எழுதி வைக்க வேண்டாம்.
  9. கோபப்பட்டுக் கொண்டு கோயிலுக்கும், தர்மத்துக்கும் எழுதி வைக்க வேண்டாம். (தர்மத்துக்கு எழுதிய சொத்துக்கள் எல்லாம், கோர்ட்டில் வழக்குகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.)

இதில் சொல்லியுள்ள எந்த காரணமும் உயில் எழுதுவதற்கு போதுமான காரணமாக கொள்ள முடியாது.

முடிந்தவரை நம் வாழ்நாள்வரை நாமே நமது சொத்தையும் பணத்தையும் 100 சதம் அனுபவித்து இறப்பதே சாலச் சிறந்த முடிவு. நமது வாழ்நாளுக்குப் பின்னர் நமது பிள்ளைகளுக்குத்தான் அந்த சொத்து போய்ச் சேரப் போகிறது. இதில் எந்த சட்டப் பிரச்சனையும் வராது. வேறு மூன்றாம் மனிதர்களுக்கு எந்தக்காலத்திலும் அவை போய் சேராது. எல்லா மதங்களிலும் இதற்கென தெளிவான தனித்தனி சட்டங்கள் உள்ளன. எனவே உயில் எழுதும் எண்ணத்தை உங்களின் வாழ்நாள் வரை ஒத்தி போடுங்கள்.

ஆனால், கீழ்கண்ட சூழ்நிலை இருந்தால் மட்டும் உயில் எழுதி வைக்க நீங்கள் முயற்சி எடுங்கள்.
  1. உங்களிடம் ஒரேயொரு சொத்து மட்டும் இருந்து, உங்கள் மனைவிக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இருந்தால், அந்த சொத்தை, உங்களின் காலத்துக்குப் பின், அந்த சொத்து முழுவதையும் உங்களின் மனைவிக்கே கொடுத்து விடுவதாய் உயில் எழுதி வைத்து விடுங்கள். (உங்களின் பிள்ளைகளிடமோ, மருமகளிடமோ கையேந்த வைக்காதீர்கள்.)
  2. உங்களிடம் பல சொத்துக்கள் இருந்து, உங்களுக்கும் நல்ல வசதி இருந்தால், ஆதரவற்ற உங்களின் உறவினர்கள் உங்களை எதிர்பார்த்து இருந்தால், (மகன், மகள் தவிர, அதாவது, உங்களின் இறந்த மகனின் மனைவி,  உங்களின் இறந்த சகோதரன்/ சகோதரி வாரிசுகள், உங்களின் மனைவியின் இறந்த சகோதர/சகோதரி வாரிசுகள் போன்றோர் இருந்தால்) உங்களிடம் அதிகப்படியாக உள்ள சொத்துக்களை அவர்களுக்கு பிரித்து உயில் எழுதி வைத்து விடுங்கள்.

நாம் இறந்தபின்னும், இந்த உலகம் எந்த சிக்கலும் இன்றி இயங்கத்தான் போகிறது. எல்லாச் சட்டங்களும் இருக்கத்தான் போகிறது. நாமே எல்லாவற்றையும் சரிசெய்து வைத்துவிட்டுப் போய்விடுவோம் என்றும், இல்லையென்றால் மற்றவர்களுக்கு அது சிக்கலை உண்டாக்கிவிடும் என்றும் எண்ணிக் கொண்டு எதையும் செய்ய வேண்டாம்.  ஏனென்றால், உயிருடன் இருக்கும்போது எழுதி உயில்கள், செட்டில்மெண்ட் பத்திரங்கள் அதில் சொல்லியுள்ள நிபந்தனைகள் எல்லாம், அவர் மறைந்தபின்னர், அவசியமே இல்லாமல் போன பல நிகழ்வுகள் உண்டு; அதற்கு நேர்மாறாக நடந்த நிகழ்வுகள் பல உண்டு.

தன் வாழ்நாளிலேயே செட்டில்மெண்ட் பத்திரங்கள் மூலம் தனது வாரிசுகளுக்கு சொத்தை பங்கிட்டு கொடுத்துவிட்டு, அவரின் வாழ்நாளின் கடைசி காலங்களில் கண்ணீர் விட்டு அழுத சம்பவங்கள், அவைகளை எழுதிய வக்கீல் என்ற முறையில் ஏராளம்! ஏராளம்!! காரண-காரியங்கள் தேவையில்லை. பந்த-பாசங்கள் பொய் எனவும் சந்தேகிக்கும் சூழ்நிலைகள். ஏமாந்துவிட்டோம் என்ற ஏக்கங்கள். போக்கிடம் இல்லாத தனிமைத்துயரம்! வயதான காலத்தில் ஒருவர் தனக்கென சொத்தோ, பணமோ இல்லாமல் இருந்துவிடக் கூடாது. ஆனால், வறுமையில் இருந்தால், "ஏமாந்து, தனக்கு உதவிசெய்து காப்பாற்றும் பிள்ளையொன்று தனக்கு இருந்தால்", அவர் உண்மையில் அதிர்ஷ்டசாலியே!

நமது மறைவுக்குப் பின், இந்த உலகில் நமது பிள்ளைகள், 'நாம் சொல்லிச் சென்ற வார்த்தைகளை' எத்தனைபேர் மதித்துள்ளார்கள். மிகக் குறைவே. நமக்கு முகத்துக்குநேர், மரியாதை செய்யும் நம் பிள்ளைகள்கூட, நமது கண்ணுக்குப் பின், அலட்சியமாகத்தான் நடந்துகொள்கின்றன. நாம் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை பொய்யாகத்தான் போகிறது.

உயில் பற்றிய 15 விளக்கங்கள் .

1.உயில் என்றால் என்ன?     ஒரு சொத்தினை தனது இறப்புக்கு பின்னர் யார் உரிமை கொண்டு அனுபவிக்கலாம் என்று தனது விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது உயில் சாசனம் ஆகும்.

2.எத்தகைய சொத்துக்களை ஒருவர் உயில் எழுதலாம்?    ஒரு நபர் தான் ,தனது சுய சம்பாத்தியத்தின் மூலம் பெற்று அனுபவித்து வரும் சொத்து,பரம்பரையாக ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவித்து ஒரு நபர் தனது பெயரில் மட்டும் பாகப்பிரிவினை பெற்று அனுபவித்து வரும் சொத்து, கொடை எனப்படும் தான செட்டில்மென்ட் மூலம் பாத்தியப்படுத்திய சொத்து கொடை பெற்ற  நபரின் பாத்தியதை எனப்படும் அனுபவத்தில் இருந்துவர வேண்டும்.இந்த சொத்துக்களை ஒரு நபர் உயில் எழுதலாம்.

3.உயில் எழுத ஆண்,பெண் என்று பாகுபாடு உண்டா?    கண்டிப்பாகக் கிடையாது வயது வந்த தனது பெயரில் பாத்தியதை கொண்ட சொத்தினை ஆண்,பெண் இரு பாலரும் எழுதலாம்.

4.உறவினர்களுக்கு மட்டும் தான் உயில் எழுதி வைக்க முடியுமா?    அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது ,உறவினர் அல்லது உறவினர் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதலாம்.

5.கருவில் உருவாகாத குழந்தைகளுக்கு உயில் எழுதலாமா?  எழுதலாம் ஆனால் அது நடை பெறவில்லை என்றால் உயில் செயல் படாது ,வழியுரிமை மூலம் சொத்து தகுந்த வாரிசுகளை சென்றடையும்.

6.உயில் சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா?  அப்படிப்பட்ட சட்ட நிபந்தனைகள் ஏதும் கிடையாது.பதிவு செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம்.

7.உயில் சாசனத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?  கண்டிப்பாக இரண்டு சாட்சிகள் வேண்டும்,இவர்கள் முன்னிலையில் தான் உயில் சாசனம் இயற்றுபவர் கையொப்பம் இட வேண்டும்,சாட்சிகளும் உயில் சாசனம் இயற்றுபவர் முன்னிலையில் தான் சாசனத்தில் கையெழுத்திட வேண்டும்.

8.உயில் சாசனம் மூலம் சொத்தை அடைபவர் சாட்சி கையெழுத்து போடலாமா?   கண்டிப்பாகக் கூடாது சட்டம் இதனை அனுமதிக்கவில்லை.

9.உயிலை ரத்து செய்ய முடியுமா?   ஒரு நபர் தனது வாழ் நாளில் தனது சொத்து குறித்து எத்தனை உயில் வேண்டுமானாலும் இயற்றலாம்.கடைசியாக எழுதிய உயில் தான் செல்லும் .ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம்.

10.உயில் எழுதியவுடன் சொத்தைப் பற்றிய சட்ட விளைவுகள் என்ன?யாரிடம் சொத்து இருக்கும்? உயில் என்பது எழுதிய நபரின் இறப்புக்குப் பின்னர் தான் சட்ட விளைவை உண்டாக்கும் ,அது வரை அந்த சொத்தின் உரிமை எழுதிய நபரிடம் தான் இருக்கும்.உயிலில் கண்டுள்ள நபர் அந்த சொத்திற்கு உரிமை கோர முடியாது.

11.உயில் எழுதிய பிறகு அந்த சொத்தினை உயில் எழுதிய நபர் விற்பனை செய்ய முடியுமா?   கண்டிப்பாக முடியும் ,உயில் சாசனம் இயற்றிய நபர் இறக்கும் வரை அவர் தான் அந்த சொத்தின் உரிமையாளர் ,அவர் அதனை எப்படி வேண்டும் என்றாலும் அனுபவிக்கலாம்.

12.கொடை சாசனத்திற்கும் உயில் சாசனத்திற்கும் என்ன வித்தியாசம் ?கொடை சாசனம் எழுதியவுடன் அதில் கண்ட கொடை பெறுபவர் அந்த சொத்தின் அனுபவ பாத்தியத்தை பெற்றுக் கொள்ளலாம்,கொடை எழுதிய நபருக்கு அந்த சொத்தில் அதற்கு பின்னர் எந்த உரிமையும் கிடையாது.கொடை பெறுபவர் அந்த சொத்தினை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் கொடை கொடுத்தவர் அந்த சொத்தின் மீது உரிமை கொண்டிருப்பார்.

13.கொடை சாசனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமா? 100ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால் கட்டாயம் கொடையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் உயிலை அப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

14.எப்படிப்பட்ட சமூக சூழ்நிலைகளில் உயில் எழுதப்படலாம்?    சட்டத்தில் இப்படிப்பட்ட சமூக சூழ்நிலையில் தான் உயில் எழுதப்பட வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.பொதுவாக ஒரு நபருக்கு பல குழந்தைகள் இருந்து தனது இறப்பிற்கு பின்னர் யார் யார் எந்தெந்த சொத்துக்களை அடைய வேண்டும் என்று ஒரு முடிவை எடுத்து அதனை உயில் சாசனப் படுத்தினால் வருங்காலத்தில் குழந்தைகளுக்கிடையே சொத்திற்காக சண்டை சச்சரவு தேவையில்லாமல் ஏற்படாது.

15.உயில் எழுதவில்லை என்றால் என்ன நடக்கும்?  ஒரு சொத்துக்குரிய நபர் தனது சொத்துக்களைப் பொறுத்து உயில் சாசனம் ஏதும் எழுதி வைக்கவில்லை என்றால் அவரது இறப்பிற்கு பின்னர் சட்டம் கூறும் வழியுரிமைப்படி சொத்து வாரிசுகளைச் சென்றடையும்.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...