Saturday, 17 January 2015

சத்துணவகம்


                        சத்துணவகம்


உடம்பில் அவசியம் தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை இழந்து கொண்டிருப்பவர்களுக்கும், குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களுக்கும் இது பயன்படக்கூடும்.  இது என்ன மாதிரியான பலன் தரும் என்று கேட்பவர்களுக்கு, ஒரு முறை செய்து குடித்துப் பாருங்கள் என்பது தான் என் பதிலாக இருக்கும்.  காரணம் திட்டமிட்ட பரிபூரண உணவு என்ற ஒரு வார்த்தை தான் இதற்கு பொருத்தமாக இருக்கும்.

முந்திரி 100 கிராம்
பாதாம் 100 கிராம்
பிஸ்தா 100 கிராம்
கோதுமை கால் கிலோ
ராகி கால் கிலோ
கம்பு கால் கிலோ
சோளம் கால் கிலோ
சிவப்பு அரிசி கால் கிலோ (கடைகளில் தனியாக கிடைக்கின்றது)
பாசிப்பயறு கால் கிலோ
நிலக்கடலை கால் கிலோ
பொட்டுக்கடலை கால் கிலோ
சிவப்பு பீன்ஸ் கால் கிலோ
சோயா கால் கிலோ
பாா்லி கால் கிலோ

நீங்கள் செய்ய வேண்டியது 

ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  வறுக்கும் அளவில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மை உள்ளது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கருப்பு பிடித்து விடக்கூடாது.  

முந்திரி போன்றவற்றை லேசாக வறுத்தாலே போதுமானது.  சோளம் போன்றவற்றை சற்று நன்றாக வறுக்க வேண்டும்.

நன்றாக உலர வைத்துவிட்டு உங்கள் வீட்டுக்கருகே உள்ள மாவுக்கென்று தனியாக அரைக்கும் எந்திரத்தில் சென்று மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  அவசர கதியில் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து விடலாம் என்று யோசித்தால் அந்த அளவுக்கு மாவு போல வருமா? என்பது கேள்விக்குறியே.  

நாங்கள் முயற்சித்துப் பார்த்தோம். சரியாக வரவில்லை.  

ஆனால் மாவு அரைக்கும் எந்திரம் வைத்திருப்பவர்களிடம் போகும் முன் கூட்டம் இல்லாத சமயத்தில் சென்றால் தான் வசதியாக இருக்கும்.  அவர்கள் அவசர கதியில் போட்டு குருணையாக தந்து விடவும், ஏற்கனவே அரைத்த விசயங்களை சுத்தம் செய்யாமல் வைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.  பொறுமை அவசியம் தேவை.

மேலே சொன்ன அளவில் ஏறக்குறைய 450 ரூபாய் அளவுக்கு செலவு வரும் (தற்போது சந்தையில் உள்ள எந்த பாட்டிலின் விலையை எடுத்துக் கொண்டாலும் இந்த தொகையில் இரண்டு பாட்டில்கள் தான் வாங்க முடியும்.  அந்த இரண்டு பாட்டிலின் உள்ளே உள்ள வஸ்துகள் அதிகபட்சம் மொத்தமாக 400 கிராம் இருக்கக்கூடும். 

காரணம் தற்போது சிப்ஸ் முதல் எந்த பொருளாக இருந்தால் அடைக்கப்பட்ட பையில் பாதி காற்று பாதி பொருட்கள் என்கிற ரீதியில் தான் உள்ளது.  ஏமாற நாம் தயாராக இருப்பதால் அவர்களை எந்த விதங்களில் குறை சொல்லவே முடியாது.) 

இந்த மாவை நன்றாக உலர வைத்து தனியாக சுத்தமான பாட்டிலில் வைத்துக் கொண்டு விடவும்.  வீட்டில் காபி டீ போன்றவற்றை நிறுத்திவிட்டு அந்த சமயத்தில் இதை பருகலாம்.  காபி, டீ பைத்தியமாக இருந்த என்னை மாற்றிய பெருமைக்கு வீட்டில் உள்ள நிதி மந்திரிக்கு பத்ம வீபூஷன் விருது வழங்கலாம் என்று மனதில் வைத்துள்ளேன்.

ஒரு பெரிய ஸ்பூன் அளவுக்கு மாவு எடுத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கலக்கவும். 

மாவு கட்டியாக இல்லாமல் கலக்கி விட்டு அதில் நாட்டுச்சர்க்கரை (எக்காரணம் கொண்டும் ஜீனியை எந்த வடிவத்திலும் உணவில் சேர்க்காமல் இருப்பது பெரும் புண்ணியம்.  முக்கால்வாசி நோய்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் முக்கிய காரணம் இந்த வெள்ளை எமன் தான் என்பதை எப்போதும் கவனத்தில் வைத்திருக்கவும்)  அல்லது கருப்பட்டி என்று உங்களுக்கு பிடித்ததை அதில் போட்டு கலந்து அதற்குப் பிறகு அடுப்பில் வைத்து கூழாக வரும் வரை கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  கவனமாக செயல்படாவிட்டால் கட்டியாக நின்று போய்விடும்.

பக்குவமாக தண்ணீர் ஓரளவிற்கு வற்றியதும், கூழ் பக்குவத்தில் இறக்கி சூடு ஆறியதும் குடிக்கலாம்.

குடித்துப் பாருங்கள்.  கும்மாளமிடும் மனம். 

ஒரு மாதமாவது தொடர்ந்து குடித்து வரும் போது உங்கள் உடலில் நிகழ்ந்த மாற்றத்தை நீங்கள் உணரக்கூடும்.  



No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...